
‘மனரீதியான சங்கடங்களுக்குப் பயணமே நல்ல தீர்வு’ என நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சீக்கிரமே அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்கவிருக்கிறாராம்.
‘விடுதலை’ படத்தின் வெற்றி, சூரியை அடுத்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. ராம் இயக்கத்தில் நிவின் பாலியுடன் சூரி இணைந்து நடிக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, வினோத் இயக்கும் ‘கொட்டுக்காளி’ படங்களை முடித்திருக்கும் சூரி, அடுத்து நடிக்கப்போவதும் வெற்றிமாறன் கதையில்தான். ஆனால், அதை இயக்கப்போவது வெற்றிமாறன் அல்ல. dhanuவெற்றிமாறனின் கதையை துரை செந்தில்குமார் இயக்க, ‘லார்க் ஸ்டூடியோஸ்’ குமார் தயாரிக்கிறார். அமீர், விக்ரம் சுகுமாறன் என சூரியின் அடுத்தகட்ட லைன்அப்பும் அசத்துகிறது.

முதல் பிரதி அடிப்படையில் ஒரு படத்தை எழுதி, இயக்கி, நடித்துக்கொடுக்க சுளையாக 100 கோடி கேட்கிறாராம் தனுஷ். ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன், கலைப்புலி தாணு, மதுரை அன்பு உள்ளிட்ட பல முன்னணித் தயாரிப்பாளர்களிடம் இந்த டீலை தனுஷ் பேசியும் யாரும் அசைந்து கொடுக்கவில்லையாம். தன்னுடைய சம்பளமாக 40 கோடியை நிர்ணயித்திருக்கும் தனுஷ், 100 கோடிக்கும் மேலான பிசினஸ் செய்கிற ஹீரோவாகத் தன்னை உயர்த்திக்கொள்ள ரொம்பவே போராடிவருகிறார் என்கிறார்கள். இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜுடன் தனுஷ் இணையும் புதிய படத்தை தனுஷின் நிறுவனமே தயாரிக்கிறது.

தன்னுடைய பாராட்டை ‘விடுதலை’ படக்குழு படத்தின் விளம்பரமாகவும், போஸ்டராகவும் மாற்றிப் பரபரக்க வைப்பார்கள் என ரஜினிகாந்த் கொஞ்சமும் நினைக்கவில்லையாம். அதனால்தான் அடுத்த இரண்டாவது நாளே சசிகுமாரின் ‘அயோத்தி’ படத்தைப் பாராட்டி ட்வீட் தட்டினாராம். ‘அயோத்தி’ படத்தைப் பார்த்துவிட்டு கடந்த வாரமே சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்தி, தயாரிப்பாளர் டிரைடெண்ட் ரவி உள்ளிட்ட படக்குழுவினருக்கு போன் பண்ணி வாழ்த்தியிருந்தாராம் ரஜினி. ஆனால், அந்தப் படக்குழுவினர் அது குறித்து வாயே திறக்கவில்லையாம். ஆனால், ‘விடுதலை’ குழு விளம்பரமாக்கி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதால், ‘அயோத்தி’ குறித்த பாராட்டை ட்வீட்டாகவே வெளியிட்டு, அவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தினாராம் ரஜினி.

சில காலத்துக்கு முன்பு, படங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு பன்னாடுகளுக்குச் சுற்றுலா கிளம்பிப்போனார் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘மனரீதியான சங்கடங்களுக்குப் பயணமே நல்ல தீர்வு’ என நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சீக்கிரமே அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்கவிருக்கிறாராம். அட்வான்ஸ் வாங்கிய புராஜெக்டுகள் தவிர்த்து, புதிதாகக் கதை கேட்கும் பணியை அதற்காகவே தள்ளிவைத்திருக்கிறாராம் அம்மணி. திருமணம் குறித்த பேச்சுவார்த்தையால்தான் அம்மணிக்குச் சங்கடம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
உஷ்...
ரெய்டில் சிக்கிய ஆவணங்கள், மதுரைக்கார ஃபைனான்ஸியரையும், அவர் சார்ந்த திரைத்துறையினரையும் இன்றளவும் படுத்தியெடுக்கின்றனவாம். மதுரைக்காரர் எழுதிய ‘கணக்குகள்தான்’ சிக்கலுக்குக் காரணமாம். கடந்த வாரம் மில்க் இயக்குநர் மணிக்கணக்கில் நின்று வரித்துறையினரிடம் விளக்கம் கொடுத்தாராம். ஆனாலும், ‘அபராதத்தைக் கட்டு’ என்பதில் உறுதி காட்டினார்களாம் அதிகாரிகள்.