எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன் என அந்தக் காலத்து அத்தனை முன்னணி நாயகர்களுடனும் நடித்த இவர், சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் நகரில் காலமானார். அவருக்கு வயது 73.

இன்றைய தலைமுறையினரிடம், கறுப்பு - வெள்ளை காலத்து நாயகிகள் சிலரது பெயரைச் சொல்லச் சொன்னால் பெரும்பாலும், சரோஜாதேவி, சாவித்திரி, மனோரமா, கே.ஆர்.விஜயா என்றெல்லாம் அவர்கள் பட்டியலிடும் வாய்ப்பே அதிகம் எனலாம். காலம் காலமாகவே முன்னணி நாயகிகளைக் கண்டு, ரசித்து, நினைவில் வைத்துக்கொள்வது ரசிகர்களின் பண்பு. ஆனால், திரைக்கு முன் தெரிபவர்களுக்கு நிகராகப் பல பெண்கள் திரைக்குப் பின்னால் இருந்தும் சினிமாவை வளர்த்து வந்துள்ளனர். அதில் முதன்மையானவர்களில் ஒருவர் விஜய நிர்மலா என்று உறுதியாகச் சொல்லலாம்.
இப்போதெல்லாம் ஒரு பெண் ஒரு படத்தை இயக்க ஏன், ஒரு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பைப் பெறவே பல காலம் ஆகிறது. அதையும் தாண்டி அந்த வாய்ப்பைப் பெற்று, படத்தை ஒருவழியாக எடுத்து முடித்ததும், அதற்கான வணிகத்தில் அடுத்த சிக்கல் வரும். அதையும் தாண்டி அந்தப் படத்தை வெளியீட்டுக்குக் கொண்டு வருவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். பெண்களின் நிலை இப்படியிருக்கும் ஒரு துறையில்தான், ஒரு பெண் 44 படங்களை இயக்கி, உலக சாதனை படைத்திருக்கிறார் என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.
ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 19 வயதில் நாயகியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளின் திரைத்துறையிலும் கொடிகட்டிப் பறந்தவர், விஜய நிர்மலா. அடிப்படையில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், அவருடைய முதல் படம் தமிழ்ப் படம்தான். கடந்த 1950-ம் ஆண்டு வெளியான `மச்ச றெக்கை' என்ற படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், நான்கு ஆண்டுகள் கழித்து, தன்னுடைய ஒன்பது வயதில், `பாண்டுரங்க மஹாத்யம்' என்ற படம் மூலமாக தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதன்முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவுடன் 1967-ம் ஆண்டு வெளியான `சாக்ஷி' என்ற படத்தில்தான் இணைந்து பணியாற்றினார். அதைத் தொடர்ந்து இருவரும் 47 படங்களில் ஒன்றாக நடித்து, நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவியானார்கள்.
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல், மலையாளத்திலும் அதிகமான படங்களில் அந்த மொழியின் சூப்பர் ஸ்டாரான பிரேம் நஸீருடன் இணைந்து நடித்திருக்கிறார் விஜய நிர்மலா. அவரை ஒரு முன்னணி நடிகையாக மாற்றியதே `பார்க்கவி நிலையம்' என்ற 1964-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம்தான். அந்தப் படத்தில் பிரேம் நஸீருடன் இவர் இணைந்து நடித்ததற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததும், மீண்டும் `உத்யோகஸ்த்தா' என்ற படத்தில் அவருடன் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படமும் பெரிய வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து, மூன்று மொழிகளிலும் தவிர்க்க முடியாத ஒரு பிம்பமானார்.

இந்த உச்சத்தை அடைந்தவர், அந்தப் புகழை வீணாக்காமல், அதைப் பயன்படுத்தி சில தொலைநோக்குப் பார்வையுடனான திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். பெண்களின் மறுமணம் குறித்த கதைகள், நாவல்களைப் படமாக்கும் முயற்சி என அந்தக் காலத்து ஆண் இயக்குநர்களே தொடத் தயங்கிய சில விவாதப் பொருள்களைத் தயக்கமின்றி தொட்டவர், விஜய நிர்மலா.
அவருடைய மறைவு சினிமாவுக்குப் பேரிழப்பு. சினிமாவில் பெண்கள் வளர வளர, விஜய நிர்மாலாவின் நினைவும் நீங்கா இடம்பிடிக்கும். பிடிக்கட்டும்!