சினிமா
Published:Updated:

லால் சிங் பார்க்கும் தேசம்!

ஆமிர் கான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆமிர் கான்

விநோதம் என்ன வென்றால் ஆமிர் கானின் ஒரு பழைய பேட்டியைச் சுட்டிக்காட்டி படத்துக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் குவிந்தி ருக்கின்றன

இந்தியாவின் வரலாறு எழுதப்படுகிறது. அவசரநிலைப் பிரகடனம், சீக்கியர்களுக்கு எதிரான ஆபரேஷன் புளூ ஸ்டார், இந்திரா காந்தி படுகொலை, அத்வானியின் ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, கார்கில் யுத்தம், பாலிவுட்டில் தாவூத் இப்ராஹிமின் தலையீடு, தாஜ் ஹோட்டல் தாக்குதல், அன்னா ஹசாரே உண்ணாவிரதம், மோடி சர்க்கார் - இவை அனைத்திற்கும் லால் சிங் சத்தாவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதோவொரு தொடர்பு இருக்கிறது. அந்நிகழ்வுகளின் தாக்கம் ஏதேனும் ஒரு வகையில் லால் சிங்கின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறது. சமகால இந்தியாவின் வரலாறும் லால் சிங்கின் வாழ்க்கைக் கதையும் ஒரு புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்களாக ‘வலது', ‘இடது' எனத் திரையில் விரிகின்றன.

லால் சிங் பார்க்கும் தேசம்!

1994-ல் இயக்குநர் ராபர்ட் ஜெமிக்கிஸ் இயக்கத்தில், எரிக் ராத்தின் திரைக்கதையில், டாம் ஹாங்க்ஸின் அற்புதமான நடிப்பில் வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்த ‘லால் சிங் சத்தா.' ஸ்வீட் பாக்ஸுக்குப் பதில் பானி பூரி பாக்ஸ், பார்க் பெஞ்ச் சீட்டுக்குப் பதில் ரயில் பயணம், அங்கே வியட்நாம் போருக்காக இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் நெருக்கடி என்றால், இங்கே தலைமுறை தலைமுறையாக ராணுவத்துக்கு வருவதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் குடும்பங்கள் என ‘ஃபாரஸ்ட் கம்ப்'பை கச்சிதமாக ‘இந்தி' நிலப்பரப்புக்குக் கொண்டு வந்திருக்கிறார் திரைக்கதை எழுதிய அதுல் குல்கர்னி.

ஆமிர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் எனக் கூட்டத்தின் நடுவே ‘சர்ப்ரைஸ்' என்று ஷாருக்கானும் டில்லி ‘இளைஞராக' (டி-ஏஜிங் தொழில்நுட்பம்) எட்டிப் பார்க்கிறார். தன் இமேஜைப் பார்க்காமல் அவர் நடித்திருக்கும் அந்தக் காட்சிக்கு நிச்சயம் பல பூங்கொத்துகள் தரலாம். நாக சைதன்யாவின் போர்ஷன் சிறிது என்றாலும், புராஸ்தடிக் வைத்து, இந்தி உச்சரிப்புக்கு மெனக்கெட்டு அவர் நடித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. ஆமிர் கானின் அம்மாவாக மோனா சிங் பிளாஷ்பேக் காட்சிகளின் ஆன்மாவாக வந்து போகிறார். ரூபாவாக வரும் கரீனா கபூருக்கு ஒரிஜினல் படத்தைவிடவும் இதில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்பரீதியாகவும் ‘லால் சிங் சத்தா' பல அசாத்தியங்களை நிகழ்த்தியிருக்கிறது. டி-ஏஜிங், ஓர் இறகில் தொடங்கி ஓர் இறகில் முடியும் மெல்லிய வருடல் போல பல உணர்ச்சிகளைக் கடத்தும் சத்யராஜ் பாண்டேவின் (சேது) அற்புதமான ஒளிப்பதிவு, பிரீத்தமின் பாடல்கள் எனப் பல விஷயங்கள் லால் சிங் சத்தாவிற்கு உயிர் கொடுத்திருக்கின்றன.

இவை எல்லாவற்றையும்விட, படம் துணிந்து தொட்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அரசியல் ஓர் ஆரோக்கியமான உரையாடலின் ஆரம்பப் புள்ளி. இயல்பு வாழ்க்கையிலிருந்து வெகு தூரம் விலகியிருக்கும் லால் சிங்கிற்கு தீவிரவாதம், எதிரி போன்ற கோட்பாடுகள் புரிவதில்லை. அவனைப் பொறுத்தவரை அது மலேரியா நோயைப் போன்றதுதான். போரில் அடிபட்டிருக்கும் அனைவரையும் காப்பாற்ற முற்படும் ராணுவ வீரனான லால் சிங், குண்டடிபட்டுக் கிடக்கும் பாகிஸ்தான் தீவிரவாதியையும் சேர்த்தே காப்பாற்றுகிறான். பின்பு கால்களை இழந்து இந்தியாவிலேயே வசிக்கும் அவனுக்கும் லால் சிங்குக்குமான நட்பு, அழகானதொரு ஹைக்கூ கவிதை. தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தை அதில் இணைத்து நெகிழ்ச்சியுடன் அந்தக் கதையை முடித்திருப்பது அதே ஹைக்கூ கவிதையின் கடைசி வார்த்தைக்குப்பின் சேர்க்கப்படும் அழகான ஆச்சர்யக்குறி!

லால் சிங் பார்க்கும் தேசம்!

படத்தின் பிரச்னைகளில் ஒன்று, ஆமிர் கானின் நடிப்பு. ‘தூம் 3’ (சகோதரன் ரோல்), ‘PK’ படங்கள் தொட்டு அதே உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புடன் ஆமிர் கான் திரிவது ஏன் என்று புரியவில்லை. இந்தக் கதைக்கு அது தேவை என்றாலும் ஏற்கெனவே பார்த்துச் சலித்த அந்த நடிப்பு, அத்தனை ஈர்ப்புடையதாக இல்லை. ஆங்காங்கே அவர் சேர்க்கும் ‘ஹ்ம்ம்ம்' சத்தம், வார்த்தைகளுக்கு இடையே யான அழுத்தமான நிறுத்தம், கெட்டப் போன்றவை மட்டுமே சட்டெனப் புலப்படும் வித்தியாசங்கள். ஃபீல் குட் படத்தில் திரைக்கதையில் ஏன் வேகமில்லை என்று கேட்பது அபத்தம்தான் என்றாலும், இரண்டாம் பாதியின் பல காட்சிகளைச் சிரமப்பட்டே கடக்க வேண்டியிருக்கிறது. அங்கே ஒரு கடிவாளம் போட்டிருந்தால் இன்னமும் அழுத்தமாக லால் சிங் நம்மைக் கட்டி அணைத் திருப்பான்.

விநோதம் என்ன வென்றால் ஆமிர் கானின் ஒரு பழைய பேட்டியைச் சுட்டிக்காட்டி படத்துக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் குவிந்தி ருக்கின்றன. கலைஞர்களுக்குப் பிரச்னை எனும்போதெல்லாம் படத்தில் லால் சிங்கிற்குக் கொடுக்கப்பட்ட அறிவுரைதான் நினைவுக்கு வருகிறது. ‘ஓடு லால்... ஓடு!’ ஆம், நிற்காமல் ஓடுங்கள் ஆமிர்! அடுத்த கதை, அடுத்த படம், அடுத்த படைப்பு; தொடர்ந்து இயங்குதல் மட்டுமே எதிர் விமர்சனங்களுக்கான சரியான பதிலடி!