
இவங்க வீட்டுல அத்தனை பேரும் அக்கறையாக என்னைப் பார்த்துப்பாங்க. ஆதியே அவ்வளவு பாசமாக வீட்டில் இருப்பார். ஷூட்டிங் முடிச்சோம், வீடு வந்து சேர்ந்தோம்னு இருப்பார்.
“கனவுகள்தான் வாழ்க்கையை அழகாக்கும். கனவுகள் நிறைவேறுகிற நிமிஷங்கள் நம்மையே அழகாக்கும். சத்தியமாக காதலால்தான் இயங்கிட்டிருக்கு இந்த உலகம். உண்மையான காதலை ஒருத்தன் தேடி அடைவான் என்பதற்கு எங்களின் இந்தக் காதலும், கல்யாணமும் உதாரணம்” காதல் வழிய நம்மிடம் பேசத் தொடங்குகிறார் ஆதி. வீட்டில் காதலியும் மனைவியுமான நிக்கி கல்ராணியோடு செல்லம் கொஞ்சிக்கொண்டிருக்கிறார். இருவர் முகத்திலும் கனிவும் காதலும் பிரியமும் கொட்டிக்கிடக்கின்றன. அவர்களின் நீண்ட நாள் காதல் கைகூடியிருக்கிறது.
“முதலில் இவங்களை ‘யாகாவாராயினும் நா காக்க’ படப்பிடிப்பில் பார்த்தேன். நான் அதிகம் பேசாத பையன். அவங்களோ பேசிக்கிட்டே இருப்பாங்க. ஆனால் அந்தப் பேச்செல்லாம் மத்தவங்க மேலே கரிசனமாகத்தான் இருக்கும். வம்பு எதுவும் பேசறதில்லை. எனக்கு இவங்களை ரொம்பவும் பிடிச்சது. படப்பிடிப்பு முடிஞ்சதும் ஒருத்தரையொருத்தர் அக்கறையா விசாரிச்சுக்கிட்டோம்.

அப்புறம் ரொம்பவும் ஆச்சரியமாக எங்க அடுத்த வீட்டுக்காரங்களாகவே நிக்கி குடும்பம் வந்து சேர்ந்தது. கடந்த எட்டு வருஷங்களாக ஒரு ஈர்ப்பு ஓடிக்கிட்டே இருக்கு. ரொம்ப நிதானமான காதல் இது. ‘ஐ லவ் யூ’ கூட சொல்லிக் கிட்டதில்லை. ப்ரொபோஸ்கூட பண்ணிக்கிட்டதில்லை. அவ்வளவு இயல்பாக நடந்தது.
ஒருத்தருக்கொருத்தர் உணர்ந்து புரிஞ்சுக்கிட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி மனசு புரிஞ்சு பேசி, உணர்ந்து, குறை தெரிஞ்சு, பழக முடிஞ்சு இப்ப கண்ணாடியில் பார்த்துப் பேசிக்கிற மாதிரி ஆயிட்டோம். அப்படி ஒண்ணும் குணநலன்களில் நாங்க ஒரே மாதிரி கிடையாது. ஏன் ஒரே மாதிரி இருக்கணும்? பக்கத்து வீடு வேறயா, திடும்னு எங்க வீட்டுக்கு வந்திடுவாங்க. எங்க அப்பா, அம்மா நிக்கி மேல ரொம்ப அன்பாக இருப்பாங்க. அவளை அத்தனை அக்கறையா பார்த்துப்பாங்க. அது என்னையே பார்த்தது மாதிரியே இருக்கும். ஒரு பெண் மனதில் சந்தோஷமாக இருந்தால் அது அவளின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும். நிக்கி அப்படியிருந்தாள். நிக்கியைப் பார்த்தது, பழகியது, காதலானது, அன்பைப் பகிர்ந்துகிட்டதுன்னு இதெல்லாம் எந்தப் புள்ளியில் ஆரம்பிச்சதுன்னு சொல்ல முடியலை. எங்களோடது ஹானஸ்ட் அண்ட் பியூட்டிஃபுல் ரிலேஷன்ஷிப். ‘மரகத நாணயம்’ படத்தில பிரதீப் குமார் பாடிய
‘நீ கவிதைகளா கனவுகளா
கயல்விழியே
நான் நிகழ்வதுவா
கடந்ததுவா
பதில் மொழியே’
பெரிய ஹிட். அப்படித்தான் நாங்க இரண்டு பேரும் தொடர்ந்து புரிஞ்சுகிட்டோம்.


திடீரென உலகமே அழகாகிவிட்டது. உன் கனவெல்லாம் நடக்கணும்னு என்னைக் கையிலேந்தி ஒரு பொண்ணு சொன்னா என்னங்க செய்யறது. கல்யாணம் செய்துக்க வேண்டியதுதான். செய்துக்கிட்டேன்” என்றவர், “ஹலோ, நான்தான் பேசிக்கிட்டே இருக்கணுமா? நீ பேசு நிக்கி” எனக் கன்னம் தட்டுகிறார் ஆதி.
“இவங்க வீட்டுல அத்தனை பேரும் அக்கறையாக என்னைப் பார்த்துப்பாங்க. ஆதியே அவ்வளவு பாசமாக வீட்டில் இருப்பார். ஷூட்டிங் முடிச்சோம், வீடு வந்து சேர்ந்தோம்னு இருப்பார். இவ்வளவு அன்பான குடும்பமான்னு ஆச்சரியமாக இருக்கும். நான் என் வீட்டில் கல்யாணம் பற்றிப் பேசினதும் அவர் வீட்டில் கல்யாணம் பற்றிப் பேசினதும் அவ்வளவு சுலபமாக நடந்தது. இரண்டு பக்கத்தில் இருந்தும் எதிர்ப்பு, மறுப்புன்னு ஒரு வார்த்தை கூட இல்லை. மாறாக அவ்வளவு சந்தோஷமா சரின்னு சொன்னாங்க. நான் வடநாட்டுப் பொண்ணுதான். ஆனால் எனக்குப் பிடிச்சது இட்லி சாம்பார்தான். தமிழ் பேசவும், புரிஞ்சுக்கவும் ஆரம்பிச்சுட்டேன். நாங்க இந்த எட்டு வருஷங்களையே காதலுக்குப் பரிசாகத் தந்தோம். ‘காதலுக்குத் தினம் ஏது? தினமும்!’னு ஆங்கிலத்தில் ஒரு கவிதை வரி இருக்கு. அதுதான் எங்க அன்பை சரியாகச் சொல்றது மாதிரியிருக்கு.

அவருக்குக் கையில் பணம் இருந்திட்டால் நிற்காது. அதைச் செலவழிச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். நான் வாழ்க்கையில் எப்படியெல்லாம் சரியாக இருக்கணும்னு யோசிச்சு வாழ்ற பொண்ணு. இன்னும் சினிமாவைத் தொடரணுமான்னு முடிவு எடுக்கலை. எல்லாமே இங்கே கூட்டு முடிவுதான். யாரும் இங்கே சுயமரியாதையை விட்டுக் கொடுத்து இருக்க வேண்டாம்னு பேசி முடிவெடுத்திருக்கோம். காதல்னா ஒருத்தரை இன்னொருத்தர் உள்ளங்கையில வச்சு இறுக்கமா மூடிக்கிறது இல்ல. நாம நேசிக்கிறவங்களை அவங்க குணமும் போக்கும் மாறாதபடிக்கு வாழவிடுறதுதான். இதை நாங்க ரெண்டுபேருமே நல்லா புரிஞ்சு வச்சிருக்கோம்.

எங்க வீடு இப்ப ஆதியோட அன்பாலும், இருப்பாலும் நிரம்பியிருக்கு. என்றும் அது அப்படியே பாதுகாப்பாக இருக்கும். கணவன் ஆகிவிட்டாலும், இன்னும் காதலனாகவே வாழ்கிற அந்தப் பண்புதான் எனக்குப் பிடித்தது” என்கிற நிக்கியின் முகம் பார்த்துக் கனிகிறார் ஆதி. இருவரும் இன்னும் அழகாகிறார்கள்.
True love is true relationship.