தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் பொழுதுபோக்கு அம்சங்களில் பின்னியெடுக்க, சிவாஜி தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டினார். அடுத்து வந்த ரஜினியும் கமலும் அப்படி அப்படியே வந்தார்கள். ரஜினி எம்ஜிஆரின் பாணியை பின்பற்றிப்போக, கமல் எடுத்த அவதாரம், நடிப்பு ராட்சஸன். விஜய், அஜித்திற்கு இப்படிப்பட்ட வித்தியாசங்களை காட்டமுடியாது. எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் அலைவரிசையில் வைத்துப் பார்க்க, விஜய் சேதுபதி இரண்டும் சேர்ந்த கலவை. ஆளுமைக்கும் முகத்தைக் கொடுத்து, நடிப்புக்கும் கௌரவம் தரும் வித்தியாசக் கலைஞன். இருக்கிற சோதனை முயற்சிகளுக்கு கமலுக்கு அடுத்து அவரே காதலன். இன்றைக்கு அவருக்கு பிறந்தநாள்.

இங்கே ந.முத்துசாமியின் பட்டறையில் கணக்காளராக இருந்து நாடகங்களை கவனித்துக் கொண்டேயிருந்தார். அப்புறம் துபாய்க்கு வேலைக்குப் போனவர் அங்கேயும் இருப்புக் கொள்ளாமல் திரும்பினார். மீண்டும் தமிழகம் வந்து சேர்ந்தவருக்கு காதலும் வந்து சேர்ந்தது. திருமணமும் செய்துகொண்டு அவ்வப்போது குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தக் குறும்படங்களிலும் வித்தியாசம் தெரிந்தது. 2000-ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு துணை நடிகராக கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் வந்து போனார். நமக்குமே விஜய் சேதுபதி இப்போதுதான் வந்து போயிருப்பது தெரியும். அதோ பார் விஜய் சேதுபதி என வீட்டில் காண்பிப்பதற்குள் அவர் திரையில் மறைந்து போனது அவருக்கே தெரிந்திருக்கும்.
'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் கபடி குழு வீரர்களில் வலிப்பு வந்து சுருண்டு விழுவார். 'நான் மகான் அல்ல' கார்த்தியின் நாலைந்து நண்பர்களில் கெச்சலான நண்பராக வந்து போவார். 'பலே பாண்டியா' படத்தில் விஷ்ணு விஷாலின் அண்ணன். இதெல்லாம் விஜய் சேதுபதி என நமக்கு இப்போதுதான் தெரியும். 'லீ', 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'யில் தலையை காட்டிவிட்டு எடுத்துக் கொண்டார். புதுப்பேட்டையில் கொஞ்சம் கவனிக்கிற மாதிரி மதராஸ் பேச்சை அச்சுப்பிசகாமல் பேசினார். அந்த பேச்சில் இழுப்பில்கூட வித்தியாசம் காட்டியது இப்போதுதான் எல்லோருக்கும் தெரிகிறது.

சீனுராமசாமியின் 'தென்மேற்கு பருவக்காற்று' வந்தது. ஏழு வருடங்களாக காத்திருந்த சேதுபதியை சீனு ராமசாமி நாயகன் ஆக்கினார். அந்தப் படத்துக்கு சரண்யாவுக்கும் வைரமுத்துவுக்கும் தேசிய விருது கிடைக்க, தமிழ் சினிமாவின் பார்வை, சேதுபதியின் மீது விழுந்தது. 'நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன்' என அடம் பிடிக்காமல் 'சுந்தர பாண்டியனி'ல் எதிர் நாயகனாக வந்து இன்னும் கவனத்துக்கு வந்தார். சசிகுமாரைப் பார்த்த கண்கள் ஓரப்பார்வையில் சேதுவையும் பார்த்தன. கிடைத்த சிறு சிறு பாத்திரங்களில் கவனம் ஈர்த்து, தன்னைத்தானே கூர்மைப்படுத்திக் கொண்டேயிருந்தார்.
திடீரென்று குறும்பட இளைஞர்களின் மொத்தப் பார்வையில் சேது விழ, சினிமாவின் புதுப்பார்வைக்கு முகம் கிடைத்தது. கார்த்திக் சுப்புராஜ் 'பீட்சா'வில் அவரை கொண்டு வந்து நல்ல பேஸ்மென்ட் போட்டார். ஒரே ஒரு டார்ச் லைட் உடன் அந்த ஒல்லி முகத்தில் பயம் காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டார் சேது. முதல் தடவையாக அவருக்கு கிடைத்த தனிப்பெயருடன் வெற்றியின் முதல் கனியை எடுத்து சுவைத்தார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை வேறு யாரும் பங்கேற்று நடித்திருந்தால் இவ்வளவு சிரித்திருப்போமா என்ற சந்தேகம் இன்றைக்கு வரை நமக்கு இருக்கிறது. விஜய் சேதுபதி மதிப்புக்குரியவராக தமிழ் சினிமாவில் முழுமையாக வெளிப்பட்டார்.

அந்தச் சூழலில் வந்தது நலன் குமாரசாமியின் 'சூது கவ்வும்'! அங்கே இங்கே நரைத்த தலையில் சற்றே தொப்பையும் போட்டு பிளாக் காமெடியில் பிய்த்து உதறினார். பேங்க் மேனேஜரின் மகளை கடத்திவிட்டு, 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் தைரியமாக வந்து நேரில் வாங்கிக்கொண்டு, பட்ஜெட் இடிக்குமோ என அவரிடமே கேட்டுவிட்டு ஸ்டைல் நடை நடந்து, குளிர் கண்ணாடியை மாட்டிக்கொண்டு அவர் நடந்தது முதல் மாஸ். கைத்தட்டல் அவர் கீழே வந்து காரில் உட்கார்ந்து போகிறவரை தொடர்ந்தது.
அப்புறம் சில படங்கள் அடி சறுக்கியது. யானைகளுக்கே சறுக்கிய வரலாறு இருக்கும்போது சேதுவுக்கு சறுக்காதா! ஆனால் விழித்துக்கொண்டார். 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் முதிய தம்பதியின் மீதான பெரும் காதலையும், கார் மீதான காதலையும் பதிவுசெய்தார். காமெடியும் எனக்கு சரளம் என 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'வில் அதகளம் காட்டினார். 'ஆரஞ்சு மிட்டாயி'ல் 60 வயது ஆளாய் நடித்தவர், அடுத்த படத்திலேயே நயன்தாராவை காதலிக்கும் வாலிபராக சட்டென்று மாறினார். அடிக்கப் பயப்படும் ரவுடியாக 'காதலும் கடந்து போகும்' படத்திலும், போலி ரௌடியாக 'நானும் ரௌடிதான்' படத்திலும் மொக்கையான தாதாவாக 'ஜுங்கா' படத்திலும் வித்தியாசம் காட்டினார். இதற்கு இடையில் ஒரு வடையை தூக்கிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் பயமில்லாமல் நுழைந்து 'விக்ரம் வேதா'வில் அசத்தினார்.

அத்தனை ஹீரோக்கள் இருக்கும்போது 'செக்கச்சிவந்த வானம்', 'இறைவி' படங்களில் தன்னந்தனியாக ஜொலித்தார். 96-ல் அவர் தந்தது மாசுமருவற்ற காதலை. முகத்தில் அப்பாவித்தனத்தை அள்ளிப் பூசிக் கொண்டு திரிஷாவின் திருமணம் நடந்த நேரத்தை, நிகழ்வை சொல்லிக் காட்டிய போது உணர்ச்சியில் பதறியது, த்ரிஷா மட்டுமல்ல... நாமும்தான்.
காதலை, தனிமையை, அன்பைக்கொண்டு த்ரிஷா சேதுவின் நெஞ்சைத் தொடும் போது அந்தக் காதலை அப்படியே காட்டினார் சேது. வரிந்து கட்டிக்கொண்டு சேதுவை வாரித் தூக்கினார்கள் தமிழ் ரசிகர்கள்.
சீதக்காதி தோல்விப் படம்தான். ஆனால் ஹீரோவாகத் தான் படம் முழுக்க இருப்பேன் என அடம் பிடிக்காமல் 45 நிமிஷ ரோலுக்கு உயிர் கொடுத்தார். பெரிய ஹீரோதான். ஆனாலும் ரஜினிக்கு போட்டியாக ஆண்டி ஹீரோவாக இறங்கி வந்து நடித்தார். `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக துணிச்சலாக நடித்தார்.

தமிழ் சினிமாவின் யதார்த்தம் இனிமேலும் துளிர்விடட்டும். அதற்கு சேதுபதி துணையிருக்க வாழ்த்துகள். அருமையான கலைஞனுக்கு பிறந்த தின வாழ்த்துகள். அசல் கலைஞனுக்கு ஆனந்த விகடனின் அன்பு உரித்தாகுக!