அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஜோதி யாதவ் சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதி யாதவ் சிங்

பழைய கதைகளை உதுத்து உப்புமா கிண்டும் இட்லி இயக்குநர், இந்திப் படத்தைப் பண்ணிக்கொண்டே மெர்சலான நடிகரை வளைத்துப்போட பிரகாச நிறுவனத்திடம் பேசி முடித்தார்.

கண்களைக் கொள்ளையடித்த இயக்குநர், உச்ச நடிகருக்குக் கதை சொல்லி, பல வருடங்களாகக் காத்துக் கிடந்தார். உச்ச நடிகர் உரிய பதிலைச் சொல்லாததால், வேறு நடிகர்களுக்கும் அந்த இயக்குநரால் கதை சொல்ல முடியாத நிலை. “கதை பிடித்திருந்தது. ஆனால், அதற்குரிய பட்ஜெட் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் இல்லை” என உச்ச நடிகர் விளக்கம் சொல்லி ஒதுங்கிக்கொண்ட பிறகு, வேறு நடிகர்களை நோக்கிப் போகவும் அந்த இயக்குநருக்கு வாய்ப்பு இல்லையாம். காரணம், பிற நடிகர்கள் அழைத்தபோது இயக்குநர் நடந்துகொண்டவிதம் அப்படியாம். ‘இரண்டு மாதங்களுக்குள் புதுப்படம் கமிட்டாகியே தீருவேன்’ என உறுதி பூண்டிருக்கும் இயக்குநர், புது முகங்களிடம்கூட கதை சொல்லிவருகிறாராம்.

மிஸ்டர் மியாவ்

நிலத்தில் பணம் போடத் தொடங்கியிருக்கிறார் திலக நடிகை. பண மதிப்பிழப்பு விவகாரத்துக்குப் பிறகு, ரியல் எஸ்டேட் விஷயத்தில் திரைத்துறையினர் யாரும் முதலீடு செய்வதே கிடையாது. ஆனால், திலக நடிகை தைரியமாக முதலீடு செய்கிறார். ‘இன்னும் சில வருடங்களில் மீண்டும் நில மதிப்பு உயரும்’ என அதற்கு விளக்கமும் சொல்கிறாராம்.

பழைய கதைகளை உதுத்து உப்புமா கிண்டும் இட்லி இயக்குநர், இந்திப் படத்தைப் பண்ணிக்கொண்டே மெர்சலான நடிகரை வளைத்துப்போட பிரகாச நிறுவனத்திடம் பேசி முடித்தார். தனக்கும் ஹீரோவுக்குமான சம்பளத்தைச் சேர்த்துப் பேசி ஓகேயும் வாங்கினார். ‘இந்த டீலிங் பிடிச்சிருக்கு’ எனச் சொன்ன ஹீரோ, ஏனோ அடுத்தகட்ட நகர்வுகளுக்கு மட்டும் அசைந்து கொடுக்க மறுக்கிறாராம். ஜெகஜ்ஜாலம் காட்டும் மேனேஜர் ஒருவரின் விளையாட்டுதான் ஹீரோவை எந்த முடிவும் எடுக்கவிடாதபடி தடுமாற வைக்கிறதாம்.

மிஸ்டர் மியாவ்

‘துணிவான இயக்குநருக்கு, வேர்ல்டு நடிகரின் நிறுவனம் கார் வழங்கியிருப்பதாக’ கசிந்த செய்தி கிளப்பிவிடப்பட்ட ஒன்றாம். ‘இயக்குநரின் தரப்பே இப்படிச் செய்தி வர வைத்திருக்கிறது’ என கார் விவகாரத்தை வைத்துப் புகார் கிளப்பி, தயாரிப்பு நிறுவனத்தைச் சலனப்படுத்த வேண்டும் என்றே இப்படிச் செய்தார்களாம். இப்படி, ஏதாவது உள்ளடி வேலைகளைச் செய்து துணிவான இயக்குநரையும், வேர்ல்டு நடிகரையும் இணைந்து படம் பண்ணவிடாமல் செய்துவிடுகிற திட்டத்திலேயே சிலரை இப்படிப் பேசவைத்தார்களாம்.

மிஸ்டர் மியாவ்

ரஞ்சித நடிகை, எப்படியாவது தமிழில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் எனத் தீராத கனவில் இருக்கிறார். உச்ச நடிகர்களிடம் மட்டுமே வளைந்து நெளிந்து வாய்ப்புக்காகப் பேசிய அம்மணி, இப்போது உச்ச இயக்குநர்களிடமும் உருகுகிறாராம். ‘சம்பளம் ஒரு விஷயமே கிடையாது’ என மேனேஜர் மூலமாக முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களிடமும் சொல்லவைத்திருக்கிறாராம். இந்தச் சலுகைகள் யாவும் தமிழுக்கு மட்டும்தானாம். மற்ற மொழிப் படங்களுக்கான சம்பளத்தில் அம்மணி கடுமையாக கறார் காட்டுகிறாராம்.