சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“இளையராஜா முன்னாடி ஆயிரம் தடவை தரையில் உட்காருவேன்!”

லட்சுமி ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி ராமகிருஷ்ணன்

எனது மற்ற படங்களைப்போல இதுவும் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தியதுதான். நான் ரொம்ப நெருக்கத்துல பார்த்த உண்மைச் சம்பவம் இது.

இளையராஜா, மிஷ்கின், சமுத்திரக்கனி என்று பெரிய கூட்டணியுடன் களமிறங்கி தனது ஐந்தாவது படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இயக்குநராக இது அவருக்குப் பத்தாவது ஆண்டு. டபுள் வாழ்த்துகளுடன் பேசினேன். ‘‘என்ன மாதிரியான கதைகளைச் சொல்ல நினைத்தேனோ, அதையெல்லாம் எந்த சமரசமும் இல்லாமல் தைரியமா படமாக்கியிருக்கேன். இயக்குநரா பத்து வருடங்கள் கடந்தது எனக்குப் பெரிய சாதனைதான். என் குடும்பத்தில் யாருமே சினிமாவில் கிடையாது. எதுவுமே தெரியாமல் வந்து இவ்வளவு கற்றுக்கொள்ள முடிந்தது, பெரிய விஷயம்தான். என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் லோகிததாஸ் சாருக்கும் முதல் படமான ‘ஆரோகணம்' பார்த்துவிட்டு ‘இன்னும் நூறு படங்கள் பண்ணுவீங்க. அதுக்கான திறமை உங்ககிட்ட இருக்கு’ன்னு பாராட்டிய கே.பி சாருக்கும் நன்றி” என்றபடி ஆரம்பித்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன்

``இளையராஜாவை எப்படி உங்கள் படத்தில் இசையமைக்க வைத்தீர்கள்?’’

‘‘எனது மற்ற படங்களைப்போல இதுவும் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தியதுதான். நான் ரொம்ப நெருக்கத்துல பார்த்த உண்மைச் சம்பவம் இது. அமெரிக்காவில் என் மகள் வீட்டில் இருந்தபோது கதையை எழுதி முடித்தேன். அப்போதே, இளையராஜா சார்தான் இசையமைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா, தாய்மையை அவரோட இசையாலதான் அழகா பிரதிபலிக்க முடியும்ங்குறது என்னோட அசைக்கமுடியாத நம்பிக்கை. அவர் கதையைக் கேட்டவுடனே ஓகே சொல்லிட்டார். ராஜா சாரின் இசை உணர்வுபூர்வமானது. அவருடைய எல்லாப் படங்களுமே மேஜிக்தான். அந்த மேஜிக் என் படத்தில் நிகழப்போவதை பாக்கியமாக நினைக்கிறேன். அவர் பக்கத்துல உட்கார்ந்து கம்போஸ் பண்றதையெல்லாம் பார்த்தது நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத விஷயம். இந்தப் படத்தில் ஸ்வேதா மோகன் பாடும் பாடலுக்கு ஆண் வெர்ஷன் உண்டு. அதை ஒருவர் பாட வேண்டும் என்பது ஆசை. அது, சர்ப்ரைஸாகவே இருக்கட்டும்.’’

“இளையராஜா முன்னாடி ஆயிரம் தடவை தரையில் உட்காருவேன்!”
“இளையராஜா முன்னாடி ஆயிரம் தடவை தரையில் உட்காருவேன்!”

``நீங்கள் இளையராஜா முன்பு தரையில் அமர்ந்திருந்தது விமர்சிக்கப்பட்டதே?’’

‘‘ராஜா சார் முன்னால் தரையில் அமர்ந்தது எனது விருப்பம். அப்படி அமர்ந்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவருக்கு என் அப்பாவோட வயசு. அதனால, நான் தரையில அமர்ந்ததை எந்த விதத்திலேயும் ஃபீல் பண்ணல. அவரை மாதிரி ஒரு படைப்பாளர் கடவுள் மாதிரி. நூறு தடவை அல்ல… ஆயிரம் தடவைகூட அதேபோல அவர் முன் தரையில் உட்காருவேன். மூட நம்பிக்கையால் நாங்க பெரியவங்க, நீங்க சின்னவங்க என்று அமரச்சொல்வது வேறு. இது அப்படிக் கிடையாது. என் விருப்பப்படி அமர்வது நான் அவருக்குக் கொடுத்த மரியாதை. இதை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.’’

``முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சமுத்திரக்கனி இருவரையும் இயக்கிய அனுபவம்?’’

‘‘சமுத்திரக்கனி சாருக்கு என் படங்கள் பிடிக்கும். என்னைப் பாராட்டியதோடு ‘ஒன்னா ஒர்க் பண்ணுவோம்'னு சொன்னார். வெறும் வார்த்தையோட நிற்காம அதைச் செயல்படுத்தியிருக்கிறார். கதை எழுதி முடித்து இரவு அனுப்பினேன். படித்து முடித்துவிட்டு காலையில் போன் செய்து ‘நடிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். ரொம்ப பிஸியான நடிகர். படங்களும் இயக்கிக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில், என் படத்தில் நடித்ததற்குப் பெரிய நன்றி. மிஷ்கின் என் நண்பர், வெல்விஷர். மனிதநேயமிக்கவர். அவரது டயலாக்குகளை ரசித்து ரசித்து நடித்தார். அதை மாற்றவேண்டும் இதை மாற்ற வேண்டும் என்று மிஷ்கின், சமுத்திரக்கனி என இரண்டு பேருமே சொன்னது கிடையாது. இவர்களைத் தாண்டி படத்தில் இன்னொரு இயக்குநரையும் இயக்குகிறேன். அவர்தான் உதய் மகேஷ். அவரும் இவர்களுடன் சேர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தக் கதைக்கு பெரிய நடிகர் பட்டாளமே தேவைப்பட்டது. ஆடுகளம் நரேன், அபிராமி, அனுபமா குமார், ரோபோ ஷங்கர், வினோதினின்னு பலர் இருக்காங்க. அபிராமியின் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க நடிப்பு ராட்சசி. இந்தப் படத்துல அசந்துபோற அளவுக்கு நடிச்சிருக்காங்க.’’

“இளையராஜா முன்னாடி ஆயிரம் தடவை தரையில் உட்காருவேன்!”
“இளையராஜா முன்னாடி ஆயிரம் தடவை தரையில் உட்காருவேன்!”

``இவ்வளவு பெரிய பட்டாளத்தையே வெச்சுக்கிட்டு எப்படி படத்தை சைலன்டா எடுத்து முடிச்சீங்க?’’

‘‘எனக்கு மூன்று மகள்கள். ரெண்டு பெண்களுக்குக் கல்யாணம் ஆகி பிள்ளைங்க இருக்காங்க. மூணாவது பொண்ணு மும்பையில எம்.பி.ஏ படிச்சிக்கிட்டிருக்கா. கொரோனா வந்து 19 நாள் ரொம்ப கஷ்டப்பட்டா. அதனால, படத்தைத் தொடங்குறதா, என்ன பண்ணப் போறோம்ங்கிற குழப்பத்தில் இருந்தோம். வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம். பொண்ணுக்கு சரியாகிடும், சீக்கிரம் படத்தைத் தொடங்கிடலாம்னு பாசிட்டிவ்வாகவே இருந்தேன். அந்த பாசிட்டிவ் எனர்ஜியே மகளை மீட்டுக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாம, படத்தையும் எடுத்து முடிச்சேன். அதனாலதான், படத்தைப் பற்றி வெளியில சொல்ல முடியல.’’

``உங்கள் படங்களுக்கு விமர்சனரீதியா வரவேற்பு கிடைக்குது. ஆனால், வசூலும் முக்கியம்தானே?’’

‘‘நான் இயக்குநர் ஆனது பணம் சம்பாதிக்கவோ, வெற்றிக்காகவோ இல்லை. எனக்குச் சொல்லப் பிடிக்கிற கதையைச் சொல்லிக்கிட்டேதான் இருப்பேன். அதேநேரத்துல, தயாரிப்பாளருக்கு லாபத்தை ஈட்டும்படியும் இயக்குவேன். வெறும் கமர்ஷியல் படங்களை எடுக்க விருப்பமில்லை. அதுக்குப் பல இயக்குநர்கள் இருக்காங்க. என் ஒவ்வொரு படமுமே அந்த வருடத்தோட விருதுப் பட்டியல்களில் இடம்பெற்றுவிடுகிறது. எல்லாப் படத்திலேயும் மக்களுக்குத் தேவையான கருத்துகள் இருக்கு. விமர்சனரீதியாகப் பாராட்டப்படுது. மக்கள் மத்தியில வரவேற்பு இருக்கும்போது எப்படி வசூல் குறையும்?’’

“இளையராஜா முன்னாடி ஆயிரம் தடவை தரையில் உட்காருவேன்!”
“இளையராஜா முன்னாடி ஆயிரம் தடவை தரையில் உட்காருவேன்!”

``சமூகக் கருத்துகளைச் சொல்கிறீர்கள், தொடர்ந்து சொல்ல நினைக்கிறீர்கள். அரசியல் ஆர்வம் இருக்கிறதா?’’

‘‘கண்டிப்பா கிடையவே கிடையாது. ஒரு விஷயம் பிடிக்கலைன்னா அதை நேருக்கு நேரா உடைச்சுப் பேசிடுவேன். அதனால, அரசியல் எனக்கு செட் ஆகாது.’’

``நீங்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்காக உங்களை விமர்சிக்கிறார்களே… அதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’’

‘‘என்னுடைய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை முழுமையாகப் பார்ப்பவர்கள் என்னை விமர்சிக்கமாட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் எத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள். ஒரு ஷோ பண்ணினோம்னு நாங்க சும்மா இல்ல. பல குடும்பங்கள் ஃபாலோஅப்லதான் இருக்கு. ஷோவுக்கு வந்த நிறைய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைப் படிக்கவெச்சு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வாழ வெச்சிட்டிருக்கோம். இந்த ஷோவால கிடைச்ச மக்களோட அன்புதான் எனக்கு பலம். இந்த அன்பு சாதாரணமானதல்ல. எங்க போனாலும் மக்கள் வந்து அன்பாகப் பேசுறாங்க. சமீபத்தில் அப்போலோ மருத்துவமனையில் எதேச்சையாக சந்திச்ச ஒரு நீதிபதி, ‘உங்க புரோகிராம் மிஸ் பண்ணாமப் பார்ப்பேன். ரொம்ப அழகா ஹேண்டில் பண்றீங்க’ன்னு பாராட்டினாங்க. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் சிறு சிறு காட்சிகளையும் மீம்ஸையும் மட்டுமே பார்த்து விமர்சிப்பவர்களுக்கு என்ன தெரியும், நிகழ்ச்சிக்கு வரும் மக்களின் கஷ்டங்களைப் பற்றி? இதன்மூலமாக நான் பிரபலமானதை பாசிட்டிவாகவே எடுத்துக்கிறேன்.’’

``மூன்று பெண் குழந்தைகளின் தாயாக பெற்றோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?’’

‘‘மகள்களுக்கு நல்ல கல்வியை எங்களால எவ்வளவு கொடுக்கமுடியுமோ அவ்வளவு கொடுத்துட்டோம். பெண் குழந்தைகளுக்கு நகை, சொத்து சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, கல்வியைக் கொடுத்துடுங்க. அவங்க எல்லாத்தையும் சேர்த்துப்பாங்க.’’