
பைக் நடிகரின் படத்துக்கு ஃபைனான்ஸ் சரிவரக் கிடைப்பதில்லை. பணம் கொடுக்கும் மதுரைக்கார ஃபைனான்ஸியர் வீட்டில் ரெய்டு நடந்ததால் இந்த நெருக்கடி எனத் தகவல்கள் கசிந்தன
சாதியச் சர்ச்சைகளுக்குப் பேர்போன தெற்கத்தி இயக்குநரின் சமீபத்திய படம் ரிலீஸாவதற்கு முன்னரே, படத்துக்கான எதிர்ப்பார்ப்பை வைத்து அவரிடம் கதை கேட்டு கமிட்டானார் சைக்கிள் ஹீரோ. சமீபத்தில் ரிலீஸான அந்தப் படம் விமர்சனரீதியாகக் கடுமையாகக் கழுவி ஊற்றப்பட, ‘அவசரப்பட்டுட்டோமே…’ என அங்கலாய்க்கிறாராம் சைக்கிள் ஹீரோ. காரணம், சைக்கிள் ஹீரோவின் சமீபத்திய படத்துக்கும் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. இதற்கிடையில் தெற்கத்தி இயக்குநரோ, “நீங்க இல்லைன்னா எனக்கு ஆயிரம் பேர்… போய்ட்டே இருப்பேன்…” எனச் சவால்விட, ஒதுங்கவும் முடியாமல், ஓகே சொல்லவும் முடியாமல் திண்டாடித் தவிக்கிறார் சைக்கிள் ஹீரோ.
யூனியன் சம்பந்தப்பட்ட பிரச்னை எனச் சொல்லி, கடந்த இரு வாரங்களுக்குள் ஐந்து படங்கள் ஷூட்டிங் பிரேக் ஆகி ரிட்டர்ன் ஆகிவிட்டனவாம். தொழிலாளர்களுக்கான பேட்டாவை மூன்று மடங்கு உயர்த்தியதும், கறார் சம்பள நெருக்கடியும்தான் இந்தச் சங்கடங்களுக்குக் காரணமாம். தயாரிப்பாளர் சங்கம் இனியும் உறங்கிக்கொண்டிருந்தால், பல படங்கள் பிரேக் ஆக வாய்ப்பிருப்பதாகச் சொல்லிப் புலம்புகிறார்கள் எளிய தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர் களுக்காக ஒன்றுக்குப் பல சங்கங்கள் இருந்தும், எதுவுமே ஆக்டிவாக இல்லாததுதான் வேதனை என்கிறார்கள்.



பைக் நடிகரின் படத்துக்கு ஃபைனான்ஸ் சரிவரக் கிடைப்பதில்லை. பணம் கொடுக்கும் மதுரைக்கார ஃபைனான்ஸியர் வீட்டில் ரெய்டு நடந்ததால் இந்த நெருக்கடி எனத் தகவல்கள் கசிந்தன. இதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும், ஃபைனான்ஸியர் வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த திருமணத்துக்காக பைக் நடிகருக்கு அழைப்பிதழ் கொடுக்க நினைத்தார்களாம். ‘அவர் எந்த விழாவுக்கும் வரும் வழக்கம் இல்லையே’ என நடிகரின் மேலாளர் விளக்கினாராம். ‘அவர் வர மாட்டார் என்பது தெரியும். ஆனால், பத்திரிகை கொடுக்கும் வகையில் அவரைப் பார்க்கலாமே…’ என வெளிப்படையாகத் தன் விருப்பத்தைச் சொன்னாராம் ஃபைனான்ஸியர். ஆனால், அதன் பிறகும் பைக் நடிகர் அந்த நிகழ்வுக்கு இசைவு தெரிவிக்கவில்லையாம். அடிபட்ட பாம்பாகத் துடித்துப்போன ஃபைனான்ஸியர், இப்போது சமயம் பார்த்து, கணக்கு தீர்க்கிறாராம். பைக் நடிகர் படத்துக்கான ஃபைனான்ஸ் இழுபறியாக நீடிக்கும் பின்னணி இதுதானாம்.
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிப்புக்கு வந்திருக்கும் வெளிநாட்டு ஹீரோயினுக்கு இப்போதும் ஏக கிராக்கி. அடுத்தடுத்து அம்மணியை கமிட்டாக்க பல ஹீரோக்கள் முயல, இப்போதைய படத்தின் இயக்குநர் பெயரைச் சொல்லி, “அவருக்காகத்தான் மீண்டும் நடிக்கச் சம்மதித்தேன். நடிப்பு தொடருமா என்பதை இனிதான் முடிவுசெய்யணும்” எனத் தூய ஆங்கிலத்தில் சொல்லி மறுத்தாராம் அந்த வெளிநாட்டு ஹீரோயின்!
உஷ்...
“மறுமண ஏற்பாடுகள் செய்தால் என்ன?” எனக் கேட்டிருக்கிறார்கள் அசுர நடிகரின் இல்லத்தில். “இனி இந்தப் பேச்சை எடுத்தால் உங்களோடு பேசுவதையே நிறுத்திவிடுவேன்” என பதில் சொல்லிவிட்டு வெளியேறினாராம் அசுர நடிகர். பழிக்குப் பழி வாங்கும் வேகத்தைத் திரையில்தான் செய்ய நினைக்கிறாராம். விரைவில் ஒரு படத்தை இயக்கி நடிக்கிற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறாராம்!