
மார்க்கெட் ராஜாவின் அறை முழுக்கவே வித்தியாசமான மெழுகு செட் அப், பெரம்பூர் ரயில் நிலைய போர்டு, ஐஸ் பெட்டி, அகோர பொம்மைகள் எனக் கலை இயக்கம் கவனிக்கவைக்கிறது.
அராத்து தாதாவின் உடம்பில் அப்பாவி டாக்டரின் ஆவி புகுந்தால், `மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’
பெயரில் ஆரம்பித்து பாத்திர வடிவமைப்பு வரை மார்க்கெட் ராஜாவின் உடலுக்குள் வசூல்ராஜாவின் ஆவியைப் புகுத்தி, புதுமை செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர் சரண். ஆனால், அவரது ‘புதுமைப் புரட்சி’ வெறியில் நாம் பேயறை வாங்கியதைப்போல விழிக்கிறோம்.
பெரம்பூரையே கட்டி ஆளும் தாதா ராஜாவாக ஆரவ். முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோ, அப்பாவி ஹீரோ என இருபக்கமும் இறங்கி அடிக்கவேண்டிய கதாபாத்திரம். மூச்சைப் பிடித்துக்கொண்டு பாதி தூரம் இறங்கியிருக்கிறார். நாயகி காவ்யா தபார் அழும் காட்சிகளில் நமக்கும் அழுகை வருகிறது. காரணம்தான் வேறு. மார்க்கெட் ராஜாவின் காட்ஃபாதராக சாயாஜி ஷிண்டே, எதிர் கோஷ்டித் தலைவராக ஹரீஸ் பேரடி, மார்க்கெட்டின் இடது, வலது கைகளாக ஆதித்யா மேனன் மற்றும் சாம்ஸ் ஆகியோர் வருகிறார்கள். காமெடி என்ற பெயரில் சாவடி அடித்து ஆட்டோ ஏற்றி அனுப்புகிறார்கள். அங்கு முனீஸ்காந்தும், தேவதர்ஷினியும் வருகிறார்கள், அவர்களும் சில நிமிடங்கள் ஊமைக்குத்தாய்க் குத்தி, ராதிகா பக்கம் அனுப்பிவைக்கிறார்கள். ராதிகா மட்டுமே நம்மை வயிறு வலிக்க சிரிக்கவைக்கிறார். ஆனால், மகனின் கையால் அடிவாங்க வைப்பதெல்லாம் டுவென்டி டூ மச்! ‘டங்கா மாரி ஊதாரி’ புகழ் ரோகேஷை ஒரு ‘சப்பை’ கதாபாத்திரமாகவே படம் முழுக்க உலாவவிட்டிருக்கிறார்கள். அவர் சொல்லும் ஒன்லைனர்கள் புரியாவிட்டாலும், ‘நல்லா இருக்க மாரியே’ இருக்கிறது.
இந்தக் கதை இப்படியாகத் தொடங்கி, இப்படியாக நகர்ந்து, இப்படியான இடத்தில் இன்டர்வெல் வந்து, இப்படியாக மாறி, இப்படியாக முடியப்போகிறது என்பதைப் படம் பார்த்த 15-வது நிமிடத்தில் கணித்துவிடலாம். `சிரிக்க வைக்க வேண்டும்’ என்கிற நோக்கத்தோடு மட்டுமே படம் நகர்கிறது. நல்ல நோக்கம்தான், ஆனால் நிறைவேறவில்லையே! இரண்டாம் பாதியில் வரும் சில காமெடி காட்சிகளும், ரோகினி வரும் சென்டிமென்ட் காட்சிகளும் மட்டுமே மனதில் நிற்கின்றன.

மார்க்கெட் ராஜாவின் அறை முழுக்கவே வித்தியாசமான மெழுகு செட் அப், பெரம்பூர் ரயில் நிலைய போர்டு, ஐஸ் பெட்டி, அகோர பொம்மைகள் எனக் கலை இயக்கம் கவனிக்கவைக்கிறது. கலர்ஃபுல்லான ஒளிப்பதிவும் கே.வி.குகனுக்கு `அட’ சொல்லவைக்கிறது. கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்க்கவில்லை என்றாலும் பாதகம் செய்யாமல் இருக்கிறது. சைமன் கே.கிங்கின் இசையில் `அப்போ சாதா... இப்போ தாதா...’ பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் ரகளை.

இன்னும் நிறைய சிரிப்பு வெடிகளைத் தூவி, இறுக்கி, நெருக்கிப் பிடித்துத் திரைக்கதையைப் பொட்டலம் போட்டிருந்தால் `மார்க்கெட் ராஜா’ மனம் கவர்ந்திருப்பான்.