அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கல்யாணி பிரியதர்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாணி பிரியதர்ஷன்

படங்கள்: கிரண் சா

இயக்குநர் அமீரின் ‘மௌனம் பேசியதே’ படம் ரிலீஸாகி 20 வருடங்கள் கடந்திருக்கின்றன. அதை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்கும்விதமாக, சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட அமீர், ‘மௌனம் பேசியதே-2’ எடுக்கத் தயாராகிவருகிறாராம். இது குறித்து சூர்யா தரப்புக்குச் சொல்லியிருந்த நிலையில், அவரும் ‘செய்து பார்க்கலாமே’ என்றாராம். இந்த நிலையில், இயக்குநர் பாலாவுடனான ‘வணங்கான்’ படப் பஞ்சாயத்து பெரிதாக, பாலா, அமீர் வகையறாக்களே வேண்டாம் என முடிவெடுத்துவிட்டாராம் சூர்யா. அதனால், வேறு ஹீரோக்கள் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறாராம் அமீர்.

நடிப்பில் தீவிரமாக இருக்கும் நயன்தாரா, படத் தயாரிப்பையும் பெரிதாக மேற்கொள்ள விரும்புகிறாராம். நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேநேரத்தில், பெரிய ஹீரோக்களின் படங்களையும் செய்கிற அளவுக்குத் தயாரிப்பு நிறுவனத்தைப் பிரமாண்டப்படுத்த நினைக்கிறாராம். மும்பை கம்பெனிகளின் உறுதுணையுடன் இதைச் செய்வதற்குப் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணி பிரியதர்ஷன்

சேரன் நடிப்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கி, தயாரிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்களின் மூலமாகவே ரிலீஸ் செய்து ஆன்லைன் அலப்பறை கொடுத்திருக்கிறார்கள். சாதி அரசியலை உரத்த குரலில் பேசும் இந்தப் படத்தை ரொம்பவே நம்புகிறார் சேரன். அதனால் ஓடிடி நிறுவனங்களின் அழைப்பை நிராகரித்து, படத்தைத் திரைக்குக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறார் கார்வண்ணன்.

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் பெரிய ஹிட்டானதால், அந்தப் படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹருக்கு பல முன்னணி நடிகர்களிடமிருந்தும் அழைப்பு வந்ததாம். ஆனால், அவரோ தெலுங்குப் பக்கம் போய் நானிக்குக் கதை சொல்லியிருக்கிறார். இன்னமும் நானி பதில் சொல்லாததால், ஆர்யா பக்கம் வந்தார். ஆர்யாவுக்கு ஒன்லைன் பிடித்துப்போக, ‘டெவலப் பண்ணிச் சொல்லுங்க’ என்றாராம். கதை விவாதத்தில் தீவிரமாக இருக்கிறார் மித்ரன்.

மிஸ்டர் மியாவ்

இந்திப் படம் ஒன்றுக்காக 20 நாள்கள் தேதி கொடுத்திருக்கிறார் ஜோதிகா. பிசினஸில் பெரிதாகச் சாதித்த ஒருவரின் உண்மைக் கதை என்கிறார்கள். கண் தெரியாத அந்த பிசினஸ்மேனுக்கு வழிகாட்டும் ஆசிரியையாக நடிக்கிறாராம் ஜோதிகா. கதை கேட்டவுடனேயே தேதி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினாராம். அந்த அளவுக்குக் கதை ஜோதிகாவைக் கலங்கடித்துவிட்டதாம்.

உஷ்...

தமிழ் ஹீரோக்களின் தொந்தரவால், நிரந்தரமாகவே தெலுங்குப் பக்கம் போய்விட்டார் ‘பெத்த’ நடிகை. மீண்டும் அவரைத் தமிழ்ப் பக்கம் கொண்டுவர பலரும் பேசுகிறார்களாம். “யாருக்கு பயந்து அவர் கிளம்பினாரோ, அவர்களே திட்டமிட்டு வேறு ஆட்கள் மூலமாக விரிக்கிற வலை அது” என்கிறார்கள்!