சினிமா
தொடர்கள்
Published:Updated:

“இது மாஸ் மசாலா சினிமா!”

சினிசுவை சந்திப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
சினிசுவை சந்திப்பு

சினிசுவை சந்திப்பு நிலையம்' வரவேற்றது. சினிமாபட்டி டு சினிசுவை என்ற போர்டு மாட்டிய ரயிலுக்கு அருகில், பிளாட்பாரத்தில் பயணிகளுக்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

மதுரைத் தமிழ்ச்சங்கச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பெல் ஹோட்டல் இருந்த இடத்தில் புதிதாக சினிமா தியேட்டரைப் பார்த்ததும் ஆச்சரியம். மதுரையை தினமும் சுற்றிவரும் நமக்குத் தெரியாமல் இங்கு எப்படி தியேட்டர் கட்டினார்கள்; எப்போது திறந்தார்கள் என்று யோசித்தபடி வாகனத்தை நிறுத்திவிட்டு, சினிமா விளம்பரங்கள் ஒட்டப்பட்ட கட்டடத்தை அருகில் சென்று பார்த்தால், `சினி சுவை' என்று பெயர் ஜொலித்தது.

தியேட்டருக்குள்ளேயே ஹோட்டல் தொடங்கிட்டாங்க போல என நினைத்து உள்ளே சென்றால், வெளி வளாகத்தில் ரயில் பெட்டி நிற்கிறது. `சிம்மக்கல்லு பக்கத்துல ரயில்வே ஸ்டேஷனா.... எப்ப வந்துச்சு..?' என்று குழம்பிப் போய் ரயிலைத் தொட்டுப் பார்த்தேன். ஆனால், தண்டவாளத்தில் ஒரே ஒரு பெட்டி மட்டும் நின்றதால், அங்கிருந்த பாதுகாவலரிடம் `இது என்னங்க ரயிலு' என்று கேட்டால், `உள்ளே போங்க எல்லா விவரமும் தெரியும்' என்று அவரும் ஒரு கொழப்பு கொழப்பி அருகிலுள்ள கட்டடத்துக்குள் நம்மை அனுப்பிவைத்தார்.

`சினிசுவை சந்திப்பு நிலையம்' வரவேற்றது. சினிமாபட்டி டு சினிசுவை என்ற போர்டு மாட்டிய ரயிலுக்கு அருகில், பிளாட்பாரத்தில் பயணிகளுக்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அதன் பக்கத்தில் `படிக்காதவன்' படத்தில் ரஜினி பயன்படுத்திய `லட்சுமி' கார், `ஜில் ஜங் ஜக்' படத்துக் கார், `மாரி' படத்து ஆட்டோ, அஜித் பயன்படுத்திய பைக் என அந்த இடமே சினிமா செட்டுக்குள் வந்துவிட்டது போலிருந்தது. சுவர், கைப்பிடி, அறிவிப்புப் பலகைகள், இருக்கைகள், பாத்ரூம் அனைத்திலும் சினிமாத் தலைப்புகளையும், முக்கிய வசனங்களையும் மாற்றி வைத்திருந்தார்கள்.

“இது மாஸ் மசாலா சினிமா!”
“இது மாஸ் மசாலா சினிமா!”

அட, இது ஹோட்டல்! மதுரைக்காரங்க வித்தியாசமானவங்க என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு முட்டையை வைத்து 100 வகையான டிஷ்ஷும், ஒரே மாவை வைத்து நூறு வகையான தோசையும் கண்டுபிடித்தவர்கள். அதேபோல் சினிமா என்றால் மதுரைக்காரர்களுக்கு உயிர். இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள `சினி சுவை ரெஸ்டாரன்ட்டு'தான் மதுரை மக்களிடம் தற்போது டிரெண்ட்.

ஹோட்டல் உள்ளே தியாகராஜ பாகவதர் முதல் சமீபத்தில் நடிக்க வந்த நடிகர்கள்வரை போட்டோக்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். சினிமா அப்டேட்டுடன் மிக்ஸ் செய்து உருவாக்கிய மெனு கார்டே ஆச்சரியப்படுத்துகிறது. கிச்சனைப் பல பகுதியாகப் பிரித்து, வறுத்தெடுக்கும் வாலிபர் சங்கம், செக்க வெந்த சிக்கன், ரஜினி முருகன் டீக் கடை எனப் பெயர் வைத்துள்ளார்கள். பிலிம் ரோல் டப்பாக்கள் அடுக்கிவைக்கப்பட்ட பில் கவுன்டருக்கு பாக்ஸ் ஆபீஸ் என்று ஒவ்வொரு பிரிவுக்கும் டச்சிங்காகவும் கேட்சிங்காகவும் பெயர் வைத்திருக்கிறார்கள்.

“இது மாஸ் மசாலா சினிமா!”
“இது மாஸ் மசாலா சினிமா!”

70-களில் டூயட் பாடிய பூங்கா, 80-களில் காட்டப்பட்ட சகலகலா வல்லவன் டிஸ்கோ கிளப், மங்காத்தாவில் வரும் கேஸினோ, ரயிலுக்குள் டைனிங் என உருவாக்கி அங்கு அமர்ந்து சாப்பிடும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். நேசமணி, பாட்ஷா, ராமராஜன் கெட்டப்பில் சர்வ் செய்பவர்களைப் பார்த்தால் இன்னும் ஹியூமராக உள்ளது. பார்ட்டி டைனிங் அறையில், மதுரையில் பிறந்து தற்போது பிரபலமாக உள்ள நடிகர்கள், படைப்பாளிகளின் பெரிய போட்டோக்களை வைத்துள்ளனர். ஹோட்டலைப் பற்றி புளூ சட்டை மாறன் ரிவியூ, ஆனந்த விகடன் சினிமா விமர்சனம், சென்சார் சர்ட்டிபிகேட் என அனைத்தையுமே காமெடியாக ரீ கிரியேட் செய்து காட்சிப் படுத்தியுள்ளனர். வார இறுதியில் நகல் கலைஞர்கள் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை குஷி படுத்துகிறார்கள். சினிமா அப்டேட்டுகளைக் கவனித்துக்கொள்ளவே அருண் என்பவர் தலைமையில் கிரியேட்டிவ் மீடியா டீமை தனியாக வைத்துள்ளனர்.

“இது மாஸ் மசாலா சினிமா!”
“இது மாஸ் மசாலா சினிமா!”

சி.இ.ஓ விசித்திரா ராஜா சிங், ``பூர்வீகம் சிவகாசி. பிசினஸ் ஃபேமிலியில் இருந்து வந்ததால், ஆரம்பத்திலிருந்து பிசினஸ் ஆர்வம். சிவகாசி, மதுரை, திருநெல்வேலி, சென்னையில் எங்கள் ஹோட்டல்கள் இருக்கு. ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சதும் புதுசாகவும் வித்தியாசமாகவும் குவாலிட்டியாகவும் ஹோட்டல் பிசினஸ் செய்யணும்னு முடிவு செஞ்சேன். 2001-ல் முதல் ஃபேமிலி ரெஸ்டாரன்ட்டா மதுரையில் எங்கப்பா தொடங்கிய பெல் ஹோட்டலைப் புதுப்பித்து சினிசுவை ரெஸ்டாரன்ட்டாக மாற்றியுள்ளோம். மதுரையின் முதல் தீம் ரெஸ்டாரன்ட், ஒரே நேரத்தில் 300 பேர் வரை சாப்பிடக்கூடிய ரெஸ்டாரன்ட்டும் இதுதான்.

விசித்திரா ராஜா சிங்
விசித்திரா ராஜா சிங்

தில்லானா மோகனாம்பாள், அலைபாயுதே, வாரணம் ஆயிரம் எனப் பல படங்களில் ரொமான்டிக் சீன்ஸ் ரயிலில்தான் எடுத்திருப்பார்கள். அதையே ரீ கிரியேட் பண்ணி ரயில்வேயில் இருந்து பழைய கோச்சை விலைக்கு வாங்கி இங்கே அமைத்திருக்கிறோம். இதில் 75 பேர் அமர்ந்து என்ஜாய் பண்ணி சாப்பிடலாம். மதுரையில் முதல் முறையாக ஜப்பான் உணவுகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இந்த ஹோட்டல் வேலையைத் தொடங்கிய காலத்தில் கோவிட் பிரச்னை வந்ததால் தாமதமானது. பல பிரச்னைகளைக் கடந்து, கடந்த ஏப்ரலில் திறந்தோம். எந்த விளம்பரமும் செய்யாமல் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது'' என்றார்.