
விஜய்யின் அடுத்த படத்தில் யார் ஹீரோயின் என்கிற போட்டி இப்போதே தொடங்கிவிட்டது
ஒருபுறம் தமிழில் பரபரவென்று கிராப் ஏறிக்கொண்டிருக்க, தெலுங்கிலும் `ராசியான நடிகை’ என்று பெயர் வாங்கிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். சென்ற வருடம் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா நடித்த ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தைத் தொடர்ந்து, நான்கைந்து படங்கள் கைவசம் வந்தன. ஆனாலும் தமிழுக்கே முதலிடம் என்று சொல்லும் ஐஸ்வர்யாவுக்கு தமிழிலும் நான்கைந்து படங்கள் ரிலீஸுக்காக வெயிட்டிங்!



விஜய்யின் அடுத்த படத்தில் யார் ஹீரோயின் என்கிற போட்டி இப்போதே தொடங்கிவிட்டது. ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் பூஜா ஹெக்டே, அடுத்த படத்திலும் தானே ஜோடி போடப்போவதாக நெருங்கியவர்களிடம் சொல்கிறாராம். ‘பீஸ்ட்’ ஷூட்டிங்கிலும் விஜய்யின் மனம் கோணாதபடி நல்ல பிள்ளையாகப் பெயர் வாங்கியிருக்கிறாராம். தொடர்ந்து இரண்டு படங்களில் ஒரே ஹீரோயினுடன் இதுவரை விஜய் நடித்ததில்லை. அதனால், அந்த வாய்ப்பு பூஜா ஹெக்டேவுக்கு அமைந்துவிடக் கூடாது என இப்போதே விஜய் பட வாய்ப்புக்குத் துண்டுபோடத் தொடங்கிவிட்டார்கள் ஹீரோயின்கள் பலரும்!
அரிசில் மூர்த்தி இயக்கும் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் அமேசான் தளத்தில் வெளியாகிறது. புதுமுகம் மிதுன் இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக, ரம்யா பாண்டியன், வாணி போஜன் என இரண்டு ஹீரோயின்கள் இணைந்து நடிக்கிறார்கள். மாடுகள் மீதான அன்பை அடிப்படையாகக்கொண்ட கதை. சமீபத்தில் படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா, மிதுனை கட்டிப்பிடித்துப் பாராட்டியிருக்கிறார்.
‘அஞ்சலை’ படத்தை இயக்கிய ‘தங்கம்’ சரவணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கிறார். சசிகுமார் ஹீரோ. “நல்லா டைம் எடுத்து கதை பண்ணியிருக்கார். கேட்ட உடனேயே மனசுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அந்த அளவுக்கு அட்டகாசமான தேடலும் வாழ்வியலுமான கதை” எனச் சிலாகிக்கிறார் சசிகுமார். ஹீரோயின் தேடும் படலம் நடக்கிறது.
நாற்பது ப்ளஸ் வயதிலும் உடலைக் கச்சிதமாக வைத்து ரசிகர்களின் மனங்களை ஈர்த்துவருபவர் சன்னி லியோன். ‘இவ்வளவு இளமையாக இருக்க என்ன காரணம்?’ எனப் பலரும் கேட்க, ‘என் அளவான சாப்பாடும் உடற்பயிற்சியும்தான்’ என பதில் சொன்னார் சன்னி லியோன். கூடவே, தான் உடற்பயிற்சி செய்கிற வீடியோக்களையும் சன்னி லியோன் பதிவேற்ற, லைக்ஸ், கமென்ட்ஸ் எனக் கடந்த வாரம் ஆன்லைனே ஜாமாகிப்போனது. சமூக வலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்தவர் என்கிற பெருமையையும் சன்னி லியோன் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்!
உஷ்…
அடுத்தடுத்து நீதிமன்ற விவகாரங்களில் அடிபடுகிற பிரமாண்ட இயக்குநர், மொத்தமாகத் தெலுங்குப் பக்கம் போய் படம் இயக்கப்போகிறாராம். கதையை யோசிக்கிற மனநிலைகூட அவருக்கு இல்லையாம். யூத்தான படங்களைச் செய்யும் குறும்படங்கள் வழியே வந்த இயக்குநரிடம், ஒரு கதையைக் காசு கொடுத்து வாங்கி, அதைத்தான் தெலுங்கு ஹீரோவிடம் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறாராம். கதைக்குத் தன் பெயரையே போட்டுக்கொள்வதால், அதற்கும் சேர்த்துப் பெரும் தொகையைக் கொடுத்தாராம்!