
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ போஸ்டர் மிரட்டியிருக்கிறது. செம்மரக் கடத்தலை மையமாக்கிய கதைக்கருவை, இரண்டாம் பாகத்தில் போலீஸுக்கும் தாதாவுக்குமான மோதலாக மாற்றியிருக்கிறார்களாம்.
ஆர்யாவின் கதை வேட்டை ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. முத்தையா இயக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்துக்கு அடுத்தபடியாக யாருக்குத் தேதி கொடுக்கலாம் எனப் பலரிடமும் தீவிரமாகக் கதை கேட்டு வந்தார் ஆர்யா. விஷ்ணு விஷால் நடிப்பில் ‘F.I.R’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் சொன்ன கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப்போக, உடனே ஓகே சொல்லிவிட்டார். பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண், கார்த்தியை வைத்துத் தயாரிக்க இந்தக் கதையைக் கேட்டு வைத்திருந்தார். கார்த்தி பிஸியான நிலையில், ஆர்யா தேதி கிடைக்க, பிரின்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
‘ஹாட் ஸ்டார்’ தயாரிப்பில், சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘குற்றப் பரம்பரை’ வெப் சீரீஸ் டீம், சீக்கிரமே ஷூட்டிங்குக்குக் கிளம்பவிருக்கிறது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் திரைக்கதையை அழகிய பவுண்டாக்கி சசிகுமார் கொடுத்தவிதம், ‘ஹாட் ஸ்டார்’ நிறுவனத்தை அசத்திவிட்டதாம். “பல கோடி முதலீட்டில் உருவாகும் படைப்புக்கு இவ்வளவு க்ளியரான திரைக்கதை வரைவு தேவை…” எனப் பலருக்குமான முன்னுதாரணமாக சசிகுமாரின் பாணியைச் சொல்கிறார்களாம்.

நீண்டகாலமாக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் இயக்குநர் சேரன். மூன்று வருடங்களுக்கு முன்னர் சேரன் சொன்ன அண்ணன், தங்கை பாசக்கதை விஜய் சேதுபதிக்கு ரொம்பவே பிடித்துப்போக, அவசியம் தேதி கொடுப்பதாகச் சொல்லியிருந்தாராம். ஆனால், கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் எனப் பலவிதமான பாத்திரங்களில் விஜய் சேதுபதி பிஸியாக, சேரனால் நெருங்க முடியாத நிலை. இப்போது காலம் கனிந்து இருவரும் இணைகிற நல்ல சூழல் உருவாகியிருக்கிறது. வெப் சீரீஸ் ஒன்றை முடித்துவிட்டு, விஜய் சேதுபதியுடன் இணைகிறார் சேரன்.
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ போஸ்டர் மிரட்டியிருக்கிறது. செம்மரக் கடத்தலை மையமாக்கிய கதைக்கருவை, இரண்டாம் பாகத்தில் போலீஸுக்கும் தாதாவுக்குமான மோதலாக மாற்றியிருக்கிறார்களாம். ‘புஷ்பா’ படத்துக்கு எடிட்டிங் பணியை கவனித்த ரூபன் சொன்ன ஐடியாபடிதான் ‘பார்ட் 2’ எடுக்கும் எண்ணமே அல்லு அர்ஜூனுக்கு வந்ததாம். மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம், ‘பார்ட் - 3’-ஐ நோக்கிப் பயணித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

உஷ்...
அக்ரி படம் எடுத்து கவனம் ஈர்த்தவர், கணக்கு வழக்கில் காட்டிய குளறுபடிகள் யதார்த்த நடிகரை மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாக்கியதாம். அதையும் தாண்டி அதே இயக்குநரின் அடுத்த படத்தில் யதார்த்த நடிகர் கமிட்டாக, நடிகரின் வீட்டம்மா கொந்தளித்துக் குமுறுகிறாராம்!