கட்டுரைகள்
Published:Updated:

“உணர்ந்தால்தான் ஒப்பனை செய்ய முடியும்!”

மேக்கப்
பிரீமியம் ஸ்டோரி
News
மேக்கப்

ரஷீத் சிலாகிக்கும் அந்த விருதுக்குக் காரணமான படம் வசந்த பாலனின் ‘காவியத் தலைவன்.’ வருடம் 2014.

திரைப்படங்களின் கமர்ஷியல் வெற்றிக்கு நட்சத்திரங்கள் காரணமாகலாம். ஆனால், ஒரு நல்ல கலைப்படைப்பாக அவை உருவாக, திரைக்குப் பின்னால் உழைக்கும் ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது.

அந்த 24 வகை கலைக்கூட்டத்தில் முக்கியான ஒரு துறை மேக்கப். தென்னிந்திய சினிமா கண்ட ஒப்பற்ற ஒப்பனைக் கலைஞர்களில் முக்கியமானவர் பட்டணம் ரஷீத். ‘காஞ்சிவரம்’ பிரகாஷ் ராஜ், ‘மதராசப் பட்டணம்’ ஆர்யா என இவர் அரிதாரம் பூசியவர்களின் பட்டியல் சீனப் பெருஞ்சுவர் நீளம். மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், ப்ரித்விராஜ் என முன்னணி நட்சத்திரங்களின் ஆஸ்தான மேக்கப் ஆர்ட்டிஸ்ட்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைவி, எலிவேட்டை, ஜெயில், இந்தியன் 2 என மீண்டும் தமிழில் பிஸியாகியிருக்கிறார் ரஷீத். ஆனந்த விகடனிலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட அடுத்த நிமிடமே விகடன் நினைவுகளில் ஆழ்கிறார். ‘`இந்தப் பேட்டியையும் விகடன்லேருந்தே ஆரம்பிக்கலாமே...’’ ஆனந்தமாகத் தயாராகிறார் ரஷீத்.

‘`நான் ஒரு மலையாளி. ஆனால், தமிழ் படிப்பேன். ரொம்ப வருஷங்களா ஆனந்த விகடன் வாசகன். என் அபிமானத்துக்குரிய ஒரு பத்திரிகையிலேருந்து நான் அபிமானத்தோடு வேலைசெய்த ஒரு படத்துக்கு விருது வாங்கினது வாழ்க்கையில மறக்க முடியாதது’’ - ரஷீத் சிலாகிக்கும் அந்த விருதுக்குக் காரணமான படம் வசந்த பாலனின் ‘காவியத் தலைவன்.’ வருடம் 2014.

“உணர்ந்தால்தான் ஒப்பனை செய்ய முடியும்!”

‘`அந்தப் படத்துல நிறைய நாடகக் கலைஞர்கள் கேரக்டர் இருந்தன. அரிச்சந்திரா, வள்ளித்திருமணம் மாதிரி அந்தக் காலத்துல பிரபலமான பல நாடகங்களைத் தந்த சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக்குழு மதுரையில் இருக்கு. அங்கே போய் பல நாள்கள் அங்கேயே தங்கி அந்தக் கலைஞர்களோடு பழகி நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டு வந்து இந்தப் படத்துல வேலை செய்தேன். மத்த மேக்கப் வேற... நாடகத்துக்கான மேக்கப் வேற. இந்த ரெண்டுமே அந்தப் படத்துல இருக்கும். ரெண்டையும் நான் பண்ணியிருக்கேன்.’’

‘அறை என் 305-ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ உள்ளிட்ட பல படங்களின் மேக்கப் மேனான ரஷீதுக்கு காலத்துக்கும் மறக்க முடியாத சென்டிமென்ட் படம் ‘மதராசப் பட்டணம்.’ பட்டணம் ரஷீத் என்ற பெயருக்கும் அதுதான் காரணமா என்றால் சிரிக்கிறார்.

‘`கேரளாவில் ஒவ்வோர் இல்லத்துக்கும் ஒரு பெயர் இருக்கும். பட்டணம் என்பது எங்க இல்லத்தின் பெயர். அதனால நான் பட்டணம் ரஷீத். ப்ரியதர்ஷன் இயக்கத்துல ‘காஞ்சிவரம்’ படத்துல வொர்க் பண்ணினேன். டைரக்டர் ப்ரியதர்ஷன்கிட்ட வேலை பார்த்தவர்தான் ஏ.எல்.விஜய். அந்த நட்புதான் விஜய்யின் ‘மதராசப் பட்டணம்’ படத்துல வொர்க் பண்ற வாய்ப்பைத் தந்தது. படம் பெரிய ஹிட். தமிழ் சினிமாவில் இது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வாங்கித் தந்தது. ‘தலைவி’ன்னு ஒரு படம் பண்ணப்போறதாகவும் அதுல நான் வொர்க் பண்ணணும்னும் விஜய் சொன்னார்.

‘தலைவி’ படத்தின் பெரிய சவால்னா எம்.ஜி.ஆர் மேக்கப்தான். இந்தப் படத்துல அது எம்.ஜி.ஆர் என்ற தனிப்பட்ட மனிதரையும் காட்டணும், நடிகர் எம்.ஜி.ஆரையும் காட்டணும் அரசியல்வாதி முகத்தையும் காட்டணும். இப்படி வெவ்வேறு கெட்டப்புகளுக்கான விக், மேக்கப் மெட்டீரியல்களைத் தேடிப் பிடிச்சு வாங்கிட்டு வந்து வொர்க் பண்ணினோம். அதுல அரவிந்த் சாமியின் ஆர்வம் பிரமிக்கவெச்சது. எம்.ஜி.ஆரா மாற தன்னுடைய எக்ஸ்பிரஷன், மேனரிசம்னு சகலத்திலும் அவர் எடுத்துக்கிட்ட மெனக்கெடல் ரொம்பப் பெரிசு.

பயோபிக் கதைகளில் வொர்க் பண்றது மிகப் பெரிய சவால். ஜெயலலிதாவின் பயோபிக், ஆனா அவங்க நடிக்கலை. அந்தக் கேரக்டர்ல நடிக்கிறவங்களை ஜெயலலிதாவா மக்கள் உணரணும். அப்படி உணரவைக்கிறதுதான் அந்தப் படத்துக்கான வெற்றி.

இப்போ அந்தக் கேரக்டரைப் பத்தி என்ன சொன்னாலும் கொஞ்சம் ஓவரா தெரியலாம். படம் ரிலீசாகட்டும்... அப்புறம் மக்கள் பேசுவாங்க. யார் மேக்கப்மேன்னு நிச்சயம் கேட்பாங்க. அப்போ என் உழைப்பும் தெரியும்...’’ எதிர் பார்ப்பைக் கூட்டுகிறது ரஷீதின் பேச்சு.

 ரஷீத், பிரகாஷ் ராஜ்
ரஷீத், பிரகாஷ் ராஜ்

‘`மேக்கப் கலைஞர்கள் மேல மரியாதையும் கவனிப்பும் வரக் காரணமா இருந்தவர் என் குருவா நான் மதிக்கிற கமல்ஹாசன். மலையாளத்துல கமல்கூட ‘சாணக்யன்’னு ஒரு படம் பண்ணியிருக்கேன். இப்போ ‘இந்தியன் 2’-ல் பீரியாடிக்கல் க்ளைமாக்ஸ் பார்ட்டுல அவருக்கு நான்தான் மேக்கப்மேன்.

மம்மூட்டிக்கு நேஷனல் அவார்டு வாங்கித் தந்த ‘பொந்தன் மாடா’வில் நான்தான் மேக்கப். அதுல அவருக்கு நான் பண்ணினது பிராஸ்தெட்டிக் மேக்கப்தான். 30 வருஷங்களுக்கு முன்னாடி அவரை 70 வயசு விவசாயியா காட்டின மேக்கப் அது, சலீம்குமாருக்கு நேஷனல் அவார்டு வாங்கித் தந்த ‘ஆதாமின்ட்டே மகன் அபு’ படத்திலும் அப்படித்தான். ஆனா அது புராஸ்தெட்டிக்னே தெரியாமப் பண்ணின படம். ‘பரதேசி’ படத்துலயும் புராஸ்தெட்டிக் மேக்கப் பண்ணியிருக்கேன்.

மேக்கப் என்பது ஒரு கடல். அதுல ஆழத்துக்குப் போகப் போக புதுப்புது விஷயங்கள் கிடைச்சிட்டே இருக்கும். டெக்னாலஜி எதுவும் இல்லாத காலத்துலேயே நம்மூரில் மேக்கப் துறையில் சாதிச்சவங்க இருந்திருக்காங்க. இன்னிக்கும் நம்மகிட்ட மிகச்சிறந்த கலைஞர்கள் இருக்காங்க. அவங்களை அடையாளம் கண்டுபிடிச்சு அவங்களுக்கான இடத்தைக் கொடுத்தாலே வெளிநாட்டுக் கலைஞர்களைத் தேடிப் போக வேண்டியிருக்காது. ஆனா நமக்கு எப்போதுமே வெளிநாடுகளிலிருந்து ஆட்களைக் கூட்டிட்டு வந்து வேலைவாங்கறதைப் பெருமையா பார்த்தே பழகிட்டோம்...’’ ஆதங்கப் படுபவருக்கு மேக்கப் என்பது தொழிலல்ல... அதையும் தாண்டிப் புனிதமானது என்பதை அவரின் ஒவ்வொரு வார்த்தையும் உணர்த்துகிறது.

‘`பவுடரைப் பூசினோமா, மீசையை ஒட்டினோமான்னு என்னால மேக்கப் பண்ண முடியாது. நான் மேக்கப் பண்ற கேரக்டரை முதல்ல நான் உணரணும், உள்வாங்கணும். அந்தக் கேரக்டருக்குண்டான சந்தோஷம், வலி, விகாரம்னு எல்லாத்தையும் நான் அனுபவிச்ச பிறகுதான் என்னால மேக்கப் பண்ண முடியும். 2013-2015ல சென்ட்ரல் மினிஸ்ட்ரி ஆஃப் கல்ச்சர் எனக்கு ஃபெல்லோஷிப் கொடுத்திருக்கு. பல சினிமாக் கலைஞர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பு இது. இந்த வாய்ப்புக்குக் காரணம் என் நாடகப் பின்னணியும் அனுபவமும்தான். ஒரு சாதாரண நடிகரை ஒரு கேரக்டருக்குள்ளே புகுத்தி அந்தக் கேரக்டரா மாத்தறது எப்படி, எந்த நிமிஷத்துலேருந்து அந்த மாற்றம் நிகழணும்னு சொல்றதுதான் என் சப்ஜெக்ட். அந்த மாற்றம் நடிகருக்குள்ளே நடக்கும். அவர் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது அந்தக் கேரக்டரா உணர்ந்தால்தான் அது சாத்தியம்’’ என்கிறார்.

பட்டணம் டிசைனரி என்ற பெயரில் கோழிக்கோட்டில் இவர் நடத்தும் மேக்கப் இன்ஸ்டிட்யூட் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. திரைத்துறையில் மேக்கப் மற்றும் ஹேர் டிரெஸ்ஸிங் பிரிவுகளில் பணிபுரிகிற பலரும் இங்கே தயாரானவர்கள்.

‘`மேக்கப் பற்றி நான் எழுதியிருக்கிற புத்தகத்தோட அரசு வெளியீட்டுக்காகக் காத்திட்டிருக்கேன். மேக்கப் துறையில் சாதிச்சவங்க, மேக்கப் பொருள்களின் வரலாறு, அவற்றைக் கண்டுபிடிச்சவங்கன்னு ஏ டு இஸட் ரெஃபரென்ஸ் புத்தகமா இது இருக்கும்.

மேக்கப்
மேக்கப்

எனக்கு மூணு பசங்க. பெரியவன் அல்டாஃப், புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சினிமாட்டோகிராபியில் கோல்டு மெடலிஸ்ட். மோகன்லால் டைரக்ட் பண்ற ‘பரோஸ்’ படத்துல டெக்னிகல் டீம்ல வொர்க் பண்ணிட்டிருக்கான். இன்னொரு மகன் ப்ளஸ் டூ படிச்சிட்டிருக்கான். மகளுக்குக் கல்யாணமாயிடுச்சு. மனைவி அல்சியா என் இன்ஸ்டிட்யூட்டைப் பார்த்துக்கறாங்க.

இந்த உலகத்துல நான், என்னுதுன்னு சொல்ல எதுவுமே இல்லை. வெறுங்கைகள் என்னுடையவை. அதை அன்பாலும் ஆசீர்வாதத்தாலும் அடுத்தவங்கதான் நிரப்பறாங்க. கைகள் என்னிக்கு காலியா இருக்கோ அன்னிக்கு நான் இல்லாமப் போயிடணும். அவ்வளவுதான்...’’ அரிதாரமற்ற வார்த்தைகளால் நெஞ்சம் நிறைக்கிறார் ரஷீத்.