
யுவனின் பின்னணி இசையை சலிப்பே இல்லாமல் டைம் லூப்பில் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல.
டைம் டிராவல், டைம் லூப் படங்களெல்லாம் நிறைய அறிவியலையும் கொஞ்சம் சீரியஸ் முகத்தையும் கொண்டிருக்கும் என்கிற விதியை மாற்றிக் கலகலப்பாக எழுதியிருக்கும் படம் இந்த ‘மாநாடு.’
வெளிநாட்டிலிருந்து ஊட்டிக்கு ஒரு திருமணத்திற்காக வந்து இறங்குகிறார் அப்துல் காலிக் ( சிலம்பரசன்). அங்கிருந்து திரும்பும்வழியில் எதிர்பாராவிதமாக ஒரு சூழ்ச்சி வலையில் மாட்டிக்கொள்கிறார். அதில் அவர் பலியாக, மீண்டும் அந்த நாள் முதலிலிருந்து தொடங்குகிறது. இப்படி ஒவ்வொரு முயற்சியிலும் அவர் எடுத்துவைக்கும் தவறான அடிகள் அவரைக் காவு வாங்க, இறுதியில் எதற்காக இப்படி திரும்பத் திரும்ப நடக்கிறது, எப்படி இதை நிறுத்துவது என்பதையெல்லாம் ஏகப்பட்ட ரிப்பீட்டு முயற்சிகளுக்குப் பிறகு அவர் கண்டுபிடிப்பதுதான் கதை.
சிம்பு - எஸ்.டி.ஆர் - சிலம்பரசன் டி.ஆர் - பெயருக்கேற்றாற்போலவே பெர்பாமன்ஸிலும் பரிணாம வளர்ச்சி. துடிப்பாய், துள்ளலாய் இவ்வளவு எனர்ஜியோடு சிம்புவைப் பார்த்துப் பல ஆண்டுகளாகிவிட்டது. காமெடி, ஆக்ஷன் என அத்தனை வட்டாரத்திலும் பரபர வேகம்.

சிம்புவுக்கு இணையாய்க் கொடிபிடித்து வெற்றிநடை போடுகிறார் தனுஷ்கோடி (எ) எஸ்.ஜே.சூர்யா. வில்லத்தனத்தையும் காமெடியையும் இவ்வளவு அழகாகக் கலந்துகட்டி ஒரு விருந்தை சமீபகாலங்களில் யாரும் தமிழ் ரசிகர்களுக்கு வைத்ததில்லை. முதல் பாதியைத் தன் தோட்டாக்களிலும் இரண்டாம் பாதியைத் தன் தோள்களிலும் தூக்கிச் சுமக்கிறார் எஸ்.ஜே சூர்யா.
நாயகியான கல்யாணிக்கு ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர பெரிதாக வேலையில்லை. எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரா, வாகை சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதி, சுப்பு பஞ்சு, அரவிந்த் ஆகாஷ் போன்ற மாநாட்டுக் கூட்டத்தில் எல்லாரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்க, தனித்து ஸ்கோர் செய்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா.
யுவனின் பின்னணி இசையை சலிப்பே இல்லாமல் டைம் லூப்பில் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல. தன் நூறு படங்களின் அனுபவத்தையும் கொட்டி ஒவ்வொரு காட்சியாக பொறுமையாகச் செதுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இவர்கள் இருவரும்தான். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு துல்லியம்.

தனக்கேயுரிய நடையில் ஒரு கடினமான சப்ஜெக்ட்டைப் பட்டிதொட்டியெங்கும் புரியும்வகையில் படமாக்கிய இயக்குநர் வெங்கட் பிரபுவிற்குப் பாராட்டுகள். அதில் சமகால அரசியலையும் இணைத்துப் பேசுபொருளாக்கியவிதமும் சிறப்பு.
புராணத்தை அறிவியல் காரணம்போல விளக்குவதும், முதல்பாதியின் தொடக்கக் காட்சிகளும் லேசாய் அயர்ச்சியை உண்டாக்குகின்றன. அதற்கும் சேர்த்து இரண்டாம்பாதியில் எக்கச்சக்க சுவாரஸ்யங்கள் சேர்த்து ரசிக்கவைக்கிறார் வெங்கட்பிரபு.
அரசியல் மாநாடுகளுக்குத் தயங்கித் தயங்கிக் கூட்டம் சேரும்வேளையில் தளர்ந்துபோயிருந்த தமிழ்சினிமாவிற்காகத் திரையரங்குகளில் கூட்டம் கூட்டியுள்ளது இந்த ‘மாநாடு.’