
ஒரு விஷயத்தை உருவாக்கி மேம்படுத்துறதுக்கு நாம `மேக்கப்'ங்கிற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துறோம். சினிமாவுல ஒரு கதாபாத்திரத்தைக் கதாசிரியர் உருவாக்குறார்.
பட்டணம் ரஷீத்... சினிமாத்துறையின் ஒப்பனை உலகில் மிக முக்கியமான பெயர். `மதராசப்பட்டினம்', `காஞ்சிவரம்', `காவியத்தலைவன்', `தலைவி', மலையாளத்தில் `பரதேசி', `பொந்தன் மாடா', `செல்லுலாய்ட்' என இவர் ஒப்பனையில் ஜொலித்த இந்தியப் படங்கள் ஏராளம். நடிகர்களை கதாபாத்திரங்களாக மாற்றுவதில் ரஷீத்தின் பங்கு அளப்பரியது. கைவசம் பல படங்கள் வைத்துக்கொண்டு பம்பரமாய் இந்தியா முழுக்க சுழன்று திரியும் ரஷீத்தை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். `` `காவியத்தலைவன்' படத்துக்காக நான் அவ்வளவு மெனக்கெட்டேன். என் உழைப்பைப் பாராட்டி எனக்கு விருது கொடுத்து அங்கீகரித்தது ஆனந்த விகடன். என்னை பேட்டி எடுக்க கொச்சி வரை வந்தது ரொம்ப சந்தோஷம்'' என மகிழ்ச்சியாய்ப் பேசத் தொடங்குகிறார் பட்டணம் ரஷீத்.

`` `மேக்கப்’ இந்த வார்த்தைக்கு உங்களுடைய விளக்கம் என்ன?’’
``ஒரு விஷயத்தை உருவாக்கி மேம்படுத்துறதுக்கு நாம `மேக்கப்'ங்கிற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துறோம். சினிமாவுல ஒரு கதாபாத்திரத்தைக் கதாசிரியர் உருவாக்குறார். அந்தக் கதாபாத்திரத்தை மேம்படுத்துறதுதான் சினிமா மேக்கப். சில இடங்கள்ல மேக் டௌன் பண்றதுக்குப் பெயரும் சினிமாவுல மேக்கப்தான். பவுடர் பூசுறதுக்குப் பெயர் மேக்கப் இல்லை. நம்ம மனசுக்குள்ள இருக்கிற விஷயம் கைக்குள்ள இருந்து ஒப்பனையா வெளியே வரும். கிரேக்க நாடகங்கள்ல நடிகர்கள் எத்தனை நாள் ஒத்திகை பார்த்தாலும் அரங்கேற்றத்துக்குப் போறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன், காஸ்ட்யூம், மேக்கப் போட்டுக்கிட்டு ஒரு கண்ணாடி அறைக்குள்ள போய் 10 விநாடி நின்னு அவங்க முகத்தைப் பார்த்து, `நீ யார்?'னு கேட்டு, அதுக்கான பதிலைச் சொல்வாங்க. அப்போ அந்த சாதாரண மனிதர்கள் அந்தக் கதாபாத்திரமா மனதளவுல மாறிடுவாங்க. அதுக்கு முக்கிய காரணம், மேக்கப். அதுக்குத் தனிச் சித்தாந்தமே இருக்கு.''

``சினிமாவுல எத்தனையோ துறை இருந்தாலும் மேக்கப் மீது ஆர்வம் வர என்ன காரணம்? உங்கள் முதல் படம் என்ன?’’
``என் அப்பா ஒரு இசைக்கலைஞர். யேசுதாஸ் டீம்ல இருந்தார். கொச்சியில முதல் மியூசிக் கிளப்பை ஆரம்பிச்சவர். இசைக் குடும்பத்தில இருந்து வந்ததால், நாடகக் கலைஞர்கள் நிறைய பேரைத் தெரியும். நானும் நடிப்பேன். படிக்கும்போது ஸ்கூல் டிராமாவுல நடிக்கிற பசங்களுக்கு என் அண்ணன் மேக்கப் போட்டுவிடுவார். அப்போ நானும் அவருக்கு உதவியா சின்னச்சின்ன வேலைகள் செஞ்சுக்கிட்டு இருப்பேன். நானே எனக்கு மேக்கப் போட்டுக்கிட்டுப் போய் நடிப்பேன். அப்படித்தான் எனக்கு மேக்கப் மேல ஆர்வம் வந்தது. இதைத் தொழில்முறையா கத்துக்கணும்னு நினைச்சப்போ, கிளம்பி மெட்ராஸ் வந்துட்டேன். நிறைய பேர்கிட்ட அசிஸ்டென்டா வேலை செஞ்சேன். முதல் படம், நவோதயா புரொடக்ஷன்ஸ்ல ‘ஒன்னு முதல் பூஜ்ஜியம் வரை.' அப்புறம் அதே தயாரிப்புல `சாணக்யன்'னு இன்னொரு படம் கிடைச்சது. இதுல கமல்ஹாசன் சார்தான் ஹீரோ. இதுல என் வேலை பிடிச்சுப்போய் என்னை `மருதநாயகம்' படத்துல வேலை செய்றதுக்காகக் கூப்பிட்டார். ஒரு மாசம் வேலை செஞ்சேன். `மருதநாயகம்' நடக்கலை. ரொம்பவே வருத்தமா இருந்தது. அப்புறம், மறுபடியும் கேரளா வந்து மலையாளப் படங்கள்ல வேலை செய்ய ஆரம்பிச்சேன். அப்படியே நாள்கள் ஓடிடுச்சு.''

`` `தலைவி' படத்துல நிஜ வாழ்க்கையில இருந்த நபர்களை திரையில கொண்டு வந்த அனுபவம்?’’
“இயக்குநர் விஜய் சார் எனக்கு பிரியதர்ஷன் சார்கூட இருந்தபோதிலிருந்து தெரியும். ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா மட்டுமல்லாம எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பன்னு நிறைய கேரக்டர்ஸ் வருவாங்க. எனக்கும் அந்தந்த நபர்கள் பத்தித் தெரிஞ்சிருக்கணும். அதனால, அவங்க எல்லோரையும் பத்தி நானும் நிறைய படிச்சேன். கருணாநிதி கதாபாத்திரத்துல யாரை நடிக்க வைக்கிறதுன்னு தெரியலை. அப்புறம், நாசர் சார் உள்ள வந்தார். அவர் சாயலுக்கு இவர் சரியா இருப்பாரான்னு கடைசி வரை சந்தேகம் இருந்தது. நானும் ஹேர்ஸ்டைல், மீசை, மூக்குன்னு மெனக்கெட்டேன். ஆனா, உடல்மொழி, கம்பீரம், வசன உச்சரிப்பு அவர் சூப்பரா பண்ணிட்டார். கங்கனாவுக்கு ப்ராஸ்தடிக் மேக்கப் வெளிநாட்டுல இருந்து வந்து பண்ணினாங்க. அப்புறம், லாக்டெளன் வந்துட்டதால, அதைத் தொடர முடியலை. அப்புறம், நாங்களே அந்த மேக்கப்பைப் பண்ணி மேட்ச் பண்ணினோம்.’’

`` `ஜெய் பீம்'ல வேலை செஞ்சது எப்படி இருந்தது?’’
``ஜெய் பீம் கதையை இயக்குநர் ஞானவேல் என்கிட்ட சொன்னார். இருளர்கள் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவங்க கேரளாவுலயும் இருக்காங்க. இதுதான் கதைன்னு தெரிஞ்சவுடன், நான் நிறைய இடங்களுக்குப் போய் அவங்களை சந்திச்சேன். மணிகண்டனும் லிஜோவும் அவங்ககூடவே தங்கியிருந்து செங்கல் சூளைக்குப் போய் வேலை செஞ்சு அவங்களாகவே மாறினாங்க. அவங்க ஹேர்ஸ்டைல், பல்லுல இருக்கிற கறைன்னு நிறைய டீடெய்லிங் பண்ணினோம். ஒரிஜினல் இருளர்கள் சிலருக்கும் நாங்க மேக்கப் பண்ணினோம். ஒரு குழுவைக் காட்டும்போது அங்க நடிகர்கள் தனியா தெரியக்கூடாது. அந்தக்குழுவுல இருக்கவங்க மாதிரியே நடிகர்களை மாத்துறது பெரிய சவால். ஒரு ஷாட்லகூட மணியும் லிஜோவும் தனியா தெரியமாட்டாங்க.''
`` `மருதநாயகம்', `சாச்சி 420', `இந்தியன் 2'ன்னு கமல்ஹாசனுடன் பயணிக்கிறது பற்றி?’’
`` `சாணக்யன்' மூலமாதான் கமல் சார் என்னை `மருதநாயகம்' படத்துக்குக் கூப்பிட்டார். அப்போ கமல்சார்கூட சலீம்னு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இருந்தார். அவர்கிட்டதான் வெவ்வேறு விதமான மேக்கப் பொருள்கள் பார்த்தேன். அப்போவே கமல் சார் இதெல்லாம் வாங்கி வெச்சிருக்கார். மேக்கப் பத்தி கமல் சாருக்கு அவ்வளவு தெரியும். `குருதிப்புனல்' படத்துல வேலை செய்ய வாய்ப்பு வந்தது. ஆனா, மத்த படங்கள் இருந்ததால போக முடியலை. அப்புறம், `சாச்சி 420' படத்துக்குக் கூப்பிட்டாங்க. அப்போவும் கைவசம் நிறைய படங்கள் இருந்தது. என்னைக் கூப்பிட்டவங்ககிட்ட நான் ஒரு கண்டிஷன் போட்டேன். `அங்க வெளிநாட்டு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பேரி கூப்பர் இருக்கார். அவர்கூட வேலை செய்ய சான்ஸ் கொடுக்கணும். அது ஓகேன்னா நான் வர்றேன்'னு சொன்னேன். கமல் சார்கிட்ட கேட்டுட்டு, என்னை பேரி கூப்பர்கூட வேலை செய்யச் சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர்தான் `அவ்வை சண்முகி'க்கு ப்ராஸ்தடிக் மேக்கப் போட்டவர். நான் வாங்கின அட்வான்ஸை எல்லாம் திரும்பக் கொடுத்துட்டு, `சாச்சி 420'-ல வேலை செஞ்சேன். ப்ராஸ்தடிக் மேக்கப் பத்தி நிறைய கத்துக்கிட்டேன். அது கரியர்ல ரொம்ப முக்கியமான படம். அதுக்குப் பிறகு, `இந்தியன் 2' படத்துக்காக ஷங்கர் சார் கூப்பிட்டார். அதுல வேலை செஞ்சேன். இப்போ அவர் ராம் சரணை இயக்குற படத்துலயும் நான்தான் வொர்க் பண்றேன்.''

``2019-க்கான சிறந்த ஒப்பனைக்கான தேசிய விருது `ஹெலன்'ங்கிற மலையாளப் படத்துக்காக உங்கள் உதவியாளருக்குக் கிடைச்சது. அதை எப்படிப் பார்க்கிறீங்க?’’
``அந்தக் கதைக்கு மேக்கப் ரொம்ப உறுதுணையா இருந்தது. அந்தப் படத்துடைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ரஞ்சித், என்கிட்ட கொஞ்ச வருஷம் வேலை செஞ்சார். நல்ல திறமைசாலி. அவருக்கு விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.''
``இப்போ என்ன தமிழ்ப் படங்கள் வொர்க் பண்றீங்க?’’
``மித்ரன் இயக்கத்துல கார்த்தியுடைய `சர்தார்' படம் பண்ணிக்கிட்டிருக்கேன். இதுல கார்த்திக்கு ரெண்டு கெட்டப். அதுல வயதான கெட்டப்புக்கு பிரித்விராஜுக்கு `செல்லூலாய்ட்' படத்துக்குப் போட்ட மேக்கப்பைத்தான் பயன்படுத்தியிருக்கேன். ராம் - நிவின் பாலி படம். என்னை ராம் சார்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சது மம்மூட்டி சார்தான். இதுல நிவின் வேற மாதிரி இருப்பார்.''