”உன்னுடைய வயசுல அப்துல்கலாம் எப்படி படிச்சாரு தெரியுமா?” என்று கேட்கும் அப்பாவிடம், ”உங்க வயசுல அப்துல்கலாம் விஞ்ஞானி ஆகி ஜனாதிபதியும் ஆயிட்டார் நீங்க என்ன சாதிச்சீங்க?” என்று பிள்ளை திருப்பிக் கேட்கும் நகைச்சுவையை(?!) நாம் எல்லோரும் படித்திருப்போம், பெற்றோரிடம் பேசியிருப்போம். பெற்றோர்களை அறிவில், வருமானத்தில் மற்றவர்களின் பெற்றோர்களுடன் ஒப்புமைப்படுத்தி பேசுவது, பிடிக்காமல் அவர்களிடமிருந்து விலகி இருக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. அதுபோல தற்போது டெக்னாலஜியுடன் அப்டேட் ஆகாத பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் விலகத் தொடங்குகிறார்கள்.
தொழில்நுட்பத்துடன் வளராத, தன்னை வளர்த்துக் கொள்ளாத பெற்றோர்களிடத்தில் பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொள்வதற்கு எதுவும் இருப்பதில்லை. தங்களுடைய சமூக வலைதள உலகம், தங்கள் மீம் மொழி எதுவும் பெற்றோர்களுக்கு புரியாது என எல்லா உணர்வுகளையும் ஒற்றை ஹேஷ்டேக்கிற்குள் சுருக்கிவிட இளைய சமூகம் நினைக்கின்றது.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான வீடுகளில் ஒன்றாக உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தால் பெற்றோரிடம் உரையாடுவதற்கான குறைந்தபட்ச நேரம் இருந்தது. வளர்ந்த பிறகும் பெற்றோர்களுடன் அதிக நேரம் செலவு செய்த கடைசி தலைமுறை 80’ஸ் கிட்ஸாக இருக்கலாம். தற்போது பதின் வயதை கடந்த பிள்ளைகள் தங்கள் தேவைகளை தெரிவிக்கவே பெற்றோர்களிடத்தில் பேசுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி, ஸ்மார்ட்போன் வருகையினால் பல நன்மைகள் இருந்தாலும் அது குடும்பத்திற்குள் நெருங்கிய உறவுகளுக்கிடையே இடைவெளியை உருவாக்கி இருப்பதை பிள்ளைகள் உணர்வதில்லை. சிலருக்கு அது புரிந்தாலும் இன்றைய வாழ்க்கை முறையில் இந்த விலகல் இயற்கை என்பதுபோல எளிதாக கடந்து செல்கிறார்கள்.

ஆனால் பெற்றோர்கள் திடீரென்று தங்கள் அருகில் இருந்து பிள்ளைகள் காணாமல் போவதால் உண்டாகும் வெற்றிடத்தை நிரப்ப பிள்ளைகளின் உலகத்திற்குள் நுழைந்துவிட நினைக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் பல பெற்றோர்களும் கம்ப்யூட்டர், இணையம், சமூக வலைதளம், ஸ்மார்ட்போன் என தங்களை அப்டேட் செய்து கொள்ள விழைகிறார்கள். அது முடியாதவர்கள் பிள்ளைகளுக்கும் தங்களுக்கும் இருக்கும் இடைவெளியினால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
அதுபோக, இன்று ஒருவருடைய அறிவு அவரது சமூக வலைதள புழக்கத்தையும், பிரபலத்தையும் வைத்து முடிவு செய்யப்படுகிறது. எவ்வளவு பெரிய சிந்தனையாளர், அறிவாளியாக இருந்தாலும் சமூக வலைத்தளம் பயன்படுத்தாதவர்கள் ஒன்றும் அறியாதவர்களாக அறியப்படுகிறார்கள்.
இப்படி ஸ்மார்ட்போன், சமூக வலைதளம் என எது பற்றியும் தெரியாத technologically-challenged 60 வயது அப்பா, 24 மணி நேரமும் ஸ்மார்ட் போனுடன் வாழும் tech-savvy மகன்களுடன் தன்னை இணைத்துக் கொள்ள நவீன தொழில்நுட்பம் கற்றுக்கொள்வதை பற்றி கடந்த வாரம் #Home எனும் மலையாள திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
#Home படத்தில் மனப்பிறழ்வினால் தன்னை அறியாமல் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழித்துவிடும் தன் தந்தையை முகம் சுளிக்காமல் கவனித்துக் கொள்கிறார் 60 வயது கதாநாயகன். அதேபோல் கதாநாயகனின் மனைவி தனது மாமனாருக்கு வீடு பற்றிய நினைவு இல்லை என்றாலும் அவர்முன் சண்டையிடவோ சத்தமாக பேசவோ செய்யமாட்டார். பெரியவர்கள் மீது போன தலைமுறை பிள்ளைகளுக்கு இருக்கும் மரியாதை மற்றும் அன்பும், இன்றைய தலைமுறை பிள்ளைகள் வேறுபட்டு நிற்பதையும் இந்த காட்சிகள் புரிய வைக்கும்.
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு யூடியூபராகும் முயற்சியில் இருக்கும் கதாநாயகனின் இளைய மகன் எந்நேரமும் வீட்டிலேயே பொழுதைக் கழிக்கிறான். அவன் தனது அம்மா ஒரு ரோபோவை போல அவனுக்கு வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

இன்றைய பிள்ளைகள் முந்தைய தலைமுறைகளைவிட மிக அதிகமாக சுயநலமிக்கவர்களாக, சோம்பேறிகளாக, தன்னை மட்டும் முன்னிறுத்தி முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கேட்பதையெல்லாம் அன்பின் பேரால் செய்யும் பெற்றோர்களும் ஒருவகையில் அதற்கு காரணமாக இருக்கிறார்கள்.
கல்லூரி முடித்து வேலைக்கு சென்ற நாள்களில், அலுவலகத்தில் வேலை செய்வது பெரிய சாதனை போலவும் அம்மா மட்டும் நாள் முழுக்க சொகுசாக வீட்டில் இருப்பதாகவும் நினைத்துக் கொள்வது உண்டு. காலையில் 5 மணிக்கு எழுந்து, நான்கு பேருக்கு காலை உணவு, மதிய உணவு தயார் செய்து கொடுத்து, எல்லோருடைய ஆடைகளை துவைத்து, வீட்டு வேலை மொத்தமும் செய்து மீண்டும் இரவு எல்லோருடைய மதிய உணவு பாத்திரங்களை கழுவி விட்டு அம்மா படுக்க 12 மணி ஆகும். ஆனால் பத்து மணிக்கே தூங்க சென்றுவிடும் நாங்கள் படுக்கை அறையில் இருக்கும் மின் விசிறியின் வேகத்தை கூட்டி, குறைக்க கூட சமையல் அறையில் இருக்கும் அம்மாவை அழைப்போம். பல நேரங்களில் மின் விசிறியின் வேகம் போதுமா என சோதித்து சொல்லும் வரையில் அவர் ஸ்விட்ச்சின் அருகில் நின்றுக்கொண்டிருக்க வேண்டும். இதையெல்லாம் இன்றும் நாங்கள் ‘Best Memories’ என அம்மாவுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தது எவ்வளவு மோசமான சுயநலமிக்க செயல் என இப்படம் உணர்த்தியது.
#Home படத்தில் வெளியூரில் வேலை பார்க்கும் மூத்த மகன் வளரும் போது பெற்றோர்களிடமிருந்து விலக ஆரம்பிக்கிறான். அவன் வீட்டுக்கு வரும் சமயங்களில் அவனுடன் பேசுவதற்கு பெற்றோர்கள் ஏக்கமாக பல முயற்சிகள் செய்கிறார்கள். அவனோ எந்நேரமும் செல்போனில் மூழ்கி இருக்கிறான். அதுபோக தன்னுடைய வருங்கால மாமனாரின் சாதனைகளையும், அவர் இன்றைய தலைமுறையினரை போல் தொழில்நுட்பத்தில் அப்டேட்டடாக இருப்பதையும் தன் அப்பாவின் தொழில் மற்றும் அவருக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தெரியாததுடன் ஒப்புமைப்படுத்தி கேலி செய்துகொண்டே இருக்கிறான்.
படத்தில் கதாநாயகன் ஆலிவர் ட்விஸ்ட் தனது மகன்களுடன் இணைவதற்காக ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கற்றுக் கொள்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் பிள்ளைகள் மேல் கோபம் கொள்ளாமல் இந்த இடைவெளியை நிரப்ப பாசிட்டிவாக முயற்சி செய்யும் பெற்றோர்கள் மிகக் குறைவு. அதேபோல் பெற்றோர்களுக்கு எல்லாவற்றையும் பொறுமையாக சொல்லிக் கொடுக்கும் பிள்ளைகளும் மிக மிகக் குறைவு.

ஸ்மார்ட்போன் வந்த பிறகு அதை பயன்படுத்த தெரியாத அம்மாவுடன் சமூக வலைதளத்தில் காணும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் தொடங்கியது. ஆனால் பெரும்பாலான ட்ரோல் வீடியோக்கள், மீம்கள் அவருக்கு புரியாது. அவருக்கு புரியாத பல விஷயங்களை விளக்கும்போது எப்போதாவது சலிப்படைவதும் உண்டு. அவருக்கு அது மன வருத்தத்தை உண்டாக்கியது. “எனக்கு வயசாகிறது. இதெல்லாம் புரியாது. வேண்டாம்” என சொல்லத் தொடங்கினார். அம்மாவுக்கு அரசியல் பேசும் ஆர்வம் இருந்தமையால் ஓரளவு பேச விஷயங்கள் இருந்தன. ஆனாலும் சமூக வலைதளம் மற்றும் ஸ்மார்ட்போன் எங்களுக்குள் உருவாக்கிய இடைவெளி அப்படியேதான் இருக்கிறது. இது பல வீடுகளிலும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே இன்று நடந்து கொண்டிருக்கிறது. இப்போதுள்ள 2k கிட்ஸ்களுக்கு தங்கள் பெற்றோர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
பலரும் தங்கள் பெற்றோருடன் குடும்ப உறவுகளின் வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பதை விரும்புவதில்லை. அதேபோல் தங்களது பேஸ்புக் கணக்கில் பெற்றோரை அனுமதிப்பது இல்லை. பொது இடங்களில் பெற்றோர்களுக்கு நாகரீகமாக நடந்துகொள்ள தெரியாது என்கிற எண்ணம் பெற்றோரை விட சிறிது அதிகம் படித்திருக்கும் பிள்ளைகளுக்கு அந்த காலம் முதலே இருக்கிறது. கிராமத்து பெற்றோர்களை நகரத்தில் தன் கல்லூரி அல்லது வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க தயங்குபவர்களை திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். அதன் நீட்சியாக இன்றைய தலைமுறையினர் தங்கள் பெற்றோர்களை சமூக வலைதளங்களில் உடன் வைத்துக்கொள்ள தயங்குகிறார்கள். பெற்றோர்களுடன் இணைந்திருத்தல் தங்கள் சுதந்திரத்திற்கு பாதிப்பு என்பதும் அந்த தயக்கத்தின் காரணமாக இருக்கலாம்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பிக்கும் பெரியவர்களில் பலருக்கு அதன்மூலம் வரும் பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. அவர்களிடத்தில் குடும்பத்தில் இருப்பவர்களே சரியாக விளக்குவதும் இல்லை. மூட நம்பிக்கைகள் சார்ந்த பல பொய்யான தகவல்களையும் சரி பார்க்காமல் பரப்புபவர்கள் பெரியவர்களே #SharingFakeNews.
சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குரூப்களில் பெற்றோர்கள் வெளிப்படுத்தும் அவர்களின் அரசியல் நிலைப்பாடு, பொது விஷயங்கள் பற்றிய பதிவுகள், அவர்கள் மற்றவர்களுக்கு இடும் கமென்ட்டுகள் போன்றவற்றினால் பிள்ளைகள் கோபம் கொண்டு சண்டையிடுவதும் பல குடும்பங்களில் நடக்கிறது. அதேபோல் ப்ரைவஸி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள், மற்ற விவரங்களை முன் அறிமுகம் இல்லாதவர்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பகிர்கிறார்கள். போலி ஃபேஸ்புக் கணக்கின் மூலம் பணம் திருடும் நபர்களிடம் எளிதாக சிக்கிக்கொள்பவர்களும் பெரும்பாலும் பெரியவர்களே.
இவை ஒருபுறமிருக்க, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சமூக வலைத்தளங்களில் புழங்குவதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. பலரும் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள ஆரம்பித்ததும் திடீர் வெறுமை மற்றும் தனிமையால் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் ஒத்த கருத்துடைய நண்பர்களை கண்டடைகிறார்கள். கலை, அரசியல் சார்ந்து விவாதிப்பது, பிடித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது, சுற்றுலாக்கள் செல்வது என மற்ற எல்லோரையும் விட சமூக வலைத்தளங்களில் புழங்கும் சீனியர் சிட்டிசன்கள் பலரும் ஆக்டிவாக, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பிள்ளைகளுக்கு தங்களைவிட கல்வியறிவு, நவீன தொழில்நுட்ப அறிவு அல்லது வருமானம் கூடுதலாக இருப்பதால் அவர்களிடம் சாதாரணமாக உரையாடுவதற்கு பல பெற்றோர்கள் #Home படத்தின் நாயகனை போல தயங்குகிறார்கள்.
முந்தைய தலைமுறைகளை விட அடுத்தடுத்த தலைமுறைகள் தொழில்நுட்பம் கற்பதில் வேகமாக இருப்பது இயற்கை. ஆனால் அது மட்டுமே அறிவு அல்ல. பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளிடம் இந்த தயக்கத்தினால் நம் உரிமையை விட்டுக்கொடுக்க அவசியமில்லை. அதுபோக அறிவு ஒருபோதும் மனித உறவுகளுக்குள் இடைவெளியை உண்டாக்கக் கூடாது. உறவுகள் அன்பால் இணைபவை. எங்கு சுற்றினாலும் எவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்தாலும் நம்மை நாமாகவே ஏற்றுக்கொள்வது நமை சுற்றி இருக்கும் மனிதர்களின் அன்பு மட்டுமே. Home is where the Heart is!