சினிமா
தொடர்கள்
Published:Updated:

மாமனிதன் - சினிமா விமர்சனம்

மாமனிதன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாமனிதன் - சினிமா விமர்சனம்

பிரதிபலன் எதிர்பாராது எப்போதும் உடன் நிற்கும் தோழன் வேடத்தில் குருசோமசுந்தரத்தின் முதிர்ச்சி முத்திரை

வஞ்சம், துரோகம் போன்றவற்றுக்கு ஆட்பட்டாலும், அவற்றை சாந்தமாய்க் கடந்து ஒரு மனிதன் எப்படி மேன்மையானவனாக மாறுகிறான் என்பதைப் பேச முயலும் படமே இந்த ‘மாமனிதன்.’

பண்ணைப்புரத்தில் ஆட்டோ ஓட்டி எளிமையாய் வாழ்வை நகர்த்தும் குடும்பத்தலைவர் விஜய் சேதுபதி. காதல் மனைவி, இரு குழந்தைகள், நிலைத்த வருமானம் என வரம் போல அமைந்த வாழ்க்கை. குழந்தைகளைப் பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் பணம் நிறைய வேண்டுமென்பதால், தனக்கு அனுபவமில்லாத ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிக்கிறார். ஊர்மக்களும் விஜய் சேதுபதியின் நல்ல மனதை நம்பி அவர் காட்டும் இடத்தில் பணத்தைப் போடுகிறார்கள். அதை விஜய் சேதுபதியின் பிசினஸ் பார்ட்னர் மொத்தமாய் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட, மொத்த அழுத்தமும் இப்போது விஜய் சேதுபதியின் மேல். ஒரு சாதாரண மனிதன் இப்படியான அசாதாரண சூழ்நிலையை எப்படிக் கையாள்கிறான், அவன் குடும்பம் என்னவானது என்பதெல்லாம்தான் மீதிக்கதை.

மாமனிதன் - சினிமா விமர்சனம்

என்ன கதாபாத்திரம் ஏற்றாலும், பார்ப்பவர்களை நம்பச் செய்யும்படி அந்த வேடத்தைச் செம்மையாய்ச் செய்வது விஜய் சேதுபதி ஸ்பெஷல். இதிலும் மிக எளிதாய் அப்படி ஒரு வேலையைச் செய்துவிட்டுப் போகிறார். மண்ணின், மனிதர்களின் நல்லியல்பை மட்டும் நம்பும் வெள்ளந்தி மனுஷியாய் காயத்ரி, வி.சே-வுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் திரையில் ஈடு கொடுக்கிறார். பெரிதாய் முரண்கள், சிக்கல்கள், வித்தைகள் இல்லாத சிம்பிளான கதையை அழகாய் நகர்த்திச் செல்வது இவ்விரண்டு திறமை வாய்ந்த கலைஞர்கள்தாம்.

பிரதிபலன் எதிர்பாராது எப்போதும் உடன் நிற்கும் தோழன் வேடத்தில் குருசோமசுந்தரத்தின் முதிர்ச்சி முத்திரை. ஷாஜி சென், மணிகண்டன், மானஸ்வி என படத்தில் தோன்றும் மற்றவர்களும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை நினைவுபடுத்தி நம்பகத்தன்மையை அதிகரிப்பதே படத்தின் பலம்.

இளையராஜா - யுவன் கூட்டணியின் முதல் படம் என எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தாலும் ‘ஏ ராசா’ தவிர்த்து வேறு பாடல்களோ பின்னணி இசையோ ஈர்க்கவில்லை. சுகுமாரின் ஒளிப்பதிவு கதை நகரும் பரப்புகளுக்கெல்லாம் நம்மையும் அழைத்துப் போகிறது.

சினிமாவுக்கான எந்தப் பூச்சும் இல்லாமல் எந்த சமரசத்திற்கும் உள்ளாகாமல் எளிய மனிதர்களைப் பேச நினைக்கும் இயக்குநர் சீனு ராமசாமியின் முயற்சிக்குப் பாராட்டுகள்.

மாமனிதன் - சினிமா விமர்சனம்

படத்தின் சிக்கல், விஜய் சேதுபதியை எப்படியும் ‘மாமனிதன்’ ஆக்கிவிட அதீதமாய் முயல்வதுதான். தலைப்புக் கேற்றாற்போல நிகழ்வுகளை வடிவமைத்தி ருக்கும் தொனி தென்படுவதால் ஒரு நாடகத்தன்மையும் வந்துவிடுகிறது. காசியில் வி.சே-வுக்கு ‘மாமனிதன்’ பட்டம் சூட்டப் படும் காட்சி ஒரு சோற்றுப் பதம்.

போக, பிரச்னைகளை நேராய்ச் சந்திக்காமல் குழந்தைகளை, மனைவியை ஊரார் வசைபாட விட்டுச் செல்பவர் எப்படி மாமனிதன் ஆகமுடியும்? காயத்ரி ஏன் கடைசியில் அவர் காலில் விழவேண்டும்? - இப்படி ஏகப்பட்ட உறுத்தல்கள். இவற்றைக் களைந்திருந்தால் ‘மாமனிதன்’ போற்றப்பட்டிருப்பார்.