சினிமா
தொடர்கள்
Published:Updated:

மிரள் - சினிமா விமர்சனம்

மிரள் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மிரள் - சினிமா விமர்சனம்

பார்வையாளர்களைத் திசைதிருப்ப ஒரு ஹாரர் படத்தில் என்னென்ன தந்திரங்கள் செய்வார்களோ, அவையெல்லாம் படத்தில் இருக்கின்றன

அமானுஷ்ய சக்திகளால் ஏற்படும் பயத்தை சாதாரண மனிதர்கள் பயன்படுத்திக்கொண்டு விளையாடினால்...அதுதான் ‘மிரள்.'

பரத்தும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ராஜ்குமாரும் கட்டுமான நிறுவனத்தின் பார்ட்னர்கள். பரத் மனைவி வாணிபோஜனுக்கு சில அமானுஷ்ய அனுபவங்கள் நிகழ, அதைச் சரிசெய்ய வாணிபோஜன் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் செல்கிறார்கள். பிசினஸ் காரணமாகச் சென்னைக்குத் திடீரென்று கிளம்ப வேண்டிய சூழல். வழியில் பல அமானுஷ்ய சம்பவங்கள் துரத்த, பரத் குடும்பம் ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள், பொட்டல்வெளியின் ஓரத்துக்கே ஓடுகிறார்கள். இந்த மரண விளையாட்டிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சில பல ட்விஸ்ட்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.சக்திவேல்.

மிரள் - சினிமா விமர்சனம்

தன் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் மனச்சோர்வு, அமானுஷ்ய சம்பவங்களால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரைக் காக்க ஓடும் ஓட்டம், மீள்வதற்கான பரிதவிப்பு ஆகியவற்றை இயல்பாய்ப் பிரதிபலித்துப் படத்தைத் தாங்குகிறார் பரத். மோசமான அனுபவங்களால் தாக்குண்டு சோகமும் அதிர்ச்சியுமான உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கிறார் வாணிபோஜன். ராஜ்குமார் பற்றிய ட்விஸ்ட் அதிர்ச்சியளிக்கும் விதம் என்றாலும் அதற்கான எந்தத் தடயமும் அவர் பாத்திரப்படைப்பிலும் இல்லை; அவர் நடிப்பிலும் இல்லை. கே.எஸ்.ரவிக்குமாரின் பாத்திரப்படைப்பில் ஏகப்பட்ட குழப்பங்கள்.

அதிர்ச்சியை மேலும் மேலும் கிளறுகிறது எஸ்.என்.பிரசாத்தின் இசை. மனிதர்கள் யாருமற்ற வெட்டவெளியில் நடக்கும் அமானுஷ்ய அதிர்ச்சிச் சம்பவங்களைச் சுற்றிச் சுற்றிப் படம்பிடித்திருக்கிறது சுரேஷ்பாலாவின் ஒளிப்பதிவு. ஆர்.கலைவாணனின் எடிட்டிங் விறுவிறுப்பைக் கூட்ட உதவியிருக்கிறது.

பார்வையாளர்களைத் திசைதிருப்ப ஒரு ஹாரர் படத்தில் என்னென்ன தந்திரங்கள் செய்வார்களோ, அவையெல்லாம் படத்தில் இருக்கின்றன. ஆனால் அவை வெறுமனே உல்லுலாயிதான் என்று யாரும் எளிதில் யூகிக்க முடிவது பெரிய பலவீனம். ஏதோ அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்பது முன்கூட்டியே தெரிந்தாலும் அதற்கான நீண்டநேர பில்டப்கள் பொறுமையைச் சோதிக்கின்றன. படத்தின் இரண்டாம் பாதியில் அரைமணிநேரம் மிரட்டும் சம்பவங்கள்தான் சுவாரஸ்யம். ஆனால் அதற்காகச் சொல்லப்படும் ட்விஸ்ட், யார் அதைச் செய்தது போன்றவற்றில் நம்பகத்தன்மை இல்லை. ஒரு கொலை நடந்தால் அதுகுறித்து விசாரணை நடந்துதான் ஆகவேண்டும் என்பதுகூடத் தெரியாத போலீஸ் அதிகாரியாக கே.எஸ்.ரவிக்குமார் பாத்திரம் இருப்பது ரொம்பவே சிறுபிள்ளைத்தனம். ஒட்டுமொத்தப்படத்தையும் தலைகீழாய்த் திருப்பிப்போட்ட ட்விஸ்ட் இருக்கட்டும், ஆனால் இவையெல்லாம் ஏன் பரத்துக்கு ‘நிகழ்கின்றன' என்பதற்கு கே.எஸ்.ரவிக்குமார் சொல்லும் காரணம், படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்க்கிறது.

மிரள் - சினிமா விமர்சனம்

நம்பகமான கதையும் வலுவான திரைக்கதையும் இருந்திருந்தால் இன்னுமே மிரட்டியிருக்கலாம்.