அத்தியாயம் 1
Published:Updated:

மணிரத்ன யுகம்

Maniratnam's exclusive interview
பிரீமியம் ஸ்டோரி
News
Maniratnam's exclusive interview

`தளபதி' படத்தோட விமர்சனத்துக்கு செம்ம டென்ஷனா பேசியிருக்கார் மணிரத்னம்!

மணிரத்னத்துடன் பேட்டி என்றவுடன், ‘சிரமமான வேலையாயிற்றே. ரொம்ப ‘மூடி’ டைப்... பதிலே வராது!’ என்றனர் சிலர். 'ஆம்/இல்லை... என்கிற ரீதியில் கேள்வித்தாள் எடுத்துக்கொண்டு போனால் மகிழ்ச்சியாக  செய்து அனுப்பிவிடுவார்’ என்றும் ஒரு யோசனை!

உண்மையில மக்களுக்கு நல்ல ரசனை இருக்கு..! அவங்களைப் பொறுத்தவரையில் நல்லதா கெட்டதான் ரெண்டே பிரிவுதான்! நீங்க எதையும் கொடுக்கலாம். ஆனால் நல்லா, அழுத்தமா கொடுக்கணும்.

மொத்தத்தில், கவலை பிடித்துக் கொண்டுவிட்டது. ஒரேயடியாக ஐந்து நிமிஷத்தில் பேட்டி முடிந்துவிட்டால்..?

நல்லகாலமாக மணிரத்னம் ஒண்ணரை மணி நேரம் நம்மோடு 'ரிலாக்ஸ்'டாகப் பேசினார். உரையாடினார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அவராக ரொம்பப் பேசுகிறவர் இல்லைதான். அதற்கு ரொம்பப் பழகவேண்டும் போல!

மற்றபடி மணிரத்னம் தன் ‘எனர்ஜி’யையெல்லாம் சினிமாவுக்கு மட்டுமே ஒதுக்குகிற டைப்... ஒரு ப்ராஜெக்ட் முடிந்தவுடன் அடுத்தது. என்று அதிலேயே சிந்தனை... மிச்ச நேரம் - சொந்த, தனிப்பட்ட வாழ்க்கைக்கு! பேச்சு, பேட்டி...

எல்லாம் தனக்கு இருக்கும் நேரத்தைக் குறைக்கிற, சிந்தனையைத் திசைதிருப்புகிற விஷயங்கள்... சினிமாவில் மட்டும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தால் போதும் என்று நினைக்கிற ரகம் மணிரத்னம்...

அப்படி சினிமாவில் இந்த மனிதர் பதித்திருக்கும் முத்திரை தான் எவ்வளவு செமத்தியானது!

இயக்குநர் மணிரத்னத்தை ஆழ்வார்பேட்டை அருகில் உள்ள அவரது புதிய காரியாலயத்தில் சந்தித்தோம். ரொம்பப் புதுசாகப் போயிருக்கிறார். ஒரு அறையில் டேபிள், நாற்காலி தவிர மற்றபடி சோபா, பாய்விரிப்பு, படங்கள், ஷீல்டு என்று எதுவும் இல்லாமல் ரூமெல்லாம் வெறிச்சென்றிருந்தது.

Maniratnam's exclusive interview
Maniratnam's exclusive interview

மாடியில் ஒரு அறையில் திண்டுகளிலிருந்து எழுந்து வந்து வரவேற்றார் மணிரத்னம். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கேட்டிங் மாதிரி 'மிடுக்’கென்று உடற்கட்டு. சிலர் சொல்வதைப் போல முகத்தில் கூச்சமெல்லாம் ஒன்றும் காணப்படவில்லை! ஆனால் சிம்பிளான - காம்ப்ளெக்ஸ், பந்தா எதுவும் இல்லாத தீர்க்கமான மனிதர் என்பது பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் புரிந்துவிடுகிறது!

‘பேகி'யாக காட்டன் சட்டை, மென்மையான மூக்குக்கண்ணாடி (லாங் சைட்... வடிார்ட் சைட்... அல்லது ரெண்டுமே இல்லாமல் சும்மாவா..?!), வாரிக்கொள்ளாத - லேசான இளநரையுடன் கூடிய கிராப்! அடுத்த படம் சம்பந்தமாக பென்சிலால் ஒன், டூ, த்ரீ... போட்டு, வரிசையாகக் குறிப்புகள் எழுதியிருந்த (மணியான எழுத்துக்கள்!) நோட்டுப் புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு, ‘பேட்டிக்குத் தயார்...' என்பதைப் போல நம்மைக் கூர்மையாகப் பார்த்தார் மணிரத்னம்.எந்தக் கேள்வி கேட்டாலும் மின்னல் வேகத்தில் சிந்திக்கிறார் மணிரத்னம். பதில்களும் 'டக்.டக்...'கென்று வந்தது. சற்றுக் கோபமாகப் பதில் சொல்லும்போதெல்லாம் மூக்கு லேசாக விரிந்து அடங்குகிறது..!

மதன்: “உங்க ‘ரோஜா’ பார்த்தேன்... வித்தியாச சப்ஜெக்ட்ல முயற்சி பண்ணியிருந்தீங்க... உங்ககிட்டே ஒரு முக்கிய விஷயம்... நீங்க ‘போர்’ மட்டும் அடிக்கறதேயில்லே... அதுல ரொம்ப கவனமா இருக்கீங்க...

மணி: "தாங்க்ஸ். 'ரோஜா’ எனக்குத் திருப்திகரமா அமைஞ்ச படம்...

மதன்: “தமிழ் சினிமாவுல... ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா மாதிரி மணிரத்னம் பீரியட்னு ஒரு ட்ரண்ட் ‘செட்’ ஆயிருக்குன்னு நினைக்கிறேன். இப்ப நிறைய பேர் உங்களைப் பின்பற்றி, உங்க ‘டைப்’ல எடுக்கறாங்க... ஆனா, தங்களுக்குன்னு ஒரு தனித்தன்மையை உருவாக்கிக்க மறந்துடறதால ரொம்ப சீக்கிரம் தோல்வியடையவும் செய்றாங்க!”

மணி:"சில பேர்தான் அப்படி... நிறைய இளைஞர்கள் நல்லா வந்துக்கிட்டிருக்காங்க... வருவாங்க. சந்தேகமே வேணாம்!”

மதன்: “டைரக்டர் என்கிற முறையிலே உங்க அணுகுமுறை எப்படி? ஆர்ட்டிஸ்ட்டுக்கு நடிச்சுக்காட்டி வேலை வாங்குவீங்களா? அவங்களை நடிக்கச் சொல்லிட்டு 'பாலீஷ்' பண்ணுவீங்களா?”

மணி:“சில பேருக்குச் சூழ்நிலை என்னன்னு சொல்லிட்டாலே போதும்... நான் என்ன எதிர்பார்க்கிறேன்னு சரியா புரிஞ்சுக்கிட்டு அவங்களாவே நடிச்சுடுவாங்க இன்னும் சில பேர் கிட்டே காட்சியைப் பத்திக் கொஞ்சம் விளக்கிப் பேசவேண்டியிருக்கும். சிலர் காட்சியைச் சொன்னதுமே வெவ்வேறு விதமா செய்து காட்டி ‘எது வேணுமோ அதை எடுத்துக்குங்கன்னு சொல்வாங்க, கமல் மாதிரி. நானே நடிச்சுக் காட்டற சந்தர்ப்பமெல்லாம் எப்பவோ தான் ஏற்பட்டிருக்கு! எல்லாமே அந்தந்த ஆர்ட்டிஸ்ட்டைப் பொறுத்திருக்கே தவிர, ‘யாரானாலும்... எதுவானாலும்... இது தான்... இப்படித்தான்’னு விதியெல்லாம் ஸ்ட்ரிக்ட்டா வெச்சுக்கிட்டு நான் வொர்க் பண்றதில்லே!"

மதன்:  “‘ரோஜா கமர்ஷியலா எப்படிப் போகுது?”

மணி: “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு..."

மதன்: “‘ஏ' சென்டர், ‘பி’ சென்டர் மாதிரி பேச்சுக்களெல்லாம் உங்களைப் பாதிக்கறதில்லையா?”

மணி:“இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால், எல்லாத்தையும் மீறித் தொலைதுாரப் பார்வை பார்க்கறதுக்கு ஒரு டைரக்டர் கத்துக்கணும்னு நினைக்கறேன். இப்போ ‘ரோஜா’வையே எடுத்துக்குங்க... அது நீங்களே சொன்ன மாதிரி வித்தியாசமான சப்ஜெக்ட்! காஷ்மீர் தீவிரவாதிகள் பிரச்னையெல்லாம் தமிழ் மக்கள் ஆழமா அறியாத விஷயங்கள்! ‘அங்கே காஷ்மீர்ல ஏதோ எல்லைப் பிரச்னை இருக்காம்பா!’ன்னு மேலோட்டமா நினைக்கற ஆடியன்ஸை, எப்படிச் சென்று அடையப்போறோம்கிறது முக்கிய கேள்வி! அவங்க ஏத்துக்கற மாதிரி சொல்லணும்னும்போது அதைச் சுத்தி ஒரு சுவையான திரைக்கதை அமைக்க வேண்டியிருக்கு கிட்டத்தட்ட இடைவேளை வரைக்கும் ரெண்டு வெவ்வேறு காரெக்டர்களுக்கு மத்தியில லவ் உருவாகிப் பெருக்கெடுக்கறதையே’ காட்ட வேண்டியிருக்கு அப்புறம்தான் காஷ்மீர்... தீவிரவாதம்... கடத்தல்... மீட்புன்னு போக முடிஞ்சிருக்கு! இப்படிச் சுவையான கதைங்கற தேன் தடவி மாத்திரை தரும்போதுதான் ஜனங்க ரசிக்கறாங்க!

Maniratnam's exclusive interview
Maniratnam's exclusive interview

 இந்தச் சூழ்நிலையில, ‘அதெல்லாம் இல்லே... இப்படி ஒரு சப்ஜெக்ட்டைப் பண்றதே ரிஸ்க்... இதையெல்லாம் ஜனங்க ரசிக்க மாட்டாங்க... ஏத்துக்க மாட்டாங்க... படம் கலெக்ஷன் ஆகாது’ன்னெல்லாம் சில பேர் - முப்பது நாப்பது வருஷமா இன்டஸ்ட்ரியிலே ஊறிக் கொட்டை போட்டிருக்கறதா சொல்றவங்க - சொல்லும்போது ‘ஜனங்க டேஸ்ட்டை நிர்ணயிக்கறதுக்கு இவங்க யாரு?’னு எனக்கு ஒரு கோபம் வரும்! எது எப்படியோ... இந்தப் படம், இந்த விஷயத்துக்காக ஓடும்... அல்லது ஓடாதுன்னெல்லாம் கண் சுருக்கிப் பார்க்கறது பழைய ஃபார்முலா! அதெல்லாம் இப்போ உதவறதில்லை!”

மதன்:  “உங்களை நிறைய பேர் உயர் மட்ட ஆடியன்ஸுக்குப் படம் எடுக்கறீங்கன்னு சொல்றதால இப்படியொரு கோபமா?”

மணி: “அப்படியில்லே... உயர்மட்டம், கீழ்மட்டம்னெல்லாம் நாமதான் தப்பா தரம் பிரிச்சுப் பார்க்கறோம்னு தோணுது! உண்மையிலே மக்களுக்கு நல்ல ரசனை இருக்கு அவங்களைப் பொறுத்தவரையில் நல்லதா கெட்டதான்னு ரெண்டே பிரிவுதான்! நீங்க எதையும் கொடுக்கலாம்... ஆனா, நல்லா... அழுத்தமா குடுக்கணும். அதைத்தான் முக்கியமா பார்த்து முடிவெடுக்கறாங்க! அப்படிப் பார்க்கும்போது 'ரோஜா' மாதிரி படத்தை ஏத்துக்க அவங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கறதில்லை!

மதன்:“ரோஜா"விலே அழுத்தமா இருக்கிறது புருஷனை மீட்க மனைவி ஒரு பெண்புலியாகப் போராடுகிற - நம்ம புராண காலத்திய ‘சத்யவான் சாவித்திரி’ கான்செப்ட்தானே?”

மணி:“இருக்கலாம்... நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி காஷ்மீர் தீவிர வாதத்தோட உக்கிரத்தைச் சொல்ல... எனக்கு அதைச் சுத்திச் சுவையான கதை நெய்ய வேண்டியிருந்தது... அதற்கு இந்த நெசவாளன் தேர்ந்தெடுத்த பாதைதான், கணவன் கடத்தப்பட்டுத் தனியாக விடப்படற ஒரு பெண்ணின் உணர்ச்சிகரமான போராட்ட நிலை! ஆனா, படத்தின் கூடவே அண்டர்கரண்ட்டாக இருக்கும் இன்னொரு விஷயம் - 'நான் இந்தியன்' என்கிற உன்னதமான -  இப்போது மிகவும் தேவையான உணர்வுதான்!”

மதன்:  “‘மௌன ராகம்’ வந்தப்போ உங்ககிட்டே குதிரையை அடக்கிய தேசிங்குராஜாவின் புதுக் கம்பீரம், ஒரு சிம்ப்ளிஸிடி தெரிஞ்சது... ‘நாயகன்’உங்களுக்கு ஒரு 'மாக்னம் ஒபஸ்'. ஆனா, அதுக்கப்புறம் வந்த படங்களைப் பார்க்கறப்போ... ஒரே மாதிரி சப்ஜெக்ட் சுழல்லயே சிக்கிட்டிங்களோன்னு தோணுதே!”

மணி: “இல்லே... நான் அப்படி நினைக்கலே... இன்னும் சொல்லப்போனால், எனது முந்தைய படங்கள்லேர்ந்து முற்றிலும் மாறுபடனும்னு நான் மனப்பூர்வமா நினைக்கறேன். அதுக்காக அந்த மாதிரி கதை ட்ராக்கையே கூட 'அவாய்ட்' பண்றேன். இப்போ உதாரணத்துக்கு... நான் இன்னொரு முறை 'தாதா’ படம் எடுத்தால், அதை நிச்சயம் 'நாயக’னோட ஒப்பிடுவாங்க! நாயகனுக்கு முந்திவரைக்கும் படங்கள்ல வர்ற "தாதா'க்கள் அண்டர்கிரவுண்ட்லகூட த்ரீபீஸ் சூட்டு - கோட்டோடதான் காட்சி அளிப்பாங்க. அதே சமயம், நாயகன்ல வித்தியாசமாவும் யதார்த்தமாவும் வர்ற வேட்டி கட்டிய வேலு நாயக்கரைப் பார்த்த பிறகு ஜனங்களால வேற எதையும் ஒப்புக்க முடியாது! இது எனக்குத் தெரியாமல் இல்லே... இந்த மாதிரி சர்வ ஜாக்கிரதையோடதான் படம் பண்ணிக்கிட்டிருக்கேன். அப்படியும், பத்திரிகைக்காரங்க 'அவ்வளவுதானா... மணிரத்னத்துக்குச் சரக்கு தீர்ந்திடுச்சா?'ன்னு எழுதும்போது வருத்தமா இருக்கு. மனசைப் புண்படுத்துது...

மதன்:  “விகடன்ல ‘தளபதி’க்கு எழுதிய விமரிசனத்தைச் சொல்றீங்களா?”

மணி: "ஆமாம்...

மதன்:  “மனதைப் புண்படுத்தற அளவுக்கு விமரிசனங்கள் உங்களைப் பாதிக்குதா என்ன?”

மணி:  “நிச்சயமா! அதெப்படி பாதிக்காம இருக்க முடியும்?! தன் படைப்பின் மீது அக்கறையுள்ள எந்தக் கலைஞனுக்கும் அதுபற்றிய விமர்சனம் பாதிப்பை உண்டாக்குமே!”

மதன்:  “விமரிசனம் என்பது ‘நீங்க இன்னும் பெட்டரா செய்யணும்... உங்க திறமைக்கு இதைவிட அதிகமா எதிர் பார்க்கறோம்'கிற நல்லெண்ணத்துல உங்களை உசுப்பறதுக்கு எழுதப்படலாம் இல்லியா? நீங்க ஏன் அதை அந்தக் கண்ணோட்டத்துல பார்க்கக்கூடாது?!”

Maniratnam's exclusive interview
Maniratnam's exclusive interview

மணி:  "நீங்க சொல்றது எனக்குப் புரியுது! மீடியாவுக்குள்ளே வந்திட்டாலே விமரிசனங்களுக்கு உரியவர்னுதான் அர்த்தம். ஆனா, இங்கே பத்திரிகையைக் கொண்டு வர்றவங்களைவிட சினிமா எடுக்கறவன் பாடுதான் ரொம்பத் திண்டாட்டம்! உதாரணமா, உங்க பத்திரிகையை யாரும் இவ்வளவு வெளிப்படையாக ஒவ்வொரு வாரமும் விமரிசிக்கறதில்லே! ஆனா, நாங்க அப்படியில்லே! ஒரு படம் சரியா கொடுக்கலேன்னா, பத்திரிகைகள் எங்களைக் கிழிகிழின்னு கிழிச்சிடும்.  They are trying to rip you apart-னு நினைக்கற அளவுக்குப் பண்ணிடுது பத்திரிகைகள் விமரிசனம்! சரியா சொல்லணும்னா, புதுசா வரும்போது நிறைய என்கரேஜ் பண்ணுவாங்க! கொஞ்சம் ஸ்திரமாயிட்டா, யார் வேணாலும் கல்லெடுத்து அடிப்பாங்க.. இதான் இங்கே வழக்கம்!

"மதன்: “மக்கள் எல்லாத்துலயும் தரத்தை எதிர்பார்க்கறாங்க. அது பத்திரிகையானாலும் சரி... படமானாலும் சரி... தரமில்லாததுன்னு தெரிஞ்சா தொடர்ந்து வாங்கறதையோ அல்லது தியேட்டருக்கு வர்றதையோ நிறுத்திடு வாங்க. யாரும் மக்களை ஏமாத்த முடியாது! அந்த வகையில் பார்க்கும்போது, நீங்க ஆடியன்ஸை ஏமாற்றாத டைரக்டர்னுதான் பேர் எடுத்திருக்கீங்க... உங்க படத்துக்கு ‘ஏண்டா வந்தோம்?’னு தலையில கைவெச்சு யாரும் உட்கார்றதில்லை! இது பெரிய விஷயம்..."

மணி:"ஐயையோ! சார்... அதுகூட இல்லைன்னா எப்படி?! ஒரு டைரக்டர் செய்யக்கூடிய குறைந்தபட்சக் காரியமே அதுதானே!"

மதன்:  “சரி!  அப்படியே வெச்சுக்குவோம்... நீங்க ஒரு படத்தின் மூலமா யார் யாரைத் திருப்திப்படுத்தணும்னு நினைக்கறீங்க?!”

மணி: "First of all, நல்ல படம்தான் எடுத்திருக்கேன்னு அதை இயக்கற எனக்குத் திருப்தி வரணும். அடுத்ததா அதைப் பார்க்க வர்ற ஜனங்களும் அதேமாதிரி ஃபீல் பண்ணனும்... மூணாவது, படத்தை வாங்கற விநியோகஸ்தர்களுக்கு 'இது கையையும் கடிக்கலை... வெற்றிப் படம்தான்!'கிற சந்தோஷத்தை கொடுக்கணும். நாலாவது பத்திரிகைகள்!  அவங்கதான் எல்லாரையும் பிரதிபலிக்கிற கண்ணாடி! இன்னும் சொல்லப்போனால், பத்திரிகைங்கற போர்வையில் ஒளிஞ்சுக்கிட்டுத் தங்கள் சொந்தக் கருத்துக்களையேகூட மக்கள் கருத்துகளாகச் சமூகத்தில் உலாவச் செய்யற சக்தி அவங்களுக்கு உண்டு!  அந்தப் பத்திரிகைகளையும் திருப்திப்படுத்தும் வகையில் படம் அமையணும்!

மதன்:  “பத்திரிகைகளைப் பத்திப் பேசும்போது ரொம்ப உணர்ச்சிவப்பட்டும் பேசறீங்க!

மணி:“சொந்த அனுபவம்தான் காரணம்! நாலாப் பக்கமும் எல்லாரையும் திருப்திப்படுத்தணும்னு யோசிச்சா... ஒவ்வொரு காயா நகர்த்தி. இவ்வளவு கவனமா நாம செயல்படும்போதே இப்படிக் கல்லால அடிக்கறாங்களேங்ற வருத்தம்தான்!

மதன்: “ஸோ, நீங்க ஒரு ‘க்ளிஷே’ல மாட்டிக்கிட்டிருக்கீங்க!  நாலு பக்கமும் பேலன்ஸ் பண்ணித்தான் ஒவ்வொரு படத்துலயும் கரையேறறீங்க... அப்படித்தானே?

மணி: “கண்டிப்பா!  ‘சே... இப்படியொரு மோசமான படத்தைப் போய் எடுத்துத் தொலைச்சிட்டேனே!’னு நான் வெட்கப்படற அளவுக்கு என் எந்தப் படமும் அமைஞ்சிடக்கூடாதில்லையா? அப்போ நான் இந்த ‘க்ளிஷே’வை ரசிச்சுக்கிட்டேதான் செயல்பட்டாகணும்....” 

மதன்: “சரி... உங்க படங்கள்லயே உங்களுக்கு அதிகமான மனநிறைவு தந்த படம் எது?” 

மணி: “அஞ்சலி! ” ரொம்ப ஸாடிஸ்ஃபையிங்கா இருந்தது. மன வளர்ச்சி குன்றிய குழந்தைங்கற உணர்ச்சிமயமான விஷயம் மட்டுமில்லை... அந்தப் படத்துல அதுக்கு வெளியேயும் பல காட்சிகளை அமைக்க வாய்ப்பு இருந்ததது. கதையைக் கொண்டு வர்றதுக்கும் ரொம்ப சிரமம் இல்லாமல் இருந்தது...”

மதன்:  “‘அஞ்சலி’க்கு இன்ஸ்பிரேஷன் உங்க நண்பர்கள் அல்லது உறவினர்கள் வட்டாரத்தில் தெரிந்த குழந்தை ஏதாவதா?”

மணி: “இல்லே... அப்படி எதுவும் இல்லே... ஆனா, எங்காவது அதுபோல ஒரு குழந்தையைப் பார்த்தால் மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு இல்லையா?! நம்மால அதுக்கு உதவ முடியாத ஒரு கையாலாகாதத்தனம் வெளிப்படும் இல்லையா?! எல்லா மனுஷனுக்குள்ளேயும் உள்ள அந்த உணர்வைத்தான் 'அஞ்சலி'யில் நான் வெளிப்படுத்தியிருக்கேன். மனவளர்ச்சி குன்றுதல்னா என்ன? அதுபோல ஒரு குழந்தை வீட்டில் இருந்தால் என்னென்ன பிரச்னை வரும்னு மக்கள் புரிஞ்சுக்கணும்.... அந்த என் ஆசையும் விழிப்பு உணர்ச்சி நடவடிக்கையும் 'அஞ்சலி' மூலமா நிறைவேறியதில் பெரிய மகிழ்ச்சி!”

Maniratnam's exclusive interview
Maniratnam's exclusive interview

 மதன்:  “‘தளபதி’யில் ஒரு காட்சி வரும். அதாவது, ரஜினிக்கு ஜெய்சங்கர் மூலமா தன் அம்மா யாருன்னு தெரிய வருது!  உடனே, ரஜினி லேசாக வியப்போடும் மகிழ்ச்சியோடும் நகர... அவர் மறைத்துக் கொண்டிருந்த சூரிய ஒளி கீற்றாகப் பளீரிடும். கூடவே 'உன் அம்மா அவங்கதான்னு நீ வெளியே காண்பிச்சுக்க முடியாது!’ என்கிற சூழ்நிலைக் கட்டளை ஏற்படும்போது ரஜினி பின்வாங்க... சூரிய ஒளி மறையும். ரொம்ப மென்மையான, அற்புதமான டச் அது!”

மணி: “ஆமா! சூரியனுக்குப் பிறந்த கர்ணன் இந்த காரெக்டரோட ஒத்துப் போறவன்கிறதைச் சொல்ல அப்படிக் காட்டியிருக்கேன்

!'மதன்:  “யெஸ்! இப்போ என் கேள்வி இதுதான்! இதையெல்லாம் எழுதும் போதே முடிவு செய்வீங்களா? இல்லே, காட்சி எடுக்கும்போதுதான் யோசிப்பீங்களா?”

மணி: "எழுதறது வேற... காட்சியை எடுக்கற எக்ஸிக்யூஷன் வேற... எழுதறதை விடப் பல படிகள் தாண்டி வரணும் காட்சியமைப்புக்கு! ஆர்ட்டிஸ்டோட நடிப்பு, லைட்டிங், காட்சி கட் ஆகிற இடம், எடிட்டிங் டேபிள்னு எந்த ரூபத்தில் வேணும்னாலும் அந்த முன்னேற்றம் இருக்கலாம். மொத்தத்துல. எழுத்துல இல்லாத ஒரு மாஜிக்... ஒரு ‘எலெக்ட்ரிசிடி’அந்தக் காட்சிக்கு வந்திடணும்! இதுக்காகத் தலையைப் பிய்ச்சுக்கிட்டு யோசிக்கிறவன்தான் நிஜமான டைரக்டர்! ஜனங்க மத்தியில் இந்தக் காட்சி எடு படணுமேங்கிற விஷுவலைசிங்... அதற்கான திறமைதான் டைரக்டரோட வெற்றிக்கு அடிப்படை!”

மதன்:  “நீங்க எதிர்பார்க்கறதெல்லாம் கிடைச்சுடுமா?! அதுல ‘காம்ப்ரமைஸ்' பண்ணிக்கற மாதிரி நிறைய வருமே?”

மணி: "நீங்க சொல்றது கரெக்ட்! நாம என்ன நினைக்கிறோமோ, அது அப்படியே முழு வீச்சுல கிடைச்சிடாது தான்! ஆனா, அது இல்லாமல் திடீர்னு வேற ஏதாவது அருமையா கிடைக்கலாம்! காட்சி எஃபெக்ட்டுக்குப் பாதிப்பு வராதுன்னு திட்டவட்டமா தெரிஞ்சால், அங்கே காம்ப்ரமைஸ் பண்றதிலே தப்பில்லே! ஆரம்ப காலத்துலேயெல்லாம் நான் என்ன எதிர்பார்க்கிறேனோ, அது அப்படியே கிடைக்கணும்கிற பிடிவாதம் என்கிட்டே நிறையவே இருந்தது. உதாரணத்துக்கு, என் முதல் படம் 'பல்லவி அனுபல்லவி’ (கன்னடம்) பட ஷூட்டிங்ல நடந்த சம்பவத்தைச் சொல்லலாம்...

பட ஷூட்டிங் ஆரம்பிச்ச மூணு நாள்லயே எல்லாத்தையும் கான்சல் பண்ணிட்டு வீட்டுக்கு வந்திடலாம்னு தோணிடுச்சு! அந்த அளவுக்கு எல்லாமே என் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்து ஒரே வெறுப்பாயிடுச்சு. ஒரு காட்சியில சம்பந்தமில்லாம ஊதா கலர் பூ வந்து காமிராவில் எட்டிப்பார்க்கும்! 'ஜாரிங்'கா எரிச்சலாயிடும். மிச்சதெல்லாம் அதைத் தூக்கிச் சாப்பிடக்கூடிய எரிச்சல்கள்!

நான் கிட்டத்தட்ட சினிமாவே வேணாம்கிற முடிவுக்கு வந்திட்டேன்.அப்போ பாலுமகேந்திராதான். 'கவலைப்படாதே. எல்லா டைரக்டர்களுக்குமே அப்படித்தான் இருக்கும். எனக்கும் பல சமயங்கள்ல அப்படித் தோணியிருக்கு’னு சொன்னார். அப்புறம்தான் எனக்குத் தைரியம் வந்தது. இதுக்கப்புறம் அந்த எரிச்சல் தர்ற - மனதுக்குப் பிடிக்காத விஷயங்களை எப்படித் தவிர்க்கலாம்னு திட்டம் போடறதிலேதான் புத்தி போச்சு.

‘எல்லாத்துக்கும் உயிரூட்ட வேண்டியது என்னோட கடமை’னு நினைச்சப்போ, மன இறுக்கத்தைத் தளர்த்த முடிஞ்சது! என்னை முன்னாடி வெச்சு யோசிக்க முடிஞ்சது ஒரு டைரக்டருக்கு ரொம்ப ஸ்ட்ராங்கான விருப்பு - வெறுப்புகள் வேணும்.

யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்ங்கிற பேர் வேணும்! அப்படி இருந்தாத்தான் அவராலே நல்ல குவாலிட்டி படங்களைத் தரமுடியும்! அதனாலே நம்ம காம்ப்ரமைஸ் என்பது இப்போ இருக்கிற தரத்துக்கே கெடுதல்னு தெரிஞ்சா, அதை யாருக்காகவும் அனுசரிக்க வேண்டியதில்லே!

ஒரு டைரக்டருக்கு 'டே லைட்டிங் இல்லே... ஆர்ட்டிஸ்ட்டோட கால்ஷீட் இன்னியோட முடியுது’ன்னு ஏகப்பட்ட பிரஷர் இருக்கலாம். ஆனாலும், அவற்றைப் போகிற போக்கில் விட்டுட்டா படத்தோட தரம் பாதிக்கப்படுமானால் அங்கே விட்டுக்கொடுக்கறதுங்கற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது..."

Maniratnam's exclusive interview
Maniratnam's exclusive interview

மதன்:  “காமிராமேன் ஸ்ரீராமும், நீங்களும் சேர்ந்து படம் பண்ணிக்கிட்டிருந்தீங்க! நல்ல காம்பினேஷன்னு பலரும் சொன்னாங்க. ஆனா, திடீர்னு பிரிஞ்சுட்டீங்களே... அதுக்கென்ன காரணம்?”

மணி: “ரெண்டு படைப்பாளிகள் எந்தக் கட்டத்திலும் பிரியக்கூடாதுங்கறதே தப்பான தியரி! ஒருத்தரையொருத்தர் இறுகப் பிடிச்சுக்கிட்டு இருக்கறதுங்கறது ரெண்டு பேரும் ஆரம்பத்திலே சேர்ந்து வேலை செஞ்சப்போ, ‘பிரியக்கூடாது... சேர்ந்தேதான் எல்லாப் படமும் பண்ணனும்’ன நினைச்சது உண்டுதான்! ஆனால், அதே சமயம் ஒரு காலகட்டம் வந்தப்போ ரெண்டு பேரும் தனித்தனியா போறதுதான் பெட்டர்னு ரெண்டு பேருக்குமே தோணிச்சு! எங்களுக்கு அதுல தெளிவான கருத்து இருந்தது.யாருக்காகவும்.... எந்தப் போலியான வேஷம் தரிக்கவும் நாங்க ரெண்டு பேருமே விரும்பலே! அதனாலதான் பிரிஞ்சோம்... இப்போ ஒருவகையில பார்த்தால், அது நல்லதாக்கூடப் படுது! காரணம், நாங்க ரெண்டு பேருமே இப்போ வெவ்வேற டீமோட வொர்க் பண்றதால எங்க படைப்புகள்ல புதுப் ‘காம்பினேஷன்’ புதுப் புது  'வேரியேஷன் எல்லாம் கிடைக்குது! ரெண்டு பேர் வாழ்க்கைக்கும் வெவ்வேறு வெளிப்பாடுகள் கிடைச்சிருக்கு... இது பெரிசில்லையா?"

மதன்: “மாறிப்போன உங்க டீமினால் உங்களுக்கு எந்த இழப்பும் இல்லையா? இல்லே... இதுல காம்ப்ரமைஸ்தான் பண்ணிக்கணும்னு விட்டுடறீங்களா?"

மணி:"ஒரு படம் மணிரத்னம் படம்னு அடையாளம் காட்டப்படுதுன்னா, அது என் ஒருத்தன்னால மட்டுமே பெறக்கூடிய விஷயமில்லே... நான் எதிர்பார்க்கற ஒத்துழைப்பை - திறமையை எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவங்களை நான் சரியான விதத்துல உபயோகிக்கச் செய்யற என் டீமுக்கு அதில் முக்கிய பங்கு உண்டு! ஆர்ட்டிஸ்ட் காமிராமேன், இசையமைப்பாளர்னு பலரும் கொண்ட அந்த டீம் மாறும்போதே ரிசல்ட்டும் வேறுபடத்தான் செய்யும். நிச்சயமாக ஒரே மாதிரி ரிசல்ட் கிடைக்காது! ஆனால், அதுக்காக அதை இழப்புன்னு கணக்கிட முடியாது! இது புதிய அனுபவம். புதுவகைத் திறமைகளின் கூட்டுமுயற்சி... அவ்வளவுதான்! குறிப்பாகச் சொல்லனுமானால், ஸ்ரீராம் காமிராவும் சந்தோஷ் சிவன் காமிராவும் ஒன்றாகாது... இரண்டும் வெவ்வேறு திறமையான பரிமாணங்கள்!

மதன்:  “அதாவது, சில கெமிக்கல்ஸ் சேர்ந்து ஏற்படற ஒரு வாணவேடிக்கை மாதிரி... இல்லையா?"

மணி: "ஆமாம்! வெவ்வேறு விதமாக உருகிக் கலக்கற இணைப்பு! ஒரு டைரக்டருக்கு அவருடன் சேர்ந்து வேலை செய்யற டீம், அவர் படைப்புல மேலும் பலத்தைக் கூட்ட உதவணும். அப்போ தான் அந்தப் படம் வளர்ச்சியடைய முடியும்! ஆனால், திறமையான கலப்பும் உறுதியான சட்டதிட்டங்களும் மட்டும் இல்லாவிட்டால் எந்தப் படைப்புமே அரைகுறைதான்!

"மதன்:  “தளபதி" படத்துல பானுப்ரியாவும் ரஜினியும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுக்குத் திரும்பி வர்ற இடத்துல பின்னனியிலே ஒரு ட்யூன் போட்டிருப்பார் இளையராஜா. அதுல கல்யாணத்துக்குண்டான சந்தோஷமே இருக்காது. மாறாக, அவங்க ரெண்டு பேரும் உடம்பால சேரமாட்டாங்க. அது சோகத்திலே முடியப்போற திருமணம் என்கிற மாதிரி கலங்க அடிக்கும் ட்யூன்! இது நீங்க டைரக்டரா இருந்து ராஜாகிட்டே கேட்டதா? இல்லே, ராஜாவே சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி போட்டதா?”

மணி:"ஆக்சுவலா, அந்த இடத்துல ராஜா சார்கிட்டே சிச்சுவேஷன் சொல்லி ஒரு பாட்டு போட்டிருந்தோம். பிற்பாடு படத்தோட நீளம் கருதி அதை வெட்டிட்டோம். பட்... அந்தப் பாட்டோட ட்யூன் ரொம்ப மனசைப் பாதிச்சதுன்னு சொன்னேன். உடனே அந்தப் பாட்டினுடைய ட்யூனை ராஜா வேஸ்ட் ஆக்காம... அதையே இன்ஸ்ட்ரூமெண்ட் இசையாக மாத்தி அங்கே உபயோகிச்சிட்டார்!"மணிரத்னம் பேசும்போது கைகள் மட்டும் நிறைய அங்குமிங்கும் அலைபாய்கின்றன. சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்வதற்குமுன் தலைமுடிக்குள் விரல்கள் ஊடுருவ, நெற்றியை ஒரிரு விநாடிகள் அழுத்திக்கொண்டு மேலே பார்க்கிறார். மற்றபடி, ஒண்ணரை மணி நேரமும் திண்டில் ரிலாக்ஸ்டாக அமர்ந்தவர் துளியும் நகரவில்லை. கால்களைக்கூட மாற்றிப் போட்டுக் கொள்ளவில்லை. ஒரே ஒரு முறை அவர் முதுகுப் பக்கம் பெரிய குலோப் ஜாமூன் ‘ஷேப்’பில் இருந்த தலையணை உருண்டபோது, சற்றுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்...சிறு டவல் மடித்துப் போடப்பட்ட ‘ட்ரே’யில் அவ்வளவாக சூடு இல்லாமல் காபி வந்தது. மேலும் சூடு குறைந்து விடுமோ என்ற கலவரத்துடன் எல்லோருமே ஒரே மூச்சில் குடித்து விட்டுக் கோப்பைகளை அனுப்பினோம்.உரையாடல் தொடர்ந்தது...

மதன்:  "சினிமாவில் இசை, பாடல்கள், டான்ஸ் பற்றி உங்கன் கருத்து என்ன? படத்தில் பாடல் காட்சிகளைப் புகுத்த வேண்டியிருக்கும் நிர்ப்பந்தம் உங்களுக்கு எரிச்சல் தருகிறதா? ஏன் கேட்கிறேன் என்றால், 'ரோஜா' படத்தில் க்ரூப் டான்ஸில் கிழவிகள் பாடி ஆடுகிறார்கள். 'டான்ஸ்தானே வேண்டும்... கிழவிகளை ஆடவைக்கிறேன். போதுமா?’ என்று நீங்கள் நையாண்டி பண்ணியதாக எடுத்துக் கொள்ளலாமா?”

மணி:“நோ... நோ! பாடல்கள், டான்ஸ்... எல்லாவற்றையும் ஏன் தவிர்க்க வேண்டும்? அவை ரொம்ப ‘என்ஜாயபிள்’ ஆன. ஜாலியான - நான் ரொம்ப ரசிக்கிற விஷயங்கள். பட்... ஒரு பாட்டோ, டான்ஸோ படத்தோட டெம்போவைக் கொஞ்சமும் குறைக்கக்கூடாது! ‘இது திணிக்கப்பட்ட பாடல் காட்சி... கதைக்கும் இதுக்கும் சம்பந்தமில்லே... வெளியே போய் 'தம்’ அடிச்சுட்டு வரலாமே’னு யாருக்கும் தோணிடக்கூடாது! மாறாக, ஆடியன்ஸை இழுத்துப் பிடிச்சு உக்கார வைக்கிறதா இருக்கணும். திரும்பத் திரும்ப தியேட்ட்ர் பக்கம் இழுக்கறா மாதிரி இருக்கணும்! அதனால, பாடல் காட்சிகளிலேயும் புதுமையாவும் வித்தியாசமாவும் என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறவன் நான்! ஸோ. இதுலே பாட்டிகளும் க்ரூப் டான்ஸில் ஆடற மாதிரி சேர்த்தேன்... பெரும்பாலானவங்க அதுமாதிரி காட்சிகளைத் தமாஷா, லைட்டாகத்தான் எடுத்துக்கறாங்க! ஆஃப்டர்ஆல் பாட்டிகள் டான்ஸ் ஆடறதைப் பார்க்கறதுன்றது ஒரு மாறுதலுக்கு. 'டர்ட்டி ஜோக்’ படிக்கற சந்தோஷம் தானே!”

Maniratnam's exclusive interview
Maniratnam's exclusive interview

மதன்:  “‘ரோஜா'ல ஒரு ஸீன்... அக்காவைப் பெண்பார்க்க வந்திட்டுத் தன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிக் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த கணவன் மேலே மதுபாலாவுக்குப் பயங்கரக் கோபம்! ஆனால், ‘உன் அக்கா கேட்டுக்  கிட்டதாலதான் அப்படிச் செஞ்சேன்’னு புருஷன் அதன் பின்னணியை விளக்கிச் சொல்லும்போதும் அதை மதுபாலா நம்பத் தயாராக இல்லே! உடனே அக்காவுக்கு ட்ரங்க்கால் போட்டு பேசி, கணவன் சொன்னது உண்மைதானான்னு கேட்கறவரைக்கும் போறாங்க. இந்த அளவுக்கு அந்தக் காட்சியை ஏன் டெவலப் பண்ணீங்க?”

மணி: "படம் பண்ணும்போது ‘இந்தக் காட்சியை இப்படிப் பண்ணலாமா... இல்லே, வேற மாதிரி பண்ணலாமா?’ன்னு பல கோணங்கள்லே யோசனை செய்ய வேண்டியிருக்கு. அதே சமயம், எங்கேயாவது ஒரு இடத்துல எல்லைக்கோடு போட்டு ‘இது தான் சரி'ன்னு ஒரு முடிவுக்கும் வர வேண்டியிருக்கு. என் மனசுக்குத் தோணின முடிவுப்படி நான் இயங்கறேன்... இயக்கறேன். இப்போ, நீங்க குறிப்பிட்ட காட்சியைப் பொறுத்த வரைக்கும் எனக்கு என்னவோ அந்தக் கிராமத்துப் பொண்ணு மதுபாலா, புருஷன்காரன் பேச்சை உடனேயே நம்பி மனசு மாறிட்டால், அந்தக் காட்சிக்கு அங்கேயே உயிரில்லாமல் போயிடுமோன்னு தோணிச்சு! அதனால, அடுத்த கட்டமா அவள் தன் புருஷன் பேச்சைக் கிராமத்துக்குரிய புத்திசாலித்தனத்தோடு ‘கிராஸ் செக்' பண்ற மாதிரி எடுத்தேன்!”

மதன்:  “ஒருவேளை பெண்கள் எதையும் உடனே நம்பிடமாட்டாங்கன்னு சொல்ல நினைச்சீங்களோ?!”

மணி (புன்னகையுடன்): "இருக்கலாம்!"

மதன்:  “‘ரோஜா’ இசையமைப்பாளர் ரஹ்மான் பத்தி என்ன நினைக்கறீங்க? தொடர்ந்து ஜமாய்ப்பாரா?"

மணி: ‘ஹி ஈஸ் வெரிகுட்! ரொம்பத் திறமைசாலி! ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டுபோற லாகவம்... இப்போதைய ரசிப்பைப் புரிஞ்சுக்கிட்டு இசையில் செய்யற சாகஸம். எல்லாமே அவர்கிட்டே அட்டகாசமா இருக்கு இன்னும் சொல்லப்போனால், படம் முழுக்க வர்ற ரீ- ரிக்கார்டிங்கிலும் அவர் எக்கச்சக்கத் திறமையை வெளிப்படுத்தி இருக்கார்..."

மதன்:  “அதனால்தான் அவருக்கு ‘ரோஜா'வில பல இடங்களில் நிறையவே வாய்ப்புக் கொடுத்திருக்கீங்களோ... 'கம் ஆன் ரஹ்மான்... என்ஜாய் யுவர்செல்ஃப்’ என்கிற ரீதியில்...?!'

மணி: “அஃப்கோர்ஸ் அவர்கிட்டே துளிகூட அமெச்சூர்த்தனம் இல்லே! அதனாலயே என்னால முடிஞ்சவரைக்கும் அவரை இந்தப் படத்திலே முன்னுக்கு நகர்த்தியிருக்கேன்..."

Maniratnam's exclusive interview
Maniratnam's exclusive interview

மதன்:  “முதல் படத்துல அசாத்திய திறமை காட்டற சில இயக்குநர்கள் மாதிரி, சில இசையமைப்பாளர்களும் தொடர்ந்து அதே மாதிரி அசத்தறதில்லே! இளையராஜா மாதிரி ரஹ்மான் வருவாரா?”

மணி: “இளையராஜாவின் திறமை ஆச்சரியமானது. அசாத்தியமானது! அறுநூறு படங்கள் முடிச்சதுக்குப் பிறகும் அவர் 'தளபதி'க்கு இசையமைச்சபோது... எவ்வளவு ஃப்ரெஷ்ஷா, சூப்பரா இருந்தது! அவர் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவர்! ஆனாலும் விஷயம் உள்ளவர்களை, திறமையானவர்களை - ரஹ்மான் மாதிரியான புது இசையமைப்பாளர்களையும் நாம ஊக்குவிக்கணும்! திறமைசாலிகள் அத்தனை பேரையுமே திரையுலகம் ரத்தினக் கம்பளம் விரிச்சுத் தான் வரவேற்குது... இங்கே, எந்தத் துறையாக இருந்தாலும் ஒருத்தருக்கு மட்டும்தான் ஏகபோக உரிமைன்னு யாருமே நினைக்கறதில்லே!'

மதன்:  “உங்க முதல் படம் ‘பல்லவி அனுபல்லவி’ (கன்னடம்) பற்றிச் சொல்லுங்களேன்... அது என்ன கதை? நாலைஞ்சு வரிகள்... சுருக்கமா சொன்னாபோதும்!”

மணி: “ஒரு முழுப் படத்தைச் சுருக்கமா நாலு வரியில சொல்றது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான்! இருந்தாலும், அவுட்லைன்' மாதிரி சொல்றேன்...ஒரு இளைஞன் முழு ஆண்மகனா உருவாகறதுக்கு முந்தி உள்ள பீரியட் (Transition Period). அப்போ அவனுக்கு நேருகிற அனுபவங்கள்! இதான் கதையோட பின்னணி. அவன் முதலில் காதல்னு நினைக்கறது இனக்கவர்ச்சியா இருக்கு! அப்புறம் ஒரு பெண்மீது அவனுக்கு அபிமானம் வருது! அந்தப் பெண், ஒரு குழந்தைக்கு அம்மா! அவங்கமேலே தனக்கு இருக்கறது காதலா அல்லது வேற ஏதாவதான்னு அவனால தீர்மானம் பண்ண முடியாம இருக்கு! வார்த்தைகளால வர்ணிக்க முடியாத ஒரு உணர்ச்சியா அது இருக்கு! இப்படிப்போகும் கதை...

"மதன்:  “கொஞ்சம் கொஞ்சம் ஆட்டோபயாக்ரஃபி...?!

மணி: “ஐயையோ... நான் எடுக்கறதெல்லாம் பயாக்ரஃபிதான்!”

மதன்:  “உங்களை டைரக்டரா போட்டால், டெக்னிகல் விஷயங்களுக்கெல்லாம் எக்கச்சக்கமா செலவழிக்கணும்னு ஒரு பேச்சு இருக்கே... உண்மையா?”

மணி:(முகம் சற்று சீரியஸாகிறது): "ஆமாம்! பெரிய ஹீரோக்கள்கிட்டே மட்டும் கேட்கிற பணத்தைக் கொட்டறாங்களே... படத்தோட எஃபெக்ட்டுக்காக, காட்சியமைப்புகளுக்காகவும் ஏன் பணம் செலவழிக்கக்கூடாது? நடிக்கறதுக்குப் புது ஆளுங்களை, அதிகச் சம்பளம் கேட்காதவங்களை நான் உபயோகிக்கத் தயார். அப்படியிருக்கும்போது, பெரிய ஹீரோக்களுக்குத் தர்ற பணத்தை - என் திறமையான காமிராமேனுக்கும் மத்தவங்களுக்கும் கொடுங்கன்னுதானே கேக்கறேன்! ஒரு வகையில பார்த்தால், தயாரிப்பாளருக்கு இதனால எந்தப் பண இழப்பும் இருக்கப்போறதில்லே! இன்னொரு வகையில, படத்துல எல்லாமே சூபர்பா அமையும் போது... அவர்தான் அந்தப் பலனையும் சேர்த்து அனுபவிக்கப்போறார். ஆனால், ஒண்ணைச் சொல்லணும்... நீங்க சொன்ன மாதிரி இதுவரைக்கும் எந்தத் தயாரிப்பாளரும் 'டெக்னிகல் விஷயங்களுக்கு அதிகமா செலவு பண்றீங்களே?'ன்னு என்னைக் கேட்டதே இல்லை... காரணம், என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்கதான் என்கிட்டே வர்றாங்க... அவங்கெல்லாம் ஃபைனல் ரிசல்ட்தான் முக்கியம்னு நினைக்கறவங்க!”

மதன்: “‘ரோஜா'ல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஸீன் எது?”

மணி: “குறிப்பிட்டுச் சொல்லணும்னா, தீவிரவாதி வாசிம்கானைச் சிறையிலே போய் மதுபாலா பார்க்கறாங்களே... அந்த ஸீன்! காட்சியமைப்பு, நடிப்பு, டயலாக் எல்லாமே கச்சிதமா அமைஞ்சது...”

மதன்:  "அந்த ஸீன்ல ரெண்டுபேரும் வெவ்வேறு பாஷைதான் பேசறாங்க. ஒருத்தசை ஒருத்தர் புரிஞ்சுக்கற சான்லே இல்லே... ஆனா, டயலாக்கை மீறி அவங்க ரெண்டு பேர் உணர்ச்சிகளும் கோபமும் பளிச்சிடுது! அழுத்தமான, பரிதாபமான ஸீன்தான் அது! சரி, கிராமத்துப் பொண்ணு மதுபாலா காரெக்டரை ஏன் ரொம்பக் கிராமியத்தனமா பண்ணாம விட்டுட்டீங்க? அதுக்கு ஏதாவது காரணம் உண்டா?”

மணி: “யதார்த்தம் தேவைதான்! ஆனால், ரொம்பவும் யதார்த்தமா - தலைமுடி மொத்தத்துலயும் எண்ணெய் கொட்டி, தாழம்பூ வெச்சுப் பின்னி... ரிப்பன் கட்டி விடற அளவுக்கு எனக்குத் தேவைப்படலே... என் படங்கள்லே யதார்த்தத்தோட வாசம் வீசினாலே போதும்கிறது என் எண்ணம்! மேலும், மதுபாலா கிராமத்துப் பொண்ணுன்னாலும் பள்ளிக்கூடம் போய் ஸ்கூல் ஃபைனல் வரை படிச்ச பொண்ணுங்கறதை நாம மறந்திடக்கூடாது!”

மதன்:  “கிராமம் உங்களுக்குக் கொஞ்சம் பரிச்சயம் இல்லாத ஏரியாவோ?! 'ரோஜா'ல படு ஸ்பீடா கிராமத்துலேர்ந்து வெளியே வந்துட்டிங்களே!”

மணி:(கண் சிமிட்டியபடி): “விட்டாப் போதும்கிற மாதிரி ஓடி வந்திட்டேன் இல்லே? இருக்கலாம்! தவிர, அந்தப் படம் முழுக்கக் கிராமத்துலயே நடக்கற சப்ஜெக்ட்டும் இல்லையே?! அதனால தான் வேகமா வெளியே வர வேண்டியதாயிடுச்சு! கன்யாகுமரி பக்கத்துல வளர்ந்து வர்ற அந்தக் கிராமத்துப் பொண்ணு, பிற்பாடு காஷ்மீர்ல போய்த்தன் புருஷனுக்காகப் போராடறா! அப்படி அந்த முனையிலேர்ந்து இந்த முனைவரை ரெண்டு 'எக்ஸ்ட்ரீம்’ கோடிகளைக் கதையில கொண்டு வந்ததும் சிம்பாலிக்கா இந்தியா ஒண்ணுங்கறதைச் சொல்லத்தான்!”

மதன்:  “‘ரோஜா'ல கிராமத்துப் பொண்ணு காரெக்டருக்கு மதுபாலாவை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க?”

மணி: “ஆரம்பத்துல நிறைய புதுமுகங்களைத்தான் பார்த்துக்கிட்டிருந்தோம். எதுவும் சரிவரலே! அப்புறம் மதுபாலா பத்திப் பேச்சு வந்தப்போ, அவங்க அது வரைக்கும் செய்திருந்த ரெண்டு தமிழ்ப் பட காரெக்டர்களும், ‘மாடர்ன் கேர்ள்’ காரெக்டர்கள்தானேன்னு யோசனையா இருந்தது. கடைசியில அவங்களைக் கூப்பிட்டு, ஒரு முழு நீள ஸீன் கொடுத்து நடிக்கச் சொல்லி வீடியோ காமிராவுல படம் பிடிச்சேன். விடியோ ஷாட் திருப்திகரமா இருந்தது. உடனே ப்ரொஸீட் பண்ணிட்டேன். படம் முடிஞ்சப்போ, என் எதிர்பார்ப்புக்கும் மீறி மதுபாலா ரொம்ப நல்லாவே செய்திருந்தாங்க!”

மதன்:  “நடிக- நடிகையர் தேர்ந்தெடுக்க விடியோ டெஸ்ட் வைக்கும்போது, எந்த மாதிரியான காட்சியைக் கொடுத்து நடிக்கச் சொல்வீங்க?"

மணி:"ஓரளவுக்காவது அவங்க நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய காட்சியைத்தான் கொடுப்பேன்! உதாரணத்துக்கு, 'நாயகன் படத்துல சரண்யாவைத் தேர்ந்தெடுக்க நான் டெஸ்ட் வைத்த காட்சி.. அந்தச் சிவப்பு விளக்கு வீட்டுல அவங்க 'நாளைக்குக் கணக்குப் பரீட்சை இருக்குனு கமல்கிட்டே சொல்லி, புத்தக மூட்டையைக் காட்டுவாங்களே! அந்த ஸீனைக் கொடுத்து நடிக்கச் செய்தப்புறம்தான் சரண்யாவை 'ஓகே' பண்ணேன்...”

Maniratnam's exclusive interview
Maniratnam's exclusive interview

மதன்:  பட வேலைகள்ல உங்க "மனைவி சுஹாசினி உங்களுக்கு உதவறாங்களா?"

மணி: "உதவறதுண்டு! அவளுக்கு நல்ல ஜட்ஜ்மெண்ட் உண்டு. 'ரோஜா'வுல அந்தத் திருநெல்வேலி கிராமத்து ஸீன்களைப் பற்றி டிஸ்கஸ் பண்ணப்ப, சுஹாசினி சொன்ன சில ஐடியாக்கள் ரொம்ப உதவியா இருந்தது... மத்தபடி, அவள் சொல்ற எல்லாக் கருத்துக்களையும் நான் அப்படியே எத்துக்கறதில்லேன்றது வேற விஷயம்!"

மதன்:  "மனைவி சொல்றதை அப்படியே முழுசா எந்தக் கணவர்தான் ஏத்துக்கறாங்கறீங்களா?"

மணி: "ஐயோ! முழுசா எப்படி ஏத்துக்க முடியும்?!"

மதன்:  "இவ்ளோ ஃப்ரீயா பேசறீங்க... ஆனா, "வாயையே திறக்க மாட்டாரு'ன்னு ஒரு பேர் வாங்கியிருக்கீங்க... ஏன் இப்படி?!"

மணி: "நான் எங்கேயும் அப்படிச் சொன்னதில்லையே! எல்லாம் பத்திரிகைக்காரங்க வெச்ச பெயர்தான்! எனவே... அப்படியொரு லோ-ப்ரொஃபைல் வெச்சுக்கறது எனக்கு வசதியாத்தான் இருக்கு! காரணம், நான் நூறு சதவீதம் தொழில்ரீதியானவன்! என்கிட்டே யாராவது சும்மா வம்படிக்கவோ அல்லது பொழுது போக்காய்ப் பேச வந்தாலோ எனக்குப் பிடிக்காது!"

மதன்:  "அதையெல்லாம் ஒரு டைவர்ஷனா, ரிலாக்சேஷனா எடுத்துக்கறதில்லையா?"

மணி: "இல்லை! அதெல்லாம் என் புரொபஷனல் அணுகுமுறையைக் கெடுக்கக்கூடிய விஷயங்கள்! அதையும் மீறி யாராவது சுவையாக ஒரு விஷயத்தைச் சொல்லவோ, பேசவோ வந்தா - நான் நிச்சயம் காது கொடுக்கறேன்! ஆனால், சில சமயம் அரைகுறைகளாக இருப்பவங்க வந்துடறாங்க... தவிர - அதிகமா பேட்டி, போட்டோன்னு பத்திரிகைகள்லே வராம இருந்தால், வாக் போறது... பால் வாங்கி வர்றது மாதிரியான சுதந்திரங்களை, என் ப்ரைவஸியை நான் இழக்காம இருக்க முடியுமே!"

மதன்:  "இப்போ எடுக்கறதைவிட நல்ல படங்களை எப்போ தருவீங்க?!"

மணி: 'இப்போ எடுக்கறதைவிட வித்தியாசமான, புதுமையான படங்களை என்னாலே எடுக்க முடியும். நீங்க சொல்ற மாதிரி, பலபேர் 'ஆஹா... என்ன தரமான படம்!'னு வியந்து போற மாதிரியும் என்னால படமெடுக்க முடியும். ஆனா, ஒண்ணு! அப்படி எடுக்கறதா இருந்தால், இப்போ என்கிட்டே இருக்கற ஆடியன்ஸ்லே பாதிப்பேரை நான் இழக்க வேண்டியிருக்கும். வெறுமனே ஐம்பது சதவீத ஆடியன்ஸுக்குப் படம் பண்ண எனக்கு விருப்பமில்லே! எல்லோரும் என் படங்களை ரசித்துப் பார்க்க படமெடுக்கனும்கறதுதான் என் ஆசை!"

மதன்:  "அடுத்த படம் இதுதான்னு எப்போ முடிவெடுக்கறீங்க? முந்தைய படம் முடிஞ்ச உடனேயேவா?!"

மணி: "எப்போதுமே நிறைய ஐடியாக்கள் ரெடியா இருக்கும்... ஆனா, முந்தைய படம் வெளிவந்து... அது எப்படி மக்களிடையே ரிஸீவ் ஆகியிருக்குன்ற முடிவு தெரிஞ்சப்புறம்தான் அடுத்து என்னன்னு குறிப்பா முடிவெடுப்பேன்..."

மதன்:  "அப்போ, உங்க முந்தைய தோல்வியெல்லாம் உங்க அடுத்த, படத்தோட படத்தைப் பாதிக்கும்னா சொல்றீங்க?"

மணி: "கண்டிப்பாக!"

மதன்:  "படத்தோட காட்சிகளை சத்யஜித்ரே மாதிரி வரிசையா வரைஞ்சு காட்டறதெல்லாம் உண்டா?"

மணி: "இல்லே! எனக்கு வரையத் தெரியாது!"

மதன்:  "படம் துவங்கறதுக்கு முன்னாடி கதை இதுதான்னு முடிவெடுக்க எவ்ளோ நாள் டிஸ்கஷன் வெச்சுப்பீங்க?"

மணி: "என் படங்களுக்கு டிஸ்கஷன்... கூடிப்பேசறது இதெல்லாம் கிடையவே கிடையாது! முழுக் கதையமைப்பும் என் ஒருத்தனோட மூளையில மட்டுமே உதிக்கறதுதான்! எழுதறதும் சரி... சிந்திக்கறதும் சரி... நான் தன்னந்தனியா உட்கார்ந்துக்கிட்டுதான் செய்யறது வழக்கம்! அதனால படத்தோட கதை பத்திக் "குறையோ நிறையோ என்னோடு மட்டும் போகட்டும்"கிற தியரிதான்!"

Maniratnam's exclusive interview
Maniratnam's exclusive interview

 மதன்:  "உங்க அடுத்த படம் என்ன?"

மணி:(பதில் பேசாமல் ஒரு விரலால் உதட்டை வருடியவாறு கொஞ்ச நேரம் யோசிக்கிறார்...)

மதன்: "என்ன?! ரகசியமாவே வெச்சுக்கணும்னு ஆசையா?! விகடன் வாசகர்களுக்காகக் கொஞ்சம் சொல்லுங்களேன்!"

மணி:(டக்கென்று சிரித்து) : "சரி, அவுட்லைன் மட்டும் சொல்றேன்... கிராமத்துல நடக்கற ஒரு த்ரில்லர்! வழக்கமா, நகரத்துல மட்டுமே எடுக்கற க்ரைம் படத்தை அப்படியே இடம் மாத்திக் கிராமத்துக்குக் கொண்டுபோயிருக்கேன். முழுக்க முழுக்க ஜாலியா இருக்கப்போற படம்னு மட்டும் நம்பிக்கையா சொல் வேன்!"

மதன்:  "இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்வீங்களா?"

மணி:"இன்னொண்ணும் சொல்லட்டுமா?! நிச்சயமா ஆனந்த விகடன் விமரிசனக் குழு, 'மணிரத்னத்துக்குச் சரக்கு தீர்ந்திடுச்சா?"னு இன்னொரு முறையும் கேள்வி கேக்கற மாதிரி மசாலாவாகத் தான் இருக்கும்!"

மதன்: "அப்பாடா! கடைசியில ஒரு வழியா பேட்டியில இப்போதான் நீங்க ஜோக் அடிச்சிருக்கீங்கன்னு எடுத்துக்கறேன்!"மணிரத்னம் முகத்தில் 'சினிமாஸ் கோப்' ஆகப் புன்னகை விரிய, புகைப்படக்காரர் கடைசி முறை "க்ளிக் செய்கிறார்...

மணி: 'நீங்களே சொல்லுங்க... இப்படி என்னைப் படம் எடுத்துத் தள்ளி, பத்திரிகையில போட்டா என் 'ப்ரைவஸி' என்ன ஆகும்? அதுவும் ஒரு ஜோக்கா தான் போயிடும்"

மதன்:  "வேணும்னா உங்க படங்கள்லே வர்ற சில காட்சிகள் மாதிரி இருட்டா போட்டுடறோம்... திருப்தியா?!"மணிரத்னம் தலையை உயர்த்தி வாய் விட்டுச் சிரிக்கிறார். ஜோராக இருந்தது!

தொகுப்பு: எஸ். சுபா.

(20.09.1992 மற்றும் 27.09.1992 தேதிகளில் ஆனந்த விகடன் இதழிகளிலிருந்து...)