சினிமா
Published:Updated:

“காவல்துறையை ஏமாற்றித்தான் படம் எடுத்தோம்!”

கிட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
கிட்டு

தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையே ஒரு பெரும்பயணம்தான். இனம், மொழி, சுதந்திரம், பாதுகாப்புக்காக அத்தனை எல்லைகளையும் உடைச்சிட்டு ஒரு மனுஷன் தேடிப் போன பயணம்தான் இது.

ஒரே ஒரு படம் ‘மேதகு.’ ஓ.டி.டி-யில் வெளியாகி அதுவே பேச்சாகியிருக்கிறது. ஆளாளுக்குப் பிரபாகரன் வாழ்க்கையைப் படமெடுக்கப்போகிறோம் எனச் சொல்லிக்கொண்டிருக்க, ‘இதோ வந்துவிட்டேன்’ என ‘ஹிட்’ அடித்திருக்கிறார் இயக்குநர் கிட்டு. அச்சு அசல் பிரபாகரனைக் கண்முன் நிறுத்தியிருக்கிறார் அறிமுக நடிகர் குட்டிமணி. ‘மேதகு’வின் அத்தனை சிறப்புகளையும் மொத்தமாகத் தாங்கிய கிட்டு, குட்டிமணியோடு நடந்தது இந்த உரையாடல்.

“வயித்துல இருக்கிற வரைதான் வலி. குழந்தை நல்லபடியாக வெளியே வந்ததும் ஒருவித நிறைவான சுகம் இருக்கும்னு சொல்வாங்க. ‘மேதகு’ வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றதும் அந்த சுகத்தை உணர்றேன். ரொம்ப நல்ல படம் பண்ணியிருக்கேன்னு வேறு யாரும் சொல்றதுக்கு முன்னாடி எனக்கே தெரிஞ்சது. ‘மேதகு’ எனக்குள்ளே கூட நிறைய நல்ல மாற்றங்களைத் தந்த படம். வேடிக்கையும் குறும்புமா இருந்த மனுஷனை இந்த ‘மேதகு’ பண்படுத்தியிருக்கார்” - உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார் இயக்குநர் கிட்டு.

 “காவல்துறையை ஏமாற்றித்தான் படம் எடுத்தோம்!”

“மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற மஞ்சம்பட்டி கிராமம்தான் என் சொந்த ஊர். தாத்தா கூத்துக் கலைஞர். அந்தக் கலை அனுபவத்தின் தொடர்ச்சிதான் நான். எம்.டெக் படிச்சிட்டு காலேஜ்ல வேலை பார்த்தேன். சினிமாமீதான ஆர்வத்தில் வெளியே வந்துட்டேன். இந்தப் படத்தோட க்ளைமாக்ஸை வெச்சு The Rise of Karikalan-ன்னு ஒரு ஷார்ட் பிலிம் எடுத்தேன். அதைப் பார்த்துட்டு ‘இதுவே இன்னும் பெரிய திரையில் சினிமாவா வந்தா நல்லாருக்குமே’ என்று நண்பர்கள் சொல்ல ஆரம்பிச்சாங்க. அந்த எண்ணம் செயல்பாட்டுக்கு வர சுமேஷ் குமார், குமார், ரமேஷ் அண்ணன்கள் உதவ முன்வந்தார்கள்.

தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையே ஒரு பெரும்பயணம்தான். இனம், மொழி, சுதந்திரம், பாதுகாப்புக்காக அத்தனை எல்லைகளையும் உடைச்சிட்டு ஒரு மனுஷன் தேடிப் போன பயணம்தான் இது. விடுதலைப் புலிகள் இயக்கம், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். வெளிப்படையாக அதைப் பற்றி சினிமா எடுக்கவோ, தணிக்கைக்குழுவுக்குக் கொண்டுபோய் முழுசா மீளவோ முடியாத நிலைமை. தலைவர் இயக்கத்திற்காக ஆயுதம் ஏந்துகிற சூழலுக்கு வரும் வரைக்கான ஒரு பதிவு இது. நாங்க ஆரம்பிக்கும்போதே ‘மேதகு’ என போஸ்டர்கள் வெளியிட்டு விட்டோம். படப்பிடிப்புக்குப் போனா பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. காவல்துறைக்கு இதன் விவரம் தெரியாமல் இருக்கணும். அதனால் கையில் ரெண்டு ஸ்கிரிப்ட் வெச்சிருப்போம். ஒன்று ‘மேதகு’, இன்னொன்று சாதா ஸ்கிரிப்ட்டாக இருக்கும். உளவுத்துறையினர் வந்தால் சாதா ஸ்கிரிப்டைக் காண்பித்து, ‘இது ஒரு டாக்குமென்டரி’ எனச் சொல்லுவோம். அங்கே படம் எடுத்ததற்கான எந்தத் தடயமும் இருக்காது. இப்படி ஒளிந்து ஒளிந்துதான் படத்தை எடுக்க முடிந்தது. கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. தலைவர்மேல் பற்றுகொண்ட ஆர்வலர்கள் அத்தனை பேரும் துணை நின்றார்கள்.

 “காவல்துறையை ஏமாற்றித்தான் படம் எடுத்தோம்!”
 “காவல்துறையை ஏமாற்றித்தான் படம் எடுத்தோம்!”

ரகசியமாகவும், கதை காவல் துறைக்குத் தெரிந்து விடாமலும் எடுத்ததால் நாலஞ்சு ஷெட்யூல் ஆனது. எல்லாருமே 30 வயதுக்குள்ளான இளைஞர் வட்டம். விறுவிறுப்பாக அடுத்த இடம் நகரவும் துரிதப்படுத்தவும் எங்களால் முடிஞ்சுது.

இப்போதிருக்கிற இளைஞர் களுக்கு ஈழம் குறித்த புரிதல் முழுமையாக இல்லை. இறுதிக்கட்டப் போரின் கொடுமைகள், போர்க் காட்சிகள், அதன் கொடூரங்கள் மட்டுமே தெரிஞ்ச பிம்பங்கள். ஆனால் ஈழத்தமிழர்களின் இந்தப் போராட்டம் ஏன் தொடங்கியது என்று சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.

படத்தை நேர்த்தியாகக் கொண்டுவர முதலில் தலைவரின் அடையாளம் கொண்ட ஒருவர் வேண்டும். அதற்கான மெனக்கெடல் சொல்லி மாளாது. ஒருவர் தன் இளமைக்காலத்தைத் துறந்து இந்த முடிவை நோக்கிச் செல்கிறார் என்பதைச் சொல்லக் கூடியவகையில் வேகமும் இருக்க வேண்டும்; பிரபாகரனைப் போன்ற தோற்றமும் வேண்டும். அவர் ரெகுலர் ஹீரோவாக இருக்கக்கூடாது. அப்படியே கதையை, உணர்வை ஏந்திக்கொண்டு எதார்த்தமாக நடிக்க வேண்டும். அப்போதுதான் நம்ம குட்டிமணி வந்தார். முதலில் அவர் அனுப்பியிருந்த படம் சரியாக இல்லை. தாடியும் மீசையுமாக இருந்ததால் பக்கத்தில் இருந்த சலூனுக்கு அனுப்பி தாடி மீசையை எடுக்கச்சொன்னேன். எடுத்துவிட்டு ஒரு படத்தை வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார்கள். நான் நாற்காலியிலிருந்து எழுந்து ‘தலைவர் கிடைத்துவிட்டார்’ என்று கூவி விட்டேன். பிறகு ‘தலைவரை பத்திரமாக அழைத்து வாருங்கள்’ என்றுதான் சொன்னேன்” என்று கிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார், ‘மேதகு’வாக மாறிய குட்டிமணி.

“எனக்கு சினிமாதான் இஷ்டம். ‘மேதகு’விற்கு நடிகர்கள் தேடுறாங்கன்னு தகவல் கிடைத்ததும் அவசரத்தில் கிடைத்த படத்தை அனுப்பினேன். அதில் கிட்டு அண்ணனுக்குத் திருப்தியில்லை. அப்புறம் தாடி மீசையெல்லாம் எடுத்துவிட்டுப் படம் அனுப்பினால், ‘நீ தான் தலைவர்’ என்கிறார்கள். சிறு வேடம் கிடைக்குமா என்று போனவனுக்குப் பெரிய அதிர்ஷ்டம்.

தலைவராக நடிக்க வேண்டிய பெரும்பொறுப்பை உணர்ந்தேன். வழக்கமான ஹீரோ கிடையாது. விடுதலை உணர்வை மனதில் வைக்க வேண்டும். எதார்த்தத்திலிருந்து துளி பிசகக்கூடாது. புதுசா ஒரு உலகத்துக்குப் பயணமாகணும். ஈழத் தமிழ் பேச ரெண்டு மாசம் பயிற்சி நடந்தது. நல்ல உடல்கட்டுக்கு மாறத் தலைப்பட்டேன். நிதானமும் பொறுமையும் அடியாழம் வரை போய், தலைவராகவே என்னை நினைச்சுக்கிட்டேன். இதோ இப்போது எல்லோரும் பாராட்டுகிறார்கள். தலைமேல் தூக்கிக் கொண்டாடுகிறார்கள். ‘ஈழத்திற்கு வாங்க தலைவரே’ என சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள். 360 டிகிரியில் தலைவரை அப்படியே கொண்டு வந்துவிட்டேன் என்று உலகமெங்கும் அலைபேசியில் அழைத்துச் சொல்கிறார்கள். ‘அப்படியே தலைவரை நேரில் பார்ப்பது போலிருக்கிறது’ என அழுகிறார்கள். எல்லாவற்றுக்கும் கிட்டு அண்ணனுக்குத்தான் என் அன்பைச் சொல்ல வேண்டும்” என, இயக்குநரின் கரம் பற்றுகிறார் குட்டிமணி.

வழக்கமான ஹீரோ கிடையாது
வழக்கமான ஹீரோ கிடையாது

‘மேதகு’ திரைப்படம் கவனம் பெற்றுவரும் சூழலில், இயக்குநர் கிட்டுவின் சமூகவலைதளப் பதிவுகள் சர்ச்சைக்குள்ளானது குறித்துக் கேட்டேன்.

“முன்பு திராவிடச் சித்தாந்தங்களை முற்றாக ஒதுக்கியிருந்தேன். நையாண்டியாகச் சில பதிவுகள் போட்டேன். அது அரசியல் விமர்சனமாக இருந்தது; சமயங்களில் தனிப்பட்ட விமர்சனமாகவும் ஆகிப்போச்சு. அடுத்தடுத்து சினிமாங்கிற இடத்துக்கு வந்தபோது அதிலிருந்து மீண்டு வந்துட்டேன். அப்படித் தாண்டி வரும்போது, அவங்களை வெறுமனே விமர்சனம் செய்வது மட்டுமே அரசியல் கிடையாதுன்னு புரிஞ்சது. அப்படியும் அந்தப் பதிவுகள் யாரையும் சங்கடப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிட வேண்டுகிறேன். இப்போது என் பழைய பதிவுகள் சில மாற்றப்பட்டு வெளியாவது வேதனை அளிக்கிறது. அதைப் பெரிதுப்படுத்தாமல் விட்டுவிட்டு மக்கள் ‘மேதகு’வைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். ‘மேதகு’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியிடுவதற்கான எண்ணமிருக்கிறது. அது கைகூடும்!” என்கிறார் கனவுகள் மிதக்கும் கண்களுடன்.