சினிமா
தொடர்கள்
Published:Updated:

மாயோன் - சினிமா விமர்சனம்

மாயோன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாயோன் - சினிமா விமர்சனம்

ஒரே விஷயத்துக்கு ஆன்மிக காரணம், அறிவியல் காரணம் என்று விவரித்து சமநிலையுடன் கதை சொல்லியிருப்பது படத்துக்கு வலுச்சேர்க்கிறது.

ஒரு பழங்காலக் கோயிலின் ரகசிய அறையிலிருக்கும் புதையலை அபகரிக்க நினைக்கும் ஒரு தொல்லியல் குழு, அக்கோயிலின் அமானுஷ்யங்களைக் கடந்து அதை அடையும் முயற்சியே ‘மாயோன்.'

தொல்லியல் துறையில் வேலை பார்க்கும் சிபி சத்யராஜ், ஹரீஷ் பேரடி குழு தங்களுக்குக் கிடைக்கும் பழங்கால அரிய பொருள்களைக் கள்ளச்சந்தையில் விற்றுக் காசு பார்க்கின்றனர். மாயோன் மலையில் இருக்கும் பழைமை வாய்ந்த கிருஷ்ணர் கோயில் குறித்து அறிந்து கொள்பவர்கள், அங்கிருக்கும் ரகசிய அறைப் புதையலைக் கொள்ளையடிக்கத் திட்டமிடு கின்றனர். கோயிலின் அமானுஷ்யங்கள், தொல்லியல் துறை உயரதிகாரியான கே.எஸ்.ரவிக்குமார், கோயில் நிர்வாகி ராதாரவி ஆகியோரைக் கடந்து சிபி அண்டு டீம் தங்களின் காரியத்தை சாதித்ததா என்பதே கதை.

மாயோன் - சினிமா விமர்சனம்

தொல்லியல் துறை அதிகாரியாகச் சிபி சத்யராஜுக்கு நெகட்டிவ் பாத்திரம். ஆனால், அதைப் பிரதிபலிக்கும் ஹரீஷ் பேரடியுடனான ‘சாமர்த்தியத் திருட்டு' காட்சிகளுக்கு இன்னமும் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்திருக்கலாம். தான்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் ஆகியோருக்கு க்ளைமாக்ஸ் வரை பெரிதாக வேலையில்லை. ஹரீஷ் பேரடி வில்லனாக போனில் மட்டுமே மிரட்டிக்கொண்டிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி ஆகியோருக்குக் கதையில் முக்கியமான வேடங்கள். இவ்வளவு தேர்ந்த நடிகர்கள் இருந்தும் அவர்களிடம் நம்பகத்தன்மையுடன் கூடிய நடிப்பை வாங்கத் தவறியிருக்கிறார் இயக்குநர் கிஷோர். அதேபோல் முதல்பாதிக் காட்சிகள் அனைத்தும் துரிதகதியில் கடந்து செல்கின்றன.

சாகசம், ஆன்மிகம், அமானுஷ்யம், அறிவியல் என எல்லாம் கலந்ததொரு கதையைச் சிறப்பாகக் கோத்திருக்கிறார், திரைக்கதை எழுதி படத்தையும் தயாரித்திருக்கும் அருண்மொழி மாணிக்கம். ஒரே விஷயத்துக்கு ஆன்மிக காரணம், அறிவியல் காரணம் என்று விவரித்து சமநிலையுடன் கதை சொல்லியிருப்பது படத்துக்கு வலுச்சேர்க்கிறது. மாலை ஆறு மணிக்கு மேல் கோயிலிலிருந்தால் பித்துப்பிடித்துவிடும், கந்தர்வர்கள் கிருஷ்ணருடன் இரவில் இசையமைக்கின்றனர் என அமானுஷ்யமும், ஆன்மிகமும் கலந்து நடக்கும் சில சம்பவங்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. கிராபிக்ஸ் சுமார் என்றாலும், அந்த ‘நான் ஈ' டிரோன் காட்சி நல்லதொரு ஐடியா.

மாயோன் - சினிமா விமர்சனம்

படத்தின் பெரும்பலம் இசைஞானி இளையராஜாவின் இசை. ‘மாயோனே' பாடலும் ‘கந்தர்வா' தீம் மியூசிக்கும் படம் முடிந்த பின்னும் காதுகளில் ஒலிக்கின்றன. பாடல்கள் அனைத்தையும் இளையராஜாவே சிறப்பாக எழுதியுமிருக்கிறார். பாலசுப்ரமணியத்தின் கலை வடிவமைப்பு ஒரு புராதனக் கோயிலை எவ்விதக் குறையுமின்றிக் கண்முன் நிறுத்துகிறது.

நல்லதொரு ஸ்கிரிப்ட்டைப் பிடித்தவர்கள், கிராபிக்ஸ், நடிப்பு உட்பட மேக்கிங் விஷயத்திலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், ‘மாயோன்' முக்கியமானதொரு முயற்சியாக அமைந்திருக்கும்.