சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“தமிழ்நாட்டை நேசிப்பவர்கள்தான் நிஜமான மலையாளிகள்!”

செம்பன் வினோத் ஜோஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
செம்பன் வினோத் ஜோஸ்

எல்லாப் பெருமையும் என் இயக்குநர் - நண்பர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரிக்குத்தான் போய்ச் சேரும். நான் மெத்தட் ஆக்டிங், ஹோம் ஒர்க் என எதையும் செய்ததில்லை

அசரடிக்கும் அழகில்லை, சிக்ஸ்பேக் இல்லை. வழுக்கைத்தலை, நரைத்த தாடி, இடைவிழுந்த பல்வரிசை என சராசரி அங்கிள் தோற்றம் கொண்டவர் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ். ஆனால், கதைநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர பாத்திரங்களாக மலையாள சினிமாவில் பரிமளித்து பத்தே வருடங்களில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கிறார். தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் ஜொலிக்கும் ஜோஸிடம் பேசினேன்.

``உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘ஈ.மா.யூ’ படத்தில் தந்தையின் இறுதிச்சடங்கை விமரிசையாக நடத்தப் போராடும் மகன்... ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் காட்டெருமையை மீட்கப் போராடும் இறைச்சிக் கடைக்காரர் என நடிப்பில் வெரைட்டியாகக் கலக்குகிறீர்களே... எப்படி?’’

“எல்லாப் பெருமையும் என் இயக்குநர் - நண்பர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரிக்குத்தான் போய்ச் சேரும். நான் மெத்தட் ஆக்டிங், ஹோம் ஒர்க் என எதையும் செய்ததில்லை. ‘ஆக்‌ஷன்’ என்ற கட்டளையைக் கேட்டதும், இயக்குநர் சொன்னதைச் செய்கிறேன். கடைசியில் எல்லாப் பெயரையும் நான் வாங்கிக்கிறேன். இயக்குநர்கள் வெவ்வேறுவிதமான பாத்திரங்களில் நடிக்க வைக்கிறார்கள். ஒரேவிதமான வில்லன் ரோல்களில் நடிக்க வைத்திருந்தால் இந்நேரம் ஆடியன்ஸுக்கு என் முகம் போரடித்திருக்கும்.”

 “தமிழ்நாட்டை நேசிப்பவர்கள்தான் நிஜமான மலையாளிகள்!”

``லிஜோதானே உங்களை அறிமுகப்படுத்தியது?’’

“ஆமாம். கொச்சிக்குப் பக்கத்தில் அங்கமாலிதான் என் சொந்த ஊர். பக்கத்து வீட்டுக்காரரின் உறவினர்தான் லிஜோ. சின்ன வயதிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்கள். லிஜோ சாளக்கடியிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது ஒன்றாக விளையாடுவோம். அப்போதே இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு இருந்தவன். வளர்ந்த பிறகு நான் பிசியோதெரபி படித்துவிட்டு இறைச்சி ஏற்றுமதி பிசினஸில் தீவிரமாகிவிட்டேன். அவன் இயக்குநராகி, மறக்காமல் என்னை 2010-ல் ‘நாயகன்’ என்ற படத்தில் வில்லன்களில் ஒருவனாக நடிக்க அழைத்தான். தயக்கத்தோடு போனேன். அவன் சொல்லிக் கொடுத்ததைச் செய்தேன். அடுத்தடுத்து ‘சிட்டி ஆஃப் காட்’, ‘ஆமென்’, ‘டபுள் பேரல்’, ‘ஈ.மா.யூ’, ‘ஜல்லிக்கட்டு’ என லிஜோவின் படங்களில் நடிக்கும்போதே 50 படங்களில் சின்னதும் பெரிதுமாய் வாய்ப்புகள் வர, பயன்படுத்திக் கொண்டேன். ‘சப்தம தஸ்கரா’, ‘லார்டு லிவிங்ஸ்டன் 7000 கண்டி’, ‘கலி’, ‘ஒரு செகண்ட் க்ளாஸ் யாத்ரா’, ‘அயோப்பிண்டே புஸ்தகம்’, ‘ஸ்வதந்திரம் அர்த்தராத்தியில்’, ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ போன்ற படங்கள் எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தன. மாநில அளவில் பல விருதுகளும் கிடைத்தன!”

``பிறகு எப்படி ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தின் திரைக்கதை ஆசிரியராக மாறினீர்கள்?’’

“பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே இயக்குநராகும் ஆசை எழுந்தது. நான் பிறந்து வளர்ந்த அங்கமாலியில் விதவிதமான உணவுப் பழக்கங்கள் உண்டு. பன்றி இறைச்சி வியாபாரத்தின்போது நடந்த சம்பவங்களையும், சிறுவயதில் நான் நண்பர்களோடு செய்த சேட்டைகளையும் வைத்து சம்பவங்களின் கோவையாகத் திரைக்கதையை எழுதினேன். எப்போதாவது அதைப் படமாக்கலாம் என நினைத்திருந்தேன். லிஜோ படித்துவிட்டு, ‘மச்சானே... இதை நானே படமாகப் பண்ணிக்குறேன்!’ என்றான். நான் காமெடிப் படமாக எழுதிய கதையை அவன் படமாக்கிய விதம் அவ்வளவு புதுமையாக இருந்தது. நிச்சயம் இந்த அளவு என்னால் சிறப்பாக எடுத்திருக்க முடியாது.

மோகன்லால் படத்தைப் பார்த்துவிட்டு இருவரையும் அழைத்து ஒரு மணி நேரம் வியந்து பாராட்டினார். ‘ஒரு ஊரின் உணவுப் பழக்கத்தையும், கொண்டாட்டமான வாழ்க்கை முறையையும் இதற்குமுன் சினிமாவில் யாரும் பதிவு பண்ணவில்லை... படம் கமர்ஷியலாக பெரிய ஹிட்டாகும்!’ என்றார். சொன்னது பலித்தது. இயக்குநராவதைவிட நடித்துக்கொண்டே திரைக்கதை எழுதலாம் என்ற நம்பிக்கையை ‘அங்கமாலி டைரீஸ்’ தந்தது. இப்போது ‘பீமண்டே வழி’ என்ற படத்தின் திரைக்கதையை எழுதி நானே தயாரிக்கிறேன். குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கிறார். விரைவில் படம் ரிலீஸாக இருக்கிறது!”

 “தமிழ்நாட்டை நேசிப்பவர்கள்தான் நிஜமான மலையாளிகள்!”

``தமிழ்ப் படங்களில் ஏன் ஆர்வம் காட்டவில்லை? ‘தர்பார்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாமே?’’

“சரியாப் போச்சு. எனக்குத் தமிழ் சினிமாவில் நடிப்பது லட்சியம்... அதனால் ‘கோலி சோடா 2’ படத்தில் வில்லனாக நடித்தேன். படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் என் ரோல் தெரியாமலே போய்விட்டது. ‘தர்பார்’ படத்துக்கு என்னைக் கூப்பிட்டு நான் நடிக்க மறுப்பேனா? நான் ரஜினி சாரின் ரசிகன். படத்தின் போஸ்டரை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தேன். ‘அது ஃபேன்மேட் தான், ஒரிஜினல் இல்லை’ என்று கேள்விப்பட்டு டெலிட் செய்தேன். நான் போஸ்ட் போட்டு பின்பு டெலிட் பண்ணிய கேப்பில், நான் ரஜினி சார்க்கு வில்லனாக நடிக்கிறேன் என்றும், பிறகு விலகினேன் என்றும் வதந்திகளைப் பரப்பி விட்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்!”

``ரொம்ப நாளாகவே ஒரு கேள்வி... மலையாள சினிமாவில் ஏன் தமிழ் கேரக்டர்களை வக்கிரமானவர்களாகச் சித்திரிக்கிறார்கள்?’’

“இந்தக் கருத்தை மறுக்கிறேன். வில்லன்களாக முன்பு ஒன்றிரண்டு படங்களில் அப்படிச் சித்திரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அதை வைத்துப் பொத்தாம்பொதுவாக நீங்கள் குற்றம் சாட்ட முடியாது. ‘யாத்ரா மொழி’யில் சிவாஜி சாரும், ‘காலாபாணி’யில் பிரபு சாரும் தமிழர்களாகத்தானே நடித்தார்கள். அவ்வளவு ஏன், ‘கலி’ படத்தில் எனக்கு ரேப்பிஸ்ட் கேரக்டர். சாய் பல்லவியை நான் அடைய முற்படும்போது ஒரு தமிழக லாரி டிரைவர் காப்பாற்றுவதாகவே காட்சி இருக்கும். ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தில் ஹீரோ இன்ஸ்பையர் ஆவதே ஒரு மதுரைத்தமிழரைப் பார்த்துதான். அவ்வளவு ஏன், மலர் டீச்சரை எப்படிக் கொண்டாடினோம் பார்த்தீர்களா? உண்மையில் தமிழ்நாட்டை நேசிப்பவர்கள்தான் நிஜமான மலையாளிகள்!”

``உங்கள் திருமணத்தை வைத்து நெட்டிசன்களில் சிலர் ட்ரோல் பண்ணினார்களே..?’’

“எனக்கு அதில் துளியும் வருத்தமில்லை. நான் விவாகரத்தானவன். முதல் திருமணம் தோல்வியடைந்தால் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமா? ஆம். என் நீண்ட நாள் தோழியைக் கரம்பிடித்தேன். இன்ஸ்டகிராமில் போட்டோ போட்டு இரண்டாம் திருமணத்தைச் சொன்னபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. அங்கமாலி பதிவு அலுவலகத்தில் பதிவு பண்ண விண்ணப்பித்த போது ஒரு பத்திரிகையாளர் எங்கள் வயதை மட்டும் பெரிதாக்கி செய்தி வெளியிட்டார். எங்களுக்குள் இருக்கும் 17 வயசு வித்தியாசத்தை வைத்துக் கேலி செய்தார்கள். மரியமும் நானும் நல்ல நண்பர்கள். ‘இனி ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது’ என்ற காதலின் புரிதலில் கொரோனா முதல் அலை ஊரடங்கின்போது திருமணம் செய்து கொண்டோம்.

நான் ‘குடிப்பவன்’ என்றும் ‘கோபக்காரன்’ என்றும் ‘வயதானவன்’ என்றும் மீம்ஸ் போட்டு ட்ரோல் பண்ணினார்கள். நிஜத்தில் நான் ரொம்ப அளவாகக் குடிப்பவன். ‘க்ளாஸிலே நுரையும் பிளேட்டிலே கறியும்’ என்ற ஃபேஸ்புக் பேஜில் ஒரு பீர் கோப்பையோடு போட்டோ போட்டதை வைத்து, எனக்குக் குடிகாரன் இமேஜைத் தந்துவிட்டார்கள். படங்களில் கோபக்காரனாக நடிப்பதால் நிஜத்திலும் அப்படியே இருப்பேன் என நினைத்துவிட்டார்கள். இரு வீட்டார் சம்மதத்தோடு நடைபெற்ற திருமணம் இது. நெட்டிசன்கள்தான் பாவம். எங்கள் தேனிலவில் நல்ல டைம்பாஸாக அந்த ட்ரோல்ஸ் பயன்பட்டன. என்னைவிட என்னைப் பற்றி மரியமுக்குத் தெளிவாகத் தெரியும். மரியம் ஒரு சைக்யாட்ரிஸ்ட். 25 வயதைக் கடந்தவர். சுயமாக முடிவெடுக்க ஒரு பெண்ணுக்கு இதைவிட என்ன தகுதி வேண்டும்?”

 “தமிழ்நாட்டை நேசிப்பவர்கள்தான் நிஜமான மலையாளிகள்!”

``சன்னி லியோன் போட்டோவைப் போட்டு இன்ஸ்டாவில் பாராட்டி எழுதியிருந்தீர்களே?’’

“ஆமாம். நானும் சன்னி லியோனும் ‘ஷெரோ’ என்ற மலையாளப் படத்தில் ஒன்றாக நடிக்கிறோம். தமிழிலும் படம் வருகிறது. ஷூட்டிங் பிரேக்கில் சன்னி நிறைய பேசுவார். அடல்ட் படங்களில் முன்பு நடித்தவர் என்பதாலேயே அவர்மீது நான் வைத்திருந்த பார்வை தவிடுபொடியானது. ஆன்மிக ஈடுபாடு, யோகா, பிறருக்கு உதவும் மனப்பான்மையில் வியக்க வைக்கிறார். நிறைய குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். தேடித்தேடி உதவும் குணத்தைப் பார்க்க முடிந்தது. சன்னி ரொம்ப நல்ல மனம் கொண்ட பெண்!”