Published:Updated:

லத்தி - சினிமா விமர்சனம்

விஷால்
பிரீமியம் ஸ்டோரி
News
விஷால்

காவல்துறை என்றாலே எஸ்.பி, டி.ஐ.ஜி, அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள், ரைமிங்கான பஞ்ச் டயலாக்குகள் என்றில்லாமல் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று அடங்கி வாழும் சாதாரண கான்ஸ்டபிளாக விஷால்.

காவல்துறையே கண்டு நடுங்கும் தாதாவிடமிருந்து தன்னைத்தானே காத்துக்கொள்ளும் கான்ஸ்டபிளின் கதையே லத்தி.

அழகான மனைவி, அன்பான குழந்தையுடன் வாழும் சாதாரண கான்ஸ்டபிள் முருகானந்தம் (விஷால்). தன் சஸ்பென்ஷன் ரத்துக்குக் காரணமான மேலதிகாரியின் (பிரபு) உத்தரவை மதித்து, சென்னையையே கலக்கும் பெரிய தாதாவின் மகன் வெள்ளையை (ரமணா), அவர் அறியாமல் லத்தியால் கடுமையாகத் தாக்குகிறார். தன்னைத் தாக்கியவரைக் கொல்ல வேண்டும் என்று வெகுண்டு வெறி கொண்டலைகிறார் வெள்ளை. லத்தி ஸ்பெஷலிஸ்டான கான்ஸ்டபிள், லத்தி மூலமாகவே தனக்கு வந்த ஆபத்தை எப்படி எதிர்கொண்டார் என்பதே மீதிக்கதை.

லத்தி - சினிமா விமர்சனம்

காவல்துறை என்றாலே எஸ்.பி, டி.ஐ.ஜி, அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள், ரைமிங்கான பஞ்ச் டயலாக்குகள் என்றில்லாமல் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று அடங்கி வாழும் சாதாரண கான்ஸ்டபிளாக விஷால். சஸ்பென்ஷனை ரத்து செய்ய ஒவ்வொரு அதிகாரியாகக் கெஞ்சிக்கூத்தாடுவது, மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கேள்வி கேட்காமல் கட்டுப்படுவது என்று ஆரம்பத்தில் எதார்த்தத்தைப் பிரதிபலித்திருக்கிறார். ஆனால் இரண்டாம்பாதியில் அதே எதார்த்தத்தைத் தலைகீழாகத் தொங்கவிட்டு லத்தியாலேயே வெளுத்திருக்கிறார். தன் மகனைக் காணாமல் க்ளைமாக்ஸில் கதறும் விஷாலின் நடிப்பில் ஒன்றரை டன் மிகை. ரொமான்ஸும் எதார்த்தமுமாக சுனைனா கவர்கிறார். ஏகப்பட்ட பில்டப்கள் தரப்பட்டாலும் படத்தில் பெரிதாக எதையும் சாதிக்காத வில்லன் சன்னியைவிட, அவர் மகனாக வரும் ரமணா ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.

யுவன்ஷங்கர்ராஜாவின் பின்னணி இசை, இரண்டாம்பாதி முழுதும் விறுவிறுப்பையும் பதைபதைப்பையும் கூட்டுகிறது. பாலசுப்பிரமணியெம் - பாலகிருஷ்ணா தோட்டாவின் ஒளிப்பதிவு அந்தப் பிரமாண்டமான கட்டடத்தின் இண்டு இடுக்கெல்லாம் ஓடி ஓடிப் பதிவு செய்திருக்கிறது.

லத்தி - சினிமா விமர்சனம்

வழக்கமான சினிமா சாகசம் இல்லாத சாதாரண கான்ஸ்டபிள் தான் ஹீரோ என்று அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் யோசித்தவரை ஓகே. ஆனால் முன்னாள் அமைச்சர்களை மிரட்டி சம்பந்தியாகும் தாதா, தன்னை அடித்தவனை கேரிபேக் ஓட்டை வழியாகத்தான் கண்டுபிடிக்க முடியும் என்பதற்காகவே கேரிபேக் கவரைத் தலையில் மாட்டிக் கழற்றாமல் சுற்றும் தாதாவின் மகன், இரண்டாம்பாதியில் எதார்த்தத்தை மீறிய ஆக்‌ஷன் காட்சிகள் போன்றவை கேரிபேக் ஓட்டையைவிடப் பெரிய ஓட்டைகள்.

தொடக்கத்தில் இருக்கும் எதார்த்தம் படம் முழுவதும் பயணித்திருந்தால் ‘லத்தி' தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.