அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
News
மிஸ்டர் மியாவ்

நடிகை நிதி அகர்வால், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு, கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் அதீத கவனம் செலுத்திவந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். அப்படி அவர் நடித்த சில படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதால், கொஞ்சம் அப்செட்டில் இருந்தாராம். அவர் கைவசம் வைத்திருக்கும் படங்களையெல்லாம் முதலில் முடித்துவிட்டு, அதன் பிறகு புதிய படங்களில் கமிட் ஆகலாம் எனக் காத்திருக்கிறார். ஆனால் அவர் கைவசமோ ‘குட்லக் சகி’ ‘அண்ணாத்த’, ‘சர்க்காரு வாரி பாட்டா’, ‘சாணிக் காயிதம்’ எனப் பல படங்கள் இருக்கின்றன.

‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘கேசினோ’, ‘தாழ் திறவா’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சூர்யா தயாரிப்பில் ஒரு படம் எனக் கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார் நடிகை வாணி போஜன். இவையில்லாமல், இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படம், நேரடியாக ஜி5 தளத்தில் வெளியாகவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, ‘ஜெயம்’ ரவியுடன் ‘பூமி’ என இந்த வருடத்தின் தொடக்கத்தைத் தனது இரண்டு படங்களோடு ஆரம்பித்த நடிகை நிதி அகர்வால், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இதற்கிடையில், தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். நிதி அகர்வால் இந்தியில் தனது கரியரைத் தொடங்கினாலும், தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம்தான் பிரபலமானார். பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை தற்போது நிறைவேறியதும், அடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறாராம்.

நடிகர் அதர்வா, தன்னுடைய கோவா காதலியைக் கைபிடிக்கப்போகும் நாள் நெருங்கிவிட்டதாம். கடந்த ஜனவரி முதல் தேதி அன்று, அதர்வா தன்னுடைய அம்மாவைக் காதலியின் வீட்டாருக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். அப்போது இரு வீட்டாரும் கல்யாணம் குறித்துப் பேசி முக்கிய முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அடுத்த சில தினங்களில் தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

உஷ்...

‘அந்தத் தொலைக்காட்சி ஷோவால அவங்களுக்குத் தான் பேரு, டி.ஆர்.பி எல்லாம். கலந்துக்குற நமக்கு ஒண்ணுமே இல்லை’ என்று அந்த ஷோவில் பங்கேற்ற பலரும் புலம்புகிறார்கள். அதற்குத் தகுந்தாற்போலவே அந்த ஷோவில் ஜெயித்தவர்கள் யாருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டைட்டில் வின்னராக ஜெயித்த ஒருவர், சினிமாவில் இனி ஒரு பெரிய ரவுண்ட் வருவோம் என்ற கனவில் இருந்திருக்கிறார். ஆனால், அவர் எதிர்பார்த்ததுபோல எதுவும் நடக்கவில்லையாம். அதற்கு மாறாக சீரியல் வாய்ப்புகள் அதிகமாக வர, கடுப்பில் இருக்கிறாராம்!

மிஸ்டர் மியாவ்