அன்னா பென் முதல் அனஸ்வரா வரை... கோலிவுட்டை அலங்கரிக்கக் காத்திருக்கும் மல்லுவுட் ஹீரோயின்கள்!

கேரள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வர அடுத்தப் படை புறப்பட தயாராகிவிட்டது. யார் அவர்கள்... வாங்க பார்ப்போம் !
மலையாள சினிமாவை ரசிக்கும் பெருங்கூட்டம் இந்தியா முழுக்கவே இருக்கிறது. மலையாளத்தில் வெளிவரும் கதைகளுக்கும் அதில் நடிக்கும் கலைஞர்களின் யதார்த்த நடிப்பிற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கேரளத்து நாயகிகள் தங்களது யதார்த்த நடிப்பின் மூலம் இந்திய சினிமா முழுக்க பேசுபொருளாக இருப்பார்கள். ரேவதி, நதியா, ஊர்வசி தொடங்கி நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எனப் பலர் மலையாள சினிமாவில் தங்களது கரியரைத் தொடங்கி தமிழ் சினிமாவை அலங்கரித்திருக்கின்றனர். சமீபமாக, ஐஸ்வர்யா லட்சுமி, கல்யாணி ப்ரியதர்ஷன், ரஜிஷா விஜயன் ஆகியோர் கோலிவுட்டில் தடம் பதித்து வெற்றிநடை போட்டு வருகின்றனர். தற்போது, கேரள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வருவதற்காக அடுத்தப் படை தயாராகிவிட்டது. யார் அவர்கள்... வாங்க பார்ப்போம் !

அன்னா பென் :
பேஷன் டிசைனிங் முடித்த அன்னா பென் 'கும்பளங்கி நைட்ஸ்' படத்துடைய ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வானவர். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் அன்னா பென்னின் நடிப்பு கவனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 'ஹெலன்'. ஃப்ரீசரில் மாட்டிக்கொண்டு தப்பிக்க முயலும் அத்தனை காட்சியிலும் திரைக்குள் இருக்கும் குளிர் நம்மையும் தொற்றிக்கொள்ளும். அந்தளவுக்கு க்ளாஸான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பின் 'கப்பேலா'. இந்தப் படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. மல்லுவுட்டில் இவரை மனதில் வைத்துக் கதைகள் எழுதத் தொடங்கிவிட்டார்கள். 'சாராஸ்' என்ற படத்தில் சினிமாவில் பணிபுரியும் உதவி இயக்குநராக நடித்திருந்தார். மேலும், குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் இருக்கும் இளம் பெண்ணாக தனது கரியர், குடும்பம் குறித்து தனக்குள்ளோடும் மன ஓட்டத்தை மிக அழகாகப் பிரதிபலித்திருப்பார். 'நைட் டிரைவ்', 'காப்பா' ஆகிய த்ரில்லர் படங்களில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அடுத்தாக இன்னும் பல மலையாளப் படங்கள் அன்னா பென்னின் வசமுள்ளன. கதை கேட்பதில் அவ்வளவு கவனமாக இருப்பாராம். இவரைக் கதை சொல்லி திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள். தற்போது, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கூழாங்கல்' இயக்குநர் வினோத் ராஜ் இயக்கி வரும் படத்தில் சூரியுடன் நடித்து வருகிறார், அன்னா பென்.

நிமிஷா சஜயன் :
மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் நிமிஷாவின் பூர்வீகம் கேரளம்தான். திலீஷ் போத்தன் இயக்கத்தில் உருவான 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' படம்தான் இவரது அறிமுகப்படம். இந்தப் படத்திற்காக ஃபகத் பாசிலுக்கு தேசிய விருது கிடைத்தது. 'ஈடா' படத்தில் கல்லூரி மாணவி, 'மாங்கல்யம் தந்துனானேனா' படத்தில் திருமணமான பெண், 'ஒரு குப்ரசித்த பையன்' படத்தில் வழக்கறிஞர் என நிமிஷா சஜயன் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்திற்குப் படம் நிச்சயம் மாறுபடும். இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வெளியான 'சோலா' படத்தில் இவரது நடிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது. 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படம் ஏற்படுத்திய தாக்கமும் விவாதமும் உலகம் அறியும். 'மாலிக்' எனும் ஹீரோயிசத் திரைப்படத்தில் ரோஸ்லின் கதாபாத்திரத்தில் நடித்த நிமிஷாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருந்தது. தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரம். ஆனால், பர்ஃபாமென்ஸில் கலக்கியிருப்பார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்குள் தன்னைப் பொருத்திக்கொண்டு நடிப்பில் அசத்தும் நிமிஷாவின் ரீசன்ட் படங்கள் அனைத்தும் செம சென்சேஷன் ! மற்ற நாயகிகளுக்கும் நிமிஷாவுக்கு இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், மற்றவர்கள் தன் வயதைவிட குறைவான வயது கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். ஆனால், நிமிஷா நடித்த பெரும்பாலான படங்களில் அவர் வயதை விட மூத்த வயதுடைய கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். தமிழில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் 'அச்சம் என்பது இல்லையே' படத்தில் ஏமி ஜாக்சனும் நிமிஷாவும்தான் நாயகிகள். தவிர, 'பண்ணையாரும் பத்மினியும்' இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்துடன் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த வருடம் கோலிவுட் பக்கம் கரையைக் கடக்கிறது இந்த கேரளத்து நடிப்பு புயல் !

கிரேஸ் ஆண்டனி :
மலையாள சினிமாவில் கிரேஸ் ஆண்டனியின் வளர்ச்சி அபாரமானது. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுவார். 'ஹேப்பி வெட்டிங்' என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு மூன்று படங்களில் நடித்திருந்தாலும், 'கும்பளங்கி நைட்ஸ்' இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதில் ஃபகத் பாசிலுக்கு மனைவியாக சிமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்குப் பிறகு, ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. நல்ல குணச்சித்திர வேடம் என்றால் மலையாள இயக்குநர்களின் நினைவுக்கு வரும் முதல் நபர் கிரேஸ் ஆண்டனியாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு நடிப்பில் வெரைட்டி காட்டி, ரியாக்ஷன்களில் ஸ்கோர் செய்யும் திறமையான நடிகை. 'ஹலால் லவ் ஸ்டோரி', 'சாஜன் பேக்கரி', 'அப்பன்' ஆகிய படங்களில் இவரது பாத்திரங்கள் பேசப்பட்டன. இப்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். கிரேஸ் ஆண்டனியின் படங்களை ஃபாலோ செய்தவர்களுக்கு இந்த அறிவிப்பு நிச்சயம் சர்ப்ரைஸாக இருந்திருக்கும்.

அனஸ்வரா ராஜன் :
'அம்மா கணக்கு' படத்தின் மலையாள வெர்ஷன்தான் அனஸ்வராவின் அறிமுக படம். மஞ்சு வாரியருக்கு மகளாக நடித்திருந்தார். இதன் பிறகு, 'தண்ணீர் மத்தன் தினங்கள்' படத்தின் நாயகியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேத்யூ தாமஸ் - அனஸ்வரா ஜோடி பேசப்பட்டது. இதில் பள்ளி மாணவி என்றால் 'சூப்பர் சரண்யா' படத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவி. இந்த இரண்டு படங்களுமே அனஸ்வரா யார் என்று சொல்லும். இந்த இரண்டிற்கும் ஒரே இயக்குநர்தான். 'சூப்பர் சரண்யா'வில் நல்ல என்டர்டெயினராக வெளிப்பட்டிருப்பார், அனஸ்வரா. சாராவாக இருக்கும் அனஸ்வராவுக்கு தானொரு பெண்ணாக இருப்பது பிடிக்காது. அதனால், தான் ஒரு ஆணாக இருக்கக்கூடாதா என்ற வருத்தம். எனவே, தன்னை 'மைக்' எனப் பெயர் வைத்துக்கொண்டு ஜாலியாக வைப் செய்துகொண்டிருக்கும் கதாபாத்திரம். சினிமாவுக்கு வந்து கொஞ்ச வருடங்களிலேயே இவரை மையப்படுத்திய கதைகள் வரத்தொடங்கிவிட்டன. 'ராங்கி' படத்தில் த்ரிஷாவுடன் நடித்து தமிழில் அறிமுகமாகிவிட்டார். தவிர, நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் நாளை வெளியாகும் 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' படத்திலும் இவர்தான் நாயகி. தவிர, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.