சினிமா
Published:Updated:

நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

சூர்யாவும் ப்ரயாகா ரோஸ் மார்ட்டின்
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யாவும் ப்ரயாகா ரோஸ் மார்ட்டின்

ரொம்பப் புதுசா இருக்கு. நிச்சயமா ஒரு படைப்பாளிக்கு சுதந்திரம் அளிக்கும் தளமா இதைப் பார்க்கிறேன். புது அனுபவங்கள் ஓ.டி.டி அளிக்கும் வரம்.

மணிரத்னம்... இந்த ஒற்றைப் பெயர்மீது அவ்வளவு அன்பு, அவ்வளவு காதல், அவ்வளவு மரியாதை சினிமா உலகிற்கு இருக்கிறது. இவர் படங்கள் பார்த்து சினிமாவுக்கு வரத் துடிக்கும் இளைஞர்களுக்கு இன்று மட்டுமல்ல, எப்போதும் சக போட்டியாளராக சவால்விடுவதுதான் மணிரத்னத்தின் தனித்திறமை. எந்தவொரு தொழில்நுட்பம் அறிமுகமானாலும் அதைப் பரிசோதித்துப் பார்ப்பதில் அவருக்கு அலாதி ஆர்வம். இப்போது உலக சினிமாவே ஓ.டி.டி தளத்துக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கையில் மணிரத்னம் அந்தப் பயணத்தில் இணைந்திருக்கிறார்.

நெட்ஃபிளிக்ஸிற்காக ‘நவரசா’ எனும் ஆந்தாலஜி சீரிஸைத் தன் நண்பர் ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

‘‘கொரோனா முதல் அலை வந்தபோது, திரைத்துறை நிறைய பாதிக்கப்படும்னு தெரிஞ்சது. அப்போ நானும் ஜெயேந்திராவும் இப்படியொரு சீரிஸ் பண்ணி அதன் மூலமா வரும் வருமானத்தை சினிமாத் தொழிலாளர்களுக்குக் கொடுத்திடலாம்னு முடிவு பண்ணினோம். இந்த யோசனைக்குத் திரைத்துறையிலும் நிறைய ஆதரவு கிடைச்சது. நிறைய இயக்குநர்கள், நடிகர்கள், டெக்னீஷியன்கள் முன்வந்தாங்க. இது ஒரு கூட்டு முயற்சிதான். தமிழ் சினிமா முழுக்க சேர்ந்து சினிமாவுக்காகப் பண்ற விஷயம்தான் ‘நவரசா’ சீரிஸ்’’ என்ற மணிரத்னத்தைத் தொடர்ந்தார் ஜெயேந்திரா.

“ஒவ்வொரு பெஃப்ஸி தொழிலாளருக்கும் ஒரு கிரெடிட் கார்டு மாதிரி கொடுக்கிறோம். அதுல ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் கிரெடிட்டாகும். அதை அவங்க மளிகைப் பொருள்கள் வாங்கப் பயன்படுத்திக்கலாம். கிட்டத்தட்ட 12,000 தொழிலாளர்களுக்கு மேல இது மூலமா பயனடைஞ்சுக்கிட்டு இருக்காங்க’’ என்றார்.

ஜெயேந்திரா - மணிரத்னம்
ஜெயேந்திரா - மணிரத்னம்
நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

“ஓ.டி.டி தளங்களின் வருகையை எப்படி உணர்கிறீர்கள்?” என்று மணிரத்னத்திடம் கேட்டேன்.

‘‘ரொம்பப் புதுசா இருக்கு. நிச்சயமா ஒரு படைப்பாளிக்கு சுதந்திரம் அளிக்கும் தளமா இதைப் பார்க்கிறேன். புது அனுபவங்கள் ஓ.டி.டி அளிக்கும் வரம். ‘நவரசா’ அப்படியான அனுபவத்தைத்தான் தந்தது. ஒன்பது இயக்குநர்கள், அவங்க தேர்ந்தெடுத்த நடிகர்கள்னு ரொம்பப் பெரிய டீம். ஒன்பது கதைகளைப் படிச்சு, அதைப் பத்தி அவங்களோடு பேசி, விவாதிச்சு, அந்த அனுபவமே ரொம்பப் புதுசா இருந்தது. நிச்சயமா ‘நவரசா’ மூலமா நிறைய கத்துக்கிட்டேன்’’ என்றவர் ஒவ்வொரு ரசத்தையும் விளக்க ஆரம்பித்தார்.

நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

“நவரசங்கள் நிறைந்ததுதான் நம்ம வாழ்க்கை. ஒவ்வொரு ரசத்தையும் அடிப்படையாகக் கொண்ட படங்களை ஒவ்வொரு இயக்குநர் இயக்கியிருக்காங்க. கெளதம் மேனன் படத்தின் எமோஷன் சிருங்காரம், அதாவது காதல்! லவ் போர்ஷனைக் கையாள்வதில் அவருக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு. அதுல அவர் வழக்கம் போல சூப்பராவும் அழகாவும் பண்ணியிருக்கார். சூர்யாவும் ப்ரயாகா ரோஸ் மார்ட்டினும் நடிச்சிருக்காங்க. பிரியதர்ஷன் சாருடையது ‘ஹாஸ்யம்.’ ஒரு உண்மைச் சம்பவத்தை எடுத்துக்கிட்டு அதுல காமெடிக் கதை பண்ணியிருக்கார். யோகிபாபு, ரம்யா நம்பீசன் எல்லாம் நடிச்சிருக்காங்க. ‘கருணை’யை மையமா வெச்சு பிஜாய் நம்பியார் படம் எடுத்திருக்கார். இதுல விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி, அசோக் செல்வன் இவங்க எல்லோரும் நடிச்சிருக்காங்க. எல்லோருடைய பர்ஃபாமென்ஸும் நிச்சயம் பேசப்படும். கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிற ரசம், ‘ஆச்சர்யம்.’ தான் எடுத்திருக்கிற எமோஷனை சயன்ஸ் பிக்‌ஷன் ஜானர்ல சொல்லியிருக்கார். வித்தியாசமான முயற்சி. அதுல அரவிந்த்சுவாமி, பிரசன்னா, பூர்ணா நடிச்சிருக்காங்க. அரவிந்த்சுவாமி ‘கோபம்’ என்னும் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கியிருக்கார். இதில் ரித்விகா, ரமேஷ் திலக், ‘பசங்க’ ஸ்ரீராம் நடிச்சிருக்காங்க. அவர் எடுத்திருக்கிற படத்தைப் பார்க்கும்போது நிச்சயமா முதல் படம் மாதிரியே தெரியாது. அவ்வளவு மெச்சூர்டா எடுத்திருக்கார். கார்த்திக் சுப்புராஜுடைய போர்ஷன் ‘அமைதி.’ பாபி சிம்ஹா, கெளதம் மேனன், சனந்த் நடிச்சிருக்காங்க. ரதீந்திரன் எடுத்திருக்கிற போர்ஷன் ‘பயம்.’ சித்தார்த், பார்வதி நடிச்சிருக்காங்க. ரொம்ப நல்லா பண்ணியிருக்கார். சர்ஜுனுடையது ‘தைரியம்.’ அதர்வா, அஞ்சலி, கிஷோர் நடிச்சிருக்காங்க. வித்தியாசமான களத்தைக் கையிலெடுத்திருக்கார். வசந்த் இயக்கியிருக்கிற போர்ஷன், ‘அருவருப்பு.’ இந்த எமோஷன்ல படம் பண்றது ரொம்ப சிரமமான விஷயம். ஆனா, அதை ரொம்ப நல்லா பண்ணியிருக்கார்’’ என ஒவ்வொரு இயக்குநரின் படைப்பைப் பற்றியும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக விளக்குகிறார்.

“எந்த இயக்குநருக்கு எந்த போர்ஷன் என்று எப்படி முடிவானது?’’ என்று கேட்டதற்கு ஜெயேந்திரா பதில் சொல்லத் தொடங்கினார்.

நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

‘‘ஒன்பது கதை பண்ணலாம்னு முடிவான பிறகு, நிறைய இயக்குநர்கள்கிட்ட அப்ரோச் பண்ணினோம். யாருக்கெல்லாம் இதுல ஆர்வம் இருந்ததோ, சினிமாத் தொழிலாளர்கள் நலனுக்கான இந்த நோக்கம் இருந்ததோ, அவங்க எல்லோரும் இந்த புராஜெக்டுக்குள்ள வந்தாங்க. அப்புறம், எல்லோருடைய முயற்சியா ‘நவரசா’ மாறிடுச்சு. இந்த ஐடியாவை எல்லோருக்கும் சொன்னபோது, ‘நான் இந்த எமோஷனை எடுத்துக்கிறேன்’னு தங்களுடைய சாய்ஸை சொல்லி சிலர் எடுத்துக்கிட்டாங்க. கார்த்திக் சுப்புராஜ், அரவிந்த்சுவாமி எடுத்தவுடனே ‘நான் இதைப் பண்றேன்’னு சொல்லிட்டாங்க. இப்படி எல்லோரும் ஒவ்வொன்றை எடுக்க எடுக்க அடுத்து இருக்கிறவங்களுக்கு சாய்ஸ் குறைவாகிட்டே வந்தது” என்று சிரிக்கிறார்.

“அரவிந்த்சுவாமி என்றாலே நினைவுக்கு வரும் பெயர் மணிரத்னம்தான். அந்த அளவுக்கு நெருக்கமானவர் முதன்முதலில் படம் இயக்குகிறார். ஒரு குருவாக உங்கள் மனநிலை, பங்களிப்பு என்ன?” என்று கேட்டவுடன் கொஞ்சமும் தாமதிக்காமல் பதில் வருகிறது மணிரத்னத்திடம்.

“பிலிம் மேக்கிங்னு வந்துட்டா, அந்தக் கதையும் அந்த க்ரியேட்டர் என்ன பண்ணணும் அப்படிங்கிறதும்தான் தூக்கலா நிற்கும். அங்க குரு - சிஷ்யன் எல்லாம் கிடையாது. படம்தான் முக்கியம். நடிகரா அவரை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அவருடைய படைப்பைப் பார்க்கும்போது, இன்னும் நிறைய படங்கள் இயக்குவார்னு தோணுது’’ என்கிறார் உறுதியாக.

நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

‘‘பிலிம் மேக்கிங்ல ஒவ்வொரு முறையும் வித்தியாசம் காட்டும் உங்களுடைய இந்த சீரிஸில் என்ன புதுசா இருக்கும்?’’

‘‘இந்த பார்மெட்டே புதுசுதான். இலக்கியத்திலேயே ரொம்ப அழுத்தமான மீடியம் சிறுகதைன்னு சொல்லலாம். அதுக்குன்னு ஒரு அழகு இருக்கு; முழுமை இருக்கு. அதே மாதிரிதான் இங்கேயும். எல்லாமே 30 - 40 நிமிடங்கள் இருக்கிற ஷார்ட் பிலிம்ஸ்தான். அதுக்குள்ள ஒரு உலகத்தைக் காட்டுறது ஒரு படைப்பாளிக்கு ரொம்ப ஆர்வமாகவும் சுவாரஸ்யமான சவாலாகவும் இருக்கும். வெரைட்டியான இயக்குநர்கள் இருந்ததனால வெரைட்டியான டேஸ்ட் கிடைச்சிருக்கு.’’

‘‘சிறுகதையைப் படமாக்கும்போது இருக்கும் சவால்கள் என்னென்ன?’’

‘‘நிச்சயமா அது சுவாரஸ்யமான சவால்தான். நம்ம எல்லோரும் நிறைய சிறுகதைகள் படிச்சுதான் வளர்ந்திருப்போம். அந்த உலகத்துல நிறைய ஜாம்பவான்கள் இருந்திருக்காங்க. அவங்களுடைய கதைகள் எல்லாம் நமக்குள்ள போயிருக்கு. அதனால, மீடியம்தான் மாறுதே தவிர, கதை சொல்லல் ஒன்றுதான்.”

“ஓ.டி.டி தளங்கள்ல மக்கள் வெவ்வேற மொழிப் படங்களைத் தேடித்தேடிப் பார்க்குறாங்க. பெரிய நடிகர்கள் நடிச்சிருக்காங்களா, பெரிய இயக்குநர்கள் படமான்னு எல்லாம் பார்க்காமல், கதையை மட்டுமே பிரதானமா பார்க்கும் பழக்கம் உருவாகியிருக்கிறது நல்ல விஷயம். நல்ல கதை கொண்ட படங்களுக்கு, ஆர்ட்டிஸ்ட் வேல்யூவோ மொழி மாறுபடுறதோ பெரிய விஷயமில்லை’’ என்ற ஜெயேந்திராவைத் தொடர்ந்து, ஆர்வமாகப் பேச ஆரம்பிக்கிறார் மணிரத்னம்.

‘‘ஓ.டி.டி-க்குப் படம் பண்ணும்போது உலகத்துல எங்கே வேணாலும் பார்க்க முடியும். மக்கள் ரொம்ப அப்டேட்டடா இருக்காங்க. அதனால, நம்ம படங்களுடைய தரம் உயர வேண்டியதா இருக்கு, உயரும்’’ என்றவரிடம் ‘‘உங்க வயதுக்கும் உங்க ஸ்டைலிஷான பிலிம் மேக்கிங்கிற்கும் தொடர்பில்லைன்னு புரிஞ்சுக்க முடியுது” என்று கேள்வியை முடிக்கும் முன்பே, “யாருக்கு வயசாகிடுச்சுன்னு சொல்றீங்க?’’ என சிரித்தபடி பேச ஆரம்பித்தார். ‘‘பிலிம் மேக்கிங் என்பது ஒரு மொழி. அதுக்கும் வயசுக்கும் சம்பந்தமில்லை. ஒரு எழுத்தாளருக்கு எத்தனை வயசானாலும் அவர் படைப்புத்திறமை மாறப்போறதில்லை. அதுமாதிரிதான் சினிமாவும்” என்கிறார்.

ஜெயேந்திராவிடம், ‘‘மணிரத்னத்தின் சினிமாக்கள் உருவாகும்போது அவர்கூடவே இருந்து பார்த்திருக்கீங்க. அதைப் பத்திச் சொல்லுங்க’’ எனக் கேட்டேன்.

‘‘மணி ‘மெளனராகம்’ பண்ணும்போது மணி, நான், பி.சி.ஸ்ரீராம் நாங்க மூணு பேரும்தான் முதல்ல படம் பார்த்தோம். ‘நாயகன்’ பண்ணும்போது நான் பாம்பேவுல இருந்ததனால, நான்தான் லொகேஷன் மேனேஜர். ‘அஞ்சலி’ படத்துல நடிச்சது, என் விளம்பரத்துல நடிச்ச குழந்தை... இப்படி எல்லாப் படங்கள்லயும் நானும் மணியும் சேர்ந்து வேலை செய்றமாதிரி ஒரு சூழல் வரும். அப்படித்தான் ‘நவரசா’வும். நான் ‘180’ படம் பண்ணினதுக்கு முழுக் காரணம் மணிதான். உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சொல்லவா? மணி சூப்பரா கோல்ஃப் ஆடுவார்’’ என்ற சொல்லி முடித்தவுடன், ஜெயேந்திராவைப் பற்றிப் பேசத் தொடங்கினார் மணிரத்னம்.

நட்சத்திர ஜன்னலில் நவரச வானம்! - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

“ஜெயேந்திரா சினிமாவைத் தாண்டி நிறைய விஷயங்கள் பண்ணிக்கிட்டிருக்கார். ‘பூமிகா’ன்னு ஓர் அமைப்பு ஆரம்பிச்சு ரொம்ப வருஷமா மக்களுக்கு உதவி செய்யறார். சுனாமி, புயல், வெள்ளம் மாதிரியான பேரிடர்களின்போது, பூமிகாவுடைய பங்கு அளப்பரியதா இருந்திருக்கு. கொரோனா காலகட்டத்தில் இவங்க டீமுடைய உழைப்பு அபாரமானது. ‘நவரசா’விலேயே சினிமாத் தொழிலாளர்களுக்கான நிவாரணத் தொகையை அவங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதை ‘பூமிகா’ டீம்தான் பார்த்திருக்கிறாங்க. ஜெயேந்திரா எங்களுக்கு ரோல்மாடல் மாதிரி’’ என்ற மணிரத்னத்திடம் ‘‘உங்களுடைய படம் வெளியாகுற நாள் உங்களுடைய மனநிலை எப்படியிருக்கும்? தியேட்டருக்குப் போய்ப் பார்க்கிறதுண்டா?’’ என்று கேட்டேன்.

‘‘முதல் நாள் தியேட்டருக்குப் போறதேயில்லை. என் படத்தை தியேட்டருக்குப் போய்ப் பார்த்து 25 வருஷமாகுது. பார்த்தா, அதுல இருக்கிற தவறுகளெல்லாம் தெரியும். எதுக்கு?’’ என்று சிரிக்கிறார்.

அதுதான் மணிரத்னம்!