
மணிரத்னம் இப்படியெல்லாம் பேசுவாரான்னு ஆச்சர்யமா இருக்கு. வாவ்!
‘இருவரைப் பார்த்த சூட்டோடு மூன்றாமவராக மணிரத்னத்தை, சீதம்மாள் காலனியில் அவர் புதுசாகத் துவங்கியிருக்கும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆபீஸின் அழகிய வெள்ளைக் கட்டடத்தில் சந்தித்தேன்! மாடியில் உள்ள அவரது அறையிலும் மயக்கமூட்டுகிற மங்கலானதொரு வெளிச்சம்தான். அவரது சினிமாக்களில் வருகிற பிரமாண்டமான. ஆடம்பர அலங்காரங்கள் எதுவுமே இல்லை. சிம்பிளான மேஜை - நாற்காலி நடுத்தரமானதொரு தனியார் நிறுவனத்தின் மானேஜர் ரூம் மாதிரிதான். இருக்கிறது அது. காபி கோப்பைகளை டேபிள் மேல் வைக்கிற சிறிய மரத்தட்டுகளைக் கையில் எடுத்து அடுக்கி, பிரித்து விளையாடியபடி ‘பேட்டியை இந்த நிமிடத்திலேயே தொடங்கிவிடலாம்’ என்பது போல் சிக்கனமாகச் சிரிக்கிறார்.

'சரி, இந்த நிமிஷத்திலேயே!’ என்பதுபோல உடனே நான் கேள்விகளை ஆரம்பிக்க, விரைவிலேயே வேகம் பிடிக்கிறது.
"உங்களிடம் ஒரு விஷயத்தில் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது! சுமார் நாற்பதாண்டு காலமாகத் தமிழ்நாட்டின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துவிட்ட திராவிட கலாசாரம் பற்றி, அதன் வளர்ச்சி பற்றி, தமிழக அரசியலை நடத்திச் சென்ற இரண்டு தலைவர்கள் பற்றி மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? ஒருபக்கம் சொல்லப்போனால் ஒரு முழுநீள திரைக்கதைக்கான ஸ்கிரிப்ட் இங்கேயே - நம் மூக்குக்கு அருகாமையிலேயே இருந்திருக்கிறது! அதைக் கண்டுகொண்டது. நீங்கள்தானா? ஆனால், இந்த அரசியல் வரலாற்றைவிட்டுச் சற்று நன்றாக விலகி நின்று பார்த்தால்தான் இப்படித் ‘தயார் நிலையில்’ ஒரு ஸ்கிரிப்ட் இருப்பது தெரியும்! (இட்ஸ் ட்ரூ!’ என்று லேசாகப் புன்னகைக்கிறார் மணிரத்னம்,) சர்ச்சை ஏற்படுத்திய ‘பம்பாய்’ என்ற படத்தை எடுத்த பிறகு, இதை எடுக்க வேண்டும் என்ற ஐடியா முதலில் உங்களுக்கு வந்த அந்த Exact நேரத்தை நினைவுபடுத்திச் சொல்ல முடியுமா?”
“ஒரு சர்ச்சைக்கு படம் எடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டெல்லாம் நான் எடுத்த படம் இல்லை இது. இன்னும் சொல்லப்போனால், ‘பம்பாய்’ படத்துக்கு முன்பே எனக்குள் ஊறிக் கொண்டிருந்த எண்ணம் தான் இது. நீங்கள் சொல்வது போலவே தமிழ்நாட்டு அரசியல் என்பது திராவிட கலாசாரத்தின் துவக்கத்தில் உருவாக , அத்துடன் சேர்ந்து வளர்ந்த இரண்டு மனிதர்கள்தான் அதன் பிறகு தமிழக அரசியலை இரண்டு கூறுகளக எடுத்துக் கொண்டு டாமினேட் செய்தார்கள். அந்த இருவரும் ஒவ்வொரு தமிழனின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் இடம் பெற்று விட்டார்கள். என் மனதிலும்தான்! ஆனால், இதைப் படமாக எடுக்க வேண்டும் என்ற முதல் தூண்டுதல், (கேரள) எம்.டி. வாசுதேவன் நாயருடன் ஒரு நாள் நான் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தபோது தான் வந்தது. தமிழிலும் மலையாளத்திலும் என்னவெல்லாம் லிட்டரேச்சர் இருக்கிறது என்று பேச்சு வளர்ந்து கொண்டே போனது. இதில் எதையெல்லாம் சினிமாவா எடுத்து மக்களுக்குத் தரமுடியும்னு பேசிக் கொண்டிருந்தபோது, உள்நாட்டு அரசியலில் இல்லாத விஷயங்கனா... என்று சிலவற்றைக் குறிப்பிட்டார் அவர். அந்தப் பேச்சு அதோட முடிஞ்போச்சு - அதுக்கப்புறம் மூணு நாலு மாதங்கள் கழிச்சு ஒரு நாள் அவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது. அசைபோட ஆரம்பித்தேன்!”
“ஆனாலும் இது ரொம்ப தைரியமான முடிவுன்னுதான் சொல்லணும். ‘சொல்றதுக்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது மணிரத்னம் எதுக்கு இதை எடுத்துக் கிளறிவிட்டாரு’னு ஒரு சாராருக்குக் கோபமும் இருக்கு உங்க மேலே!”
“தைரியமான முடிவுன்னெல்லாம் நான் பெருமைப்பட்டுக்க இதில் ஒண்ணுமில்லை. இந்த மாநிலத்தில் நான் நாற்பது வருஷங்கள் வாழ்ந்திருக்கேன். நடந்த எல்லா விஷயங்களையும் ஆர்வத்தோட கவனிச்சிருக்கேன். நடந்ததை நடந்த மாதிரி அப்படியே கொடுக்கிறபோது என்னவெல்லாம் பிரச்னைகள் வரும்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா. அதுக்காக எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவோ, எண்ணத்தைக் கைவிடவோ எனக்கு இஷ்டமில்லை. சொல்லப்போனால், இருவேறு லட்சியங்கள் கொண்ட இரண்டு இளைஞர்கள் சந்திச்கக்கறதும் தங்கள் கனவுகளைப் பகிர்ந்துக்கறதும் ஒருத்தரோட தமிழார்வத்தையும் ஒருத்தரோட நடிப்புத் திறமையையும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா பயன்படுத்தித் தங்கள் கனவுகனை நிறைவேத்திக்கலாம்னு அவங்க மனப்பூர்வமா பேசிக்கறதும்தான் படத்துக்கு ஆரம்பமா இருக்கணும்னு எடுத்த எடுப்பிலேயே முடிவு பண்ணிட்டேன். அவர்களுடைய அடிப்படைக் கனவுகள் என்னவா இருந்திருக்கும் என்பதை ஊகிப்பது எனக்கு ஒண்ணும் சிரமமா இல்லை. அந்தக் கனவுகளில் எவ்வளவு நிறைவேறியது. இன்னும் நிறைவேறாமல் எவ்வளவு பாக்கி இருக்குனு சொல்றது மூலமா, நாளைக்கு வேறே யாராவது வந்துகூட அதைப் பூர்த்தி செய்வாங்களோ என்கிற ஆசைதான் இந்தப் படத்தின் மூலம் நான் வெளிப்படுத்தியிருக்கிற ஆதங்கம். ஒவ்வொரு தடவையும் ஏதாவது அரசியல் மாற்றங்கள் உண்டாகிறபோது ‘ஏதாவது நல்லது நடக்குமா’ என்று எதிர்பார்க்கிறது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள நியாயமான இயல்புதானே!”
“ஆனால், இந்தப் படத்தில் நீங்கள் இரண்டு அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைச் சொல்ல நினைத்தீர்களா.... அல்லது ஏதோ இரண்டு தனிமனிதர்களின் சொந்த வாழ்க்கை பற்றிச் சொல்ல நினைத்தீர்களா?”
“இரண்டு தனி மனிதர்களின் வாழ்க்கைன்னே எடுத்துக்கலாம். ஆனால், அதைச் சொல்லும்போது ஜனங்க ஒரு பிடிப்போட சினிமாவா அதைக் கவனிக்க வைக்கிறதுக்கு எனக்கு ஒரு ‘Back-Drop’-பின்னணி சூழ்நிலை தேவைப்பட்டது. அந்த ‘பேக்-டிராப்’ அரசியலாக இருந்தால் சொல்லவந்த சப்ஜெக்ட் அழுத்தமாக, முழுமையாகப் போய்ச் சேரும் என்று நினைத்தேன்.
உதாரணமா ஒரு ‘ஜர்னலிஸ்ட்’ என்கிற பொறுப்பில் இருக்கிற நீங்க ஒரு சினிமா கலைஞனாகிய என்னைவிட இந்த சொஸைட்டிக்கு ஏதாவது செய்ய முடியும். அதுக்கப்புறம்தான் நாங்கள் வருகிறோம். நம்ம எல்லாரையும்விட அந்த வாய்ப்புகள் ஒரு அரசியல்வாதிக்கு அதிகம் இருக்கு இல்லையா? அதனால்தான், அரசியல் பின்னணியோடு வளர்ந்த இரண்டு தனிமனிதர்களை நான் “செலக்ட்” செய்துகிட்டேன்!”
“ஸோ.... அடிப்படையில் இது இரண்டு நண்பர்களின் கதைதான். நூற்றுக்கு நூறு கருணாநிதி - எம்.ஜி.ஆர். கதை இல்லையா?!”
"இது எந்த இரண்டு பேருடைய அச்சான வாழ்க்கைச் சரித்திரத்தையும் உருவாக்குகிற முயற்சி இல்லை. ‘அப்படியெல்லாம் இல்லை... இது அவர்கள் கதையேதான்’ அப்படீன்னு தோணினா... அதையும் நீங்கதான் சொல்லனும். நிஜ வாழ்க்கையைப் பிதிபலிக்கிற எத்தனையோ நல்ல கலைகள் மாதிரிதான், இந்த சினிமாவும். நான் இதற்குமுன் எடுத்த எந்தப் படத்தை எடுத்தாலும் அதில் நான் சொல்லி இருப்பதெல்லாம் நிஜ மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற கதைகள் தான். ‘மெளன ராகம்’ படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வந்த ரேவதியும் மோகனும் நூற்றுக்கு நூறு நான் சந்தித்த நிஜ மனிதர்கள். ஆனா, இந்த முறை நான் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கிட்ட அந்த மனிதர்கள். எல்லாருக்கும் தெரிஞ்ச இரண்டு பேராக இருப்பதால்தான் இத்தனை கேள்விகள் வருது! அதுக்காக ஒரு கலைஞன், தன் படைப்பில் யாருடைய வாழ்க்கையையும் பிரதிபலிக்கக்கூடாதுனு சொல்ற உரிமை யாருக்கும் கிடையாது!”
“அந்த இருவருடைய சாயல், உணர்வுகளை மட்டுதான் எடுத்துக்கிட்டேன்...”
இன்றைக்கு, பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டவர்களைப் பற்றி செய்திகளும், திறனாய்வுக்கட்டுரைகளும் பத்திரிகைகளில் எழுதப்படுவது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. தங்களுக்கு அதில் ஏதேனும் ஏற்புடையதாக இல்லாதபட்சத்தில் `சம்பந்தப்பட்டவர்கள்’ மறுப்புக் கடிதம் அனுப்புவார்கள். சிலசமயம் வெகுண்டெழுந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதும் உண்டு! திரைப்படங்களில் இந்த ‘சம்பிரதாயங்கள்’ இன்னும் இங்கே முழுசாக வரவில்லை. தேசபக்தர்களின் உன்னதங்களை உணர்ச்சிபூர்வமாக படமாக்கும் மனப்போக்கு மட்டுமே இதுவரை நம்மிடையே இருந்து வருகிறது. (உ.ம்- ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘வீரபாண்டிய கட்ட பொம்மன்’) இந்த விஷயத்திலும் ‘இருவர்’ வித்தியாசமாகிப் போய்விட்டது! ஆகவே இதுபற்றிய அடுத்த கேள்வியை இயக்குநர் மணிரத்னம் முன்பு வைத்தேன்...!

“‘இருவர்’ படத்தில் நிஜ மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறபோது, அவர்கள் சம்பந்தப்பட்ட சில ‘தவிர்க்கக்கூடிய’ உண்மைகளையும் கற்பனைப்படுத்தாமல் அப்படியே கொடுத்ததனால்தான் பிரச்னை! நீங்க நினைச்சிருந்தா உங்களுக்கே உரிய பிரமாண்டத்தையும் எஃபெக்ட்டையும் சேர்த்து, விறுவிறுப்பான மசாலா சினிமாவா இதைத் தயாரித்து இதே மெஸேஜைச் சொல்லியிருக்க முடியுமே...! மனசு திறந்து சொல்லணும்னா, படத்தோட பின்பாதியில், அரசியல் புகுந்த அப்புறம் நியாயமா விறுவிறுப்பு கூடியிருக்கணும். ஆனா, அப்படி இல்லை! அதனால்தான் எனக்கு இன்னொரு சந்தேகமும் வந்தது. நீங்க வேண்டிய அளவுக்குப் புகழ் அடைஞ்சுட்டீங்க... ஏற்கெனவே பல சர்சசைகளிலும் சிக்கி, வெளியில் வந்துட்டீங்க... வழக்கமான கமர்ஷியல் விஷயங்களைத் திணிக்காமல் அடுத்த கட்டமாக நம்ம வழியிலேயே ஒரு பரிசோதனை முயற்சி தான் பண்ணிப் பார்ப்போமே‘னு நினைச்சீங்களா?”
"பரபரப்பான சம்பவங்கள், திடுக்கிடும் திருப்பங்கள், பிரமிப்பூட்டும் சதித்திட்டங்கள், பயமுறுத்தும் மோதல்கள்... கடைசியில் மங்களகரமாக ஒரு தீர்வு சொல்வது என்றே கதை சொல்லி நாம் பழக்கப்பட்டுவிட்டோம். ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், சில விஷயங்களைச் சாதிக்க ஆசைப்பட்டான்.... அந்தச் சாதனைக்காகச் சில விஷயங்களைச் செய்தான், செத்துப்போனான் என்பதே ஒரு சுவையான, யதார்த்தமான கதையாகத் தெரிந்தது எனக்கு! அதனால்தான், வழக்கமான சினிமா காரெக்டர்களில் தென்படாத சில முரண்பாடுகளைக் கூட இந்தப் படத்தின் காரெக்டர்களில் வேண்டுமென்றே விட்டு வைத்திருக்கிறேன்! இன்னிக்கும் எனக்கு, வட நாட்டினர் நம்மீது புகுத்த முயற்சித்த மொழி என்பதால் இந்தி மொழிமேல் ஒரு வெறுப்பு உண்டு! தந்தை பெரியார் மேல் ஓர் இனம்புரியாத பற்றுதல் உண்டு. அவரோட சாதி ஒழிப்புக் கொள்கையிலும் நாத்திகவாதத்திலும் எனக்கு இருந்த பற்றுதல், ஒப்பனா டிக்ளேர் பண்ணி, பெரியாரை ஃபாலோ பண்றவங்களுக்குக்கூட நிச்சயம் இருக்காது! என் காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த புரட்சிகரமான ஒவ்வொரு சம்பவத்திலும் என்னை நானே மனசுக்குள் ஐக்கியப்படுத்திக்கிட்டவன். பெண்களுக்கு சம உரிமை, பகுத்தறிவுங்கறதெல்லாம் முதலில் இங்கே எழுந்த ஆரோக்கியமான கோஷங்கள்தான். அதெல்லாம் இப்ப என்ன ஆச்சு..? எங்கே அந்தக் கொள்கைகள் வழிதவறிப்போச்சு? அந்த லட்சியங்களை எடுத்து நடத்துகிற ஆர்வம் எங்கே விட்டுப்போச்சு...?"
“அதாவது, தனிநபர்கள் தங்களை 'ப்ரொஜெக்ட் பண்ணிக்கறதுக்காக நடத்தின ‘ஈகோ’ போட்டியில், தனிப்பட்ட போராட்டத்தில் அவர்களுடைய ஆரம்பகால லட்சியங்கள் திசைமாறிப் போச்சுனு சொல்லவறிங்களா..?”
“யெஸ்! அதுக்காக நான் குறிப்பிட்ட யாரையும் கைநீட்டிக்குத்தம் சொல்ல வரலை. மொத்தமாகவே ஏதோ குளறுபடி ஆகிப்போச்சு! நாம் கிளம்பிய வேகமெல்லாம் வீணாகிப் போச்சு! அதேமாதிரி, பல லட்சியங்கள் தனிப்பட்ட எனக்கும் தான் வாலிபப் பருவத்தில் இருந்தது - நான் சினிமாவில் வளர்ந்த பிறகு என்னிடமிருந்தும்தான் அதெல்லாம் கானாமப்போச்சு! இப்படி பாதை மாறிப்போன என் பர்சனல் துக்கத்தையும் சேர்த்துத்தான்... நான் படமா வெளிப்படுத்தியிருக்கேன்னு கூட வெச்சுக்கலாம்!”
“உங்கள் துக்கமா?!... ஏன் அப்படிச் சொல்றீங்க..?”
''நான் அன்னிக்கு இருந்த மாதிரியேதான் இப்பவும் உண்மையா இருக்கேனா.,,? ஒரு சினிமா கலைஞன் என்ற முறையில், நான் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் என் பகுத்தறிவைப் பயன்படுத்தி, நல்லது - கெட்டது எதுன்னு தீர யோசிச்சுட்டுதான் செய்யறேனா? ஆரம்பகால லட்சியங்களைப் பரவலா நிறைவேத்தறதுக்காகப் பாடுபட வேணாம்... ஒரு தனிமனிதனா, அந்த லட்சியங்களிலிருந்து நாம மாறாம இருந்தாக்கூடப் போதுமே! அதைத்தான் முழு ‘சீரியஸ்நெஸ்' ஸோட நான் ‘இருவர்’ படத்துல சொல்ல வந்தேன். ஆனா, எனக்கு இப்பவும் நம்பிக்கை இருக்கு! நாளை என்பது பிரகாசமா இருக்கும்னு நம்பறேன். திரும்பவும் நமக்கெல்லாம் ஒரு தூண்டுகோல் கிடைக்கும். ஒரு வேகம் வரும்.... எல்லாரும் பார்த்து ஆச்சரியப்படற மாதிரி, தமிழ்நாடு வேகமா பல புதிய சிந்தனைகளில் முன்னால் நிற்கும்!”
''சரி! படம் ஒரு ஸைடுல இருக்கட்டும்... எதனால் இந்த லட்சிய உணர்வு, பகுத்தறிவு சிந்தனைகள் போயிடுச்சுனு நீங்க நினைக்கறிங்க..?”
“மனித இயல்புக்கே உரிய ஒரு முக்கியமான உணர்வுதான் காரணம். ஏதாவது ஒண்ணை அடையறதுக்காக நாம் செய்கிற பயணத்தில், நடுவே நம்மை திருப்திப்படுத்துகிற வேறு ஏதாவது கிடைச்சுட்டா பயணத்தை அதோட நிறுத்திட்டு ‘ரிலாக்ஸ்’ ஆயிடறோம். ஆரம்பகால இந்தியாவில் இருந்த ஓர் ஒன்றுபட்ட உணர்வு இன்னிக்கு இல்லேன்னா, அதுக்குக் காரணம் இப்ப இந்தியாவுக்கு ஒரு பெரிய பொதுவான எதிரி இல்லை. இந்த சைக்காலஜிதான் தமிழ்நாட்டுலேயும் செயல்பட்டிருக்கு. இந்தப் படத்துல வர்ற காரெக்டர்களை எது 'ரிலாக்ஸ் பண்ண வெச்சுடுச்சுன்னு நான் குறிப்பிட்டுச் சொல்ல ஆரம்பிச்சிருந்தா, அது சில தனி மனிதர்கள்மேல நான் குத்தம் கண்டுபிடிக்கிற மாதிரி ஆயிடும். 'நமக்குள்ளே எரிஞ்சுக்கிட்டிருந்த ஒரு நல்ல நெருப்பு அனைஞ்சு போயிடுச்சு. அதை நாம் அப்படி அணையவிட்டிருக்கக்கூடாதுங்கற மேலெழுந்த வாரியான ஆதங்கத்தையாவது வெளிப்படுத்தலாம்னு தோணிச்சு! மத்தபடி, இன்றைய அரசியல்மேல் ஜனங்களுக்கு இருக்கிற வெறுப்பை, வியாபார நோக்கத்துக்காக விசிறி விடுகிற மாதிரி, ஒண்ணுக்கு ரெண்டா எமோஷனலா வசனங்கள் எழுதிக்கைதட்டல் வாங்கறதுக்காக இல்லை இந்த முயற்சி!"

“அது படத்தைப் பார்க்கும் போதே புரியுது... படத்தோட பின் பாதியில் சட்டசபைக் காட்சிகள் எல்லாம் வருது. அங்கேயெல்லாம் பரபரப்பா அரசியல் வசனங்கள் எழுதித் தெலுங்குப் பட ஸ்டைலிலே அரசியலை நல்லா கேலி பண்ணி இருக்க முடியும்தான்! செருப்பு பறக்கறது... வேட்டியை அவிழ்த்துப் போடறது, கட்சித் தலைவர் தனியே கூட்டாளிகளோடு சேர்ந்து ‘காபரே’ பார்க்கறது... எல்லாத்தையும் காட்டி இருக்கலாம். நீங்க செய்யலை... அதே சமயம், மணிரத்னம் ஸ்டைலில் வேறுமாதிரி வித்தியாசமாக dramatisation பண்ணியிருக்க முடியும், இல்லையா...?”
“குறிப்பிட்ட ஸீன்ல கலர்ஃபுல்லா பண்றதுக்கெல்லாம் potential இருக்கேனு நான் tempt ஆனா, சொல்ல வந்த நோக்கமே மொத்தமா கெட்டுப் போயிருக்கும். படத்தோட முடிவு என்னன்னு தெளிவா இருக்கிறபோது, அதை நோக்கித்தான் படத்தைச் செலுத்திக்கிட்டுப் போகணும்னு நான் நினைக்கிறேன்!”
“எம்.ஜி.ஆர்.ணு சொல்லப்படற அந்த காரெக்டருக்கு, நீங்க தொப்பி கூடத் தரலை! கலைஞருக்கு, அந்த வழுக்கைத் தலையும் இல்லை. ஆனா ரெண்டு பேருக்குமே... அந்த ஜாடைகள் இருக்கு! இந்தப் படம் பண்றதுக்கு முன்னாடி, இந்த ரெண்டு பேரைப் பத்தி ஏதாவது ஸ்பெஷல் ரிசர்ச் பண்ணீங்களா..?”
"இந்த ரெண்டு கேள்விக்குமே விடை ஒண்னு தான்... வேஷ அமைப்பிலும் சரி, கதையில் வர்ற விஷயங்களிலும் சரி... அந்த அளவுக்கு நான் ரொம்ப ‘டீப்’பா போகவேண்டிய அவசியம் ஏற்படலை. அந்த இரண்டு பேருடைய சாயலை மட்டும் உணர்வுகளை மட்டும் நான் எடுத்துக்கிட்டேன் என்பதுதான் உண்மை! மூளையையும் தன் எழுத்தையும் ஆயுதமாகக் கொண்டே ஒரு மனிதன்.... இதயத்தையும் ‘எமோஷன்’களையும் மட்டுமே சொத்தாக எடுத்துக் கொண்ட ஒரு மனிதன்! ‘என்னோட எழுத்தால் நான் இந்தச் சமுதாயத்தை மாற்றுவேன்’னு ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவை ஆரம்பத்துல் அந்த எழுத்தாளன் சொல்றான். ஆனா, நடிகனா வர்றதுதான் தன் லட்சியம்னு முடிவோட வர்றான் இன்னொரு மனிதன். அதனால்தான், எழுத்தாளனைப் பார்த்து, நடிகன் ரொம்ப பிராக்டிகலா கேக்கறான் - 'நீ நாலு நாள் சாப்பிடாம இருந்திருக்கியா? உனக்கு வீட்ல வயிறு நிறைய சோறு கிடைக்கறதுனாலதான் அரசியல் அது, இது பேசறே‘னு! கூர்ந்து கவனிச்சா இதயத்தையே பிரதானமா கொண்ட இந்த நடிகன் எழுத்தாளனைப் போல் அவ்வளவு ‘ஷார்ப்’பா தன்னைச் சுத்தி நடக்கற விஷயங்களைக் கூடக் கவனிக்காம இருக்கான். அந்தந்த நேரத்து ‘எமோஷன்ஸ்'தான் அவனை வழிநடத்திக் கொண்டு போகுது!"
“ஆனா, வெளியில ஒரு விமரிசனம் இருக்கு... எழுத்தாளனாவர்ற அந்த காரெக்டர் சாதாரணமா பேசும்போதுகூடச் செந்தமிழில், அடுக்குமொழியில்தான் பேசியிருக்கணுமா..? ஒரு கட்டத்துல, அடுக்கு மொழித்தமிழை நீங்க கிண்டல் பண்றீங்களோனுகூட...?!”
"நோ.... நோ....! செந்தமிழ்ல ஒரு தனி அழகு அதுக்குன்னு இருக்கு. ஒரு பவர் இருக்கு! கவிதைத்தனமான அழகிய தமிழுக்கு உள்ள மவுசு எப்பவும் மாறாது. வீட்டுல என் அஞ்சு வயசு பையனே படத்தைப் பார்த்துட்டு, 'உடல் மண்ணுக்கு’னு டயலாக் பேசிக்கிட்டிருக்கான்' சிறிது நேர அமைதிக்குப் பின், முக்கியமான அந்தக் கேள்வியை மணிரத்னம் முன்வைத்தேன்...

"முக்கியமான இரண்டு, மூன்று ஸீன்களில், வசனம் நடுவில் ‘கட்’ ஆயிட்டுத் ‘திமுதிமு’னு டிரம்ஸ் ஒசைதான் கேட்குது! ஆக்சுவலா அங்கே என்ன வசனம் வருது...? ஏன் வசனம் ‘கட்’ ஆயிடுச்சு...? சென்ஸார்லதான் வெட்டச் சொன்னதாகவும் நீங்ககூட ‘அப்செட்‘னும் கேள்விப்பட்டேன்... அது உண்மைன்னா, நீங்க எதிர்த்து ஃபைட் பண்ணலையா....?”
அதுவரையில் மிக ரிலாக்ஸ்டாக இருந்த மணிரத்னத்தின் முகம் இறுகிப் போய்விடுகிறது! கண்கள் சுருங்குகின்றன. குரலில் கொஞ்சம் கொஞ்சமாகக் கோபம் தலைகாட்ட ஆரம்பிக்கிறது! “ஸாரி! அதுக்கு நீங்க என்னைக்குற்றம் சொல்ல முடியாது. சென்ஸார்காரங்களைத்தான் கேட்கணும். அவங்களை எதிர்த்துப் போராடறதுக்கு நான் ஒண்ணும் சினிமாவில் வர்ற ஹீரோ கிடையாது. இவங்கதான் இதுக்கு அத்தாரிட்டினு சட்டம் யாரைச் சொல்லுதோ, அவங்களுக்குக் கட்டுப்பட்டுப் போறதை நான் அவமானாமா நினைக்கலை. ‘ரோட்டுல நீ இடது பக்கமாதான் போகணும்‘னு சட்டம் சொன்னா, எதிர்க்கேள்வி கேக்காம இடதுபக்கமா ரகம்தான் நான்... 'வலது பக்கம்தான் போவேன்'னு அடம்பிடிச்சு, போலீஸ்காரரோட சண்டை போடறது முட்டாள்தனம்!
"பின் எங்கே பிரச்னை வந்தது?"
‘இருவர்’ படத்தில் இருக்கிற வசனங்களை ‘கட்' பண்ணும்படி சென்ஸாரே சொல்லியிருந்தா, இங்கே பிரச்னைக்கு இடம் இல்லை. ஆனா. பட விஷயத்துல சட்டத்தை மீறிய - சட்டத்துக்குப் புறம்பான விஷயங்கள். நடந்திருக்கு! சென்ஸார் என்பது, எந்தவிதமான அரசுக்கும் கட்டுப்பட்ட அமைப்பு இல்லை. ஒரு படத்தைப் பார்த்து, ‘இதில் மக்கள் பார்க்க எதையெல்லாம் அனுமதிக்கலாம்?’னு சுதந்திரமா, தன்னம்பிக்கையோடு முடிவு செய்யவேண்டிய அமைப்பு தான் சென்ஸார். அதன் முடிவை நான் ஏத்துக்கத் தயார். ஆனால் ‘இருவர்’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘அதில் வரும் விஷயங்களில் எதையெல்லாம் அனுமதிக்கலாம்... எதையெல்லாம் வெட்டலாம்...?’ என்கிற முடிவை எடுக்கவே சென்ஸார் அதிகாரிகள் தயாராக இல்லை. அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிற தைரியமும் இல்லை.
“பயந்தாங்கொள்ளித்தனம் என்கிறீர்கள்?!"
"சந்தேகமேயில்லை! இந்த விஷயத்தில் முதுகெலும்பு இல்லாத பயந்தாங்கொள்ளிகளாக நடந்து கொண்டார்கள். அதுதான் உண்மை! உனக்குப் பிடிக்கவில்லையா...? படத்துக்குத் தடைபோடு... நான் கோர்ட்டுக்குப் போய் வழக்கு போட்டுக் கொள்கிறேன். உனக்குப் பிடிக்கவில்லையா...? ‘வேண்டாம்’ என்கிற காட்சிகளை, வசனங்களை வெட்டித் தள்ளு. நான் போராடுகிற வழியில் போராடிக்கொள்கிறேன். அதை விட்டுவிட்டு, என் படத்தைப் பார்த்து ‘ஓகே’ பண்ணுகிற வேலையை ஏன் அரசியல் வாதிகளிடம் ஒப்படைக்கிறாய்...? உனக்கு, உன் பதவியைக் காப்பாற்றிக் கொள்கிற பயம் இருக்கிறது என்பதற்காக... என்னை ‘வராண்டாவில்’ நிற்க வைத்துவிட்டு இறுதி முடிவெடுக்கிற பொறுப்பை ஓடிப்போய் அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, ஏன் என்னை வேதனைப்படுத்துகிறாய்...?” - படபடக்கிறார் மணிரத்னம்!
வார்த்தைகளை அளந்து பேசுகிறவர், ரிசர்வ்டு டைப், உணர்ச்சிகளை வெளியே காட்டிக் கொள்ளாதவர், என்றெல்லாம் பெயர் எடுத்துள்ள மணிரத்னத்தினால் கூட உடனடியாகப் பேச்சைத் தொடர முடியவில்லை. பார்வை தீர்க்கமாக வேறு எங்கோ சஞ்சரிக்கிறது. சிறிது நேர அமைதிக்குப் பிறகு, உள்ளே கொந்தளிக்கும் கோபத்தோடு வார்த்தைகள் தகிப்புடன் வெளிவருகிறது.!
“‘இருவர்’ சம்பந்தமாக உங்களுக்கும் சென்ஸாருக்கும் இடையே என்னதான் நடந்தது என்பதை விகடன் வாசகர்களுக்காகக் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா...? பொறுப்பில்லாமல் அப்படி நீங்கள் என்ன வசனம் எழுதிவிட்டீர்கள்...? என்ன ஆட்சேபனை தெரிவித்தார்கள்...?”
“ஆட்சேபகரமான எந்த வசனமோ, காட்சியோ அதில் இல்லை என்பதுதான் உண்மை. இந்தச் சமுதாயம் பற்றி சென்ஸாருக்கு இருக்கிற அதே கவலையும் பொறுப்பும் எனக்கும் இருக்கிறது. சென்ஸார் அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளைச் சந்தோஷப்படுத்த வேண்டியிருந்தது.... அதற்கு என் படம் அகப்பட்டது, அவ்வளவுதான்! முதலில், படத்தை எக்ஸாமினிங் கமிட்டி பார்த்தது. ‘இந்தப் படத்தை ஒட்டுமொத்தமாக ரிலீஸ் செய்யவே முடியாது...' என்று சொல்லிவிட்டார்கள்! ‘ரிவைஸிங் கமிட்டி'யிடம் அப்பீலுக்குப் போனேன். ரீஜினல் ஆபீஸரும் வேறு எட்டு உறுப்பினர்களும் பார்த்தார்கள்... நான்கு இடங்களில் ‘கட்’ பண்ணச் சொன்னார்கள். வெட்டும்படி அவர்கள் சொன்னது சின்னச் சின்ன விஷயங்கள்தான்... அவர்கள் சொன்னபடியே காட்சிகளை நீக்கிப் படத்தைக் கொடுத்தோம். ரிவைஸிங் கமிட்டியினர் படத்தை ‘க்ளியர்’ செய்துவிட்டார்கள். சென்ஸார் சேர்மனிடமிருந்து சர்டிபிகேட் வர வேண்டியதுதான் பாக்கி... அடுத்த இருபத்துநாலு மணி நேரத்துக்குள் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. என் படம், தமிழ்நாடு அரசாங்கத்தின் பார்வைக்கு உள்துறை இலாகாவின் பார்வைக்கு அனுப்பப்படுவதாகத் தெரிவித்தார்கள். அனுப்பவும் செய்தார்கள்! அதற்கப்புறம் வேறு இரண்டு, மூன்று இடங்களில் ‘கட்’ பண்ணச் சொன்னது சென்ஸார்!
"பம்பாய்' படத்திலும் என் வருத்தம் அதுதான்... தங்களுக்கு இருக்கிற பொறுப்பைத்தட்டிக் கழித்து விலகிக் கொள்கிற மனோபாவத்தில்தான் பம்பாய் சென்ஸார் அதிகாரிகளும் நடந்து கொண்டார்கள். படத்தை மக்கள் பார்ப்பதற்கு முன்பாகாவே, மகாராஷ்டிரத்தில் ஆளும் அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கும் நான் எதிர்த்துப் போராட விரும்பாததற்குக் காரணம், உடனே நான் மகாராஷ்டிர அரசாங்கத்துக்கு எதிரானவன் என்று முத்திரை விழுந்து, தேவையில்லாமல் படத்துக்கு ஒரு கலர்' வந்துவிடும் என்பதுதான்..."

"அரசாங்கம் என்றால், படத்தை யார் பார்த்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா..? இது ‘ஆஃப் தி ரெக்கார்டாக’ உங்களுக்குக் கிடைத்த தகவலா அல்லது உறுதியான விஷயம்தானா...?"
“தமிழக அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு ‘இருவர்’படம் அனுப்பி வைக்கப்பட்டது என்று சென்ஸார் அதிகாரிகளே என்னிடம் சொன்னார்கள். அங்கே கொண்டு போய்ப்படத்தைப் போட்டுக் காட்டிய பிறகுதான் சென்ஸார் சேர்மனிடமிருந்து சர்டிபிகேட்“
பேசாமல் இவர்கள் ‘சென்சார்’ என்கிற அமைப்பை மூடிவிட்டு, மாநிலங்களை ஆளுகின்ற அரசாங்கங்களிடம் பங்களைப் பார்த்து 'ஓகே'பண்ணுகிற வேலையைக் கொடுத்து விடலாம்!
வழங்கப்படும் என்பது எங்களுக்குத் தெளிவாகச் சொல்லப்பட்டது. நான் அரசாங்கத்தையோ சென்ஸாரையோ எதிர்த்துக் குரல் எழுப்ப விரும்பவில்லை. படம் வருவதற்கு முன்பே ‘கருணாநிதி - எம்.ஜி.ஆர்.’என்று பேச்சு கிளம்பிவிட்ட நிலையில், ‘ஆளுங்கட்சியை எதிர்த்துத்தான் நான் இந்தப் படம் எடுத்திருக்கிறேன். அதனால்தான் அவர்களுக்குப் போட்டுக் காட்ட மறுக்கிறேன்...' என்று வீண்பேச்சு கிளம்பியிருக்கும்! பிறகு கோர்ட், கேஸ் என்று போய்ப்படம் முடக்கப்பட்டிருக்கும். ஒட்டுமொத்தத்தில், படம் மக்கள் பார்வைக்கு வராமல் போயிருக்கும். அல்லது ‘அரசுக்கு எதிரான படம்’என்ற கலருடன் வந்து, ஒருதலைப்பட்சமாகவே படம் பார்க்கப்பட்டிருக்கும்! எனக்கு அதில் விருப்பமில்லை. அந்த நோக்கமும் கிடையாது!"
“கலைத்துறையிலிருந்து வந்தவர் முதல்வர். உங்கள் படத்தை அவர் புரிந்து கொண்டு ரசித்துக்கூட இருக்கலாம். ஒருவகையில் சென்ஸார் படத்தை அரசுக்கு எடுத்துப்போனது அரசாங்கத்தையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடுமோ..! சரி, அரசாங்கத்திலிருந்து ‘கட்’செய்யச் சொன்ன ‘ஸீன்’ என்ன..?”
"இது சென்ஸார் அதிகாரிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஒரு பக்கம் ‘தேர்தல் கமிஷன் சுயமாகச் செயல்படுகிறது... கோர்ட்டுகள் முழு வேகத்துடன் நீதியை நிலைநாட்டுகின்றன...’ என்றெல்லாம் உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர, சென்ஸார் போன்ற அமைப்புகளுக்கு இன்னும் அந்தப் பழைய மனோபாவம் மாறவில்லை. ‘இருவர்’ படம் எடுத்ததன் மூலம், நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம் இதுதான்! சினிமாவைக் கஷ்டப்பட்டு எடுத்துவிட்டு, ஏதோ கொலைக் குற்றவாளி மாதிரி இவர்களிடம் சிக்கி அல்லல்படுவது தேவைதானா..? பேசாமல் இவர்கள் சென்ஸார் ' என்கிற அமைப்பை மூடிவிட்டு, மாநிலங்களை ஆளுகின்ற அரசாங்கங்களிடம் படங்களைப் பார்த்து ‘ஓகே’ பண்ணுகிற வேலையைக் கொடுத்து விடலாம்!”
“முதல்வர் இந்தப் படத்தைப் பார்த்தாரா இல்லையா?”
"தெரியாது.”
“ஸோ... நீங்க என்ன தான் வேணாம்னு சொன்னாலும் notoriety, சர்ச்சைகள் உங்க மேலே திணிக்கப்படுது, இல்லையா...?”
“ஆமாம்! இது ரொம்ப வேதனையான விஷயம்... இந்த மாதிரி சர்ச்சைகள் ஒருபோதும் ஒரு மனிதன் வளருவதற்கு உதவுவதே இல்லை. நான், மக்கள் ரசிக்கவும் அவர்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு வழங்குவதற்காகவும் சினிமா தயாரிக்க மட்டுமே விரும்புகிறேன்!”

"படத்தில் மோகன்லால் நடிப்பு அற்புதமாக வந்திருக்கு அடிப்படையில், மலையாள நடிகரான அவரை எப்படி இந்த காரெக்டர்ல இவ்வளவு பிரமாதமா நடிக்க வெச்சீங்க..?”
“மோகன்லால் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லணும்னா, He has amazing talent! அதுமட்டுமில்லே... He is very easy to work with.... அவர் ரொம் ஓப்பனாவும் இருந்தார். ‘என்ன வேணும்.... எப்படி நடிக்கணும்... இது போதுமா?’னு கேட்டுக் கேட்டுச் செய்யறாரு அவர்!”
"அவரை ஏன் இந்த ரோலுக்குத் தேர்ந்தெடுத்தீங்க?"
“சினிமாவைப் பொறுத்தவரை, ‘இந்த காரெக்டருக்கு இந்த நடிகரைப் போட வேண்டும்...’ என்று சரியான தேர்வு செய்யும்போதே பாதி வெற்றி கிடைத்துவிடுகிறது என்று நான் நினைக்கிறேன். அதனால்தான், படத்தின் உயிர்நாடியான அந்த இரண்டு காரெக்டர்களையும் தேர்வு செய்வதற்கு, நான் ஏகப்பட்ட சிரமங்கள் எடுக்க வேண்டி வந்தது. இன்ன நடிகர், இதற்குப் பொருந்துவார் என்று மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது மட்டும் போதாது... முக அமைப்பு தவிர, மனரீதியாக - இயற்கையான உடல் அசைவுகளில் இவர் எப்படி அந்த காரெக்டரை 'ரிஃப்ளெக்ட்’ செய்வார் என்று நான் பார்ப்பேன். அதனால்தான் இளம்வயதில், நடுவயதில், முதுமையில் என்று மூன்று காலங்களுக்குமே பொருந்தக்கூடிய அசைவுகளுடன் இருந்த பிரகாஷ்ராஜையும் மோகன்லாலையும் நான் ஏகப்பட்ட யோசனைக்குப் பிறகு தேர்ந்தெடுத்தேன். அந்த வகையில், ரெண்டு பேருமே ‘கரெக்ட் சாய்ஸ்’ என்றுதான் படம் முடிந்து பார்த்த பிறகு திருப்தியாக உணர்ந்தேன்!"
"ஆமாம்... இந்தப்படம் எடுப்பதற்கு முன் நிறைய முறை நடிகர்களை நீங்கள் ஒப்பந்தம் செய்து, ஷூட்டிங் ஆரம்பித்து, கடைசி நிமிடத்தில் மாற்றியதாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன... மற்றவர்களை மதிக்காத ஒருவித Arrogance உங்களுக்கு வந்துவிட்டது என்றும் பேச்சு?!”
"நல்லவேளை! கேட்டீர்கள்.... அது சம்பந்தமாக வெளிவந்த தகவல்கள் தவறானவை. சில நடிகர்களை அழைத்தேன்... பேசினேன்... மேக்கப் டெஸ்ட் பார்த்தேன்... ஆனால், ஒருத்தரைக்கூட காமிரா முன் நிறுத்தி, ஒரு காட்சியாவது எடுத்த பிறகு கான்சல் செய்தேன் என்று சொல்ல முடியுமா? ஒரு டைரக்டர் என்ற முறையில், எனக்கு வேண்டிய அம்சங்கள் பொருந்திய நடிகரைத் தேடுவது என் கடமை. என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து, அதற்கு உட்பட்டு நடிக்க முடிந்தால் மட்டுமே, நான் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். அப்படிச் சரிப்பட்டு வந்தவர்கள்தான் பிரகாஷ்ராஜும் மோகன்லாலும்! அதே மாதிரி, ஐஸ்வர்யாராய்... அவங்களுக்குச் சுத்தமா தமிழ் தெரியாது. முதல் படமே இதுதான்! ஆனா, நான் நினைச்சதையெல்லாம் விட ரொம்ப ‘மெச்சூர்டு’ ஆக, எதையுமே ‘சட்’டுனு புரிஞ்சுக்கிட்டு நடிச்சாங்க! அவங்க ரொம்ப நல்லா வருவாங்கனு எனக்குத் தோணுது..."

“ஐஸ்வர்யாராய் காரெக்டர் ஜெயலலிதாவைக் குறிக்கிறதா...? அந்த காரெக்டர் கடைசியில கார் ஆக்ஸிடெண்ட்ல மாட்டிடுது.... பாடிகூடக் கிடைக்கலேங்கிற மாதிரி சொல்றிங்க...? எல்லாமே ஓரளவு உண்மையை ஒட்டிய சம்பவங்களைக் கொண்டு போனபோது... இது மட்டும் ஏன் இப்படி..?”
(பெரிதாகச் சிரிக்கிறார்.) "எல்லாத்தையுமே படத்தில் க்ளியர், க்ளியரா வெச்சுடணும்னு நான் நினைக்கலே... இது நடந்தது. அதன்பின் இது நடந்தது.... என்று சம்பவங்களுக்கு ஒரு லேசான தொடர்ச்சி கொடுக்க வேண்டி இருந்ததே தவிர, ஒவ்வொன்றையும் ரொம்பத் தெளிவாகக் கடைசிவரை கொண்டு போய், ஒவ்வொரு காரெக்டரும் இப்படித்தான் ஆனது என்று காரண காரியங்களுடன் சொல்லி முடிப்பது ஆகிற காரியமா...? சினிமாவில் சில லிபர்ட்டிஸ் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது"
“மியூஸிக் பற்றிச் சொல்லுங்களேன்..."
"நான், ஏ.ஆர்.ரஹ்மான் ... வைரமுத்து - மூன்று பேரும் முதலிலேயே உட்கார்ந்து, இந்தப்படத்தின் இசைக்கான Strategy-யைத் தெளிவாக முடிவு செய்து கொண்டோம். ‘1940-ம் வருடக்காலத்து சினிமா பாடலின் ஸ்டைலில் ஒரு பாடல், 1950 ஸ்டைலில் ஒன்று, 1960ல், 1970ல்...’ என்று ஒரு decade-க்கு ஒரு பாட்டு represent செய்கிற மாதிரி வைத்துக் கொண்டோம். அந்தக் காலத்து கட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட இசைக்கருவிகளைப் பயன்படுத்தலாம் அல்லது ட்யூன்களை அந்தக் காலத்து ஸ்டைலில் வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால், பாடலின் வார்த்தைகளை அந்தக்கால ஸ்டைலில் அமைத்துக் கொள்ளலாம்.
இந்த representation-ஐ மக்கள் லேசாக உணர்ந்து கொண்டால்போதுமானது என்று செய்தோம். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போதுகூடக் கொஞ்சம் நினைத்திருந்தால், அந்தந்தக் காலகட்டத்தில் வந்த படங்களைப் பார்க்கிற உணர்வையேகூட அச்சாக ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் இன்றைய ஆடியன்ஸை உட்கார வைக்க வேண்டுமானால், அந்த அளவுக்குப் போவது சரியாக இருக்காது என்றுதான் காலத்தின் சாயல் மட்டும் தெரியும்படி பாடல் காட்சிகளை எடுத்தோம்!
பாடல் காட்சிகளைவிட ரொம்பக் கஷ்டப்பட்டது என்றால், படத்தின் பல இடங்களில் வருகிற ஜனத்திரளைக் காட்டுவதுதான்! இதற்கு முன்பேகூட நிறையப் படங்களில் பெரிய கூட்டத்தைத் திரட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், கூர்ந்து கவனித்தால் இந்தப் படத்தில் கூட்டம் முழுவதும் சம்பந்தப்பட்ட காட்சிக்குக் கட்டுப்பட்டு கரெக்டாக ‘ரியாக்ட்’ செய்யும்! பல ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டுவதைவிட, அவர்கள் அத்தனை பேரையும் ஒன்றேபோல் அசைவுகள் காட்ட வைக்கப்பட்டது தான் பெரிய கஷ்டம்! ப்ராக்டிக்கலாகச் செய்து பார்க்கிறபோதுதான் கஷ்டம் தெரியும்!”
“அடுத்த ப்ராஜெக்ட் முடிவு பண்ணிவிட்டீர்காள...? மணிரத்னத்திடமிருந்து பிரமாண்டமான ஒரு சரித்திரப் படைப்பை எதிர்பார்க்கலாமா..?”
“உலக அளவில் திரைப்படங்களில் ஸ்டாண்டர்டுக்கும் நமக்கும் ஏகப்பட்ட இடைவெளி இருக்கிறது. சரித்திர சப்ஜெக்ட்டை விடவும் சினிமா ஆக்கப்பட வேண்டிய சப்ஜெக்ட்டுகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. சரித்திரப் படம் என்றால், அது என்னைப் பொறுத்தவரை ‘பொன்னியின் செல்வன்’தான்! அந்தக் காலத்திலேயே சினிமாவுக்காகவே திட்டமிட்டு எழுதப்பட்ட கதையோ என்றுகூட எனக்கு ஒரு திகைப்பு உண்டு.
‘நாயகன்’ படம் எடுத்து முடித்ததுமே, ‘பொன்னியின் செல்வன்’ எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் கமலும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். ஓரளவு ‘ஸ்கிரிப்ட் வொர்க்’கூடத் தயார் பண்ணி வைத்தேன்.
ஆனால், பத்து வருடத்துக்கு முன்னால் நான் பட்ட ஆசை அது. அதற்கப்புறம் நான் பல பரிமாணங்களைப் பார்த்துவிட்ட நிலையில் - எடுத்தா இன்னும் பிரமாண்டமா, இன்னும் பிரமிப்பு உண்டாக்குகிற வகையில் இருக்கணும்னு என் கற்பனை விரிஞ்சுக்கிட்டே போகுது! அது எப்படி, எப்போ என்னால முடியும்னு தோணலை... அதே சமயம், மணிரத்னம் படம்னா இப்படித்தான் இருக்கும்னு ஏதாவது ஒரு வரையறைக்குள் போய் மாட்டவும் நான் விரும்பலே...”
“ரொம்ப எச்சரிக்கை உணர்வோடு அதுல மாட்டாம, கஷ்டப்பட்டுத் தப்பிச்சுத் தப்பிச்சு வந்துக்கிட்டிருக்கீங்களா?!”
“வெரி ட்ரூ!” பயப்படுவதுபோல் நடித்துச் சிரிக்கிறார் மணிரத்னம்.
- மதன்
தொகுப்பு - கே. அசோகன்
(02.02.1997, 09.02.1997, 16.02.1997 ஆகிய தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிகளிலிருந்து...)