Published:Updated:

மனதில் உறுதி வேண்டும்: நர்ஸ் நந்தினியாக இதயங்களை வென்ற சுஹாசினி; ஆனால், படத்திலிருக்கும் பிரச்னை?

மனதில் உறுதி வேண்டும்

தன்னுடைய குடும்பத்தின் பொருளாதாரச் சுமைக்காகத் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளையும் தியாகங்களையும் ஏற்கும் பெண்ணின் கதாபாத்திரம் என்பது பாலசந்தரின் படங்களுக்குப் புதிதல்ல. ‘நந்தினி’யும் அதன் அழகான தொடர்ச்சியாகவே மிளிர்கிறார்.

Published:Updated:

மனதில் உறுதி வேண்டும்: நர்ஸ் நந்தினியாக இதயங்களை வென்ற சுஹாசினி; ஆனால், படத்திலிருக்கும் பிரச்னை?

தன்னுடைய குடும்பத்தின் பொருளாதாரச் சுமைக்காகத் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளையும் தியாகங்களையும் ஏற்கும் பெண்ணின் கதாபாத்திரம் என்பது பாலசந்தரின் படங்களுக்குப் புதிதல்ல. ‘நந்தினி’யும் அதன் அழகான தொடர்ச்சியாகவே மிளிர்கிறார்.

மனதில் உறுதி வேண்டும்

பெண்ணியம் அழுத்தமாகப் பேசப்பட்டு வரும் சமகாலத்தில் கூட தமிழ்த் திரைப்படங்கள் ஹீரோக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை. ஆண் மையத் திரைப்படங்களே இங்கு அதிகம் வெளியாகின்றன; வெற்றியடைகின்றன. கதாநாயகிகள் இன்னமும் கவர்ச்சிப் பதுமைகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் எழுபதுகளில் தொடங்கி தொடர்ச்சியாக ‘பெண் மையத் திரைப்படங்களை’ உருவாக்கிய இயக்குநர்களில் கே.பாலசந்தர் முக்கியமானவர். ‘அரங்கேற்றம்’ லலிதா, ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதா, அபூர்வ ராகங்கள் ‘பைரவி’, ‘அவர்கள்’ அனு, 'அக்னி சாட்சி' கண்ணம்மா என்று அவர் உருவாக்கிய பல பெண் பாத்திரங்கள் மறக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த வரிசையில் ஒருவராக ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் குறிப்பிடத்தக்கவர்.

இந்தப் படத்தில் ஏறத்தாழ பதினைந்திற்கும் மேற்பட்ட புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருந்தார் இயக்குநர் பாலசந்தர். இதில் குறிப்பிடத்தகுந்தவர்களாக விவேக், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த், லலிதகுமாரி போன்றவர்களைச் சொல்லலாம்.
கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

‘கண்ணின் மணியே... போராட்டமா...' ‘நர்ஸ்’ நந்தினி

கணிசமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட தன் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஒற்றை நபராகச் சுமப்பவர் நந்தினி. தன்னுடைய ‘நர்ஸ்’ வேலையை அர்ப்பணிப்புணர்வுடன் செய்பவர். சென்னையிலிருந்து கொண்டே ஊரிலிருக்கும் குடும்பத்தைக் கடிதங்களின் வழியாகக் கச்சிதமாகவும் கறாராகவும் நிர்வகிப்பவர். தன்னுடைய சொந்தச் சோகங்கள் குடும்பத்துக்குத் தெரிந்து விடக்கூடாது என்று அவற்றை மறைத்து விடும் தியாகவுணர்ச்சியைக் கொண்டவர்.

நந்தினியின் முதல் திருமணவுறவு, குடும்ப வன்முறை காரணமாக முடிவுக்கு வருகிறது. சிறிது காலம் கழித்து இன்னொரு காதலில் விழும் சூழல் நேர்கிறது. தன்னுடைய சகோதரர்களில் ஒருவர் யாராவது குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிற நந்தினியின் கனவுகள் தொடர்ந்து பொய்யாகின்றன. அவளுடைய தியாகம் என்னும் எரிபொருளின் மூலம்தான் குடும்ப வாகனம் தொடர்ந்து ஓடும் என்கிற நிலைமை நீடித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டாவது காதலை நந்தினி எவ்வாறு எதிர்கொண்டாள் என்பதற்கான விடையுடன் படம் நிறைகிறது.

‘நர்ஸ்’ நந்தினியாக சுஹாசினி. அவருக்காகவே தைக்கப்பட்ட ‘ரெடிமேட்’ பாத்திரம் மாதிரி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. இந்தப் பாத்திர வடிவமைப்பு மிக சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘நர்ஸ் டிரஸ் போட்டுட்டா நான் யாரையும் திட்ட மாட்டேன்’ என்பது தொடங்கி “ஐ லவ் யூ சிஸ்டர்” என்று வழியும் ஒரு நோயாளியிடம் “சிஸ்டரை எப்படிக் கல்யாணம் பண்ண முடியும்?” என்று சிரித்துக் கொண்டே சமாளிப்பது வரை படம் முழுவதும் ஒரு கண்ணியமான நர்ஸின் நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் சுஹாசினி. செவிலியர் பாத்திரத்தின் முக்கியத்துவம், அவர்கள் இனிமையான முகத்துடன் நோயாளிகளுக்குச் சேவை செய்ய வேண்டிய அவசியம், ஓர் உயிரைக் காப்பாற்றுவதில் இருக்கும் பொறுப்புணர்ச்சி போன்ற விஷயங்கள் இந்தப் பாத்திரத்தின் மூலம் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.

நர்ஸ் பணியைத் தாண்டி ஒரு பொறுப்பான, பாசமான அக்கா, குடும்ப பாரத்தை ஒற்றை ஆளாகச் சுமக்கும் பெண், குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் மனைவி, காதலின் சஞ்சலத்தில் தவிக்கும் பேதை என்று பல்வேறு பரிமாணங்களில் வெளிப்பட்டிருக்கும் பாத்திரத்தை சுகாசினி மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்.

மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

ஒரே திரைப்படத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட அறிமுகங்கள்

ஒரு பொருட்காட்சியில் ஏராளமான விஷயங்களைச் சுற்றிப் பார்ப்பது போல இந்தப் படத்தில் நிறையப் பாத்திரங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள். ஏறத்தாழ அவர்கள் அனைவருக்கும் இடம் இருக்கும் படியாகவும், அவர்கள் நினைவில் நிற்கும்படியாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

தான் அறிமுகப்படுத்தும் நடிகருக்கு ஏதாவது ஒரு சிறப்புத் திறமை இருந்தால் அதை எப்படியாவது படத்தில் திணித்து விடும் வழக்கம் பாலசந்தருக்கு உண்டு. இதை ஒருவகையில் கெட்ட வழக்கம் என்று கூடச் சொல்லலாம். சுஹாசினியின் முதல் கணவராக அறிமுகமாகியிருக்கும் சந்திரகாந்த்திற்கு நன்றாக சம்மர் சால்ட் அடிக்கத் தெரியும் போல. எனவே ஒரு பாடல் காட்சியில் ‘குறளி வித்தை’ போல பல்டி அடித்துக் கொண்டே டூயட் பாடுகிறார். (அன்பான காதலராக இருக்கும் இவர், கணவரான பின்னர் பல்டியடித்து விடுவார் என்பதைத்தான் இயக்குநர் குறியீடாகச் சொல்லியிருக்கிறார் போல).

காதலின் போது இனிமையான முகத்தையும் திருமணத்துக்குப் பிறகு ஒரிஜினல் முகத்தையும் காட்டுவது பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் குணங்களில் ஒன்று. அந்தத் திருச்சேவையை சந்திரகாந்த் சிறப்பாகவே செய்திருக்கிறார். சிறுநீரகம் பழுதான நிலைமையில், அதை தனக்கு தானம் செய்த சுஹாசினியின் கால்களில் பாசத்துடன் முத்தம் தந்துவிட்டு விலகும் இறுதிக் காட்சியில் பரிதாபத்தை வரவழைத்திருக்கிறார்.

சுஹாசினியின் வாழ்க்கையில் இரண்டாவதாக வருபவர் ஸ்ரீதர். இவரும் இதில்தான் அறிமுகம். இவருக்கு கிளாசிக்கல் டான்ஸ் நன்றாக ஆட வரும் போல. எனவே அதற்கேற்ப திரைக்கதை வளைக்கப்பட்டிருப்பது சற்று பலவீனமாக இருக்கிறது. “ஒரு கூட்டத்துல பத்து பொண்ணுங்க இருந்தா, அதுல ஒரு கமலா நிச்சயம் இருந்தாகணும்” என்று இந்த எழுத்தாளர் டைமிங் ஜோக் அடிப்பது முதல் “உங்ககிட்ட மூணு வார்த்தையைச் சொல்லியே ஆகணும்” என்று தொடர்ந்து சொல்லி சுஹாசினியின் ஆர்வத்தைக் கிளறி குறும்பு செய்வது வரை பல காட்சிகளில் சுவாரஸ்யமாக நடித்திருக்கிறார் ஸ்ரீதர். ஓர் எழுத்தாளராக முதிர்ச்சியுடன் பேசும் இவர், திடீரென்று வில்லனாக மாறுவது நெருடலாக இருக்கிறது.

இத்தனை அறிமுகங்களுக்கு நடுவில் மிக மிகச் சுவாரஸ்யமான வெளிச்சமாக மின்னியிருப்பவர் எஸ்.பி.பி. தனது தொழிலில் அர்ப்பணிப்பும் சிரத்தையும் இருந்தாலும் ரகசியமாக சிகரெட் பிடிக்கும் ஜாலியான டாக்டர். சுஹாசினி வருவதைக் கண்டதும் சிகரெட்டை ஒளித்து வைத்து விட்டுப் பிடிபட்டவுடன் அசடு வழிவதும், பல காட்சிகளில் ஏதாவதொரு பாடலின் ஆலாபனையை மிக இனிமையாகப் பாடுவதும் "என் பொண்டாட்டி என்ன சொல்வான்னா...” என்று படம் முழுவதும் சொல்லி விட்டு இறுதியில் அதற்கான உண்மையைச் சொல்வதும் என டாக்டர் அர்த்தநாரி ஒரு சுவாரஸ்யமான கேரக்ட்டர்.
மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

விவேக்கின் முதல் திரைப்படம்

இவருக்கு அடுத்தபடியாக விவேக்கைச் சொல்லலாம். வீட்டில் நடக்கும் தவறுகளை அக்காவிற்குக் கடிதம் வழியாகப் போட்டுக் கொடுக்கும் ‘ஸ்பை’ இவர்தான். கெச்சலான, அப்பாவியான தோற்றத்தில் இருக்கும் விவேக்கின் ஆரம்பக் காலத்துத் தோற்றத்தைப் பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கும். “அந்த நாளா எது?" என்று சகோதரன் கேட்க “ஏ.வி.எம்-மின் ‘அந்த நாள்’ விடுடா” என்று சொல்லும் வசனத்தில் விவேக்கின் ஸ்டைல் அப்போதே ஆரம்பித்திருக்கிறது. திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக அக்காவின் சென்னை வீட்டிற்குச் சென்று அங்கு நடந்த மாற்றத்தை அறிந்து அதிர்ச்சியாகி “என்னக்கா உன் தலைவிதி இப்படியாயிடுச்சே” என்று கண்ணீர் விடும் போது வெள்ளந்தியான, பாசமிகு தம்பியைக் கண் முன் நிறுத்தி விடுகிறார் விவேக்.

ஓர் அரசியல் தலைவருக்கு விஸ்வாசமாக இருந்து தன்னையே எரித்துக் கொள்ளும் அப்பாவி அரசியல் தொண்டனின் பாத்திரத்தை ரமேஷ் அரவிந்த் நன்றாகக் கையாண்டிருக்கிறார். “இன்னமும் ரெண்டே வருஷம்தான். குடும்ப பாரத்தை நான் சுமக்கிறேன்” என்று சொடக்குப் போட்டு அக்காவிற்கு வாக்குறுதி தந்துவிட்டு பிறகு உணர்ச்சிவசப்படும் பாத்திரத்தின் மூலம் அரசியல் மற்றும் சினிமா மோகத்தால் குடும்பத்தை மறந்து விடும் இளைஞர்களின் முட்டாள்தனத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். தேர்வுக்குக் கட்டுவதற்காக இவர் பணம் ஈட்டும் ஒரு ஐடியா சுவாரஸ்யமாக இருக்கிறது.

‘கறாரான’ அக்கா நந்தினியின் தியாகத்தால் நடக்கும் குடும்பம்

நந்தினியின் குடும்ப உறுப்பினர்களின் குணாதியங்களின் கலவையே அத்தனை சுவாரஸ்யமாக இருக்கிறது. “முன்னாடி மூணு பல்லு விழுந்துடுச்சு. கட்டிக்கட்டுமா?” என்று பொறுப்பில்லாமல் கேட்கும் அப்பா, “பொண்ணு சம்பாத்தியத்துல உக்காந்து சாப்பிடறீங்க. துடைப்பைக் கட்டைக்கு எதுக்கு பட்டுக் குஞ்சலம்?” என்று இடித்துரைக்கும் அம்மா, அக்காவின் மீதுள்ள மரியாதையால் நின்று கொண்டே கடிதம் எழுதும் தம்பி, மதம் மாறித் திருமணம் செய்து கொள்ளும் சகோதரன், வாடகைக்குத் தங்க வரும் இளைஞனுடன் ஓடிப் போகும் தங்கை, கடைக்குட்டி சிறுமி என்று வித விதமான பாத்திரங்கள். தனக்குத் திருமணம் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியடையும் அப்பாவிடம், “இனிமே இன்னொரு குழந்தை இந்த வீட்டில் பிறக்காதுன்னு எனக்கு வாக்கு கொடுங்க” என்று நந்தினி சொல்லும் வசனத்தில் அத்தனை சூடு.

மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

"அந்த எட்டாம் நம்பர் வார்டு பேஷன்ட் பொழக்க மாட்டாங்கறேன். என்னா பெட்டு?” என்று தன் சக தொழிலாளியிடம் பந்தயம் கட்டும் பாத்திரத்தில் கவிதாலயா கிருஷ்ணன் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார். மருத்துவமனை நிர்வாகத்தால் வேலை போகும் சூழல் ஏற்படும் சமயத்தில் கூட "போகாதுங்கறேன். என்ன பெட்டு?” என்று கேட்கும் அளவிற்குப் பந்தயப் பைத்தியம் பிடித்த கேரக்ட்டர். இவரிடமிருந்து தப்பித்து ஓடும் நண்பராகச் சிரிக்க வைத்திருந்தார் ரவிகாந்த்.

ஏராளமான பாத்திரங்கள், கிளைக்கதைகள் அமைந்த இந்தத் திரைக்கதை பெரும்பாலும் சுவாரஸ்யமாகப் பயணித்தாலும் இதுவே இந்தப் படத்திற்கு ஒரு பலவீனமாக அமைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இந்தக் கிளைக்கதைகளில் ஒன்று அருமையானது. சேலை திருடனாக வந்து நந்தினியின் வழிகாட்டுதலின் பெயரில் உழைத்து டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் வைக்கும் வரை உயரும் ஒரு திருடனின் கதை, காண்பதற்கு நெகிழ்வாக இருந்தது. ராம் கோபால் வர்மா இயக்கிய ‘உதயம்’ படத்தில் பார்த்தவுடன் பதற வைக்கும் முரட்டுத்தனமான தோற்றத்தில் நடித்தவர்தான், இந்தத் திருடன் பாத்திரத்தை நன்றாகக் கையாண்டுள்ளார்.

“நல்லா கெட்ட வார்த்தையிலேயே வையணும் போல வருது” என்று படபடவென்று செட்டிநாடு வழக்கில் பேசி அசத்திய லலிதகுமாரியும் இதில்தான் அறிமுகம். “தேர்ட் ரேட் ஃபாதர்... ஃபோர்த் ரேட் வில்லன்னு சொன்னியே. இப்பவாவது அதை வாபஸ் வாங்கிக்க மாட்டியா?” என்று கேட்கும் ‘கறார்’ மாமனார், மீசை கிருஷ்ணமூர்த்தியும் இதில்தான் அறிமுகம். “சுகம், துக்கம்... எதுவா இருந்தாலும் ஷேர் செஞ்சுக்கலாம்... ஃபிப்டி... ஃபிப்டி" என்று தான் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளிக்கு ஆசைநாயகியாக ரகசிய வாழ்க்கை வாழும் கேரள தேசத்து அறைத் தோழியும் நடிப்பில் கவர்கிறார்.

மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

பாடல் காட்சியில் வந்து போன சத்யராஜ், விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த்

பாலசந்தர் படமென்றால் இளையராஜாவின் இசை சற்று ஸ்பெஷலாக அமையும். இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்புதான் என்றாலும் ஒரு கல் உப்பு குறைவது போல் சிறிது ஒத்திசைவு இல்லாமல் அந்த மாயமும் நிகழாதது போன்ற உணர்வு. பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் வாலி. பாரதியின் வாசனை வருவது போல எழுதப்பட்டிருக்கும் ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடலின் வரிகளும் படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருந்தது. ஜேசுதாஸின் ஆத்மார்த்தமான குரலில் கேட்க இனிமையாகவும் அமைந்திருந்தது. ‘கண்ணின் மணியே... கண்ணின் மணியே... போராட்டமா’ என்று பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எதிரொலிக்கும் பாடலை சித்ரா சிறப்பாகப் பாடியிருந்தார்.

நந்தினி தனது புதிய காதலைப் பற்றி மறைமுகமாகச் சொல்லும் போது ‘அவர் எப்படியிருப்பார்?’ என்று சினிமாப் பைத்தியமான லலிதகுமாரி கற்பனை செய்து பார்க்கும் பாடல் காட்சியில் சத்யராஜ், விஜயகாந்த், ரஜினிகாந்த் ஆகிய மூவரும் வந்து போயிருந்தார்கள். படத்திற்கு முற்றிலும் பொருந்தாத கிம்மிக்ஸ் இது. ‘கண்ணா வருவாயா’ மற்றும் ‘சங்கத்தமிழ் கவியே’ ஆகிய இரண்டு பாடல்களும் கிளாஸிக் தன்மையைக் கொண்டவை. ஜேசுதாஸூம் சித்ராவும் அருமையாகப் பாடியிருந்தாலும் படத்தின் வேகத்திற்கு இடையூறு செய்யும் விதமாகவே அவை அமைந்திருந்தன.

தன்னுடைய குடும்பத்தின் பொருளாதாரச் சுமைக்காகத் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளையும் தியாகங்களையும் ஏற்கும் பெண்ணின் கதாபாத்திரம் என்பது பாலசந்தரின் படங்களுக்குப் புதிதல்ல. ‘நந்தினி’யும் அதன் அழகான தொடர்ச்சியாகவே மிளிர்கிறார். இவருடைய பாத்திர வடிவமைப்பும் எதிர்கொள்ளும் உறவுச் சிக்கல்களும் உணர்ச்சிகரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாலசந்தரின் பிரத்யேக இயக்குநர் முத்திரைகளும் படத்தில் நன்றாகவே பதிந்துள்ளன. ‘கணேஷ் என்ன மார்க் வாங்கியிருக்கான்?’ என்று அக்கா கடிதத்தில் விசாரிக்க, கட் செய்தால் ‘முட்டை வாங்கி வந்திருக்கேம்மா’ என்று கடைக்குப் போய் விட்டு வரும் சிறுவன் சொல்லும் காட்சியை அடுத்ததாக இணைத்திருக்கும் குறும்புத்தனங்களும் ஆங்காங்கே உண்டு. இவற்றின் இடையில் சில காட்சிகள் மிகையான நாடகத்தன்மையுடன் அமைந்து சலிப்பை ஏற்படுத்தியிருந்தன. படத்தின் இறுதியில் வரும் சில காட்சிகளால் சிறுநீரக தானம் தொடர்பான பிரசாரப் படம் போல மாறிவிடுகிறது.

மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

அலைபாயும் திரைக்கதையும் ஓவர் டோஸ் தியாகமும் பலவீனமாக அமைந்ததா?

பெண்களின் தியாகமும் பிரச்னைகளும் சினிமாவில் பதிவாக்கப்பட வேண்டியது அவசியம்தான் என்றாலும், தராசு ஒரே பக்கம் சாய்ந்து ஓவர் டோஸாக மாறிவிடும் போது திகட்டி விடுகிறது. இது போன்ற படங்களில் பிரதான பெண் பாத்திரம் ஒரு கணமும் நிம்மதியாக வாழ இயக்குநர் அனுமதிப்பதே இல்லை. தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள் அவளுக்கு ‘உருவாக்கப்பட்டுக்’ கொண்டே இருக்கின்றன. இதற்குச் சௌகரியமாக முதலில் நல்லவர் போல் தோன்றும் ஆண்கள், ஒரு கணத்தில் வில்லன்களாக மாற்றப்பட்டு விடுகிறார்கள். இது தவிர ‘அம்மாக்கு ஆப்ரேஷன், அப்பாக்குக் கண்ணு தெரியாது... தங்கச்சி ஓடிப் போயிடறா' என்பது போன்ற தேய்வழக்குச் சித்திரிப்புகளால் நாயகி தியாகத் தீபத்தைத் தொடர்ந்து ஏற்றிக் கொண்டு இறுதி வரைக்கும் துன்பப்படும்படியான சித்திரிப்புகள் படத்தின் நம்பகத்தன்மையைக் குலைத்து விடுகின்றன.

பெண் மையத் திரைப்படங்களில் இந்த முயற்சியும் முக்கியமானது என்றாலும் அலைபாயும் திரைக்கதை, அநாவசியமான பாத்திரங்கள், கிளைக்கதைகள், கிளிஷேக்கள் போன்ற காரணங்களால் 'மனதில் உறுதி வேண்டும்' நம் மனதில் ‘நச்’சென்று அமரவில்லை. மேற்கு வங்கத்தின் சத்யஜித்ரே, மிருணாள் சென் போன்று விருதுப்படங்களின் அளவிற்குக் கதை சொல்லும் ஆசை பாலசந்தருக்கு இருக்கிறது. அதே சமயத்தில் தமிழ் சினிமாவின் வெகுசன வடிவத்திலிருந்து விடுபடவும் அவருக்கு மனமில்லை. இந்தத் தத்தளிப்பு காரணமாகப் படமும் அதே ‘இரண்டுங்கெட்டான்’ தனத்தில் சிக்கிக் கொண்டு விடுகிறது.

மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
ஆனால் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். படத்தின் வணிகத்தை மட்டும் பிரதான இலக்காகக் கொண்டு, பார்வையாளர்களின் ஜீரண சக்தியையும் ஆரோக்கியத்தையும் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மசாலாவைக் கொட்டி படமெடுக்கும் இயக்குநர்களின் மத்தியில் அதிலிருந்து கணிசமாக விலகி சமூகப் பிரச்னைகளை மையமாக வைத்து தனது படைப்புகளைத் தொடர்ச்சியாகத் தர முயன்ற பாலசந்தரின் பிடிவாதத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். அந்த வகையில் ‘மனதில் உறுதி வேண்டும்’ ஒரு நல்ல முயற்சி. ஓவரான தியாகத்தில் அல்லலுற்றாலும் ‘நந்தினி சிஸ்டர்’ எப்போதுமே ஸ்பெஷல்தான்.