
ஜோடியாக நடித்த ஹீரோவுக்கே பிற்காலத்தில் அம்மாவாக நடிப்பதுதான் காலம் காலமாக தமிழ் சினிமா ஹீரோயின்களின் நிலை.
தமிழ், தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்திவந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், இப்போது இந்திப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். ஏற்கெனவே, சில பாலிவுட் படங்களில் நடித்துவந்த இவருக்கு, தற்போது நிறைய இந்தி ஆஃபர்கள் வருகின்றன. ‘தேங்க் காட்’, ‘சர்தார் அண்ட் க்ராண்ட் சன்’, ‘அட்டாக்’ உள்ளிட்ட இந்திப் படங்களைக் கைவசம் வைத்துள்ள இவருக்கு, ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ‘டாக்டர் ஜி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக நடிக்கிறார் ரகுல்.
இந்தியில் வெளியான ’அந்தாதுன்’ படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யும் வேலைகள் நடந்துவருகின்றன. இந்தியில் தபு நடித்த கேரக்டரில் நடிகையும் பாடகியுமான மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல், அருண் விஜய்யின் ‘தடையறத் தாக்க’ படத்தில் நடித்ததற்குப் பிறகு தமிழில் நடிக்காமல் இருந்த மம்தா, தற்போது விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்துவரும் ‘எனிமி’ படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதில் அவர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன.
ஜோடியாக நடித்த ஹீரோவுக்கே பிற்காலத்தில் அம்மாவாக நடிப்பதுதான் காலம் காலமாக தமிழ் சினிமா ஹீரோயின்களின் நிலை. ஆனால், அந்தநிலை தற்போது மாறி, ஹீரோயின்களை மையமாகவைத்தே பல படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அப்படியான படங்களில் நடிப்பதற்குப் பல ஹீரோயின்கள் முயன்றுவரும் நிலையில், நடிகை அனுஷ்கா தனது நிஜ வயதுடைய கேரக்டர் ஒன்றிலேயே நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறாராம். 38 வயதான நடிகை அனுஷ்கா, புதிதாக நடிக்கும் படம் 38 வயதுடைய ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்னையைப் பற்றிப் பேசவிருக்கிறதாம்.

‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் பொயபட்டி னுவுடன் கூட்டணிவைத்திருக்கிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட இந்தப் படத்தில், பாலையாவுக்கு ஜோடியாக நடிகை சாயிஷா கமிட்டாகியிருக்கிறார் எனத் தகவல்கள் வந்தன. ஆனால், நடிகை ப்ரக்யா ஜெய்ஸ்வால்தான் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். இவர், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்துவருகிறார். தனது அறிமுகப் படத்திலேயே பல விருதுகளை வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உஷ்...
எப்பவோ எலிஜிபிள் பேச்சிலர் ஆகிவிட்ட நடிகரின் திருமணத்துக்காக வரும் மணப்பெண்களின் புகைப்படங்களை முதலில் அவரது அம்மாதான் ஸ்கேன் செய்கிறாராம். போட்டோவிலேயே அம்மாவுக்குப் பிடிக்கவில்லையென்றால், அந்த போட்டோ நடிகரின் பார்வைக்கே செல்லாதாம். இந்த விஷயம் சமீபத்தில்தான் நடிகருக்கே தெரியவந்ததாம். “ஈஸ்வரா... இந்த ஜென்மத்துல இவங்க நமக்குக் கல்யாணம் செய்துவைக்க மாட்டாங்க போலிருக்கே...” எனப் புலம்பிக்கொண்டிருக்கிறாராம் நடிகர்!