அத்தியாயம் 1
Published:Updated:

"சினிமா எடுக்க எங்கே கத்துக்கிட்டீங்க? "

Maniratnam's Exclusive Interview
பிரீமியம் ஸ்டோரி
News
Maniratnam's Exclusive Interview

"என் முதல் கல்யாணம் பி.சி - யுடன்தான்” - மணிரத்னம்!

ஆச்சர்யம்.... பேசத் தயாராக இருந்தார் மணிரத்னம்!

சென்னை - நுங்கம்பாக்கம் லேண்ட் மார்க் புக் ஷாப்பில் மணிரத்னத்தின் அனைத்துப் படங்களையும் டி.வி.டி., சி.டி - க்களாக வெளியிடு கிற விழா.

சம்பிரதாயமான விழா வாக இல்லாமல், ' மணிரத்னம் - நேருக்கு நேர் ' என்று கேள்வி - பதில் பாணி நிகழ்ச்சி.

" காதல், தேச பக்தி, தீவிரவாத எதிர்ப்பு இந்த மூணு விஷயங் களையுமே படமா எடுக்கிறீங்களே... அது ஏன்? ” என்றதும்,

"இந்த மூணு விஷயம்தான் என்னை அதிகமா பாதிச்சிருக்கலாம்'' என்ற மணிரத்னம் " அப்படி யோசிச்சா எல்லாருடைய சினிமாக்களையும் இப்படி ஏதாவது ஒரு வட்டத்தில் அடக்கிடலாம், என்றார் புன்னகையுடன்.

Maniratnam's Exclusive Interview
Maniratnam's Exclusive Interview

"சத்தியவான் - சாவித்ரி கதை தான் ரோஜா! கர்ணன் துரியோதனன் கதைதான் தளபதி. இப்படிப் புராணக் கதைகளையே மாற்றி எடுக்கிறீங்களே? ” என்று கேள்வி வந்து விழுந்தது.

"இருக்கலாம்! அந்தக் கதைகளின் அடிப்படைக் கருவை எடுத்திருந்தாலும் அதை ஒரு படைப்பாளி எப்படித் தருகிறார் என்பதுதான் முக்கியம்! " என்றார் தெளிவாக.

மணிரத்னத்தின் படத்தில் நடித்த அனுபவங்களை சூர்யாவும், மாதவனும் மைக் பிடித்து ஜாலியாகப் பேசினார்கள்.

" நான் ' ஆய்த எழுத்து ' படத்தில் போலீஸ் ஸ்டேஷன் போய் இன்ஸ்பெக்டரிடம் பேசற மாதிரி ஒரு ஸீன். டயலாக் மனப்பாடம் செய்து பர்ஃபெக்ட்டாப் பேசினேன். அந்த ஷாட்டும் ஓகே. ஆகிடுச்சு. என்னவோ யோசிச்ச மணி சார், ' இல்ல சூர்யா... போலீஸ்கிட்ட இறுக்கமா பேசறதுதான் வழக்கம். ஆனா, உங்க கேரக்டர் ரொம்ப போல்டாச்சே! அதனால லேசா சிரிச்சிட்டே பேசினா இன்னும் நல்லா வரும்னு தோணுது. அது மாதிரி பண்ணலாம்னு ஸ்பாட்லயே டயலாக்ஸை மாத்தினார். அதுக்கு நிறைய தைரியம் வேணும். அது மணி சாருக்கு நிறையவே இருக்கு! ” என்றார் சூர்யா.

“ பொருதடக்கை வாளெங்கே? மணிமார்பெங்கே? ” - என்ற கலிங்கத்துப் பரணி பாடலுடன் மாதவன் மேடை ஏற, கூட்டத்தில் செம க்ளாப்ஸ்.

" என்னை ஸ்க்ரீன் டெஸ்டுக்குக் கூப்பிட்டப்போ இந்தப் பாட்டை மனப்பாடம் செஞ்சுட்டு வந்து ஒப்பிக்கச் சொன்னார் மணி சார். அப்பவே எனக்கு சான்ஸ் கிடைக்காதுனு தெரிஞ்சுபோச்சு. தமிழ் பேசவே திக்கித் திணறின நேரம் அது.

என்னைக் கலிங்கத்துப் பரணி பாடச் சொன்னா என்ன செய்வேன்? மணி சார் படத்துல நடிக்கணும்னு வெறி... ராத்திரி பூரா மனப்பாடம் பண்ணிட்டு, மறுநாள் அப்படியே போய் ஒப்பிச்சேன். நல்லாப் பண்றீங்க. ஆனா, இந்தப் படத்தோட கேரக்டருக்கு நீங்க சரியா இருக்க மாட்டீங்க. நாம வேறொரு படம் சேர்ந்து வேலை பார்ப்போம்'னு சொல்லி அனுப்பிச்சிட்டார். அப்புறம் ஒரு நாள் மணி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. ' அலைபாயுதே ' படம் ஆரம்பமானது! " என்றார் மாதவன் நெகிழ்ச்சியுடன்.

" ஒளிப்பதிவாளரும் டைரக்டரும் கணவன் - மனைவி மாதிரி. அப்படிப் பார்த்தா என் முதல் கல்யாணம் பி.சி - யுடன்தான் ” என்று மணிரத்னம் சொல்ல, பி.சி.ஸ்ரீராமிடம் மெல்லிய புன்னகை.

" நீங்க சினிமா எடுக்க எங்கே கத்துக்கிட்டீங்க? ” என்று ஒரு கேள்வி.

மணிரத்னத்தின் பதில்... " டூரிங் டாக்கீஸில்! ”

- த.செ.ஞானவேல்

படங்கள் - ப.ச.மனுஷ் நந்தன்

(13.03.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)