சமூகம்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பாயல் ராஜ்புத்
பிரீமியம் ஸ்டோரி
News
பாயல் ராஜ்புத்

ஆர்யாவை வைத்துப் படம் இயக்கிவரும் முத்தையா, அடுத்து விஷாலுக்குக் கதை சொல்லியிருக்கிறார்.

கார்த்தி, தற்போதைய கமிட்மென்ட்டுகளை முடித்துவிட்டு, நளன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஐந்து வருடங்களாக மெனக்கெட்டு நளன் எழுதிய இந்தக் கதை கார்த்தியை ரொம்பவே ஈர்த்துவிட்டதாம். கதை கேட்ட மறுநிமிடமே அக்ரிமென்ட் கையெழுத்தாகி யிருக்கிறது.

‘துணிவு’ படத்தில் அஜித்துக்கு ஜோடி கிடையாதாம். மஞ்சு வாரியரும் அஜித்தும் சேர்ந்து வருவதுபோலச் சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டனவாம். அஜித் குழுவில் வருகிற ஓர் ஆளாக மட்டுமே மஞ்சு வாரியர் நடித்திருக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்

‘கட்டா குஸ்தி’ படத்தில் பட்டையைக்கிளப்பிய ஐஸ்வர்யா லட்சுமி, முதலில் அந்தக் கதையை மறுத்துவிட்டாராம். பிறகு பிரியா பவானி சங்கரை அணுகிக் கதை சொல்லியிருக்கிறார்கள். கதை பிடித்திருந்தாலும், உடலை புஷ்டியாக்க அவரால் முடியவில்லையாம். மறுபடியும் ஐஸ்வர்யாவை அணுகி வற்புறுத்தினார்களாம். வேண்டா வெறுப்பாக ஓகே சொன்ன ஐஸ்வர்யாதான் இப்போது வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கிறார்.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்துக்காகப் பாட்டுப் பாடி அசத்தியிருக்கும் வடிவேலு, தனி ஆல்பம் வெளியிடும் ஐடியாவில் இருக்கிறாராம். மியூசிக் நிறுவனங்கள் போட்டி போட, கோடிக்கணக்கில் துட்டு கேட்கிறாராம் வடிவேலு. ‘அதிகமாகக் கொடுப்பவர்களுக்கு ஆல்பம்’ என சிம்பிளாகச் சொல்லிவிட்டாராம்!

வாரிசு’ படத்துக்காக அக்ரிமென்ட்டில் முடிவுசெய்யப்பட்ட தேதிகளைக் காட்டிலும், அதிகமாக 40 நாள்களை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் விஜய். ‘இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்துக்கொள்ளவும்’ என டெட்லைன் ஃபிக்ஸ் பண்ணிவிட்டாராம் விஜய்.

ஆர்யாவை வைத்துப் படம் இயக்கிவரும் முத்தையா, அடுத்து விஷாலுக்குக் கதை சொல்லியிருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் முத்தையா சொன்ன கதை விஷாலுக்குப் பிடிக்கவில்லையாம். இப்போது சொன்ன கதை மிகவும் பிடித்துவிட்டதாம். ‘அதே கதைதான்’ எனக் காதைக் கடித்துச் சிரிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ராஜூ முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘ஜப்பான்’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன். ‘காலத்துக்கும் பெயர் சொல்லும் பாத்திரம்’ என நண்பர்களிடம் சிலிர்க்கிறாராம்.