தெலுங்கு சினிமாவில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் மகேஷ் பாபு. பாரம்பர்ய முறையில் கைத்தறி நெசவு செய்யும் பெண்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடிகர் மகேஷ்பாபு தற்போது ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.

தெலங்கானா மாநிலம் நாராயணபேட் மாவட்டத்தில் உள்ள கிராமத்துப் பெண் நெசவாளர்கள், சுயமாகக் கைத்தறி நெசவு ஆடைகளை உற்பத்திசெய்து வருகின்றனர். இதைக் கேள்விப்பட்டு, அந்தப் பெண்களுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் மகேஷ் பாபுவும் அவரின் மனைவி நம்ரதா கட்டமனேனியும் அங்கு சென்றுள்ளனர். இப்பெண்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்கும் ஆன்லைன் தளத்தைத் தொடங்கி வைத்துள்ளனர்.
மகேஷ் பாபுவும், அவரின் மனைவியும் அளித்த ஆதரவு, தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அப்பெண்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். பாரம்பர்ய கலைகளை ஊக்கப்படுத்தும் மகேஷ் பாபுவின் இந்த முயற்சிக்கு, பலரும் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.