
‘இனி விஜய்தான் சூப்பர் ஸ்டார்’ எனப் பலரும் பேசத் தொடங்கியிருப்பது, ரஜினிகாந்த் தரப்பைக் கடுமையான கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.
‘நந்தன்’ படத்தில் நடித்துவரும் சசிகுமார் அடுத்து ‘குற்றப் பரம்பரை’ நாவலை இயக்கப்போகிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ் தயாரிக்க, ஹாட் ஸ்டார் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. ஒன்பது எபிசோடுகளுக்கு ரெடியாகும் இந்த வெப் சீரீஸை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் ராணாவுக்கும், விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ‘குற்றப் பரம்பரை’ என்கிற தலைப்புக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா இருவரும் கச்சைகட்டுவதால், வேறு தலைப்பை வைத்துக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் வேல்ராஜ்.

அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, ஹீரோயின் வேட்டை தீவிரமாக நடக்கிறது. ஏற்கெனவே திரிஷாவை முடிவுசெய்து வைத்திருந்தார்கள். ஆனால் திரிஷா, விஜய்யின் அடுத்த படத்தில் கமிட்டானதால், நயன்தாராவை ஜோடியாக்க நினைத்தாராம் விக்னேஷ் சிவன். அஜித் அதற்கு மறுப்பு சொல்லிவிட்டதால், பாலிவுட் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள். ‘வலிமை’ படத்தில் அஜித்துடன் ஜோடிபோட்ட ஹீமா குரேஷி, அவர் சம்பந்தப்பட்ட நிறைய காட்சிகள் நீக்கப்பட்டதால் இன்னமும் வருத்தத்தில் இருக்கிறாராம். அதைச் சரிசெய்யும்விதமாக அவரையே அடுத்த படத்தில் நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
‘இனி விஜய்தான் சூப்பர் ஸ்டார்’ எனப் பலரும் பேசத் தொடங்கியிருப்பது, ரஜினிகாந்த் தரப்பைக் கடுமையான கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். ஆரம்பத்தில் ‘வாரிசு’ பட புரொமோஷனுக்காக இப்படிப் பேச்சு கிளம்புவதாக நினைத்ததாம் ரஜினி தரப்பு. ஆனால், ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை விஜய்க்கு மாற்றும் வேலைகள் அடுத்தடுத்து தீவிரமாக நடக்க, ‘இதெல்லாம் விஜய்க்குத் தெரிந்துதான் நடக்கின்றனவா?’ என விசாரித்திருக்கிறார்கள். ‘நடப்பதே விஜய் தரப்பின் ஏற்பாட்டில்தான்’ எனச் சொல்லப்பட, ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறது ரஜினி தரப்பு. சீக்கிரமே இந்த விவகாரம் குறித்து ரஜினி வாய் திறந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.
‘துணிவு’ படத்துக்கான புரொமோஷன் வேலைகளில், மஞ்சு வாரியர் காட்டும் ஆர்வம் படக்குழுவை ரொம்பவே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஊடகங்களைச் சந்திக்க மட்டுமே 10 நாள்களைத் தனியாக ஒதுக்கிக்கொடுத்திருக்கிறார் மஞ்சு வாரியர். ‘துணிவு’ படத்தில் மஞ்சு வாரியருக்கு இரண்டு சண்டைக் காட்சிகள் இருக்கின்றனவாம். டூப் போடாமல் நடித்த தன் அர்ப்பணிப்பு பெரிதாகக் கவனிக்கப்பட வேண்டும் என்பதால்தான் புரொமோஷன் வேலைகளிலும் இறங்கி விளையாடுகிறாராம் அம்மணி!
உஷ்...
வெற்றிகரமான இயக்குநர் காட்டுக்குள் நடத்திய நீண்ட நெடிய படப்பிடிப்பில் பூச்சிக்கடி, விஷக்கடி எனப் படாதபாடு பட்டுப்போனார்களாம் படக்குழுவினர். இந்த பாதிப்பிலிருந்து இயக்குநரும் தப்பவில்லையாம். ‘பாதிப்புக்கான நிவாரணத்தைத் தயாரிப்பாளர் செய்ய வேண்டும்’ என உரத்த குரல்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன!