
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்காவிட்டாலும் பின்னணி இசை கலகலப்பைக் கூட்டியிருக்கிறது
ஸ்மார்ட்போன் காலத்துக் காதலை ஸ்மோர்ட்போனையே மையப்படுத்தி சுவாரஸ்ய சினிமாவாக எடுத்தால் அதுதான் ‘லவ் டுடே.’
உத்தமன் பிரதீப்பும், நிகிதாவும் காதலிப்பது தெரிந்து நிகிதாவின் அப்பாவான வேணு சாஸ்திரி இருவரையும் அழைத்துப் பேசுகிறார். திருமணத்துக்குச் சம்மதிக்க வேண்டுமானால் இருவரும் தங்களின் மொபைலை ஒருநாள் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வில்லங்க வில்லத்தன கண்டிஷனை முன்வைக்கிறார். போன்களை மாற்றிக்கொள்ளும் காதல் ஜோடியை அதற்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள் என்னவெல்லாம் செய்தன, சிக்கல்கள் கடந்து அவர்கள் ஒன்றுசேர்ந்தார்களா என்பதே படத்தின் கதை.

நாயகன் பிரதீப்பாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். காதலியின் அப்பா முன்பு ‘உத்தமனாக’ வழிவது, காதலி மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் தெரிந்தவுடன் எரிமலையாக வெடிப்பது, பின்னர் தன்னைப் பற்றிய ரகசியங்கள் வெளிவந்தவுடன் பம்முவது என ரசிக்க வைத்துள்ளார். ஆனால் டைட்டில் கார்டில் ‘லவ் டுடே’ டைட்டிலுக்காக விஜய்க்கு நன்றி சொல்வது போல் தனுஷுக்கும் நன்றி சொல்லலாமே என்று தோன்றும்வகையில் பல காட்சிகளில் தனுஷின் உடல்மொழியை அப்படியே நகலெடுத்திருக்கிறார்.
காதலி நிகிதாவாக இவானா, அத்தனை பேருடனும் போட்டி போட்டுச் சிறப்பாக நடித்திருக்கிறார். சீனியர்கள் சத்யராஜ், ராதிகா இருவருமே ஜூனியர்கள் மட்டுமே நிரம்பிய இந்தப் படத்துக்குப் பெரும்பலம். குறிப்பாக ராதிகா, தன் மகனுடன் இறுதியில் உரையாடும் அந்தக் காட்சி ஒரு சோற்றுப் பதம். உருவக்கேலி காமெடிகளுக்குப் பெயர்போன யோகி பாபுவை வைத்தே அதற்கு எதிராக மெசேஜ் சொன்னது பாராட்டத்தக்கது. ஃபைனலி பாரத், ஆதித்யா கதிர் உள்ளிட்ட நாயகனின் நண்பர் கூட்டமும் சிரிப்புக்கு கியாரண்டி.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்காவிட்டாலும் பின்னணி இசை கலகலப்பைக் கூட்டியிருக்கிறது. தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு இதம்.
மாங்கொட்டை உதாரணம், இன்ஸ்டாகிராம் இன்பாக்ஸில் ஒரு ரணகளப் பயணம், வாட்ஸப் உரையாடல்களைக் காட்சிகளாக மாற்றியது, சமகால 2கே கிட்ஸ் உலகை மையப்படுத்திய விஷயங்கள் எனப் பல சுவாரஸ்ய ஐடியாக்களை லாரியில் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்திருக்கிறார் பிரதீப். அதேநேரம் சில ஆபாச வசனங்கள், காட்சிப்படுத்தக்கூடாத சில விஷயங்களால் முகம் சுளிக்க வைப்பது போன்றவை சறுக்கல்.
சமகாலக் காதல் தொழில்நுட்பத்தில் மையம் கொண்டிருப்பதை சுவாரஸ்யமாகச் சொன்னவிதத்திலும், எல்லாக் காலங்களிலும் காதலுக்கு நம்பிக்கையே அஸ்திவாரம் என்பதை அழுத்தமாகச் சொன்னவகையிலும் ‘லவ் டுடே’வை லைக் செய்யலாம்.