
சாதியமும் ஆணாதிக்கமும் இந்தியச் சமூகத்தின் ஆன்மாவைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது என்பதை உரக்கச் சொல்கிறாள் இந்த ‘மாடத்தி.’
ஒடுக்கப்பட்டவர்களின் ஒடுக்கப்பட்டவர்களான புதிரை வண்ணார்களின் வாழ்க்கையையும் வலியையும் எதார்த்தமும் புனைவும் கலந்து பேசும் படைப்பு, Neestream ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மாடத்தி.’
தீண்டாமையின் உச்சமான ‘பார்த்தாலே தீட்டு’ என்னும் துயரத்துக்கு உள்ளான புதிரை வண்ணார்கள், சாதியப்படிநிலையில் பட்டியலின மக்களுக்கும் கீழாக வைக்கப்பட்டவர்கள். பட்டியலின மக்களின் அடிமைகளாக, அவர்களின் துணிகளை வெளுக்கும் புதிரை வண்ணார்கள், ‘மேல்சாதிக்காரர்கள்’ பார்வையில் படாதவாறு மறைந்து வாழவேண்டும். அவர்கள் வழியில் வந்துவிட்டால் பார்வையில் படாதவாறு மறைந்துகொள்ளவேண்டும்.
அப்படிப்பட்ட புதிரை வண்ணார் தம்பதி வேணியும் சுடலையும். அவர்களின் மகள் யோசனாவுக்கு ஒருமுறையாவது ‘ஊருக்குள்’ போய்ப் பார்த்துவிட வேண்டும் என்னும் ஆசை எழுகிறது. அப்படி திருவிழாக் காலத்தில் சென்ற யோசனா ‘மேல்சாதி’ ஆண்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட, அவள் எப்படி ‘மாடத்தி’ ஆனாள் என்பதைக் கவித்துவத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேகலை. படத்தின் தொடக்கக் காட்சியே நம்மைப் புனைவுலகத்துக்குக் கைபிடித்து அழைத்துச்செல்கிறது. பேசாப்பொருளைப் பேசத்துணிந்த லீனா மணிமேகலைக்கு வாழ்த்துகள்.
பாதையில் செல்லும்போது ஆதிக்கச்சாதியினர் வந்தால் புதர்களில் தாயும் மகளும் மறைந்துகொள்ளும் காட்சி ஒருபுறம். கணவனை சாராயம் குடிக்கவைத்துவிட்டு ‘மேல்சாதிக்காரன்’ வேணியைப் பாலியல் வன்முறை செய்வதும், அந்தக் கோபத்தை வேணி துவைக்கும் துணிமீது காட்டும் காட்சியும் இன்னொருபுறம். ‘பார்க்கவே கூடாது’ என்று ஒதுக்கப்பட்டாலும் பாலியல் வன்முறைக்குத் தீண்டாமை இல்லை என்பதை முகத்திலறைந்து சொல்கின்றன.

யோசனாவாக அஜ்மினா காசிம், தாய் வேணியாக செம்மலர் அன்னம், தந்தை சுடலையாக அருள்குமார், ஊர்த்தலைவராக புருஷோத்தமன், ஊரின் முக்கிய பிரமுகராக கிரிக்கெட் மூர்த்தி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
லீனா, ரபீக் இஸ்மாயில், கவிஞர் யவனிகா ராம் ஆகியோரின் திரைக்கதை, ரபீக் இஸ்மாயிலும் கிரிக்கெட் மூர்த்தியும் இணைந்து எழுதிய வசனங்கள், கார்த்திக் ராஜாவின் இசை, ஜெஃப் டோலன், அபிநந்தன், கார்த்திக் முத்துக்குமார் ஆகியோரின் ஒளிப்பதிவு ஆகியவை ‘மாடத்தி’யின் நேர்த்தி உயர உழைத்திருக்கின்றன.
சாதியமும் ஆணாதிக்கமும் இந்தியச் சமூகத்தின் ஆன்மாவைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது என்பதை உரக்கச் சொல்கிறாள் இந்த ‘மாடத்தி.’