
விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் வில்லன் பாத்திரம் ஏற்றிருக்கும் இயக்குநர் செல்வராகவன், நடிப்பில் அதகளம் செய்திருக்கிறாராம்.
பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை அப்படியே தோலுரித்துக் காட்டும்விதமாக, ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் ‘சித்திரைச் செவ்வானம்’ படம் நல்ல கவனம் பெற்றிருக்கிறது. சண்டைப் பயிற்சியாளர் சில்வா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்துக்கு மோகன்லால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களின் புரொமோஷனும், இயக்குநர் தங்கர்பச்சான் உள்ளிட்டவர்களின் பாராட்டும் கவனத்தைக் கூட்டியிருக்கின்றன. சில்வா மாஸ்டர் அஜித்துக்கு நெருக்கம் என்பதால், அவரைப் படம் பார்க்கவைக்கவும் முயற்சி நடக்கிறது.
‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு எதிரான பாத்திரத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ‘தனுஷ்’கோடி. இதைவைத்து, தன்னுடைய ஒரே எதிரி தனுஷ்தான் என்பதை சிம்பு ஓப்பனாகவே சொல்லிவிட்டார் என ஏக கிசுகிசு. ‘சிம்பு இப்படிச் செய்திருக்கக் கூடாது’ எனச் சிலர் ஆதங்கப்பட, ‘வி.ஐ.பி படத்தில் தனுஷுக்கு எதிராக நடித்த வில்லனின் பெயர் என்னவாம்? குடும்பப் பிரச்னையை மனதில்வைத்து இப்படியெல்லாம் பழிதீர்க்கக் கற்றுக்கொடுத்ததே தனுஷ்தான்’ என பதிலடி கொடுக்கிறார்கள் சிம்பு தரப்பில். இதற்கிடையில் ‘மாநாடு’ படத்தைப் பார்த்துவிட்டு, சிம்பு உள்ளிட்ட படக்குழுவினரை ரஜினிகாந்த் பாராட்டியது தனுஷ் தரப்பை மேலும் எரிச்சலாக்கியிருப்பதாகத் தகவல்.



‘அண்ணாத்த’ வெளியீட்டுக்கு முன் ‘நான்’, ‘நீ’ என இயக்குநர் சிவா படத்தில் நடிக்க போட்டி போட்ட ஹீரோக்கள், இப்போது அநியாயத்துக்கு அமைதியாகிவிட்டார்கள். ‘நாம் எப்போது வேண்டுமானாலும் இணையலாம்’ என கிரீன் சிக்னல் கொடுத்திருக்கும் ஒரே நடிகர் அஜித் மட்டும்தான். “வெற்றி தோல்வி சினிமாவில் சகஜம். என்னோட ‘விவேகம்’ சரியா போகலை. ஆனா, அடுத்து எடுத்த ‘விஸ்வாசம்’ பெரிய ஹிட். ஏற்றத்தாழ்வுதானே வாழ்க்கை…” என இயக்குநர் சிவா சகஜமாகச் சொன்னாலும், பல ஹீரோக்களின் உண்மை முகம் அப்பட்டமானதில் அவர் குழுவினருக்கு ரொம்பவே வருத்தமாம்.
விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் வில்லன் பாத்திரம் ஏற்றிருக்கும் இயக்குநர் செல்வராகவன், நடிப்பில் அதகளம் செய்திருக்கிறாராம். வித்தியாசமான அரசியல்வாதியாக அடக்கி வாசிக்கும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம். ‘விஜய்க்கு செல்வராகவன் வில்லனா?’ எனக் கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இயக்குநர் நெல்சனுடன் கலந்து பேசி, இந்தப் படத்தில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கியிருக்கிறாராம் செல்வராகவன். இந்தப் படத்துக்காக செல்வராகவன் வாங்கிய சம்பளம் 2 கோடி ரூபாய்.
உஷ்…
தந்தையும் மகனும் இணைந்து நடிக்கும் படம் திரைக்கு வந்தால், மகத்தான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறார்களாம் குடும்பத் தரப்பில். ஆனால், படத்தை ஓடிடி தளத்துக்குத் தள்ளிவிட தயாரிப்பாளர் ஒப்புதல் கொடுத்துவிட்டாராம். தந்தையும் மகனும் அந்த முடிவை மாற்றப் போராடிவருகிறார்கள். #பிதாவும் மகனும்!