
``பொறுமையா பார்க்க முடியலேன்னா அதை ஆர்ட் படம்னு முத்திரை குத்திடறாங்க.!
மனம் திறக்கிறார் மணிரத்னம்...
நடுத்தர வயது. படு காசுவலாக வேட்டி, காட்டன் சட்டையில்...- இதுதான் 'புதுமுக' டைரக்டர் மணிரத்னம்.
உடையில்தான் எளிமை என்றில்லை; பேச்சிலும் வெகு எளிமை. கொஞ்சம் சிக்கனமும் கூட!

''படமெடுக்கணும்கற எண்ணம் எப்படி வந்தது? வீனஸ் ஸ்டூடியோ ரத்னமய்யர் உங்க அப்பா என்பதாலா?''
''நிச்சயமா அந்தக் காரணத்தினால் இல்லே. எல்லா வீடுகளைப் போலவும், 'என் துறை உனக்கு வேண்டாம்'கற டைப் தான் எங்க அப்பாவும். அவர் இஷ்டப்படியே என்னை ஒரு எம்.பி.ஏ. பட்டதாரியா ஆக்கினார். என்னைப் பொறுத்தவரை ஒரு கம்பெனிக்கு டைரக்டரா இருக்கறதைவிடவும் ஒரு சினிமாவுக்கு டைரக்டரா இருக்கறது சுலபம்னு தெரிஞ்சுது! அதனால படமெடுக்க வந்தேன்'' என்றார்.
தான் அமெரிக்கா சென்று ஃபிலிம் டெக்னாலஜி பற்றிப் படித்ததாகக் கூறப்படுவதை 'வதந்தி' என்று மறுத்தார்.
''முதல் படம் 'பகல் நிலவு' தானே?''
''அது தமிழில் முதல் படம். நான் எடுத்த முதல் படம், கன்னடத்துல 'பல்லவி, அனுபல்லவி'ன்னு. அதுல லட்சுமி, அனில்கபூர், விஷ்ணுவர்த்தன் லாம் நடிச்சாங்க. அது 'ஏ அண்ட் பி சென்ட்டர்'ல நல்லா ஓடிச்சு. இரண்டாவது 'உணரு'னு ஒரு மலையாளப் படம். அது கொஞ்சம் பொலிடிகலா, தொழிற்சங்கம் சம்பந்தப்பட்ட படம். சுமாரா ஓடிச்சு. அதுக்கப்புறம்தான் 'பகல் நிலவு', 'இதயக் கோயில்', 'மௌன ராகம்'னு தமிழ்ல மூணு படங்கள் செய்திருக்கேன்!''

''இதயக் கோயில் அவ்வளவா எடுபடாததுக்கு என்ன காரணம்?''
''இதயக் கோயில் என்னோட ஸ்கிரிப்டே இல்லை. இந்த இந்த மாதிரி எடுக்கணும்னு அதன் தயாரிப்பாளர்களே ஒரு ஐடியா போட்டுக் கொடுத்திருந்தாங்க. அதுபோல எடுத்துக் கொடுத்தேன்; அவ்வளவுதான்! எனக்கே அதுல திருப்தியில்லே.''
''நடிக நடிகையரின் எண்ணங்களுக்கும் வாய்ப்பு கொடுப்பீங்களா?''
''அவங்களோட ஒத்துழைப்பு இருந்தாத்தானே படம் நல்லா வரும்! அதனால ஒவ்வொரு டேக் எடுத்ததும் குறிப்பிட்ட ஆர்ட்டிஸ்ட்கிட்டே திருப்தியான்னு கேட்டுத்தான் மேலே தொடருவேன். ஆனா, என் ஸ்கிரிப்ட்டை மாத்தச் சொல்லி எந்த ஆர்ட்டிஸ்ட்டும் கேட்ட அனுபவம் எனக்கில்லை!''

''மௌன ராகத்தின் க்ளைமாக்ஸில் மோகன் ரயிலைத் துரத்திப் பிடித்து, செயினை இழுத்து, ரேவதியை அலேக்காகத் தூக்கிக் கொண்டு இறங்கும் மசாலா டைப் முடிவு தேவையா?''
''அந்த க்ளைமாக்ஸ் அப்படி எடுத்திருக்கலேன்னா, 'என்ன, சப்புனு முடிச்சுட்டீங்களே'னு ஜனங்க கேட்கலாங்கறதால அப்படி எடுத்தோம். இன்னொண்ணு, அந்த இருட்டு டான்ஸ்! ஏதாவது வித்தியாசமான பரிசோதனை பண்ணணும்னு தோணிச்சு. அதனால ரொம்ப கலர் இல்லாம, நல்ல டார்க் ப்ளூ, கறுப்பு வச்சு, 'மோனோடோன்' டைப்ல செய்தோம்.''
இன்றைய திரையுலகத் தரம் பற்றிக் கேட்டபோது...
''நிறைய படங்கள் வருது. அந்தக் கும்பல்ல சில சமயம் நல்லதும் வருது; சில சமயம் நல்லா இல்லாததும் வருது!'' என்றார்.''அவார்ட் படங்கள் பல, உட்கார்ந்து பார்க்கமுடியாத அளவு இருக்கும். முன்னாடி ஆர்ட் படத்துக்குன்னு ஒரு தராதரம் இருந்தது. இப்ப அப்படியில்லே.
எதை வேணா எடுத்திட்டு, பொறுமையா பார்க்க முடியலேன்னா அதை ஆர்ட் படம்னு முத்திரை குத்திடறாங்க.. என்றார் மணிரத்னம்.