
பக்கா ஆக்ஷன் படம் என்பதைப் பொளேரெனப் புரியவைத்தது துப்பாக்கியோடு விஜய் இருக்கும் படமும் டிசைனும்.
* விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானாலே சர்ச்சைகள் வரிசைகட்டுவது வழக்கம்தான். ‘தமிழில் தலைப்புவைத்தால் வரிவிலக்கு என்கிற கோரிக்கையை வலியுறுத்திக்கொண்டிருக்கும்போது, இந்த ஆங்கிலத் தலைப்பு அவசியமா?’ எனக் கண்டனங்கள் கிளம்பிவிட்டன. விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வன்னி அரசு ட்விட்டரில் பதிவிட, ரசிகர்கள் பதிலுக்குக் கொந்தளிக்க... ஒரே அதகளம்தான்.
* ‘விஜய் 65’ படத்தின் தலைப்பு எனப் பல நூறு பெயர்கள் அனுமானமாகக் கிளம்பிய நிலையில், ‘பீஸ்ட்’ தலைப்பைப் படு ரகசியமாகக் காப்பாற்றி வைத்திருந்திருக்கிறார்கள். விஜய், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மூவருக்கு மட்டுமே இந்தத் தலைப்பு முன்கூட்டித் தெரியுமாம். தலைப்புவைத்தவர் இயக்குநர் நெல்சன். மறுப்பே சொல்லாமல் ஓகே சொல்லியிருக்கிறார்கள் விஜய்யும் கலாநிதியும்.
* ஃப்ர்ஸ்ட் லுக்கில் வெளியான முதல் படமே சமூக ஊடகங்களில் தெறிக்க, அன்றிரவு 12 மணிக்கு அடுத்த படத்தை வெளியிட்டு ரசிகர்களைக் கொண்டாட வைத்துவிட்டார்கள். பக்கா ஆக்ஷன் படம் என்பதைப் பொளேரெனப் புரியவைத்தது துப்பாக்கியோடு விஜய் இருக்கும் படமும் டிசைனும். படத்தில் ஐந்து சண்டைக் காட்சிகளாம்.
* இரண்டாவதாக வெளியான படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் இருக்க, ‘சர்கார்’ படத்துக்குக் கொந்தளித்ததுபோல் இதற்கும் கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டார்கள் பலரும். ‘விஜய் வாயில் வைத்திருப்பது சிகரெட் அல்ல, தோட்டா’ என விளக்கம் சொல்லப்பட, ‘அதை ஏன் சிகரெட் பிடிக்கிற ஸ்டைல்ல வைக்கணும்?’ என அதற்கும் எதிர்ப்புதான்.
* ‘சிகரெட் பிடிக்கும் ஸ்டைல், துப்பாக்கி கலாசாரம், ஆங்கிலத் தலைப்புனு இன்றைய தலைமுறைக்கு விஜய் என்னதான் சொல்ல நினைக்கிறார்’ எனச் சமூக வலைதளங்களில் சிலர் குரல் எழுப்ப, விஜய் ரசிகர்களும் பதிலடிகளில் இறங்கினார்கள். ‘சினிமாவை சினிமாவாப் பாருங்க…’ என ட்வீட் பறக்க, ‘அப்புறம் ஏன் நாளைய முதல்வரேன்னு முழங்குறீங்க?’ என்றும் பதிலடி பறக்க, ரணகளமானது சமூக வலைதளம்.

* அஜித்தின் ‘வலிமை’ படம் பக்கா ஆக்ஷன் படமாக ரெடியாவதால், அதற்குப் போட்டியாக விஜய் படமும் ஆக்ஷனுக்குப் பஞ்சமில்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தார்கள் விஜய் ரசிகர்கள். அதைச் சரியாகப் பூர்த்தி செய்யும்விதத்தில், துப்பாக்கி தோட்டா தெறிக்க விஜய் நிற்பதுபோல் டிசைன் செய்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். போலீஸ் அதிகாரியாக அஜித் நடிப்பதால் `வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் இதே பாணியில்தான் ரெடியாகியிருக்கிறதாம். இப்போது அவர்கள் வேறு டிசைனுக்கு மாற வேண்டிய இக்கட்டு உருவாகியிருக்கிறது.
* கொரோனா நெருக்கடிகள் குறையத் தொடங்கியிருப்பதால், மின்னல் வேகத்தில் படத்தை முடிக்கத் திட்டமிடுகிறார்கள். ‘ஜார்ஜியா ஷூட்டிங் முடிந்தது போக, இன்னும் 45 நாள்கள் போதும்’ என கியாரன்டி கொடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். ஜார்ஜியா பேலன்ஸ் ஷூட்டிங்கை சென்னையில் செட் போட்டு எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
உஷ்…
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டர் ஸ்பேஸில் அனிருத், மாளவிகா மோகன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்களை வைத்து, கலந்துரையாடலுக்கு ஏற்பாடானது. இதில் கலந்துகொள்ள அக்கட மாநில அம்மணியையும் அழைத்தார்களாம். பலர் வற்புறுத்தியும் அம்மணி பங்கேற்கவில்லையாம்! #புட்ட பொம்மா... வரல ஏம்மா?