Published:Updated:

Michael Review: `ஆமா, இது அதுல்ல?' இது கேங்ஸ்டர் படமா, இல்லை அந்த ஜானர் படங்களின் ஸ்பூஃப் வெர்ஷனா?

Michael | மைக்கேல்

அதே டெய்லர், அதே வாடகை பாணியில் அதே பம்பாய், அதே லொக்கேஷன்கள் எனப் பழைய கேங்ஸ்டர் படங்களையே மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது இந்தப் படத்தின் கதைக்களம். 'அதே மாதிரி எடுக்கலாம்' என்பதை 'அதையே எடுக்கலாம்' எனப் புரிந்துகொண்டார்கள் போல!

Published:Updated:

Michael Review: `ஆமா, இது அதுல்ல?' இது கேங்ஸ்டர் படமா, இல்லை அந்த ஜானர் படங்களின் ஸ்பூஃப் வெர்ஷனா?

அதே டெய்லர், அதே வாடகை பாணியில் அதே பம்பாய், அதே லொக்கேஷன்கள் எனப் பழைய கேங்ஸ்டர் படங்களையே மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது இந்தப் படத்தின் கதைக்களம். 'அதே மாதிரி எடுக்கலாம்' என்பதை 'அதையே எடுக்கலாம்' எனப் புரிந்துகொண்டார்கள் போல!

Michael | மைக்கேல்
கேங்ஸ்டர் படங்கள் இந்திய சினிமாவுக்குப் புதிதல்ல. `நாயகன்' போன்ற எதார்த்தம் கலந்த கேங்ஸ்டர் படங்கள் தொடங்கி, சமீபத்திய `கே.ஜி.எஃப்' போன்ற நாயக பிம்ப கேங்ஸ்டர் படங்கள் வரை நிறையவே உதாரணங்கள் உண்டு. அதே பார்முலாவில் வந்திருக்கும் மற்றுமொரு பேன் இந்திய கேங்ஸ்டர் படம்தான் `மைக்கேல்'. ஆனால், இது எதார்த்தம் பேசுகிறதா, நாயக பிம்பத்துக்குப் பின்னால் நிற்கிறதா, அல்லது இரண்டும் இல்லாமல் சிக்கித் தவிக்கிறதா?

1980களின் இறுதியில் பம்பாயில் கால் வைக்கும் மைக்கேலுக்கு (சந்தீப் கிஷன்) குருவாகிறார் கேங்க்ஸ்டரான குருநாத் (கௌதம் வாசுதேவ் மேனன்). தன் உயிரை இரண்டு முறை காப்பாற்றும் மைக்கேலுக்கு ஒரு முக்கியமான வேலையைத் தருகிறார் குருநாத். காதல் வயப்படும் மைக்கேல், கொடுத்த வேலையிலிருந்து பாதை மாறிப் போக, அடுத்தடுத்து நடக்கும் களேபரங்களும், மைக்கேல் மறைத்து வைத்திருக்கும் ரகசியமும்தான் இந்தப் படத்தின் கதை.

Michael | மைக்கேல்
Michael | மைக்கேல்

மைக்கேலாக சந்தீப் கிஷன் ஃபிட்டான சிக்ஸ்பேக் நாயகனாக அலட்டல் இல்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். முழு நீள ஆக்ஷன் படத்துக்கான உடல்மொழி சிறப்பாக வந்திருக்கிறது என்றாலும் காதல் எக்ஸ்பிரஷன்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கேங்ஸ்டர்களின் தலைவராக கௌதம் வாசுதேவ் மேனன். கூலாகப் பிரச்னைகளைக் கையாண்டு கவனம் பெறுபவர், கோபப்படும்போது முகபாவங்களுக்காக இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

கௌரவத் தோற்றத்தில் சண்டை செய்ய மட்டும் அட்டெண்டன்ஸ் போடுகிறார் விஜய் சேதுபதி. அவரின் இந்தப் பாத்திரத்தில் இருக்கும் ஆழம்கூட, அவருடன் வரும் வரலட்சுமியின் பாத்திரத்தில் இல்லை. நாயகி தீராவாக திவ்யான்ஷா கௌசிக் தன் நடனத்தால் ஈர்க்கிறார். மற்றபடி அவருக்கு அழுவதைத் தவிர வேறு பணியேதும் இல்லை.

'கே.ஜி.எஃப்' பாணியில் நாயகனைப் புகழ்ந்து பில்டப் ஏற்றுவதற்காக மட்டுமே அய்யப்பா பி.சர்மாவின் பாத்திரத்தை எழுதியிருக்கிறார்கள்போல. ஆனால், அந்த பில்டப்புக்கு ஏற்ற எதையும் செய்யாமல் வெறுமென சண்டை மட்டுமே போடுகிறார் நாயகன் மைக்கேல். நாயக பிம்பம் வழி என்றானபின், மாஸ் காட்சிகளில் இன்னமும் புத்திசாலித்தனமாக இறங்கி அடித்திருக்கலாமே?!

Michael | மைக்கேல்
Michael | மைக்கேல்
அதே டெய்லர், அதே வாடகை பாணியில் அதே பம்பாய், அதே லொக்கேஷன்கள் எனப் பழைய கேங்ஸ்டர் படங்களையே மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது இந்தப் படத்தின் கதைக்களம். `அதே மாதிரி எடுக்கலாம்' என்பதை `அதையே எடுக்கலாம்' எனப் புரிந்துகொண்டார்கள் போல! `நாயகன்', `ஜான் விக்', `கே.ஜி.எஃப்' தொடங்கி சமீபத்திய `வெந்து தணிந்தது காடு' வரை பல படங்கள் நினைவுக்கு வந்துபோகின்றன.

இறுதியில் வரும் 'Filmography' கார்டில் இடம்பெறாமல் விட்ட படங்களின் பெயர்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. இதனாலேயே ஒரு கட்டத்தில், 'இது கேங்ஸ்டர் படங்களின் ஸ்பூஃப் வடிவமோ' என்றுகூட எண்ணவைக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், கதையில் இல்லாத புதுமை. மேக்கிங்கிற்காக மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி ஸ்க்ரிப்ட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

விறுவிறு ட்ரீட்மென்ட்டில் ஒரு கேங்ஸ்டர் கதை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டும் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது. ஸ்பீட் பிரேக்கராக வரும் ரொமான்ஸ் காட்சிகள் தவிர்த்து, படம் எங்கும் தேங்கி நிற்காமல் பயணிக்க முக்கியக் காரணம் சாம் சி.எஸ்-சின் பின்னணி இசை. சுமாரான சண்டைக் காட்சிகள், ட்விஸ்ட்களுக்குக் கூட தன் இசையால் வேறு வடிவம் கொடுத்திருக்கிறார். அதேபோல கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவு, ஒரு பீரியட் கேங்ஸ்டர் கதைக்கு ஏற்றவாறு சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில் ஜாலம் செய்திருக்கிறது. சத்யநாராயணின் படத்தொகுப்பும் அதற்குப் பக்கபலமாக நின்றிருக்கிறது.

ஸ்டன்ட் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் சிறப்பு என்றாலும் நாயகனைத் துளைக்காத குண்டுகள், ஒருவர் பின் ஒருவராக வரிசையாக ஓடி வந்து அடிவாங்கும் அடியாட்கள் எனப் பார்த்துப் பழகிய பல விஷயங்கள் இதிலும் உண்டு. அதேபோல பேன் இந்தியா படம், தெலுங்கு - தமிழ் என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட பைலிங்குவல் என்றெல்லாம் சொன்னாலும் லிப் சின்க் பிரச்னைகள் ஏராளம். விஜய் சேதுபதி, கௌதம் மேனன் க்ளோசப் காட்சிகள்கூட தெலுங்குப் படத்தின் தமிழ் டப்பிங் உணர்வையே கொடுக்கின்றன.

Michael | மைக்கேல்
Michael | மைக்கேல்

இரண்டாவது பார்ட்டுக்கு லீடுடன் முடியும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி, அப்படியே 'கே.ஜி.எஃப் - 1' க்ளைமாக்ஸின் ஜெராக்ஸ். நாயகன் வெள்ளை சட்டையில் ரத்தக்கறையுடன் வந்து ரவுடிகளைச் சந்திக்கும் அந்த இறுதிக் காட்சியில் 'ரோலக்ஸ்' என்ற குரல் வேறு தியேட்டர் எங்கும் ஒலிக்கிறது. மிடில பாஸ், ஓரளவுக்குத்தான்! நாயகன் சொல்லும் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் யூகிக்கக்கூடிய ஒன்றே!

கடின உழைப்பை மேக்கிங்கில் போட்ட அளவுக்குக் கொஞ்சம் கதையிலும், திரைக்கதையிலும் போட்டிருந்தால் ஒருவேளை இந்த `மைக்கேல்' தனித்துத் தெரிந்து கவனம் ஈர்த்திருப்பான்.