
படங்கள்: கிரண் சா
கொரோனா தீவிரமாக இருந்த 2021-ம் வருடம், படப்பிடிப்பில் பங்கேற்பதை முற்றிலுமாகத் தவிர்த்துவந்தார் ஜோதிகா. இந்தப் புது வருடத்தில் மூன்று படங்களை நடிக்கத் திட்டமிட்டிருக்கும் ஜோதிகா, ‘மாஸ்டர்’ படத்துக்கு வசனம் எழுதிய பொன்.பார்த்திபன் கதையை முதலில் கையிலெடுக்கிறார். ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஃப்ரெட்ரிக், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ‘கண்ட நாள் முதல்’ இயக்குநர் பிரியா உள்ளிட்டவர்கள் அடுத்தகட்ட வரிசையில் இருக்கிறார்கள்!
பக்கம் பக்கமாக பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற ரன்வீர் சிங்கின் ‘83’ படம் வசூலில் படுத்துவிட்டது. வகைதொகை இல்லாமல் விமர்சனங்களை வாங்கிக்கட்டிக்கொண்ட அல்லு அர்ஜுனின் `புஷ்பா’ படம் வசூலில் கொடிகட்டிப் பறக்கிறது. “பக்கா மசாலா மாஸ் ஹீரோ படமான `புஷ்பா’, தெலுங்கில் வேண்டுமானால் வொர்க்அவுட்டாகலாம். தமிழில் நிச்சயம் தாக்குப் பிடிக்காது” எனப் பல விமர்சனங்கள் பரவிய நிலையில், தமிழில் அசாத்திய வசூலைக் குவித்திருக்கிறது `புஷ்பா.’ லைகா நிறுவனம் சொந்தமாகத் தயாரித்த படங்களில்கூட இவ்வளவு வசூலைப் பெற்றது இல்லையாம்!
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வந்த ‘வலிமை’ படத்தின் டிரெய்லர், கலவையான விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல், அடக்கி வாசித்து பொங்கல் ரிலீஸ் அன்று மிரட்டலாம் என்பதுதான் இயக்குநர் ஹெச்.வினோத் சொன்ன ஐடியாவாம். ‘ஆர்.ஆர்.ஆர்’ பட புரொமோஷனுக்காக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ராஜமௌலி உள்ளிட்டவர்கள் சென்னைக்கே கிளம்பிவந்து விழா நடத்திய நிலையிலும் ‘வலிமை’ டீம் அநியாயத்துக்கு அடக்கி வாசிப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் இதுகாலம் வரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியிருப்பது ‘வலிமை’ படம்தான்!


நடிகர் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ், தயாரிப்புப் பணிக்காக சினிமாவுக்கு வந்தவர். இன்னும் சிலருக்கு மேனேஜராகப் பணியாற்றினாலும், விஜய்க்கு கதை கேட்பது தொடங்கி அடுத்தகட்ட இயக்குநர்களோடு கலந்து பேசித் திட்டமிடுவது வரையிலான பல பணிகளை இப்போது ஜெகதீஷ்தான் கவனிக்கிறார். விஜய்க்கு எதிரான கருத்துகளோ, விமர் சனங்களோ வந்துவிடாதபடி ஆன்லைன் ஆட்களை வசப்படுத்திவைத்திருக்கிறார் ஜெகதீஷ். அடுத்த படியாக ரசிகர் மன்ற ஒருங்கிணைப்புக்கும் ஜெகதீஷைக் கொண்டுவரலாமா என யோசிக்கிறாராம் விஜய்!
திருவாரூர் மாவட்டம், நீடூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்கிற மாணவர், ஆணழகன் போட்டியில் மாநில அளவில் சாதித்திருக்கிறார். ஆனாலும், நல்ல உணவோ பயிற்சியோ பெற வழியின்றி அவர் அல்லாட, இதைக் கேள்விப்பட்ட நடிகர் சசிகுமார் முதற்கட்ட உதவியாக 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறார். “எம்.எல்.ஏ உள்ளிட்ட எத்தனையோ பேரை அணுகியும் எந்த உதவியும் கிடைக்கலை. ஆனா, யார் மூலமாகவோ என் நிலையை அறிந்து அடுத்த கணமே சசிகுமார் உதவினார். மேற்கொண்டு என்ன தேவைன்னாலும் கேட்கச் சொல்லி யிருக்கார்” என நெகிழ்கிறார் முத்துக்குமார்!
உஷ்...
பிரகாசமான சேனல் நிறுவனம், பெரிய நடிகரை வைத்து எடுத்த சென்டிமென்ட் படத்தில் பெரிய இழப்பு. அதற்கான நஷ்ட ஈடாக, அடுத்த படத்தில் சம்பளக் குறைப்பு செய்ய நினைத்ததாம் சேனல். ‘மழை வெள்ளத்தால்தான் வசூல் பாதிப்பு’ என முந்திக்கொண்டு பெரிய நடிகர் முழங்கிய பின்னணி இதுதானாம். #சார சார காற்றே... வசூலை முடக்கியதே நேரம் பார்த்தே!