
‘ஆச்சார்யா’, ‘என்னதான் பேசுவதோ’ படங்களை இயக்கிய ரவி, இயக்குநர் பாலாவுக்கு வலதுகரமாக இருந்தார்.
‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுடன் சமந்தா போட்ட கவர்ச்சி ஆட்டம், இப்போது வரை பற்றி எரிகிறது. அதில் எண்ணெய் வார்ப்பதுபோல் இப்போது படு கவர்ச்சியான உடையில் புகைப்படங்களைப் பதிவேற்றியிருக்கிறார் சமந்தா. ‘நாக சைதன்யாவைப் பழிவாங்கத்தான் சமந்தா இப்படிச் செய்கிறார்’ என ஊடகங்கள் கிசுகிசுக்க, “என் உடல்… என் உரிமை…” என இரு தரப்புக்கும் நெருக்கமானவர்களிடம் பதில் சொன்னாராம் சமந்தா!
சில காலமாகப் படத் தயாரிப்பை நிறுத்திவைத்திருக்கும் ஃபைனான்ஸியர் அன்புச்செழியன், அஜித்தின் ‘வலிமை’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார். அடுத்து ஒரு பிரமாண்டப் படத்தைத் தனது ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கத் திட்டமிடுகிறார். கடந்த ஒரு மாதக் காலத்துக்குள் ரஜினியை இரண்டு முறை சந்தித்திருக்கும் அன்புச்செழியன், ரஜினி படத்தைத் தயாரிக்கத் திட்டமிடுவதாகவும் தகவல்!
‘கென்னடி கிளப்’ படத்தில் கவனம் ஈர்த்த மீனாட்சி, இப்போது ‘பிக் பாஸ்’ புகழ் முகேன் ராவுடன் ‘வேலன்’ படத்தில் நடிக்கிறார். சென்னை ஜெயின் கல்லூரியில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மீனாட்சி, “மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தக் கல்லூரியில் சேர விரும்பினேன். ஆனால், சீட் கிடைக்கலை. ஒரு மாணவியாக வர முடியாத கல்லூரிக்குள் ஒரு நடிகையாக வந்திருக்கேன்…” எனச் சொல்ல, பயங்கர கைதட்டல். விக்ரமுடன் ‘கோப்ரா’, சுசீந்திரன் இயக்கத்தில் ‘சிவ சிவா’ என மீனாட்சிக்கு இப்போது ஏறுமுகம். பேச்சு, அணுகுமுறை, சம்பளத்தில் கறார் காட்டாத தன்மை என நல்ல எதிர்காலத்துக்கான அத்தனை அம்சங்களும் அம்மணியிடம் வரிசைகட்டுகின்றன!



‘ஆச்சார்யா’, ‘என்னதான் பேசுவதோ’ படங்களை இயக்கிய ரவி, இயக்குநர் பாலாவுக்கு வலதுகரமாக இருந்தார். அவருடன் பல படங்கள் பணியாற்றிய ரவி, சூர்யாவை வைத்து பாலா இயக்கவிருக்கும் படத்தின் கதை விவாதங்களில் பங்கேற்ற நிலையில், அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்து பாலாதான் கவனித்தாராம். மஞ்சள் காமாலையிலிருந்து குணமாகி வந்தவர், சமீபத்தில் மாரடைப்பால் இறக்க, தாங்க முடியாமல் கதறிவிட்டாராம் பாலா!
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் புரொமோஷனுக்காக சென்னையில் நடத்தப்பட்ட விழா, சிவகார்த்திகேயனின் புகழார விழாவாக அமைந்துவிட்டது. ‘எங்க வீட்டுப் பிள்ளைன்னா எம்.ஜி.ஆர். நம்ம வீட்டுப் பிள்ளைன்னா வேற யார்?’ என நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் சிவகார்த்திகேயனைப் புகழ்ந்து தள்ள, ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் இருவருமே நெளிந்தார்கள். ‘விழா நமக்கா இல்லை சிவகார்த்திகேயனுக்கா?’ என இருவருக்குமே குழப்பம். சிவகார்த்திகேயன் மேடையேறி தொகுப்பாளர்களை அடக்கிவாசிக்கச் சொன்ன பிறகுதான் படக்குழு நிம்மதியானது. அடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படத்தில் களம் இறங்குவதால், தெலுங்கு ஸ்டார்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என நினைக்கிறாராம் சிவகார்த்திகேயன்!
உஷ்
சமீபத்தில் யூத் சமூகத்துக்கான ஜாலி படத்தைக் கொடுத்த இளம் இயக்குநர், அடுத்தகட்ட வாய்ப்புகளுக்காகப் பல கம்பெனிகளின் கதவைத் தட்டிவருகிறார். சில இடங்களில் அவர் சொன்ன கதை ஓகே-யாக, சம்பளம் குறித்துக் கேட்டார்களாம். “எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் இருக்கு. அதை அடைச்சுட்டா போதும்” என்றாராம். ‘இந்தக் காலத்தில் இப்படியொரு இயக்குநரா?’ எனத் தயாரிப்பாளர் சங்கத்திலேயே ஆச்சர்யப்பட்டுப் போனார்களாம். #பேச்சுலரா இருப்பாரோ?