அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

திவ்யா துரைசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
திவ்யா துரைசாமி

தியேட்டரில் ரிலீஸான ‘விடுதலை-1’ படத்துக்கும் ஓடிடி-யில் ரிலீஸாகவிருக்கும் ‘விடுதலை-1’ படத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சம்பளத்தை 40 கோடியாக உயர்த்தியிருக்கிறாராம். அடுத்து கமிட்டாகும் படங்களில், சம்பளத்தோடு பிராஃபிட்டிலும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஷேராகக் கேட்கிறாராம் லோகேஷ். விஜய்யின் ‘லியோ’ படத்தை முடித்ததும், அடுத்ததாக ரஜினியைவைத்து இயக்க லோகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது சன் பிக்சர்ஸ். அப்போதுதான் இந்த நிபந்தனைகளைப் போட்டிருக்கிறார் லோகேஷ். கூடவே, இதைவிடவும் கூடுதலான சம்பளத்தைக் கொடுக்க தெலுங்கில் ஆட்கள் ரெடியாக இருக்கிறார்கள் என்கிற தகவலையும் சொன்னாராம் லோகேஷ். ரஜினி கொடுத்திருக்கும் தேதிக்கு வேறு இயக்குநரைத் தேடும் முடிவுக்கு வந்திருக்கிறதாம் சன் பிக்சர்ஸ்.

திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி

மாரி செல்வராஜ் இயக்கி முடித்திருக்கும் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதியைக் காட்டிலும், வடிவேலுவுக்குத்தான் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதுவரை செய்திராத சீரியஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலுவின் நடிப்பு, அத்தனை பேரையும் கலங்கடித்திருக்கிறதாம். ‘என் வாழ்வின் முக்கியமான படம்’ என நெருங்கியவர்களிடம் சிலிர்த்துவருகிறார் வடிவேலு. தனக்கான முக்கியத்துவத்தைப் பற்றிக் கவலைப்படாமல், படத்தைப் பெரிதாகக் கொண்டுபோய்ச் சேர்க்கச் சொல்லியிருக்கிறாராம் உதயநிதி.

தியேட்டரில் ரிலீஸான ‘விடுதலை-1’ படத்துக்கும் ஓடிடி-யில் ரிலீஸாகவிருக்கும் ‘விடுதலை-1’ படத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு, பல தரப்பிலிருந்தும் எழுந்த கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும்விதமாக, படத்தின் காட்சிகளை 20 நிமிடங்களுக்குக் கூடுதலாக்கி விளக்கம் சொல்லியிருக்கிறாராம் வெற்றிமாறன். ‘ரிலீஸுக்குப் பிறகும் ஓர் இயக்குநர் இந்த அளவுக்கு உழைக்கிறார்’ எனச் சிலர் சிலிர்க்க, ‘தியேட்டரில் ‘விடுதலை-1’ படத்தைப் பார்த்தவர்களையும், மறுபடி ஓடிடி-யில் பார்க்கவைக்கிற தொழில் வியூகம் இது. வெற்றிமாறன் ப்யூர் பிசினஸ்மேன் ஆகிவிட்டார்’ என பதிலுக்குப் பாய்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி

நீண்ட நாள்களுக்குப் பிறகு, 50-வது நாளைக் கடந்து தியேட்டரில் ஓடும் வெற்றிப்படமாகியிருக்கிறது சசிகுமாரின் ‘அயோத்தி.’ படத்துக்கான வரவேற்பும் வசூலும் பெரிதாக இருக்க, இதே வேகத்தில் தன் அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியிட முடிவெடுத்தார் சசிகுமார். வரிசையாக அவர் நடித்த மூன்று படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்க, அதில் ‘நந்தன்’ படத்தின் வேலைகளை விரைவாக்கச் சொல்லியிருக்கிறாராம் சசி. இதில் சசிகுமாருக்கும் இயக்குநர் இரா.சரவணனுக்கும் மனவருத்தமாம். “இன்னும் எத்தனை நாள் இழுத்துக்கிட்டே போவீங்க?” என சசிகுமார் தரப்பு கடுகடுப்பு காட்டியிருப்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள். `நந்தனை’ மே மாத லீவில் ரிலீஸ் செய்யும் திட்டத்திலிருக்கிறார் சசிகுமார்.

உஷ்...

வயதே ஆகாமலிருக்க வரம் வாங்கியிருக்கும் நடிகை, இதிகாசப் படத்தின் புரொமோஷன்களில் தீவிரமாக இருக்கிறார். அம்மணியை மறந்த ஹீரோக்கள் பலரும் இப்போது மறுபடியும் போன் பண்ணி பழையபடி பாசம் காட்ட நினைக்கிறார்களாம். ஆனால், ‘இப்போ அம்மணியின் ரேஞ்சே வேறு’ எனச் சொல்லி அணுக முடியாத வளையத்தை உருவாக்கியிருக்கிறார்களாம் உடனிருக்கும் புதுப்புள்ளிகள்!