
திலக நடிகையின் திருமணத்துக்கு வரன் பார்க்கிறார்களாம். தொழிலதிபர்கள் தொடர்ச்சியாகப் படையெடுத்தும் அம்மணி அசைந்துகொடுக்க மறுக்கிறாராம்.
‘வணங்காத மனநிலையில் மில்க் இயக்குநர் இருந்ததால்தான், படத்தைவிட்டே வெளியே வந்துவிட்டார்’ என்கிறார்கள் பிரகாச நடிகர் தரப்பினர். ‘வேறு இயக்குநர்களைக் கையில் வைத்துக்கொண்டு, கதை தொடங்கி பல விஷயங்களில் பிரகாச நடிகர் தலையீடு செய்ததால்தான் பிரச்னை’ என்கிறார்கள் இயக்குநர் தரப்பில். `திட்டமிடாத கதையும், திமிரும்தான் காரணம்’ என்கிறார்கள் நடிகர் தரப்பில். ‘விலகல் அறிவிப்பை வெளியிட்டதெல்லாம் சரி… இதுவரை செலவான தொகையை யார் கொடுப்பது?’ என்பதுதான் அடுத்தகட்டப் பஞ்சாயத்தாம். ‘படத்தை முடித்துவிட்டு பைசல் செய்கிறேன்’ எனச் சொல்லி, படத்தைத் தன் பெயருக்கு மாற்றச் சொல்கிறாராம் மில்க் இயக்குநர்.
சமீபத்தில் ரிலீஸான விளையாட்டுப் படம் நல்ல வசூலைக் குவித்திருக்கிறது. ஆனாலும், படத்தின் நாயகன் எதிர்பார்த்த லாபம் இன்னும் பெரிதாம். மகத்தான வெற்றியையும் வசூலையும் குவித்து, தனக்கு எதிராகப் புகார் கிளப்பிய காமெடி நடிகரின் முகத்தில் கரியைப் பூச நினைத்தாராம். தயாரிப்பு தொடங்கி, புரொமோஷன் வரை அள்ளி இறைத்தும் கலங்கடிக்கும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லையே என நினைக்கிறாராம் நாயகன். ஆனால், சம்பந்தப்பட்ட காமெடி நடிகரோ, தன் தயவு இல்லாமலேயே இவ்வளவு பெரிய வெற்றியா என மலைத்துப்போய்க் கிடக்கிறாராம். ‘இந்தக் கூத்தை எங்கே போய்ச் சொல்வது?’ என நொந்துகொள்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமான ஆட்கள்!

திலக நடிகையின் திருமணத்துக்கு வரன் பார்க்கிறார்களாம். தொழிலதிபர்கள் தொடர்ச்சியாகப் படையெடுத்தும் அம்மணி அசைந்துகொடுக்க மறுக்கிறாராம். வெற்றி நடிகரின் அன்பில் அம்மணி இயங்குவதாக நினைக்கிறார்களாம் குடும்பத்தில். ‘நான் இப்படியே இருக்கிறேன்’ என்கிறாராம் அம்மணி. எதற்கும் பதில் சொல்லாமல் அமைதிகாக்கிறாராம் வெற்றி நடிகர். பட வாய்ப்புகளும் குறைந்துவருவதால் அம்மணி மனதின் அமைதியைக் கலைக்க, தீவிரமாகப் போராடிவருகிறார்களாம் குடும்பத்தில்.

ஸ்டைலிஷான இயக்குநர், இயக்கத்தைக் காட்டிலும் இப்போது நிறைய படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ஆக்டிங் ஸ்மார்ட் என்றாலும், ஸ்பாட்டில் அவரும், அவருடைய அடிப்பொடிகளும் கொடுக்கிற அலப்பறைகளுக்கு அளவில்லையாம். அவர் ஸ்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே ஒரு டீம் வந்து இடத்தின் சுத்தம், பாதுகாப்பு வரை ஆராய்ச்சி நடத்துமாம். அந்த டீம் ஓகே சொன்னால்தான், சார் ஸ்பாட்டுக்கு வருவாராம். பேட்டா தொடங்கி உணவு வரை மலைக்கவைக்கும் தொகையைக் கேட்கிறார்களாம். ‘இவ்வளவு அலப்பறைகள் ஆகாதுப்பா…’ என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்!