சினிமா
Published:Updated:

மகான் - சினிமா விமர்சனம்

துருவ் - விக்ரம்
பிரீமியம் ஸ்டோரி
News
துருவ் - விக்ரம்

இரண்டே முக்கால் மணி நேர நீளப் படத்தைத் தடங்கலில்லாமல் ரசிக்க வைக்கிறது ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு.

கொள்கையின் தீவிரத்துக்கும், விருப்பங்கள் நிறைந்த எதார்த்தமான வாழ்க்கைக்கும் இடையே அல்லாடும் மனிதன் இந்த `மகான்.’ தலைமுறை தலைமுறையாக காந்தியத்தை மூச்சாகக் கருதி வாழும் குடும்பம் விக்ரமுடையது. அதிலும் மது ஒழிப்பே அவர்களின் முதன்மைக்கொள்கை. அதன்படியே வளரும் விக்ரமிற்கு ஒருகட்டத்தில் வாழ்க்கை அலுக்க, இதுவரை தான் ஒதுக்கிவைத்த எல்லா ‘கொண்டாட்டங்களையும்’ அனுபவித்துப் பார்க்க முடிவு செய்கிறார். இந்த முடிவு அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி மாபியா டான் ஆக்குகிறது. இந்த மன மாற்றத்தால் அவர் குடும்ப வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பிசினஸ் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எதிரிகள் ஆகியவை மீதிப் பாதிப்படம்.

இரண்டரை ஆண்டுகள் கழித்துத் திரையில் விக்ரம். தேக்கி வைத்திருந்த திறன் மொத்தத்தையும் கொட்டி மிளிர்கிறார். நடுத்தர வயது தொடங்கி அந்திமக்காலம் வரையிலான பயணத்தை வெகு எதார்த்தமாக உடல்மொழியில், உணர்ச்சிகளில் கடத்திச் செல்கிறார். அவரோடு பெரும்பாலான காட்சிகளில் திரையைப் பகிர்ந்துகொள்ளும் பாபி சிம்ஹாவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். மரணத்தை எதிர்கொள்ளும் சனந்த் நடிப்பு சிறப்பு.

துருவ் விக்ரம் நடிப்பில் முன்னேற்றம். ஒருசில இடங்களில் கொஞ்சம் மிகையாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறார். அவர் என்றில்லை, சாந்தத்தின் உருவகமான காந்தியத்தைப் படத்தில் பேசும் சிம்ரன், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ் அனைவருமே சத்தம்போட்டுத்தான் நடித்திருக்கிறார்கள். நரிக்குணம் கொண்ட அரசியல்வாதியாக ‘வேட்டை’ முத்துக்குமார் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும் ஏமாற்றம். இரண்டே முக்கால் மணி நேர நீளப் படத்தைத் தடங்கலில்லாமல் ரசிக்க வைக்கிறது ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. ஸ்டைலிஷான கலை இயக்கத்தால் கண் கவர்கிறார்கள் சந்தானமும் குமார் கங்கப்பனும். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் தினேஷ் சுப்பராயனின் கார் ஸ்டன்ட் மிரட்டல்.

மகான் - சினிமா விமர்சனம்

மேக்கிங்காக ஈர்த்தாலும் கதையில் கோட்டை விடுகிறார் கார்த்திக் சுப்புராஜ். காந்தியப் பிடிப்புள்ள நரேன், துருவ் என அனைவருமே வன்முறையைக் கையிலெடுக்க துளியும் தயங்குவதில்லை. அதனாலேயே லாஜிக் முதல் சில நிமிடங்களிலேயே அடிபட்டுப் போகிறது. மது ஒழிப்பு என்கிற அளவில் மட்டும் காந்தியத்தைச் சுருக்கிய வகையிலும் இயக்குநரின் கவனக்குறைவே வெளிப்படுகிறது. ‘எந்தக் கொள்கையும் தீவிரநிலை எடுத்துத் திணிக்கப்படும் போது வன்முறையாகிவிடுகிறது’ என்று கடைசியில் சொன்னது முக்கியமானது. ஆனால் அது வெறும் வசனமாகவே எஞ்சிவிடுகிறது.

வலுவான கதைக்களம் இல்லாததால் நிறையவே தடுமாறுகிறார் இந்த மகான்.