சினிமா
Published:Updated:

அன்வி: ஜி.வி. சைந்தவியின் ஏஞ்சல்!

அன்வி: ஜி.வி. சைந்தவியின் ஏஞ்சல்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்வி: ஜி.வி. சைந்தவியின் ஏஞ்சல்!

படங்கள்: Mommy Shots அம்ரிதா

`குழந்தை, வாழும்போதே கிடைக்கிற சொர்க்கம்’ என்பார்கள். கடந்த நான்கு மாதங்களாக அப்படி ஒரு சொர்க்கத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள், ஜி.வி.பிரகாஷ் குமாரும் சைந்தவியும். இசையமைப்பாளராக, நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் பல பேட்டிகள் கொடுத்திருந்தாலும், தந்தையாக அவர் கொடுக்கும் முதல் பேட்டி இதுதான்.

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி - அன்வி
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி - அன்வி

`` ‘எங்களுக்கு ஒரு குழந்தை’ங்கிறது எங்களோட ஏழு வருஷக் கனவு. சைந்தவி கர்ப்பம்னு டாக்டர்கிட்ட செக் பண்ணி, எல்லாம் கன்ஃபார்ம் ஆனதுக்கு அப்புறம், நான்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. நம்ம குடும்பத்திற்குப் புதுசா ஒரு உறவு வரப்போறாங்கனு என் அப்பா, அம்மா, தங்கச்சின்னு எல்லாரும் ரொம்பவே சந்தோஷமா இருந்தோம்.

பொதுவாகவே எல்லாக் கணவர்களும் தங்களோட மனைவி கர்ப்பமா இருக்கும்போது எப்படியெல்லாம் பார்த்்துக்கணும்னு ஒரு லிஸ்ட்டே போடுவாங்க. அப்படித்தான் நானும் சைந்தவியை ரொம்பவே ஜாக்கிரதையா பார்த்துக் கணும்னு நினைச்சேன். அதை சரியாகவும் செய்திருக்கேன்னு நம்புறேன். அவங்க அழக்கூடாது, கோபப் படக்கூடாது, எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கணும்னு பார்த்தப் பார்த்து கவனிச்சுக்கிட்டேன். அந்தச் சமயத்தில் எங்ககிட்ட நிறைய பேர், ‘என்ன குழந்தை எதிர்பார்க்கிறீங்க’ன்னு கேட்டாங்க. நாங்க, ’எந்தக் குழந்தையாக இருந்தாலும் எங்களுக்கு சந்தோஷம்’னுதான் சொல்லிட்டிருந்தோம். ஆனால், மனசுக்குள்ள பெண் குழந்தையா இருந்தால் ரொம்ப நல்லாருக்கும்னு தோணிட்டே இருந்துச்சு.

ஜி.வி.பிரகாஷ் - அன்வி
ஜி.வி.பிரகாஷ் - அன்வி

`என்னோட எல்லா செக் அப்பிற்கும், ஸ்கேனுக்கும் நீங்க கூடவே இருக்கணும்’னு ஆரம்பத்தில் இருந்தே சைந்தவி சொல்லிட்டே இருந்தாங்க. அதனால, எதையுமே மிஸ் பண்ணாமல், அவங்ககூட ஹாஸ்பிட்டல் போயிடுவேன். ஸ்கேன்ல தலை, கை கால் விரல்னு ஒவ்வொரு உறுப்பா அவங்க காட்டும் போது, ஒரு இனம் புரியாத சந்தோஷம். அதுவும், குழந்தையோட அசைவுகளை வயிற்றில் கை வெச்சுப் பார்க்கும்போது உடம்பு புல்லரிக்கும். இப்போ நினைச்சாக்கூட என்னால அதை உணர முடியுது.

`நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு இல்லை; ஆபரேஷன்தான்’னு டெலிவரிக்கு ஒரு வாரம் முன்னாடி டாக்டர் சொல்லிட்டாங்க. எங்ககிட்டேயே ஒரு நல்ல நாள் செலக்ட் பண்ணிச் சொல்லச் சொல்லியிருந்தாங்க. நாங்களும் ஏப்ரல் 20-ம் தேதி ஆபரேஷன் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டோம். ஆனால், ஏப்ரல் 19ம் தேதியே சைந்தவிக்கு வலி வந்துடுச்சு; அன்னைக்கே ஆபரேஷன் பண்ணிடணும்னு சொல்லிட்டாங்க. சாயங்காலம் பாப்பா பிறந்தாங்க. சைந்தவிக்கு ஆபரேஷன் பண்ணும்போது, நானும் அவங்க பக்கத்துலதான் இருந்தேன். டாக்டர் குழந்தையை வெளியே எடுத்ததும், ‘பெண் குழந்தை பிறந்திருக்காங்க. உங்க வீட்டுக்கு இன்னொரு பாடகி கிடைச்சிருக்காங்கனு நினைக்கிறேன்’னு சொல்லி பாப்பாவை எங்ககிட்ட காட்டுனாங்க. அப்போ பாப்பா அழவேயில்லை. நல்லா முழிச்சுப் பார்த்தாங்க. அந்தத் தருணத்தைப் பதிவு பண்ணிக்கணும்னு போட்டோவும் எடுத்து வெச்சுக்கிட்டேன். இப்போவரைக்கும் பாப்பா எதாவது ஒரு விஷயத்தைப் புதுசாப் பார்த்தால் நல்லா கண்ணை விரிச்சுப் பார்ப்பாங்க. செம க்யூட்டா இருக்கும்’’ என்றதும், ‘குழந்தைக்காக முதலில் வாங்கிய பரிசு என்ன’ என்று கேட்டேன்.

’’சைந்தவி ரொம்ப பிளானிங்கான ஆள். எந்தக் குழந்தை பிறந்தாலும், அதுக்கு அடிப்படையா தேவைப்படுற பொதுவான பொருள்களையெல்லாம் முன்னாடியே வாங்கி வெச்சுட்டாங்க. பாப்பா பிறக்கும்போது தளர்வே இல்லாத ஊரடங்கு இருந்ததனால, ஸ்பெஷலா எந்தப் பொருளும் வாங்க முடியாமல்போயிடுச்சு. நாங்க வெளிய போயிட்டு வரதும் ரிஸ்க்னு இப்போவரைக்கும் எதுவும் வாங்கலை. பாப்பாவைப் பார்க்கணும்னு ஆசைப்படுறவங்களும் இந்த லாக்டெளனால பார்க்க முடியாமல் இருக்காங்க. ரஹ்மான் அங்கிள் வீடியோ காலில்தான் பார்த்தார். விஜய் சாரும், சூர்யா சாரும் நேரில் வந்து பார்க்கிறோம்னு சொல்லியிருக்காங்க’’ என்றவரிடம், குழந்தைக்குப் பெயர் வைத்ததைப் பற்றிக் கேட்டேன்.

அன்வி
அன்வி

``பாப்பாவுக்குத் தமிழில் பெயர் வைக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. நான் `வானம்’னு பெயர் வைக்கலாம்னு சொன்னதும், `அதெல்லாம் வேணாம். நாங்களே பெயர் செலக்ட் பண்ணுறோம்’னு சைந்தவியும் என் தங்கச்சி பவானியும் சொல்லிட் டாங்க. நானும் குழந்தையோட பெயர் அம்மாவோட சாய்ஸா இருக்கட்டும்னு அவங்ககிட்டயே விட்டுட்டேன். அவங்க சில பெயர்களை செலக்ட் பண்ணி என்கிட்ட கொடுத்தாங்க. அதுல `அன்வி’ங்கிற பெயரை நான் ஓகே பண்ணினேன். ’அன்வி’னா குஜராத்தியில சூரியனிலிருந்து வெளிவரும் முதல் கதிர்னு அர்த்தம்.

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி - அன்வி
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி - அன்வி

அன்வி அப்படியே அவங்க அம்மாவோட சாயல். குழந்தை பிறந்த ஒரு மாசத்துக்குள்ளேயே ஒரு போட்டோஷூட் பண்ணணும்னு ப்ளான் பண்ணி வெச்சிருந்தோம். ஆனால், லாக்டெளனால உடனே பண்ண முடியலை. 45 நாள் கழிச்சுத்தான் பண்ணினோம். கரெக்ட்டா போட்டோஷூட் ஆரம்பிக்கும் போது பாப்பா தூங்கிட்டாங்க. அதனால, எந்த சிரமமுமே இல்லாமல் சீக்கிரமாகவே போட்டோஷூட்டை முடிச்சிட்டோம். ‘mommy Shots’ அம்ரிதாதான் போட்டோஸ் எடுத்தாங்க. எல்லாமே ரொம்ப நல்லா வந்துச்சு.

அன்வி பிறந்து நாலு மாசம் ஆச்சு. தேவையில்லாமல் அழவே மாட்டாங்க. பசிச்சா அழுவாங்க; பால் குடிச்சிட்டா கம்முன்னு இருப்பாங்க. அடிக்கடி தூக்கச்சொல்லி கைய, கைய நீட்டுவாங்க. தூக்கலைனா ஒரு சவுண்ட் விடுவாங்க; அவ்வளவுதான். சில நாள் நைட் தூங்காம விளையாடிட்டு இருக்கும்போது, குடும்பமே சேர்ந்து விளையாடுவோம். அந்த இரவுகள் எல்லாமே மறக்க முடியாதவைதான். எங்களைவிட சைந்தவிதான், அம்மாவா எந்த ஒரு விஷயத்தையும்மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு பார்த்துப் பார்த்துப் பண்ணிட்டு இருக்காங்க. மதர்வுட்டை ரொம்பவே என்ஜாய் பண்ணிட்டி ருக்காங்க’’ என்றதும், ‘குழந்தையை எப்படி வளர்க்கணும்னு ஆசைப்படுறீங்க’ என்று கேட்டேன்.

அன்வி: ஜி.வி. சைந்தவியின் ஏஞ்சல்!

``பெண்கள் எப்போதும் சுதந்திரமாகவும் தைரியமாகவும் இருக்கணும். அதைத்தான் என் மனைவிகிட்டேயும் தங்கச்சிகிட்டேயும் அடிக்கடி சொல்லுவேன். அப்படித்தான் அன்வியையும் வளர்க்கணும்னு ஆசைப்படுறேன். அதுமட்டுமல்லாமல், கஷ்டம் தெரிஞ்சு வளர்க்கணும். என் அப்பா என்னை ஒரு மிடில் க்ளாஸ் பையனாத்தான் வளர்த்தார். எல்லாருக்கும் மரியாதை கொடுக் கணும்னு சொல்லிக்கொடுத்து வளர்க்கணும். ஒரு அப்பாவா என் மகளுக்குத் தேவையான கல்வியை நான் கொடுப்பேன். மத்தபடி, அன்வியோட தனித்தன்மை என்னவோ அந்தவழியில் அவங்க போகணும்கிறது என் ஆசை’’ என்ற ஜி.வி.பிரகாஷ் குமாரின் கண்களில் பொறுப்பான அப்பா மிளிர்கிறார்.