அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஹர்ஷிதா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹர்ஷிதா

விஜய், இயக்குநர் லோகேஷுடன் இணையும் 67-வது படம் குறித்த அப்டேட்டுகளைத் தீவிரமாக்கிவருகிறார்.

‘கதையை முழுமையாக உருவாக்கவில்லை’, ‘க்ளைமாக்ஸ் திருப்தியாக இல்லை’ என விக்னேஷ் சிவன் மீது கிளம்பிய குற்றச்சாட்டுகளில் அந்த அளவுக்கு உண்மை இல்லையாம். ரசிகர்கள் கொண்டாடும்விதமாக, பிரமாண்டம் ப்ளஸ் மாஸ் ஹீரோயிசம் என விக்கி ரெடி செய்த கதைக்கான பட்ஜெட்தான் தயாரிப்புத் தரப்பை மலைக்கவைத்ததாம். பட்ஜெட் எகிறிய காரணத்தை அஜித்திடம் சொல்ல முடியாமல், ‘கதை திருப்தியில்லை’ எனக் கிளப்பிவிட்டார்களாம். திட்டமிட்டு இந்தத் தகவலை லீக் செய்து ஆன்லைன் மீடியாக்கள் மூலமாக ‘அசால்ட் விக்கி’ எனப் பரப்பியிருக்கிறார்கள். இந்த `பலே’ விளையாட்டு, அஜித்தை அப்செட்டாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். “ஒரே ஒரு சந்திப்புக்கு வாய்ப்பு கொடுங்கள்” என விக்னேஷ் சிவன் உருக, எந்த நேரத்திலும் அஜித்திடமிருந்து அழைப்பு வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்ரஜினி - மோகன் லால் - சிவராஜ் குமார் காம்பினேஷனில் ‘ஜெயிலர்’ படம் அட்டகாசமாக உருவாகிவருகிறதாம். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பேசி, இயக்குநர் நெல்சன் எதைக் கேட்டாலும் தாராளமாகச் செய்துகொடுக்கச் சொல்லியிருக்கிறாராம் ரஜினி. எடுத்தவரைக்குமான ரஃப் கட் அந்த அளவுக்கு ரஜினியைத் தெம்பாக்கியிருக்கிறதாம். படத்தின் பிசினஸை பிரமாண்டமாகச் செய்கிற திட்டத்திலும் இருக்கிறார்களாம். ரஜினி - தமன்னா ஜோடி காமெடி கலந்த காதலாகவும், ரஜினி - ரம்யா கிருஷ்ணன் ஜோடி சென்டிமென்ட் மிரட்டலாகவும் வந்திருக்கின்றனவாம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘வலிமை’ படத்தில் அஜித்துடன் யோகி பாபு நடித்த காட்சிகளும் நிறைய ஷூட் செய்யப்பட்டதாம். ஆனால், படத்தின் நீளத்தைக் குறைக்கவேண்டிய நெருக்கடியில், யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளுக்குக் கத்தரி போட்டு, படத்திலேயே அவர் இல்லாதபடி செய்துவிட்டார்களாம். அப்போதே இது குறித்து யோகி பாபுவிடம் பேசிய இயக்குநர் அ.வினோத், “உங்களுக்கு நான் தனிக்கதையே பண்றேன்” என உறுதி கொடுத்திருந்தாராம். ‘துணிவு’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் நடந்த காலகட்டத்தில், யோகி பாபுவிடம் போய் கதை சொல்லி அசரடித்திருக்கிறார் வினோத். கமல் படம் தாமதமானால், யோகி பாபு படத்தை இயக்கும் திட்டத்துக்கும் தயாராக இருக்கிறாராம் வினோத்.

விஜய், இயக்குநர் லோகேஷுடன் இணையும் 67-வது படம் குறித்த அப்டேட்டுகளைத் தீவிரமாக்கிவருகிறார். படம் குறித்து ஏதாவது செய்திகள் வந்துகொண்டேயிருக்கும் வகையில் ஆன்லைன் மீடியாக்களுக்குத் தீனி கொடுக்கப்படுகிறதாம். ‘வாரிசு’ படம் குறித்த பேச்சுகளை மறக்கடிக்க, அடுத்த படத்தின் அப்டேட்டுகளை அள்ளி வீசலாம் என இதற்கு ஐடியா கொடுத்தது விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷாம். விஜய்யின் 68-வது படத்தை, தன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப் பல வியூகங்களைச் சாமர்த்தியமாகச் செய்துவருகிறாராம் ஜெகதீஷ்.

உஷ்...

குஸ்தி போட்ட நடிகருக்கு, நாளுக்கு நாள் ‘ராங்கான’ சகவாசங்கள் பெருகிக்கொண்டே போகின்றனவாம். ‘இந்த நிலை தொடரலாமா?’ என நெருங்கியவர்கள் ரொம்பவே கவலைப்படுகிறார்களாம். ஐந்து படங்கள் கைவசம் இருக்கும் நிலையில், நெறிப்படுத்த முடியாமல் தந்தையானவரும் தத்தளிக்கிறாராம்!