சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

சின்ன ஸ்கிரீன்... பெரிய பட்ஜெட்

WEST WORLD
பிரீமியம் ஸ்டோரி
News
WEST WORLD

சூப்பர் ஹீரோக்கள் என்றாலே நமக்கு ஒரு பிம்பம் இருக்கும். அக்கிரமக்காரர்களிடமிருந்து உலகத்தைக் காக்க எந்த எல்லைக்கும் செல்பவர்கள்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

பிரமாண்டம் என்றாலே சினிமாக்கள்தான். டால்பி அட்மாஸ், 5.1, DTS என ஒலி அளவுகளில் நம்மை ரணகளமாக்க பெரிய திரையில், பல நூறு ஸ்பீக்கர்களை வைத்து ஒரு காட்டு காட்டும் சினிமாக்கள்தான் பிரமாண்டமான சினிமாக்கள் என ஒரு ரசிகனைச் சொல்ல வைக்கும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சித் தொடர்கள் மாற்றின. ஓடிடி வருகைக்குப் பின்னர், அது இன்னும் இன்னும் பிரமாண்டமாக மாறியிருக்கிறது. அவற்றின் ஒரு எபிசோட் பட்ஜெட்டில் பத்து, பதினைந்து லோ பட்ஜெட் பட்ஜெட் படங்களே எடுத்துவிடலாம். மெகா பட்ஜெட்டில் உருவான சில ஓடிடி தொடர்களின் அறிமுகம் ஆங்காங்கே...

சின்ன ஸ்கிரீன்... பெரிய பட்ஜெட்

Rome - ரூ.70 கோடி

முதல் மெகா பட்ஜெட் வெப் சீரீஸ் என்று `ROME’ தொடரைச் சொல்லலாம். கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் நிகழும் கதைக்களம். லூசியஸ் வொரினஸ், டைட்டஸ் புல்லோ என இரு வீரர்களை முதன்மையாகக்கொண்டு இந்தத் தொடர் எழுதப்பட்டது. ஜூலியஸ் சீஸரால் எழுதப்பட்ட `கல்லிக் போர்கள்’ என்னும் வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து இரு வீரர்களை எடுத்துக்கொண்டு, அதன்வழி புனைவு உலகத்தை உருவாக்கினார்கள். பெரிய பட்ஜெட் தொடரைத் தனியாக எடுக்கப் பலரும் யோசிக்க, HBO-வும் பிபிசியும் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்டன. அந்தக் காலத்து ரோமானியப் பேரரசை மெய்ப்பித்துக்காட்ட பெரிய பொருட்செலவை முதலீடாக்கினார்கள். ஐந்து சீஸன்கள் எடுக்கத் திட்டமிடப்பட்டு, பின்னர் பட்ஜெட் எகிறியதால் வேறு வழியின்றி இரண்டே சீஸன்களில் முடித்துக்கொண்டார்கள். ஒருவேளை காலம் கனிந்திருந்தால் மூன்றாவது, நான்காவது சீஸன்களை எகிப்திலும், ஐந்தாவது சீஸனை பாலஸ்தீனத்திலும் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்கள். கிட்டத்தட்ட தற்போது வெளியாகும் பிரமாண்ட தொடர்களுக்கு கமல்போல பிள்ளையார்சுழி போட்டு அழைத்துவந்த பெருமை 2005-ம் ஆண்டு வெளியான `ரோம்’ தொடரையே சேரும்.

சின்ன ஸ்கிரீன்... பெரிய பட்ஜெட்

The Sandman - ரூ.120 கோடி

DC காமிக்ஸ் என்றாலே பேட்மேன், சூப்பர்மேன், தி ஃப்ளாஷ் என்ற பிம்பத்தை மாற்றி, அதன் பல கதைகளையும் தற்போது படமாக்கி வருகின்றனர். அதன்படி, நீல் கைமேன் எழுதிய `தி சேண்ட்மேன்' காமிக்ஸை பக்கா ஃபேன்டஸி தொடராக மாற்றியிருக்கிறது நெட்ப்ளிக்ஸ்.

மரணம், விதி, கனவு, அழிவு, ஆசை, பிரமை, விரக்தி என மொத்தம் ஏழு பேர் கொண்ட Endless (முடிவற்றவை) கடவுளர்கள் இருக்கின்றனர். அவற்றில் கனவுகளின் கடவுளான மார்ஃபியஸ் என்னும் சேண்ட்மேனின் சாகசங்களைப் பேசுகிறது இந்தத் தொடர். 1916-ல் மரணத்தை அடைத்து வைக்க நடந்த ஓர் அமானுஷ்ய சடங்கில் தவறுதலாக மார்ஃபியஸ் மாட்டிக்கொள்கிறான். தலைமுறைகள் கடந்து சிறையிலிருந்து அவன் வெளியே வரும்போது, அவன் சாம்ராஜ்யமே அழிந்துபோயிருக்கிறது. அவனுக்குப் பல்வேறு சக்திகளை அளிக்கும் மந்திரப் பொருள்கள் மனிதர்களால் களவாடப்பட்டுப் பல கைகள் மாறிக் காணாமல் போயிருக்கின்றன. அவற்றைத் தேடியெடுத்து, தான் இழந்த சாம்ராஜ்யத்தை மீண்டும் உருவாக்க நினைக்கிறான் மார்ஃபியஸ். அதற்காக அவன் செய்யும் சாகசங்கள்தான் இந்தத் தொடரின் கதை.

10 எபிசோடுகள் மற்றும் 2 பார்ட்டுகள் கொண்ட ஒரு ஸ்பெஷல் எபிசோடு ஆகியவற்றைக் கொண்ட முதல் சீசன் தற்போது வெளியாகியிருக்கிறது. ஒரு எபிசோடுக்கு 15 மில்லியன் டாலர் என்ற பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது முதல் சீசன். கனவு சாம்ராஜ்யம், சாகசங்கள், பிரமாண்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் எனப் பார்க்கவே பிரமிக்க வைக்கும் தயாரிப்பு வடிவமைப்பு இதன் சிறப்பு. சேண்ட்மேனாக டாம் ஸ்டர்ரிட்ஜ் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். காமிக்ஸ் ரசிகர்கள் கற்பனை செய்திருந்த மார்ஃபியஸைக் குறை சொல்ல முடியாத அளவுக்கு உயிருடன் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

பேசும் காகங்கள், பிரமாண்ட அரங்குகள், வித்தியாசமான விலங்குகள் அசத்தும் அமானுஷ்யங்கள் என மாயாஜால செட்டப்பில் கதை கேட்க விரும்பும் நபர்களுக்கு இந்த சீரிஸ் ஒரு ஃபுல் மீல்ஸ் விருந்து. நெட்ப்ளிக்ஸில் இதைத் தமிழ் டப்பிங்கிலும் ரசிக்கலாம்.

சின்ன ஸ்கிரீன்... பெரிய பட்ஜெட்

The Boys - ரூ.90 கோடி

சூப்பர் ஹீரோக்கள் என்றாலே நமக்கு ஒரு பிம்பம் இருக்கும். அக்கிரமக்காரர்களிடமிருந்து உலகத்தைக் காக்க எந்த எல்லைக்கும் செல்பவர்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் பிரியமானவர்களைக் காக்க, உலகையே ஒரு வழி ஆக்குபவர்கள். இப்படியான சூப்பர் ஹீரோக்களின் சாகசங்களை வைத்துப் பல்லாயிரம் கோடி ரூபாய் கல்லா கட்டியிருக்கின்றன டிசி, மார்வெல் மாதிரியான காமிக்ஸ் நிறுவனங்கள். அமேசான் ப்ரைமில் வெளியாகும் `தி பாய்ஸ்' என்னும் சூப்பர் ஹீரோக்களின் கதை இதற்கு நேர் எதிரானது. ஆனாலும் மொரட்டு ஹிட் அடித்திருக்கிறது என்பதுதான் நகைமுரண். அப்படி `தி பாய்ஸ்' தொடரின் கதை என்ன? உலகைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என இந்த சூப்பர் ஹீரோக்கள் சாமான்யர்களுக்குத் தரும் தொல்லைகளோ எக்கச்சக்கம். மேலும், இத்தகைய சூப்பர் ஹீரோக்களுக்கு இயற்கையிலேயே சக்தி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்பதை ஒரு குழு அறிந்துகொள்கிறது. குழந்தைகளாக இருக்கும்போதே சிலருக்கு ஒரு மருந்து தரப்படுகிறது. அதுதான் பிற்காலத்தில் அவர்களை சூப்பர் ஹீரோக்களாக உருமாற்றுகிறது. சூப்பர் ஹீரோக்கள் செய்யும் அட்டூழியங்கள், அழிச்சாட்டியங்கள் எல்லாவற்றையும் காமெடி சம்பவங்களைக் கொட்டி எடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட `கெட்டவர்கள்' வெர்சஸ் `ரொம்ப கெட்டவர்கள்' பாணியில் திரைக்கதையை அமைத்து இதனை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். அதீத வன்முறை, வசவுச்சொற்கள் போன்றவை இதில் அதிகம் என்றாலும், சூப்பர் ஹீரோக்களை மாறுபட்ட கோணத்தில் அணுகி ரசிக்க வைக்கிறது இந்த பாய்ஸ். அதிலும் ஏற்கெனவே ஹிட் அடித்துப் பலரின் ஆதர்சமாக இருக்கும் சூப்பர் ஹீரோக்களைப் பகடி செய்துதான் இதில் வரும் சூப்பர் ஹீரோக்களின் குணநலன்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் கூடுதல் சிறப்பம்சம்.

சின்ன ஸ்கிரீன்... பெரிய பட்ஜெட்

The Umbrella Academy - ரூ.80 கோடி

பறந்து பறந்து சண்டையிட்டு உலகைக் காக்கும் சூப்பர் ஹீரோ கதைகளைத்தான் நாம் பெரும்பாலும் கேட்டிருப்போம். ஆனால், சாதாரண குடும்பங்களைப்போலவே சூப்பர்ஹீரோ குடும்பங்களிலும் முட்டல் மோதல், கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதுதான் நெட்ஃப்ளிக்ஸில் வெளிவரும் `தி அம்ப்ரெல்லா அகாடமி.’

சூப்பர்ஹீரோக்களாக வாழ்ந்து பின்னர் பிரிந்த சகோதரர்களும் சகோதரிகளும், வளர்ப்புத் தந்தையின் மறைவால் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். அவர்கள் இறந்தகாலத்துக்குத் தப்பியோடி உலகைக் காப்பாற்றுகிறார்கள். பிறகு நிகழ்காலத்துக்குத் திரும்புபவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. அவர்களுக்கு பதில், அவர்களின் தந்தை வேறு சில சூப்பர் ஹீரோக்களைத் தத்தெடுத்து `தி ஸ்பேரோ அகாடமி' நடத்திவருகிறார். இந்த மாற்றத்தால் உலகையே விழுங்கும் கருந்துளை ஒன்று நகரின் மையத்தில் உருவாகிறது. பிறகென்ன... `தி அம்ப்ரெல்லா அகாடமி' சூப்பர்ஹீரோக்கள், உருவாகியிருக்கும் புது சூப்பர்ஹீரோக்களையும் சமாளித்து, உலகையும் மீட்டார்களா என்பதே கதை.

ஒரு சீஸனுக்கு 100 மில்லியன் டாலருக்குக் குறையாத பட்ஜெட்டுடன் உருவாகியிருக்கும் இதில் சூப்பர்ஹீரோக்களின் சாகசங்களுக்குப் பஞ்சமில்லை. வெறும் ஆக்‌ஷன் மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை, அதைச் சமாளிக்க அவர்கள் போகும் எல்லை என ஓர் உணர்வுபூர்வமான கதையையும் சொல்கிறது தொடர். குறிப்பாக, `நம்பர் 5' பாத்திரத்தில் வரும் 18 வயதேயான ஐடன் கல்லாகெரின் நடிப்பு அட்டகாசம். அவருக்குத் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி, அவருக்காக மட்டுமே தொடரைப் பார்ப்பவர்களும் உண்டு.

அதீத பலம் வாய்ந்தவர், பாய்ந்து செல்லும் கத்தி, துப்பாக்கிக் குண்டுகளின் பாதையைக் கட்டுப்படுத்துபவர், வேகமாக ஓடி டைம் டிராவல் செய்பவர், எதிரில் இருப்பவர்களைத் தன் குரலாலேயே கட்டுப்படுத்துபவர், அணு ஆயுதம் அளவுக்கு வீரியம்கொண்ட ஆற்றலைக்கொண்டவர், இறந்தவர்களோடு பேசுபவர் என ஒவ்வொரு ஹீரோவுக்கும் விதவிதமான சக்திகள், அதை மையப்படுத்திய சுவாரஸ்யக் காட்சிகள் என ஒரு பக்கா என்டர்டெயினர் இந்த சீரீஸ்.

சின்ன ஸ்கிரீன்... பெரிய பட்ஜெட்

Stranger Things - ரூ.240 கோடி

நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி, உலகம் முழுக்கவே பிரபலம் என்றாலும், இந்தியாவில் அதைப் பிரபலப்படுத்தியது `ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' தொடர்தான். 2016 முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரின் 4 சீசன்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. முதல் மூன்று சீசன்களுக்குக் கிடைத்த பரவலான வரவேற்பால், நான்காவது சீசனுக்கு அதிக பட்ஜெட், ஒரு முழு சீசனை இரண்டாகப் பிரித்து இரண்டு வால்யூம்கள், ஒரு சில எபிசோடுகள் படங்களுக்கு இணையான நீளம் என இன்னும் பிரமாண்டம் கூட்டியது நெட்ப்ளிக்ஸ். அந்த வகையில் இந்த வருடம் வெளியான நான்காவது சீசனின் ஒரு எபிசோடுக்கான பட்ஜெட் மட்டுமே 30 மில்லியன் டாலர்கள்.

இந்தத் தொடரின் சிறப்பே கதை நடக்கும் காலகட்டமும், அதைப் பிரதிபலிக்கும் சிறப்பான மேக்கிங்கும்தான். 1980களில் ஹாக்கின்ஸ் என்ற கற்பனை நகரத்தில் பல அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. அங்கு நண்பர்களாகத் திரியும் ஒரு சிறுவர், சிறுமியர் கூட்டத்துக்கு இந்த அமானுஷ்யங்களில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது. நம் சாதாரண உலகத்தைப் போலவே `அப்ஸைடு டௌன்' எனக் கீழே ஓர் உலகம் இருப்பதாகவும் அங்கிருக்கும் விநோத ஜந்துகள் நம் உலகைப் பிடித்துக் கொள்ள முயல்வதாகவும் கதை அமைந்திருக்கும். அமெரிக்கா என்றாலே வில்லனாக்கப்படும் ரஷ்யா, அதே `கெட்டவன்' ரோலில் பங்காற்றுகிறது.

இந்தத் தொடரில் சீனியர் நடிகர்கள் பலர் இருந்தாலும், இதன் மையமே அதில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள்தான். லெவனாக (எல்) வரும் மில்லி பாபி பிரவுன், டஸ்டினாக வரும் கேடன் மடராஸ்ஸோ, மைக்காக வரும் ஃபின் வுல்ஃப்ஹார்ட், நான்சியாக வரும் நடாலியா டையர், மேக்ஸாக வரும் சேடி சிங்க், ஸ்டீவாக வரும் ஜோ கீரி, ராபினாக வரும் மாயா ஹாக் ஆகியோர் இதன் பிறகு உலகப் பிரபலமடைந்தனர். குறிப்பாக, ஸ்டீவ் மற்றும் டஸ்டின் கூட்டணிக்கு மிகப்பெரிய ரசிகர் படையே உருவாகியிருக்கிறது. நான்காவது சீசனில் நான்சி மற்றும் மேக்ஸ் கதாபாத்திரங்களுக்கு ஹார்ட்டின்களைப் பறக்கவிட்டனர் ரசிகர்கள். அடுத்து வரவிருக்கும் ஐந்தாவது சீசன்தான் இறுதி என்றாலும், இத்தொடர் சம்பந்தப்படுத்திய பிற கதைகளை (ஸ்பின்-ஆஃப்) உருவாக்கும் முனைப்பில் நெட்ப்ளிக்ஸ் இருக்கிறது என்பது ஆறுதலான செய்தி.

சின்ன ஸ்கிரீன்... பெரிய பட்ஜெட்

WEST WORLD - ரூ.70 கோடி

எதிர்காலத்தில் நடக்கும் இந்தக் கதையில் ஒரு பொழுதுபோக்குப் பூங்கா (Amusement Park) இருக்கிறது. அங்கே 'Hosts' (விருந்து உபசரிப்பவர் என்று பொருள்) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் தங்களைச் சாதாரண மனிதர்களாக நினைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். அந்த மொத்த பார்க்கையும் கன்ட்ரோல் செய்யும் நிறுவனம், ஒவ்வொரு ஹோஸ்ட்டும் தினமும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை புரோக்ராமாகப் பதிந்து தங்களின் கட்டளைப்படி ஓர் இடத்திலிருந்து இயக்குகிறார்கள். பணம் படைத்த மனிதர்கள் தங்களின் கேளிக்கைக்காக அந்த பார்க்கில் நுழைந்து என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். திடீரென சில ஹோஸ்ட்களுக்குச் சுயமாகச் சிந்திக்கும் திறன் வந்தால் என்னவாகும் என்பதே இதன் மையக்கரு. அப்படிச் சிந்திக்கத் தொடங்கும் ஹோஸ்ட்கள், மனிதர்கள் தங்களை வஞ்சித்து அடிமைகளாக நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்து விடுதலை பெற முயன்றால்... அப்படி விடுதலை அடைந்தபின், மனிதர்களான நம் உலகத்தை அவர்களே ஆள நினைத்தால்?

HBO தொலைக்காட்சியின் பிரத்யேகத் தயாரிப்பான இதற்காக, பிரமாண்ட பார்க், எதிர்கால உலகம் என கிராபிக்ஸ் ரீதியில் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சீசனின் பட்ஜெட்டும் 100 மில்லியன் டாலர்களைத் தாண்டுகின்றன. எவான் ரேச்சல் வுட், தாண்டிவ் நியூட்டன், ஜெஃப்ரி ரைட், எட் ஹாரிஸ், ஆரோன் பால் எனப் பல பிரபலமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பழம்பெரும் நடிகரான ஆண்டனி ஹாப்கின்ஸ் முதல் சீசனில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் வந்துபோவார். பல டைம்லைன்களில் கதை நடப்பது போன்று திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் இத்தொடரை உருவாக்கிய ஜோனதன் நோலன் மற்றும் லிசா ஜாய் தம்பதியினர். புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர்தான் இந்த ஜோனதன் நோலன்.

ஆச்சரியப்படவைக்கும் திரைக்கதை அமைப்பு, பிரமிக்க வைக்கும் தயாரிப்பு, இவற்றைத் தாண்டி தத்துவார்த்த ரீதியாகவும் இதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக வசனங்கள் அட்டகாசமாக எழுதப்பட்டிருக்கும். இந்தியாவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தத் தொடரை ரசிக்கலாம்.

சின்ன ஸ்கிரீன்... பெரிய பட்ஜெட்

Lord of the Rings: The Rings of Power - ரூ.500 கோடி

இதுநாள் வரையில் வந்த எல்லாப் பெரிய பட்ஜெட் பிரமாண்டங்களையும் பின்னுக்குத் தள்ளி, `யாருப்பா நீயி' எனக் கண்களை அகல விரிய வைத்திருக்கிறது அமேசான் ப்ரைம். உலக சினிமா விமர்சகர்கள் அனைவரும் ஒன்றுகூடிச் சொல்லும் ஒரே வாக்கியம், ``இந்தத் தொடரை எவ்வளவு பெரிய திரையில் பார்க்க முடியுமோ பார்த்துவிடுங்கள்'' என்பது தான். ஓ.டி.டி யுகத்தில் எல்லோரும் கைக்கு அடக்கமான மொபைலில் தொடர்களைக் கண்டுகொண்டிருக்க, இந்த ரிங்ஸ் ஆஃப் பவரை மட்டும் ஏன் பெரிய திரையில் காண வேண்டும் என்றால், காரணங்கள் இல்லாமலில்லை. முதல் சீசனின் பட்ஜெட் மட்டும் மூவாயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள். பணத்தை வெறுந்தண்ணீராகச் செலவு செய்பவர்களுக்கு மத்தியில், அமேசான் நிறுவனம் பணத்தை மினரல் வாட்டராக வாரி இறைத்திருக்கிறது.

முதல் சீசனின் ஒவ்வொரு எபிசோடையும் ஓவியமாய் வரைந்து வைத்திருக்கிறார்கள். எல்லாமே பிரமாண்டமாய் விரிந்து நிற்கிறது. போர்க் காட்சிகள், கடல், மலை, குள்ளர்கள், மாயாஜால வித்தைக்காரர்கள் எனப் பல மனிதர்கள். பல இடங்களில் கதை மாறி மாறி நடக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் வந்த லார்டு ஆஃப் தி ரிங்ஸ் திரைப்படங்களுக்கும், ஹாபிட் திரைப்படங்களுக்கும் முன்பு நடக்கும் கதையை விவரிக்கிறது இந்தத் தொடர். அதாவது கிட்டத்தட்ட அந்த இரு கதைகள் நடப்பதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதன் கதைக்களத்தை அமைத்திருக்கிறார்கள். டோல்கீன் உருவாக்கிய இந்த உலகில் இதுவரையில் வெளிவந்த புத்தகங்கள், சினிமா எல்லாமே அதிரிபுதிரி ஹிட் என்பதால், இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. ஒரே நேரத்தில் ஆறு ஆசிரியர்கள் பாடங்களை எடுத்ததுபோல் முதலிரண்டு எபிசோடுகள் கொஞ்சம் நம்மைத் திக்குமுக்காட வைத்தாலும், அடுத்தடுத்த எபிசோடுகளில் புதிர்களும், வில்லன் யார் என்கிற அறிமுகமும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. வசனம், இசை, லைட்டிங், விஷுவல்ஸ், வித்தியாசமான மனிதர்கள் எனப் பலவற்றை ஒரே திரையில் காண, நிச்சயம் நீங்கள் தி ரிங்ஸ் ஆஃப் பவரை அமேசான் ப்ரைமில் கண்டு களிக்கலாம். தமிழ் சப் டைட்டில், தமிழ் ஆடியோ என எல்லா வசதிகளிடனும் இந்தத் தொடரை வெளியிட்டிருக்கிறார்கள்.

சின்ன ஸ்கிரீன்... பெரிய பட்ஜெட்

House of the Dragon - ரூ.150 கோடி

எட்டு ஆண்டுகள் பலரின் ஆதர்சமாக இருந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்னும் மெகா ஹிட் தொடரின் முன் கதை இது. இதுவும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போலவே ஹாட்ஸ்டாரில்தான் வெளியாகிறது. அந்தத் தொடரில் பலருக்கும் பிடித்தமானதொரு கதாபாத்திரம் டெனேரியஸ் டார்கேரியன். கிட்டத்தட்ட டார்கேரியன் குடும்பத்தின் கடைசி வாரிசு. ஒரு காலத்தில் தேசங்களைக் கட்டி ஆண்ட டார்கேரிய வம்சம் எப்படி இப்படி ஆனது, அவள் எப்படி மீண்டும் தன் இழந்த சாம்ராஜ்ஜியத்தை மீட்கிறாள் என்பதாக அவளின் பார்வையில் ஒரு கதை விரியும். டெனேரியஸ் டார்கேரியன் பிறப்பதற்கு 172 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையைச் சொல்கிறது, ஹாட்ஸ்டாரில் வெளியாகிக்கொண்டிருக்கும் இந்த ஹவுஸ் ஆஃப் த டிராகன். டிராகனை அடக்கி ஆளும் திறன் கொண்ட டார்கேரிய வம்சம், எப்படி ஒரு காலத்தில் ஒட்டுமொத்த 'அயர்ன் த்ரோன்'-ஐயும் ஆட்சி புரிந்தது, அதன் வீழ்ச்சி எங்கிருந்து தொடங்கியது என்பதைப் பற்றியெல்லாம் விவரிக்கிறது இந்தத் தொடர்.

கேம் ஆஃப் த்ரோன்ஸைப் போல் அல்லாமல், இதன் நேரக்கோடு மிக வேகமாக நகரும் ஒன்று. அதனாலேயே முதலிரண்டு எபிசோடுகளுக்குள்ளாகவே அவ்வளவு மாற்றங்கள். அதேபோல், கேம் ஆஃப் த்ரோன்ஸில் பல குடும்பங்களைக் காட்ட வேண்டியிருந்தது. இதில் அந்தச் சிக்கல் எல்லாம் இல்லை. டார்கேரிய குடும்பத்தைப் பிற குடும்பங்களின் தலையீடுகள் எப்படி பாதிக்கின்றன என்பதாகவே நகரும் கதை என்பதால், பெரிய அளவில் குழப்பம் எதுவும் இல்லாமல் நேர்க்கோட்டிலேயே கதை பயணிக்கிறது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் பிரபலமானதற்கு மற்றுமொரு காரணம், அதில் குவிந்து கிடக்கும் பாலியல் காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும்தான். அப்படிப்பட்ட விஷயங்களையும் இதில் பெரிய அளவில் குறைத்திருக்கிறார்கள். உண்மையில் புத்தகத்தில் இல்லாத விஷயங்களைக்கூட பாலியல் ரீதியில் அதிக ரீச் தேவை என்பதற்காக கேம் ஆஃப் த்ரோன்ஸில் சில காட்சிகள் திணிக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதுண்டு. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆரம்பித்த இடத்தில் இந்தத் தொடரின் முடிவு இருக்கும் என இதன் மூலக்கதைகளை எழுதிய ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் கூறியிருப்பதால், ரசிகர்கள் அந்தக் காட்சிக்காக இப்போதிருந்தே வெயிட்டிங்.