அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பிரக்யா நாக்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரக்யா நாக்ரா

மதுரையில் அமர்க்களமாக நடந்த ‘விருமன்’ இசை வெளியீட்டில் பாடலாசிரியர்கள் யாரையும் முன்னிறுத்தாதது சர்ச்சையாகியிருக்கிறது.

லிங்குசாமி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த ‘தி வாரியர்’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும், படத்தின் நாயகன் ராம், லிங்குசாமி மீது மாறாத பாசத்தில் இருக்கிறாராம். “நல்லபடிதான் திட்டமிட்டோம். ஆனாலும் சறுக்கிவிட்டது. இப்பவும் உங்க இயக்கத்தில் நடிக்க நான் தயாரா இருக்கேன். கதை பண்ணுங்க சார்...” என லிங்குசாமியிடம் சொல்லியிருக்கிறார் ராம். இதற்கிடையில் நடிகர் விஷாலும் லிங்குசாமிக்கு தேதி கொடுக்க முன்வந்திருக்கிறார். புது விவாதக்குழுவுடன் சீக்கிரமே அடுத்த கதையைக் கையில் எடுக்கிறார் லிங்குசாமி.

பிரக்யா நாக்ரா
பிரக்யா நாக்ரா

இயக்குநர் மணி ரத்னம் படத்தில் தலைகாட்டுவதையே பிறவிப் பெரும்பயனாகக் கருதுகிறார் தெலுங்கு நடிகர் நானி. ஹைதராபாத்திலுள்ள அவர் அலுவலகத்தில் மணி ரத்னம் புகைப்படத்தை வரவேற்பறையிலேயே மாட்டி வைத்திருக்கிறார். “சிறிய பாத்திரம், பெரிய பாத்திரம் என்றெல்லாம் கிடையாது. சார் படத்தில் நடித்தால் போதும்” என மணி ரத்னத்துக்கு நெருக்கமானவர்களிடம் அன்புக் கோரிக்கைவைக்கிறார் நானி. மணி ரத்னம் கவனம் வரை போயிருக்கும் இந்தக் கோரிக்கை, விரைவில் பரிசீலிக்கப் பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். காரணம், நானியை மணி ரத்னத்துக்கும் பிடிக்குமாம்!

மதுரையில் அமர்க்களமாக நடந்த ‘விருமன்’ இசை வெளியீட்டில் பாடலாசிரியர்கள் யாரையும் முன்னிறுத்தாதது சர்ச்சையாகியிருக்கிறது. ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொள்ளும் விழாவாக மாறியதில், பாடலாசிரியர்களை மேடையில் ஏற்ற மறந்துவிட்டார்களாம். இத்தனைக்கும் பத்து மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதித்திருக்கும் ‘கஞ்சா பூ கண்ணாலே’ பாடல்தான் படத்துக்கான எதிர்பார்ப்பைப் பெரிதாக எகிறவைத்தது. வருத்தத்தில் இருந்த பாடலாசிரியர்களுக்கு போன் மூலமாக வருத்தமும் வாழ்த்தும் தெரிவித்து சரிக்கட்டினாராம் கார்த்தி.

பிரக்யா நாக்ரா
பிரக்யா நாக்ரா

எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ நாவலை ஹாட் ஸ்டார் தயாரிக்க, சசிகுமார் இயக்குகிறார். அதேநேரம் ஜீ5 ஓடிடி தளமும் `குற்றப் பரம்பரை’ கதையைக் கையிலெடுத்திருக்கிறது. பாரதிராஜா மகன் மனோஜ் இயக்க, ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறார். ‘குற்றப் பரம்பரை’ என்கிற தலைப்பை இரு தரப்பும் கோரிவரும் நிலையில், யாருக்குக் கிடைக்குமோ எனத் தெரியவில்லை. ஏற்கெனவே இதே விவகாரத்துக்காக இயக்குநர் பாலாவுடன் மல்லுக்கட்டிய பாரதிராஜா, இப்போது சசிகுமாருடன் மோதுகிறார். முதற்கட்டமாக சசிகுமார் தலைப்பை விட்டுக்கொடுக்க முன்வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

உஷ்...

விவசாயத்தின் மேன்மையைச் சொன்ன படத்தின் இயக்குநர் இப்போது கடனில் தத்தளிக்கிறாராம். படத்தை ரிலீஸ் செய்ய வாங்கிய கடன் ஆளையே விழுங்கும் அளவுக்கு வட்டியாக மாறியிருக்கிறதாம். விஷயமறிந்த படத்தின் நாயகன் தன் தேதியைக் கொடுத்து நம்பிக்கையூட்டி இருக்கிறார்.