
தொடர்ந்து அவரோட பயணம் பண்ணவும் விரும்புவேன். ஏன்னா, ரொம்பவே நட்பா மட்டுமல்ல, எளிமையும் இனிமையுமாவும் இருப்பார். அவரால படப்பிடிப்பில் யாருக்கும் எந்த சிரமமும் நேர்ந்ததில்ல.
சரத்பாபு என்றாலே சட்டென நினைவுக்கு வருவது மலர்ந்த புன்னகையும் அவரது அமைதி தவழும் முகமும்தான். 1970 காலகட்டங்களில் கதாநாயகனாக கவனம் ஈர்த்தவர். மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்' படத்தில் இடம் பெற்ற ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாடலில் அவரது உற்சாகம் நம்மைக் காதலில் கரைத்துவிடும். பின்னாளில், நண்பராக, குணச்சித்திர நடிகராக மனதில் வந்து ஒட்டிக்கொண்டவர் இன்று நம்மிடையே இல்லை. உடல்நலக்குறைவு காரணமாக அவரது 71-வது வயதில், காலமானார். அவரது நினைவலைகளை இங்கே கனத்த இதயத்துடன் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

‘‘சரத்பாபு சாரோட கிட்டத்தட்ட 21 வருட நட்பு. ‘அண்ணாமலை' படத்தின்போதுதான் அவரை முதன்முதலா சந்திச்சேன். ரஜினி சாரோட நண்பனா இருந்து எதிரியா மாறுகிற அசோக் கதாபாத்திரத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு நினைக்கும்போது, ‘இவர் ரொம்பப் பொருத்தமா இருப்பார்'னு சொல்லி அவரை ரஜினி சார்தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் படத்துக்கு அப்புறம், என்னோட மிகப்பெரிய நண்பரானார். அதன்பின், நான் இயக்கிய எந்த மொழிப் படமானாலும் அவருக்கும் ஒரு இடம் உண்டு. கதை எழுதும்போதே, அவரையும் கண்டிப்பா மனசுல வச்சுக்குவேன்.

தொடர்ந்து அவரோட பயணம் பண்ணவும் விரும்புவேன். ஏன்னா, ரொம்பவே நட்பா மட்டுமல்ல, எளிமையும் இனிமையுமாவும் இருப்பார். அவரால படப்பிடிப்பில் யாருக்கும் எந்த சிரமமும் நேர்ந்ததில்ல. புரொடக்ஷன்ல அவ்ளோ ஃப்ரெண்ட்லியா இருப்பார். வேறு படங்கள்ல அவர் பிஸியான சமயத்துல வேணும்னா, அவர் என் படங்கள்ல நடிக்க முடியாமல் போயிருக்கலாம். அப்படி ஒருசில படங்கள்லதான் அவர் மிஸ் ஆகியிருப்பார். என்னோட அத்தனை படங்களிலுமே அவரைக் கொண்டு வந்திருப்பேன்.
அவரோடு பணியாற்றியதில் இனிமையான தருணங்கள் நிறைய இருக்கு. மறக்க முடியாத விஷயங்களும் இருக்கு. உதாரணமாக தெலுங்கில் ராமோஜிராவ் கம்பெனிக்காக ‘வசுந்துரா'ன்னு ஒரு படம் பண்ணினேன். சரத்பாபு சார்தான் முக்கிய கதாபாத்திரம். அப்பாவுக்கும் மகளுக்குமான கதைதான். ஒரு காட்சியில் அவர் ரொம்ப எமோஷனல் ஆகி, கோபமாகக் கத்துற சீன் எடுத்தோம். அந்தக் காட்சி எடுத்து முடிச்சதும், அவர் அப்படியே அமைதியில் உறைஞ்சிட்டார். எங்ககிட்ட எதுவும் பேசாமல் ஓரமாக ஓரிடத்துல போய் அமர்ந்துட்டார். அவர் ஏன் சைலன்ட் ஆனார்னு எனக்கு எதுவும் புரியல. அவர் பக்கத்துல போய் ‘என்னாச்சு'ன்னு கேட்டேன். ‘இதுவரைக்கும் நான் யாரையும் அதிர்ந்து பேசினதுகூட கிடையாது. நிஜத்துல இவ்ளோ கோபமா யாரையும் பேசினதும் கிடையாது. நீங்க என்னை உசுப்பி விட்டு, இவ்ளோ கோபமா பேச வச்சிட்டீங்க'ன்னு சொன்னார். அப்படி ஒரு அன்பான மனுஷன். அந்தப் படத்துல அவர் அவ்ளோ எமோஷனலா பேசி நடிச்சதுக்கு அவருக்கு விருதும் கிடைச்சது.

ரஜினி சாரும் அவருமே ரொம்ப வருஷ நண்பர்கள். அந்த நட்பு படப்பிடிப்புத் தளத்திலும் பிரதிபலிக்கும். அவங்க ரெண்டு பேரும் பேசிக்கறது, ஜோக்கடிச்சு மகிழ்றது அவ்ளோ இனிமையான தருணங்களா இருக்கும். அவங்க இருக்கற இடமே கலகலன்னு இருக்கும். ரெண்டு பேரையுமே பார்க்கறப்ப ரஜினி சார், சரத்பாபு சார்னு தெரியாது. அண்ணாமலை - அசோக்னுதான் சொல்வாங்க. எந்த டயலாக்கைக் கொடுத்தாலும் ‘ஏன் இப்படி ஒரு டயலாக்'னு ரெண்டு பேருமே கேள்வி கேட்க மாட்டாங்க. ரெண்டு பேர்கிட்டேயுமே புரிதலும் நட்பும் அதிகம். காட்சிகளிலும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து நடிப்பாங்க. ‘சரத், நீ இதை இப்படி ரியாக்ட் பண்ணிக்கிறீயா, நான் அப்படி பண்ணிக்கறேன்'னு ரஜினி சார் சொல்வார். இவரும் ‘சூப்பர். அப்படியே பண்ணிடலாம்'னு சொல்லி நடிப்பார். ஆரோக்கியமான நட்பா இருக்கும். ‘முத்து'வில்கூட அவரைக் கூப்பிட்டு நடிக்க வச்சிருப்பார் ரஜினி சார். அவருக்கு சரத்பாபு சாரை ரொம்பப் பிடிக்கும்.
சரத்பாபு சார், எப்போதும் போதுமான பயிற்சிகள் செய்து உடலைக் கட்டுக்கோப்பா வச்சிருப்பார். ரொம்பவே ஃபிட் பர்சன், அப்படி ஒருவர் 71வது வயதில் இறந்துட்டார் என்பதே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. அவரோட இத்தனை வருட நட்புல, அவர் எனக்கு ஒரு சகோதராகவே இருந்திருக்கார்னுதான் சொல்லணும். ரொம்ப அருமையான மனிதர்.

இப்படி ஒரு செய்தி வர்றதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் அவரைப் பற்றி இதுபோல சொன்னாங்க. அப்பவே அதிர்ந்தேன். அப்புறம், ‘அவர் நல்லா இருக்கார். சிகிச்சையில் இருக்கார். அவர் உடல்நலம் முன்னேற்றம் அடையறார்'னு எல்லாம் கேள்விப்பட்ட பிறகு நிம்மதியா இருந்துச்சு. ஆனா, அவர் நம்மிடையே இல்லைன்னு உறுதியா சொல்லப்படும்போது மனசு கஷ்டமா இருக்கு. ஒரு சகோதரரை இழந்த உணர்வில் இருக்கேன்'' - துயரில் மூழ்குகிறார் சுரேஷ்கிருஷ்ணா.